வேற்றுகிரகத்துக்கு ஓடிவிடு

வேற்றுக் கிரகத்துக்கு ஓடிவிடு

உயர்வென்ன தாழ்வென்ன
 வேற்றுமை பேசி நித்தம்
 வீணில் திரிந்தவரை எல்லாம்
 தூணில் கட்டி வைத்து
துவட்டி எடுப்பதுபோல்
உச்சந் தலையில் ஓங்கிஅறைந்து
யாவரும் என்முன்னே 
ஒன்றென்று சப்தமில்லாமல் உரைத்தாய்
பேதம் இங்கு இல்லைடா
வேற்றுமை பேசி திரியும் மானிடர்காள்!
அரவமின்றி நில்லடா
அடுத்தவன் மனையைப் பாராதே
அடுபகை கொண்டு எம்பாதே
ஆறடி தூரத்தில் நில்  
மாறுபாடு உன்டெனில்
ஆறடிக்குள் செல் என்றாய்
அருவமாய்ச் சுற்றித் திரிகின்றாய்
அகப்பட்டவரை சுருட்டி 
கக்கத்தில்  வைத்துவிட்டு
கடகடவென நடக்கின்றாய்
தூங்கா நகரையும் தூங்க வைத்து
தாலாட்டுப் பாடி
தனித்தனியே கிடத்தி விட்டாய்
துட்டு பின்னால் ஓடுவோரை 
மட்டுப்படுத்தி சற்று 
கட்டுப்படுத்தி
எட்டு திக்கும் கை பரப்பி 
வட்டில் முன்னே இருப்பவரையும்
கட்டிலிலே கிடக்க வைத்து
தொட்டில் ஆட்டும் மனையாளை
எட்டி நின்று பார்க்க வைத்து
சுட்டிச் சிறுவரையும்
துள்ள தடா போட்டு
கட்டி அணைத்தலுக்கு அரைப்புள்ளியிட்டு
அண்டம் தாண்டும்
அறிவாளியையும் அறைக்குள்ளே
அடக்கி வைத்து
தண்டம் என்னும் பட்டத்தை
தமையருக்கு வாங்கித் தந்து
தனிமையின் கொடுமையை
தனித்தனியாய்ப் பரிசளித்து
அறியா இடத்தையும்
அரை நொடியில் அழிக்கும் 
அசாதாரண கருவி படைத்தோரையும்
அலர வைத்து அடங்க வைத்து
கண்ணாம்மூச்சி விளையாடி
கர்வம் தொலைக்க வைத்து
கண்மூடி கிடக்க வைத்து
பகலிரவு பாராது படுக்க வைத்து
பணம் மில்லாமல் எம்மைப்
பிணமாக கிடத்தி வைத்து
ஒப்பாரும் மிக்காரும் எமக்கில்லை
ஓடி ஒளிந்தாலும் உனைத் தொடுவதே
என் கொள்கை எனத்
துரத்தியடிக்கும் கொரோனாவே
என்னவேண்டும் உனக்கு
வேண்டியதைச் சொல்லி
விவகாரத்தை முடித்துவிடு
வில்லங்கம் வேண்டாம்
வேற்றுக் கிரகத்திற்கு 
ஓடிவிடு!
        
        
        
        
        
        
        

Comments

Popular Posts