ஒன்றே செய் ; நன்றே செய்

ஒன்றே செய்; நன்றே செய்


நல்லோர்க்கு இல்லை நாளும் கிழமையும்."

தொடக்கம் நல்லதாக இருந்தால் 
முடிவும் நன்றாகவே இருக்கும்.
ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக 
இருக்கும் என்ற நம்பிக்கையோடு 
தொடங்குங்கள்.
நன்மையானதாகவே இருக்கும்.

அன்பு,நட்பு ,தொழில், படிப்பு,கடமை
போன்றவை எல்லாம் சரியான நேரத்தில்
செய்யப்பட வேண்டும்.
நாளை என்று தள்ளிப்போடுவோமானால்
அது நடைபெறாமலேயே போய்விடலாம்.

அன்றரிவாம் என்னாது அறஞ் செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை"
என்றார் வள்ளுவர்.

நாளை நாளை என்று வேலைகளைத் தள்ளிப்
போடும்போது ஏராளமான வேலைகள் கண்முன்
குவிந்து கிடக்கும்.
எதைச் செய்வது என்பதே  மலைப்பாக இருக்கும்.
இவ்வளவு வேலை செய்ய வேண்டுமா
என்ற நினைப்பே நம்மை சோர்வுக்குள்ளாக்கிவிடும்.
காரணமில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

தொழில் செய்வதற்கு என்று ஒரு காலம்
உண்டு. அதே போன்றுதான் கல்வியும்.
வயதும் காலமும் செல்லும் முன்பே முந்திக்
கொள்ள வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.

கடமை ஆற்றுவது உரிய நேரத்தில் நடைபெற
வேண்டும். பிந்தி நமது கடமைகளை ஆற்றலாம்
என்று தள்ளிப் போடுவோமானால் சில நேரங்களில்
அதனைச் செய்வதற்கான வாய்ப்பையே நழுவ
விட்டவர்கள் ஆகிவிடுவோம்.

இன்று செய்ய முடிந்ததை நாளை என்று
தள்ளிப் போடுதல் கூடாது.

"பருவத்தே பயிர் செய்" என்பது முதுமொழி.

 எதுவும் உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும்.
 பருவம் தவறிய காரியம் சிறப்பாக
 அமையாது.
 அந்தந்த காலத்தில் அந்தந்த செயல்கள்
 செய்யப்படும்போதுதான் அதற்கு மதிப்பு.

பள்ளிப் பருவத்தில் படிப்பைத் தள்ளி வைக்க
ஆயிரம் காரணங்கள் கூறியிருப்போம்.

வளர்ந்த பின்னரும் அந்த மனநிலைத்
தொடருமானால் அது நமது வளர்ச்சியைக்
கெடுத்துவிடும்.

ஒன்று செய்யும்போது இன்னொன்றும்
செய்யலாமே என்று அகலக்கால்
வைத்தல் கூடாது.

"செய்வன திருந்தச் செய் "என்பார்கள்.
எடுத்த காரியத்தைக் கச்சிதமாகச்
செய்து முடிக்க வேண்டும்.

நொண்டிச் சாக்குச் சொல்லி தள்ளிப்
போட்டுவிடக் கூடாது.

"வெற்றி பெற்றவன் காரணத்தைத் தேடுவதில்லை.
காரணத்தைத் தேடுபவன் வெற்றியை
 எட்டுவதே இல்லை" என்பார்கள்.
 
 வெற்றியை நோக்கிய நமது பயணத்தில்
 நாளை என்ற சொல் தடையாக இருந்துவிடக்
 கூடாது.
 நாளை என்பது நம் கையில் இல்லை.

 "ஒன்றே செய் நன்றே செய் அதுவும் 
இன்றே செய் "
என்ற மந்திரத்தை மனதில் வைத்து
செயலில் இறங்குவோம்.
வெற்றியை உறுதி செய்வோம்.

        

       



Comments