கோபம் வேண்டாம்
கோபம் வேண்டாம்
சாக்ரட்டீஷ் உலகின் தலை சிறந்த
தத்தவ ஞானி.கோடிக்கண மக்களின்
நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் மனைவியிடம்
நல்ல பெயர் எடுக்க முடியவில்லை.
அவர் தன் எழுத்துக்குக் கொடுத்த
முக்கியத்துவத்தை வீட்டிற்குக் கொடுப்பதில்லை
என்பது மனைவியின் குற்றச்சாட்டு.
வீட்டில் என்ன இல்லை ...என்ன இருக்கிறது..
எதையுமே அவர் கண்டு கொள்ளவே மாட்டார்.
ஒருமுறை இப்படித்தான் வெகுநேரமாக தன்
நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார்.
பலமுறை மனைவி அழைத்துப் பார்த்தார்.
அவர் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை.
வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்கும்
வீசி தன் கோபத்தை வெளிப்படுத்திப் பார்த்தார்.
அப்போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை.
மாடிக்குச் சென்றார். ஆத்திரத்தில் ஒரு
வாளி தண்ணீரை மொண்டு வந்து
அப்படியே சாக்ரட்டீஷ் தலை மீது ஊற்றினார்.
நண்பர் அப்படியே வாயடைத்துப் போனார்.
சாக்ரட்டீஷ் முகத்தைப் பார்த்தார்.
அவரோ ஒன்றுமே நடக்காதது போல
இதுவரை இடி இடித்தது. இப்போது மழை
கொட்டுகிறது "என்று தமாசாக பதிலளித்தார்.
இப்படித்தான் கோபம் வந்தால் பலருக்கு
தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே
தெரிவதில்லை.
கோபம் அறிவை மழுங்கச் செய்துவிடும்.
முன்பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்க விடாது.
இதைத்தான் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு "
என்பார்கள்.
அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள்?
என்ற எந்த சிந்தனையுமே மனதில் எழாது.
ஒரு சிறிய பறவை.நாள்தோறும் கடற்கரை
மணலில் முட்டை இட்டு அதனைப் பாதுகாப்பாக
கடல் மணலால் மூடி வைத்து விட்டுச் செல்லுமாம்.
இப்படியாக பல நாட்கள் முட்டையிட்டுப் பாதுகாத்து
வந்தது.
ஒருநாள் ஆழிப் பேரலை வந்து அத்தனை
முட்டைகளையும் வாரிச் சென்றுவிட்டது.
மறுநாள் முட்டையிட வந்த பறவை
முட்டைகளைக் காணாது பதறிப் போயிற்று.
அங்கேயும் இங்கேயும் ஓடியது.
இப்போது அந்தச் சிறிய பறவைக்கு
கோபம் என்றால் கோபம் செம கோபம்.
கடலைப் பார்த்தது."நீ தானே என்
முட்டைகளை அள்ளிச் சென்றாய்?
இதோ உன்னை என்ன செய்கிறேன்
பார்.நீர் இருப்பதால் தானே பேரலையை
அனுப்பி என் முட்டைகளை அள்ளிச் சென்றாய்.
உன்னை..உன்னை.."கோபத்தோடு கடல்
முன் நின்று கத்தியது.
" உன் நீரை எல்லாம் வற்றச் செய்கிறேன் பார் "
என்று தன் சிற்றலகால் கடல் நீரை மொண்டு
மொண்டு வெளியில் கொண்டு ஊற்றியது.
கோபத்தில் தான் செய்வது சாத்தியப்படக்
கூடியதுதானா என்று அந்த பறவையால்
சிந்திக்க முடியவில்லை.
அலகால் மொண்டு கடல் நீரை
வற்ற வைக்க முடியுமா?
பறவைக்கு வந்த கோபத்தைக் கேட்டதும்
நகைப்பாக இருக்கிறதல்லவா.!
நாமும் இப்படித்தான் பல நேரங்களில்
முட்டாள் தனமாக நடந்து கொண்டிருப்போம்.
கோபப்பட்டு என்னத்தைச் சம்பாதித்தோம்
என்றால் கோபக்காரன் என்பதைத் தவிர
வேறொன்றும் இருக்காது.
தம்பி தங்கைகள் மீது கோபம்.
அம்மா மீது அடிக்கடி நாம் காட்டும்
ஒன்று உண்டென்றால் அது அன்பல்ல.
கோபம் மட்டுமாகத் தான் இருக்கும்.
கோபக்காரனாக இருந்து என்ன சாதித்தோம்?
ஒருமுறை நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம்.
நம் மீதே நமக்கு கோபம் வந்துவிடும்.
கோபக்காரனாக இருந்து பெற்றதைவிட
இழந்தது ஏராளம்.
நட்பை இழந்தோம்.உறவை இழந்தோம்.
ஏன் உடல் நலத்தைக் கூட இழந்திருக்கிறோம்.
கோபப்பட்டால் உடலில் ஏற்படும் காயம் விரைவில் ஆறுவதில்லையாம்.
உடலில் சுரக்கும் கார்டிசோல் என்ற திரவம்
கோபப்படுவதால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.
அது சரியாக சுரக்க முடியாமல் போனால்
காயங்கள் எளிதில் ஆறுவதில்லையாம்.
பார்த்தீர்களா கோபம் படுத்தும் பாட்டை....
படிக்கிற பருவத்தில் ஏற்படும் கோபம்
உங்கள் படிப்பிற்குத் தடையாக அமையும்.
அரைமணி நேரம் படித்தாலும் ஆறு
வார்த்தை கூட மனதில் பதியாது.
இப்படிப்பட்ட கோபம் நமக்குத் தேவைதானா?
உங்கள் முன்னேற்றத்திற்கு முதல் ஆளாக வந்து முட்டுக்கட்டையிடும் இந்தக் கோபக்காரனைத்
தூக்கி வீசுங்கள்.
கோபம் வந்தால் மடமடவென்று
தண்ணீரைக் குடித்து விட்டு மறுவேலையைப்
பார்க்க நடையைக் கட்டுங்கள்.
கோபமும் என் வேலையைப் பார்க்கப்
போகிறேன் என்று எதிர் திசையை
நோக்கி நடையைக் கட்டிவிடும்.
கோபத்தைத் தூக்கி எறிந்து விட்டீர்களல்லவா|
இனி சுற்றமும் நட்பும் சூழ நீங்கள்
மகிழ்ச்சியாக வலம் வரலாம்.
உப்பு சப்பு இல்லாத கோபத்தால்
நீங்கள் இழந்து போதும்.
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை.
இன்று முதல் கோபத்தோடு பிணக்கு.
வெற்றியோடு தொடங்கட்டும்
உங்கள் வெற்றிக் கணக்கு.
Comments
Post a Comment