நம்பினால் நம்புங்கள்

நம்பினால் நம்புங்கள்


மெதுவாக அறையினுள் எட்டிப் பார்த்தாள்
பால்தங்கம்.
கண்ணுக்கு முன்னால் டேப் ரெக்கார்டர்
பார்த்ததுமே ஒரு அற்ப ஆசை.
பக்கத்தில் சென்றாள்.
நாற்காலியில் அமர்ந்து தனக்குள்ளேயே சிரித்துக்
கொண்டாள்.
மேசையின்மீது நான்கைந்து கேசட்டுகள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாக கையில் எடுத்து என்னென்ன
பாடல்கள் இருக்கிறது என்று வாசித்துப்
பார்த்தாள்.
ஒரு கேசட்டில் அவளுக்குப் பிடித்தமான ஒரு
பாடல் இருந்தது.
அந்தக் கேசட்டை எடுத்துப் போட்டுப்
பார்த்தாள்.
அருமையான பாடல். தன் கவலைகளுக்கு
மருந்தளிக்கும் பாடல்.
பாடலைக் கேட்டதும் கண்கள் நீரை வரவழைத்தன.
தனக்கென்றே எழுதப்பட்டது போன்ற பாடல்.
ஒரு முறை கேட்டதும் தன்னை மறந்தாள்....
பாடுபவர் தன் மனகஷ்டம் அறிந்து
பாடுவதுபோல் இருந்தது.
இன்னொரு முறை கேட்க வேண்டும்போல்
இருந்தது.
மறுபடியும் போட்டு கேட்டாள்.
கூடவே தானும் படித்தாள்.
இப்போது இந்தப் பாடல் அவளுக்குள்
ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த
அதை மனனம் செய்ய வேண்டும்
என்ற ஆசை.
கையில் ஒரு பேனாவை எடுத்து எழுதினாள்.
எழுதி வைத்தப் பாடலை பாடிப் பாடி
பழகினாள்.
மனசு லேசானது போல இருந்தது.
அதற்குள் அக்கா...அக்கா...கதவைத் திற..
கூப்பிட்டாள் தங்கை.
எழும்பி வந்து கதவைத் திறந்தாள்..
இந்த அறையில் என்ன செய்யுற...
அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க...என்றாள் தங்கை.
இதோ வருகிறேன் என்றபடி....தங்கைகூடவே
சென்றாள் பால்தங்கம்.
போகிற அவசரத்தில் எழுதி வைத்தப்
பாடலை எடுக்க மறந்து போனாள்.

சாப்பிட்டு முடித்ததும் படுக்கையில்
படுத்து பாடலைப் பாடிப் பாடி
அப்படியே தூங்கிப்போனாள்.

மறுநாள் காலை....
நேற்று எழுதிய பாடலை முணு முணுத்தபடி
வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஏழரை எப்படி வரும்; எந்த ரூபத்தில்
வரும் யாருக்குத் தெரியும்?
எமன் எருமையில் வருவான் என்பார்கள்.
பால்தங்கத்திற்கு எமன் யமகாவில்
வந்தான்.

பைக்கில் வந்து இறங்கினார்கள் மாதவனும்
அவன் மனைவி ராணியும்.

வீட்டுக்குள் சென்ற ராணி சற்று நேரத்தில்
வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.

பால்தக்கங்கமும் பார்த்துவிட
முறைத்துக் கொண்டு
மறுபடியும் வீட்டுக்குள் சென்று தாழ்ப்பாள்
போட்டுக் கொண்டாள் ராணி.

ஏன் இந்த முறைப்பு...பால்தங்கத்திற்கு
ஒன்றுமே புரியவில்லை.

பால்தங்கத்தின் நாடித்துடிப்பு ஏறி இறங்கிக்
கொண்டிருந்தது.ஏதோ தப்பாக
இருப்பதுபோல் தெரிந்தது.

இன்று மாதவனின் மனைவி எந்த
ஏழரையைக் கூட்டப்
போகுதோ என்று பயந்தபடியே  தனியாக
உட்கார்ந்திருந்தாள்.

"வேலை செய்யாமல்அங்கு என்ன செய்துகிட்டு
இருக்கிறாய்..."அம்மா வீட்டுக்குள் இருந்தபடியே
குரல் கொடுத்தார்.

"வேலை எல்லாம் முடிந்தாயிற்று ...வேறு என்ன
வேலை செய்ய வேண்டும் என்று கத்துறீங்க..."
பதிலுக்குப் பால்தங்கமும் உரத்துப் பதிலளித்தாள்.

" அந்த புளியை உடைத்து வை. நான்
குத்துகிறேன் "என்றார் அம்மா.

ஒரு நிமிடம் சும்மா இருக்க விடமாட்டீங்களே...
என்று சொல்லிக் கொண்டே புளியைக் குத்துவதற்காக
உட்கார்ந்தாள் பால்தங்கம்.

அதற்குள் சியாமளா அக்கா வந்துவிட
போய் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா என்றார்
அம்மா.
"புளி உடை....தண்ணீர் கொண்டு வா....
வீட்டைப் பெருக்கு ...எல்லா வேலையும்
நானே செய்கிறேன்...நீங்க எல்லாம்
சும்மா இருங்க..."கோபப்பட்டாள் பால்தங்கம்.

"தண்ணீர் கொண்டு வா என்றது தப்பா...
நீ தண்ணீர் கொண்டு வரவேண்டாம்
தாயே...நானே போய் தண்ணீர் குடிச்சுகிறேன்..."
வீட்டுக்குள் சென்றாள் சியாமளா.

அதற்குள் மாதவன் மனைவியும்
சியாமளாவின் பின்னாலேயே வீட்டிற்குள்
சென்றாள்.
சற்று நேரம் ராணியுடன்
பேசிக் கொண்டிருந்த சியாமளா
நேரே பால்தங்கத்திடம் வந்து
உட்கார்ந்தாள்.

சற்று நேரம் பால்தங்கத்தையே பார்த்தபடி
இருந்த சியாமளா... "நீ நேற்று
மாதவன் ரூமுக்குப் போனியா..."
என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள்.

"ஆமாம்...அதுக்கு என்ன? ..."புளியின்மீது
இருந்த கண்களை எடுக்காமலேயே
பேசினாள் பால்தங்கம்.

"நீ மேசையில் என்ன எழுதி வச்சுருந்த...."
என்றார் சற்று காட்டமாக.

"என்ன எழுதி வச்சுருந்தேன்...ஒன்றுமில்லை..."
வெறுங் கையைத் திருப்பித் திருப்பி
காட்டி விளையாட்டு காட்டினாள் பால்தங்கம்.

"இப்போ இல்லை...நேற்று அவங்க ரூமில்
போய் என்ன எழுதி வச்சுருந்தா ...அதற்குப்
பதில் சொல்லு "சியாமளாவின் குரலில்
கோபம் கூடியிருந்தது.

"என்ன எழுதி வச்சுருந்தேன்....ம்...
பாட்டு எழுதியிருந்தேன்."

"பாட்டு எழுதி இருந்தியா? பொய் சொல்லாம
உண்மையைச் சொல்லு"

"நான் ஏன் போய் சொல்லணும்,?"

"நீ மாதவனைப் பற்றி ஒண்ணுமே எழுதல..."

"எந்த மாதவனை...நம்ம வீட்டு மாதவனையா?..."

"என்னை வெறுப்பேத்தாத...நீ என்ன எழுதினாய்?"
என்பதுதான் கேள்வி.

"நான் பாட்டு எழுதினேன் அதுதான் விடை....
போதுமா..." ,பால்தங்கம் கேள்வியில் இருந்த
தீவிரம் தெரியாமல் பதிலளித்துக்
கொண்டிருந்தாள்.

"இந்த குசும்புதான வேண்டாங்கிறது..."

"வேற என்னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிற..."

"உண்மையை எதிர் பார்க்கிறேன்."

"எந்த உண்மையை..."

"நீ மாதவன் பற்றித் தவறுதலாக எழுதி
வைத்திருந்த உண்மையை..."

"நானா...நான் மாதவனைப் பற்றி தவறுதலாக
எழுதி இருந்தேனா...யார் சொன்னது?"

"ராணிதான்  சொன்னாள்..."

"என்னசொன்னாள்...நான் மாதவனைப் பற்றி
தவறுதலாக எழுதி வைத்திருந்தேன் என்றா
சொன்னாள்....அதை நீ நம்புனியாக்கும்."

"ஆமா...சொன்னாள்...இதற்கு மேலே உனக்கு
விளக்கிக் கிட்டு இருக்க முடியாது."

