ஆபத்துக் குதவாப் பிள்ளை....

ஆபத்துக் குதவாப் பிள்ளை....


அனுபவ மொழிகள் அடங்கிய
அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி
என்ற நூல்.
இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டிருந்தாலும்
எளிய நடையில் எழுதப்பட்டிருப்பதால்
அனைவராலும் எளிதில் பொருள்
அறிந்து கொள்ள முடியும்.

இதன் ஆசிரியர் யார் என்பதற்கான
எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
சிந்தனைக்கு உகந்த கருத்துக்
குவியல் என்பது மட்டுமல்லாமல் 
நீதிக் கருத்துகளும் கொண்ட ஒரு
அரிதான செய்யுள் தொகுப்பு நூல் இது
என்பது மட்டும் உண்மை.
இந்தப் பகுத்தறிவு பட்டறைக்குள்  மொத்தம்
135 பாடல்கள் உள்ளன.
ஒவ்வொரு பாடலும்  படிக்கப் படிக்க
சிந்திக்கத் தூண்டும்.
தத்துவத்தை அள்ளித் தரும்.
கற்பனைகள் மனதைக் கொள்ளை கொள்ளும்.
உவமை உள்ளத்திற்குள் கிளர்ச்சியை
ஏற்படுத்தும்.
நீதிக் கருத்துக்கள் விஞ்சி நிற்கும்.

அந்தப் பாடல்களிலிருந்து ஒரே ஒரு 
பாடல் உங்களுக்காக...

பயனில்லாதவை  எவை எவையென
தனித்துவப்படுத்தி அடையாளம்
காட்டிச் சொல்லிச்  செல்லும் 
பாடல்  இதோ:

"ஆபத்துக் குதவாப் பிள்ளை
அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் 
குருமொழி கொள்ளாச்சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயனிலை ஏழும் தானே!"
             _ விவேக சிந்தாமணி


பெற்றோருக்கு ஆபத்துக் காலத்தில் அதாவது
அவர்களின் இறுதிக் காலத்தில் உதவாத 
பிள்ளை இருப்பதும் ஒன்றுதான்...
இல்லாதிருப்பதும் ஒன்றுதான்.
அவர்கள் இருப்பதால் யாருக்கு
என்ன பயன் ?

நல்ல வயிற்றுப் பசி. 
ஆனால் படைக்கப்பட்டிருக்கும்
உணவை நம்மால் சாப்பிட முடியாத நிலைமை.
அப்படிப்பட்ட உணவு இருந்தால் என்ன?
..இல்லாது
போனால் என்ன..

தண்ணீர் தாகம்...அப்படியே சுருண்டு 
விழுகிறோம். எதிரில் தண்ணீர் இருக்கிறது.
ஆனால் குடிக்க முடியாத நீர்.
தாகத்தைத் தீர்க்க முடியாத தண்ணீர்
இருந்து எந்த பயன் தந்துவிடப்
போகிறது?


நம் வீட்டு நிலைமை அறியாது
தான் உண்டு...தன் மகிழ்ச்சி உண்டு
என்று ஆடம்பர மோகத்தில்
பணத்தை விரயம் செய்யும்
பெண்கள் சில வீடுகளில் உண்டு.
அப்படிப்பட்ட பெண்கள் இருந்தால்
வீட்டிற்கு என்ன பயன்
கிடைத்து விடப் போகிறது.?

மன்னன் என்றால் கோபத்தை அடக்கத்
தெரிய வேண்டும்.
கோபத்தை அடக்கத் தெரியாமல்
அந்நிய நாட்டோடு எப்போதும்
போர்..போர் என்று பறைசாற்றி...
மார்தட்டும் மன்னனால் நாட்டின்
கருவூலம் கரைந்து போகுமே...
அப்படிப்பட்ட கோபக்கார மன்னனால்
 குடி மக்களுக்கு 
என்ன நன்மை செய்துவிட முடியும் ?

வித்தைக் கற்றுத் தந்த 
ஆசிரியர்மொழி கேளாது
தான்தோன்றித் தனமாக 
குருவுக்கு மிஞ்சிய சீடன் நான்
என மமதை கொண்டு குருவை
மதியாத சீடர்கள் உண்டு.
அப்படிப்பட்ட மாணாக்கர்களால் குருவுக்கு 
என்ன பெருமை
கிடைத்துவிடப் போகிறது?

புண்ணியம் தேடி தீர்த்த யாத்திரை
செல்கிறோம்.காசிக்குப் போனாலும்
செய்த கருமம் தொலையவில்லை 
என்பது போல
 பாவம் தொடர்ந்து கூடவே வந்து
கொண்டிருக்குமானால்
தீர்த்த நீராடிதான் 
என்ன பயன்?

இப்படிப் பயனில்லாத ஏழு காரியங்களைப்
பட்டியலிட்டுத் தந்துள்ளது 
விவேக சிந்தாமணி.

மொத்தத்தில் ...
பெற்றோருக்கு உதவா பிள்ளை...
பசி தீர்க்காத உணவு...
தாகம் தணிக்காத  தண்ணீர்...
ஆடம்பர மோகம் கொண்ட பெண்...
கோபத்தை அடக்கத் தெரியாத மன்னன்...
ஆசிரியருக்குக் கீழ்ப்படியாத மாணவன்...
பாவம் தீர்க்காத தீர்த்தம்...
இவற்றால் எந்த பயனுமில்லையாம்.

சிந்தித்துப் பார்க்க வேண்டிய
முத்தான ஏழு உலகியல் உண்மைகளைச்
சப்தமில்லாமல் மொத்தமாகச்   
சொல்லித் தந்துள்ளது விவேக சிந்தாமணி.

விவேகமாக சிந்திக்க வேண்டிய
விவேக சிந்தாமணி தரும் செய்தி 
இல்லையா !

Comments

Popular Posts