பதற்றம் வேண்டாம்
பதற்றம் வேண்டாம்
சுமதிக்கு எப்போதும் ஒரே எரிச்சல்.
யாரைப் பார்தாலும் முகத்தில்
அடித்த மாதிரி பேசிவிடுவாள்.
காரணமில்லாமல் தம்பி தங்கைகள்மீது
கோபப்படுவாள்.
சிடுசிடு என்று எரிந்து விழுவாள்.
அம்மாவுக்கு இந்தப் பெண் ஏன் இப்படி
இருக்கிறாள் என்று ஒரு புரியாத
புதிராகவே இருந்தது
யாரும் கிட்ட நெருங்கவே அச்சப்படும் அளவுக்கு
அவளுடைய செயல்கள் எல்லாம் இருக்கும்.
ஏன் இந்த ஆத்திரம்?
" இப்படி ஆத்திரப்பட்டு ஆத்திரப்பட்டு
என்னத்தை சம்பாதித்தாய்?
அனைவரின் வெறுப்பையும்தான்
சம்பாதித்து வைத்திருக்குக்கிறாய்."
சற்று உரைக்கும்படியாக கேட்டு வைத்தார்
அம்மா.
இப்போது சுமதிக்கு
சற்று உரைக்க ஆரம்பித்தது.
ஆம்...அம்மா சொல்வது சரிதான்.
என்ன ஆயிற்று எனக்கு?
தனக்குள்ளேயே கேட்டுப் பார்த்தாள்.
தன்மீதே ஒரு வெறுப்பு வந்தது
ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு
எரிச்சல் வருகிறது? ஏன் எனக்கு இந்தப்
பதற்றம்?
விடை காண முடியாமல் புலம்பிக் கொண்டே
இருந்தாள் சுமதி.
சுமதியைப் போன்று நாமும் பல
நேரங்களில் காரணமில்லாமல் எரிச்சல்
பட்டிருப்போம்.
பக்கத்தில் வந்த தம்பி தங்கைகளைத்
துரத்தி அடித்திருப்போம்.
நண்பர்களிடம் காரணமில்லாமல் கடுப்பாகி
இருப்போம்.
அவர்கள் சென்ற பிறகு நாம் இப்படி
நடந்திருக்க கூடாது என்று நம்மை நாமே
நொந்திருப்போம்.
இப்படி எரிச்சல் பட்டு நாம் சம்பாதித்து என்ன?
அன்பையா?
அனைவரின் வெறுப்பையா?
சற்று யோசித்துப் பாருங்கள்.
அனைவரின் வெறுப்பைதான் சம்பாதித்து
வைத்திருப்போம்.
நட்பு வட்டத்தைத் தொலைத்திருப்போம்.
சிடுமூஞ்சி என்ற பட்டத்தை வாங்கி
வைத்தது தான் மிச்சம் .
சேர்ப்பதில் இருக்கும் இன்பம் தொலைப்பதில்
இருக்குமா என்ன?
பணத்தை சம்பாதிக்க தெரிந்தவனுக்கு
அதைப் பாதுகாக்க தெரிந்திருக்க
வேண்டுமல்லவா!
நட்பை சம்பாதிக்க தெரிந்த நமக்கு
அதை இறுதிவரை காப்பாற்ற தெரிய
வேண்டாமா?
எப்போதும் ஒரு பதற்றத்துடன் இருந்தால்
யார் நம்மோடு வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
வருடக்கணக்கில் பேணி வந்த நட்பு நிமிட
நேரத்தில் விலகி ஓடிவிடுமே.
இப்படி எதற்கு எடுத்தாலும் எரிச்சல்
படுவதற்கு காரணம் என்ன?
ஏன் இப்படி ஒரு பதற்றம்?
எங்கோ உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம்.
உங்களின் இயலாமை அடுத்தவர்கள் மீது
எரிச்சல் பட வைக்கிறது என்று
என்றாவது உணர்ந்தது உண்டா?
இயலாமையால் வருவதுதான் பதற்றமா?
அந்த பதற்றமான சூழலுக்கு தள்ளியது எது?
அதன் ஆணிவேர் எங்கு உள்ளது?
சற்று யோசியுங்கள்.
ஏதோ ஓர் உண்மையை மறைக்க பல
நேரங்களில் பதற்றம் வந்திருக்கும்.
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்
எத்தனை நாளுக்குதான் ஓடும்?
ஒருநாள் உண்மை வெளிச்சத்தில் வந்து நிற்கும்.
ஆதலால் செயலில் உண்மை இருக்கட்டும்.
பதறாத காரியம் சிதறாது.
எப்போதும் பதற்றமாகவே இருந்து நாம்
இழந்தது போதும்.
பதற்றம் உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும்.
அமைதியான தடாகத்தில் கல்லை
வீசி கலங்கடித்தது போல் உங்களை
கலங்கடித்துவிடும்.
பதற்றம் எல்லாவற்றையும் சிதறடித்துவிடும்.
படிப்பில் கவனச் சிதறலை ஏற்படுத்தும்.
நட்பை துரத்தும்.
சொந்தங்கள் தொலை தூர
காட்சியாகிப் போகும்.
உடல் நலன் கெடும்.
மனம் எதையும் நிதானமாக
யோசிக்கும் திறனை இழக்கும்.
அந்த அரக்கனுக்கு உங்களிடம் இடம்
இல்லை என்று முடிவு கட்டுங்கள்.
நிதானமாக செயல்படுங்கள்.
உண்மையாய் இருங்கள்.
அது போதும்.
உண்மையும் நிதானமும் இருக்கும்வரை
பதற்றம் கிட்ட வந்து அண்டவே அண்டாது.
பூ....இவ்வளவு தானா....என்று
தோன்றுகிறதல்லவா!
இவ்வளவுதாங்க...
பதற்றம் என்ற அரக்கனுக்கு என்னில்
இடமில்லை.
உறுதி எடுத்து விட்டீர்களல்லவா!
பதற்றத்தோடு கொள்ளுங்கள் பிணக்கு.
நிதானமாய்த் தொடங்கட்டும்
உங்கள் வெற்றி கணக்கு!
இந்தப் பதிவு ஒரு தெளிவைத் தரவல்லதாக இருந்தது.மிக்க நன்றி.
ReplyDelete