"என்னாலேயும் விளக்க முடியாது...நான்
பாட்டுத்தான் எழுதினேன்.சத்தியமா சொல்றேன்
நான்..பாட்டுத்தான் எழுதினேன்"

"நீ எழுதி இருப்பா...நீ எழுதி இருப்பா..
வாயை வச்சுகிட்டு ஒரு நேரம் சும்மா
இருப்பாளா...."
அம்மா எங்க தன் மகன் கோபப்பட்டுவிடுவானோ
என்ற பயத்தில் பால்தங்கத்துக்கு எதிராக
சாட்சி கையெழுத்திட்டார்.

"அம்மா...என்னைக் கோபப் படுத்தாதீங்க...
நான் கடவுள் பாட்டுத்தான் எழுதி இருந்தேன்.
வேறு ஒரு வரிகூட எழுதல...இதை நான்
எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்லுவேன்."
பொரிந்து தள்ளினாள் பால்தங்கம்.

"நாலு பொட்டபிள்ளைகளைப்  பெற்றுகிட்டு
நான் நாய்படாத பாடுபடுகிறேன்..".என்று
புலம்பியபடி புளியை உடைக்கத் தொடங்கினார்.

எம்மோ இவள்கிட்டகொஞ்சம் சொல்லி வை...
சாயங்காலம் வந்ததும் அவள
மாதவனிடம் சொல்லி அடி வாங்கிக்
கொடுப்பேன் என்கிறாள் ராணி.
சொன்னதை சொல்லிபுட்டேன்
இனி உங்க பாடு...உங்க மகன்பாடு ...மருமகள்பாடு"
பட்டும் படாமலும் பேசி முடித்தாள் சியாமளா.

"பாவி மவள....உன்னை வச்சுகிட்டு நான்
என்ன பண்ணுவேன்...."மறுபடியும்
பால்தங்கத்தின்மீதே குற்றம் இருப்பது
போல பேசினார் அம்மா.

"எம்மோ....நான் எதுவும் எழுதலம்மோ ..."
ஓடிப்போய் அம்மா மடியில் விழுந்து கேவி ...கேவி
அழுதாள் பால்தங்கம்.

மகளின் அழுகையைக் கண்டதும் அப்படியே
கரைந்து போனார் பால்தங்கத்தின் அம்மா.

"என் பிள்ளை அப்படி யாரையும் தப்பா
எழுதாது . எனக்குத் தெரியும்.
என்  இயலாமையிலேதான் நான் உங்களைத்
திட்டுகிறேன்....அழாதே... எழும்பு..".கண்ணீரைத்
துடைத்துவிட்டார் அம்மா...

தலையைத் தூக்கி மெதுவாக அம்மா முகத்தைப்
பார்த்தாள் பால்தங்கம்.
அந்தப் பார்வையில் "நீ என்னை நம்புகிறாய்
அல்லவா அம்மா.. .."என்ற கெஞ்சல் தெரிந்தது.

"நான் நம்புகிறேன் ..உன்னை நம்பாமல்
வேறு யாரை நம்பப் போகிறேன்..
.எழும்பு " என்றபடி முகத்தைத் தூக்கித்
தோள் சீலையால் துடைத்து விட்டார் அம்மா...

அந்த ஸ்பரிசம் யார் நம்பினால் என்ன...
நம்பாவிட்டால் என்ன...
என் அம்மா என்னை நம்புகிறார்கள்.
அதுபோதும் என்ற தெம்பைத் தந்தது.

"நான் யாரைப் பற்றியும்...எதுவும் எழுதவில்லை...
கடவுள் பாட்டுத்தாம்மா எழுதினேன்"
மறுபடியும் தனது தரப்பு ஞாயத்தை
எடுத்து வைத்தாள் பால்தங்கம்.

"மறுபடியும். முதலாவதிலிருந்தா..."
என்று சொல்லிச் சிரிப்பூட்டினார்  அம்மா .

"நம்பினால் நம்புங்கள்...நம்பாவிட்டுப் போங்கள்"
என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்து
மெதுவாக புன்னகைத்தாள்  பால்தங்கம்.

அந்தச் சிரிப்பில் உண்மை இருந்தது.Comments

  1. கதை விறுவிறுப்பாக இருந்தது.தங்களின் கிராமத்து பேச்சுவழக்கு ரசிக்கும்படி மிகச்சிறப்பாக இருந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts