அன்னை இட்டதீ அடிவயிற்றிலே

  அன்னை இட்டதீ அடிவயிற்றிலே....


பட்டினத்தார் தமிழ்த் துறவியருள்
முதன்மை வரிசையில் வைத்து 
பெருமைப்படுத்தப்படத் தக்கவர்.
இவருடைய பாடல்களும் தத்துவங்களும்
அன்றும் இன்றும் என்றென்றும் படித்து 
இன்புறத் தக்கவை.
இவர் தன்அன்னை இறந்தபோது
பாடிய பாடல்கள் கல் நெஞ்சையும்
கண்ணீர் வடிக்க வைக்கும்.
தாயைப் பற்றி பேசும் தமிழ்ப் பேச்சாளர்கள்
பட்டினத்தாரில் பாடலைக் கூறாமல்
தமது பேச்சை முடித்திட முடியாது.

தாயைக் கொண்டாடும் அனைத்து
உள்ளங்களும் படித்து கண்ணீர் விடும் 
பாடல் இவருடையது. 

மிகுந்த செல்வமும் இறை நம்பிக்கையும்
கொண்ட இனிமையான குடும்பம் 
பட்டினத்தாருடையது.இடையில் ஏற்பட்ட சில 
நெருக்கடியான சூழல்களால் அவருடைய
மனம் சஞ்சலம் அடைந்தது.

கைப்பொருளா ? மெய்ப்பொருளா? என்ற
தேடல் மனதிற்குள் எழுந்தது.
இறுதியில் மெய்ப்பொருள் ஒன்றே போதும் என்று 
துறவறத்தைத் தேர்ந்தெடுத்தவர் பட்டினத்தடிகள்.

அவர் துறவறம் பூண்பதற்கு முன்பாக 
அன்னையிடம் ஆசிபெறச் சென்றார்.

அம்மா தன் நினைவு எப்போதும் மகனோடு
இருக்க வேண்டும் என்பதற்காக 
ஒரு துணிப்பையை எடுத்து
பட்டினத்தாரின்  இடுப்பில் கட்டி விட்டார்.

ஏனம்மா என்று கேட்டார் அடிகளார்.
என் நினைவாக இது உன்னோடு இருக்கட்டும்.
இந்தத் துணிப்பை அவிழும்போது நீ
என்னைக் காண வர வேண்டும்.
அதுவே எனது இறுதிக் காலமாக இருக்கும்
என்பதை அறிந்து கொள்
என்று சொல்லி வாழ்த்தி அனுப்பி வைத்தார். 

பட்டினத்தடிகளார் வீட்டைவிட்டு வெளியேறினார்.
காலங்கள் உருட்டோடின.
ஒருநாள் அவர் திருவிடை மருதூர் என்ற 
ஊரில் இருந்தபோது இடுப்பில் 
கட்டியிருந்த அந்தப் பையின் முடிச்சு 
அவிழ்ந்து கீழே விழுந்தது.
பதறிப்போனார் ....அம்மா அதுவே என் 
இறுதிக் காலம் என்று சொன்னவை 
நினைவுக்கு வர வீட்டை நோக்கி ஓடி
வந்தார்.

அங்கே அவர் கண்ட காட்சி...
பட்டினத்தார் வருகைக்காக தன்கடைசி மூச்சைப்
பிடித்துக்கொண்டு கட்டிலில் கிடந்தார் அம்மா...
அம்மா...அழுதபடி ஓடி சென்று தூக்கினார்.
அவ்வளவுதான்... பட்டினத்தார் கரங்களிலேயே
அம்மாவின் உயிர் பிரிந்தது.

எவ்வளவு தான் துறவறம் பூண்டவராக
இருந்தாலும் அன்னையின் பிரிவை அவரால்
தாங்க முடியாமல் திக்குமுக்காடிப் போனார்.
 அம்மாவைத் தீயிலிட்டு எரிக்க வேண்டுமே 
என நினைத்தபோது வெடவெடத்துப்
போனார்.

முகம்மேல் முகம் வைத்து முத்தம்
கொடுத்து ,மகனே என்றழைத்த வாய்க்கு
அள்ளி அரிசி இடுவேனோ? 
அவள் தலைமேல் கொள்ளிதனை
வைப்போனோ ?என அழுது புலம்பினார்.

"வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும்
தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து
முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய
தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்."

என்று சொல்லிச் சொல்லி மருகினார்.

"அரிசியோ நானிடுவேன் ஆத்தாள்
தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்
உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு.."

என்று கண்ணீர்விட்டு கதறினார்.

விறகில் அம்மா உடலை வைத்தால்
அம்மாவுக்கு நோவு வருமே என்று எண்ணி
வாழை மடலிட்டு அதன்மேல் கிடத்தினார்.
இறுதியில் தீயிட வேண்டிய நேரம் வந்தது.

அம்மாவின் உடலுக்கு எரியூட்டிவிட்டுப்
பாடிய பாடல் இதோ :

"முன்னை யிட்டதீ முப்பு றத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே"

சிவபெருமான் நெற்றிக்கண் திறந்து
அசுரர்களை அழிக்க இட்ட தீ முப்புறத்தையும்
எரித்தது.
பின்நாளில் பின்னால் வால் உடைய
அனுமன் வாலில் கொழுத்தி இட்டதீ 
இலங்கையை எரித்தது.
அன்னையின் அடிவயிற்று வெப்பத்தில்
உருவாகிய நான் இட்ட தீ 
என் அம்மாவையே எரிக்கப் போகிறது...
ஈதென்னக் கொடுமை....
என புலம்பி புலம்பி துவண்டு போனார்.

என் அன்னை வீற்றிருந்தாள் .
நான் வருவேன் என்று வீதியிலேயே
காத்திருந்தாள்.
நேற்று இருந்தாள் .இன்று இல்லாமல் 
வெந்து நீராகிப் போனாளே!
ஏதோ என்று இரங்கல் கூறிவிட்டுச்
செல்லாமல் எல்லோரும்
பால் தெளிக்க வாருங்கள்...
என்று அனைவரையும் அழைத்தார்.

ஒரு துறவி தன் தாய் இறப்பைத்
தாங்கமுடியாமல் மருகியது
கல் நெஞ்சத்தையும் கண்ணீர்
உகுக்க வைத்தது.

துறவியாய் இருந்தால் என்ன... 
இல்லறத்தாராய்  இருந்தால் என்ன... 
தாய் தாய்தான்.
தாயின் இழப்பு யாருக்குமே 
தாங்க முடியாதது என்பது நிதர்சனம்.


         காதற்ற ஊசியும்
         வாராது காண் 
         உன் கடை வழிக்கே!


Comments

  1. தாயின் பாசத்தை வெளிப்படுத்தும் பட்டினத்தாரின் நிகழ்வு மிகவும் போற்றத்தக்கது.தற்காலத்தில் அவரைப்போன்ற மனிதர்களை காண்பது அரிது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts