மனிதநேய மாமணி ஸ்டீபன் எடிசன்
மனிதநேய மாமணி ஸ்டீபன் எடிசன்
பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன் "
என்றார் வள்ளுவர்.
மனிதநேயத்தால்தான் உலகம் இயங்கிக்
கொண்டிருக்கிறது.எல்லா நற்பண்புகளுக்கும்
உயிர் நீரோட்டமாக இருந்து இயக்குவது
மனிதநேயம். மனிதநேயம்தான் ஒரு
மனிதனைப் பற்றிய உண்மையான மதிப்பீடு.
மனிதநேயம் மிக்க பெருமகனாக வாழும்
மனிதர்களைத்தான் சமூகம்கொண்டாடும்.
அந்த வகையில் ஆசிரியர் சமூகம் கொண்டாடும்
மனிதநேய மாண்பு மிக்க நல்லாசிரியர்
ஸ்டீபன் எடிசன் ஆசிரியர் என்றால்
மிகையாகாது .
இளமைப் பருவம் :
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
இடையன்குடி ஆசிரியரின் சொந்த ஊர் .
ஆனால் அவர் தன் சொந்த ஊரில் வாழ்ந்ததைவிட
மற்ற ஊர்களில் வாழ்ந்த நாட்கள்தான் அதிகம்.
அப்பா ஞானமாணிக்கம் டேவிட் மற்றும்
அம்மா ராஜரெத்தினம் இருவருமே ஆசிரியர்கள்.
அதனால் ஊர் ஊராக இடமாறுதல்
பெற்றுச் செல்லும் சூழ்நிலை இருந்தது .
அதன் காரணமாக எட்டுக்கும் மேற்பட்ட ஊர்
மக்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
சிறுவயதிலேயே "யாதும் ஊரே யாவரும்
கேளிர் "என்ற பொதுமைக் கருத்தில்
அசையா நம்பிக்கை கொண்டவராக
வளர்வதற்கு இது காரணமாக இருந்தது.
பள்ளிப்பருவம் ஒரு குறுகிய
வட்டத்திற்குள் அடங்கிப் போகாமல்
பலதரப்பட்ட குழந்தைகளோடு பழகும் வாய்ப்பைப்
பெற்றிருந்ததால் பெருந்தன்மையான குணமும்
எல்லோரிடமும் இயல்பாகப் பேசும்
நற்பண்பும் வந்து ஒட்டிக் கொண்டது.
கால்டுவெல் நினைவு உயர்நிலைப்பள்ளியில்
படித்த காலத்தில் இருந்தே சமூகப் பணி
செய்வதில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டது .
அதன் பின்னர் கல்லூரி படிப்பு , ஆசிரியர்
பட்டயப்படிப்பு முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக
மும்பை வந்தார்.
மாநகராட்சிப் பணி:
வெளிநாடு செல்ல வேண்டும்
என்ற வேட்கையோடு மும்பை வந்தவருக்கு
மும்பை மாநகராட்சியில் ஆசிரியராகப்
பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது .
சீத்தாகேம்ப் பள்ளியில் 1978 ஆம் ஆண்டு
ஆசிரியராக பணி நியமனம்
செய்யப்பட்டார்.தொடர்ந்து திலக் நகர் ,தாராவி
நேரு நகர் ஆங்கிலப்பள்ளி,ஆதர்ஷ் நகர்,
கே.சி.மாதுங்கா ,ஆகியப் பள்ளிகளில் ஆசிரியராகப்
பணியாற்றினார்.அதன் பின்னர் எஸ் எல் ரோடு
முலுண்ட் மாநகராட்சி தமிழ்ப் பள்ளியில்
தலைமை ஆசிரியராக பணியாற்றி ஆளுமைமிக்க
தலைமையாசிரியர் என்ற நற்பெயரைப்
பெற்றார். இயல்பாகவே பிறருக்கு உதவும்
மனப்பான்மை இருந்ததால் கல்வியோடு
தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும்
பள்ளி மாணவர்களுக்கு தம்மால் இயன்ற
உதவிகள் செய்து வந்தார் .உடன் வேலை
பார்க்கும் ஆசிரியர்களுக்கு தேவை ஏற்படும்போது
ஓடிச் சென்று உதவுவதில் ஒருவராக இருந்தமையால்
மற்ற ஆசிரியர்களிடமிருந்து தனித்துவம் மிக்க
ஒருவராக திகழ்ந்தார்.
நல்லதொரு குடும்பம்:
" இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை "
என்றார் வள்ளுவர்.
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில்
இல்லாதது எதுவும் இல்லை. அத்தகைய நற்பண்பு
மிக்க மனைவி ஸ்டீபன் அவர்களுக்கு
வாய்க்கப் பெற்றது இறைவன்
கொடுத்த வரம். நன்மனையாட்டி எலிசபெத் கல்யாண்
ரெயில்வே பள்ளி தலைமை ஆசிரியை.
ஆசைக்கு அருமையான மகள்.
அவர் நர்சிங் கற்றதோடு நின்றுவிடாமல்
ஆசிரியர் பட்டயப்படிப்பும் கற்றுத் தேர்ச்சி
பெற்றார்.. ஆனால் கற்பித்தல்மீது கொண்ட
நாட்டத்தால் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்து
ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
மகன் நியூசிலாந்தில் பணியாற்றுகிறார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
என்பதற்கிணங்க அருமையான குடும்பம் ஸ்டீபன்
ஆசிரியர் அவர்களுக்கு வரமாக அமைந்தது .
பன்மொழிப் புலமை :
ஆங்கிலம், இந்தி, மராட்டி மொழிப் புலமை
இருந்ததால் பிறமொழி பேசும் மக்களின்
கவனம் ஸ்டீபன் ஆசிரியர் அவர்கள்
பக்கம் திரும்பியது. அதன் விளைவாக பள்ளி
நிர்வாகத்தோடு இணைந்து கல்வி வளர்ச்சிப்
பணி ஒருங்கிணைப்பாளராக இரண்டு
வருடங்கள் பணியாற்றும் வாய்ப்பினைப்
பெற்றார்.அதைத் தொடர்ந்து
மும்பை மாநகராட்சி மஜ்தூர் யூனியன்
உதவித் தலைவராகும் வாய்ப்பும்
வந்து சேர்ந்தது.தனக்குக் கிடைத்த
பதவியின்மூலம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு
மட்டுமல்லாது பிறமொழி ஆசிரியர்கள் மற்றும்
இதர ஊழியர்களுக்கான பிரச்சினைகளை
நிர்வாகத்திடம் பேசி உதவிகள்
வாங்கித் தர முடிந்தது.
நல்லாசிரியர் விருது:
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று"
என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க
தான் இறங்கி செயல்படும் செயல்களில்
பலரும் பாராட்டும் அளவுக்குச் செயல்பட்டவர்.
இவரது அயராத பணிக்கு ஒரு அங்கீகாரமாக
2008 ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி
மேயர் திருமதி சுபா ரௌல் அவர்கள் தமது
பொற்கரங்களால் நல்லாசிரியர்
விருது வழங்கி கௌரவித்தார்..தமிழ் மீது
மட்டுமல்லாது நம்மை வாழ வைக்கும்
மராட்டியத்தின் மீதும் மிகுந்த பற்று
கொண்டவர் என்பது அவர் மராட்டி மொழிப்
புலமை பெற்றிருப்பதன்மூலம் தெரிந்து
கொள்ளலாம்.
தமிழாசிரியர் குழுமம் :
மாநகராட்சித் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு
தனிப்பட்ட அமைப்பு இருந்தால் மட்டுமே ஆசிரியர்கள்
நலன் சார்ந்த செயல்களில் ஈடுபட முடியும்
என்பதை எடிசன் உணர்ந்தார்.அதனால்
மும்பைத் தமிழாசிரியர் குழுமம் என்ற
அமைப்பைத் தொடங்கினார்.ஆசிரியரின்
செயலுக்கு உறுதுணையாக இருந்து
ஆலோசனை வழங்கிய நண்பர்கள் பலர்
உண்டு. அவர்களுள் சுந்தரமூர்த்தி
ஆசிரியர், கதிரேசன் ஆசிரியர்,பால் ஜெபஸ்டீன் ஆசிரியர், செல்லப்பா ஆசிரியர் ஆகியோர்
முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குழுமம் தொடங்குவதில் பெரும் பங்கு வகித்த நண்பர்களை
இன்றும் நன்றிப் பெருக்கோடு நினைவுகூர்ந்தது
இவரது நன்றி மறவா பண்புக்கு எடுத்துக்காட்டாகும்.
இடமாறுதல் பிரச்சினை ,நிர்வாகப் பிரச்சினை,
பெற்றோர் ஆசிரியர் பிரச்சினை யாவுக்கும்
நடுநிலையோடு தீர்வு காணும் பண்பு
கொண்டிருந்தமையால் அனைத்து ஆசிரியர்களையும்
எளிதாக தன்பக்கம் ஈர்க்க முடிந்தது.
ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கோடு
ஆரம்பிக்கப்பட்டதாக இருந்தாலும்
நாளாக ஆக குழுமத்தின் சேவை ஆசிரியர் நலன்
என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு
உதவிகள் பெற்றுத்தரும் பெரும் தொண்டு
அமைப்பாக வளர்ச்சியடைந்தது.இதனால்
ஏழை எளிய குடும்பங்களின் அன்பையும்
வாழ்த்தையும் பெற்றார்.
பெற்றோர் ஆசிரியர் உறவை மேம்படுத்தவும்
பள்ளிப்படிப்பை முடித்து வெளியில் செல்லும்
மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புக்கான
வழிகளைச் சொல்லித் தரவும் என்று பணியின்
எல்லையை விரிவடையச் செய்த பெருமை
ஆசிரியருக்கு உண்டு.
சமூக நோக்கு :
எந்த ஒரு மனிதனும் சாதாரணமாக
இறங்கி வந்து சேவை செய்துவிட முடியாது.
சமூகத்தின்மீது கொண்ட அக்கறை, சமூகம்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தனது
எதிர்பார்ப்பு, இரக்க குணம் யாவும்
கொண்டவர்களால் மட்டுமே சேவை செய்ய
முடியும் . பெயருக்காகாவோ புகழுக்காகவோ
செய்யும்போது நாளடைவில் சேவை செய்ய வேண்டும்
என்ற எண்ணம் காணாமல் போய்விடும்.
இவை எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்ட
குணம்தான் இவருக்கு இன்றும் சேவை செய்யும்
உத்வேகத்தைத் தந்து கொண்டிருக்கிறது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா சமூகப்பணி
எடிசனின் தனி அடையாளம்.
பெண்ணியம் பற்றிய சிந்தனை :
சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு,அரசியல்,
அதிகாரம், உரிமை போன்ற அனைத்திலும்
பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு
களையப்பட்டு பெண்களுக்கும் சமவாய்ப்பு
வழங்கப்பட வேண்டும்.அப்போதுதான்
சமுதாயம் முன்னேறும் என்பதில் அசைக்க
முடியாத நம்பிக்கை கொண்டவர்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும்
வன்கொடுமைகளைக் கடுமையாகச் சாடுவார்.
குறிப்பாக வரதட்சணை என்ற பெயரில் நடைபெறும்
வியாபாரத்தையும் அதனால் சமூகத்தில்
பின்தங்கிய குடும்பங்கள் படும் வேதனைகளையும்
அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதை
எண்ணி மிகவும் வேதனை அடைவதாகக்
கூறுவார். வரதட்சணைக்கு எதிராக ஒட்டு
மொத்த சமூகமும் குரல் கொடுத்து அதனை
முற்றிலுமாக துரத்தியடிக்க வேண்டும் என்பதில்
உறுதியான கொள்கை உடையவர்.
தட்சணை இன்றி அர்ச்சனை இல்லை
வரதட்சணை இன்றி திருமணம் இல்லை
என்ற நிலை மாறும்போதுதான் உண்மையாகவே
பெண்களுக்கான சம உரிமை நிலைநாட்டப்
பட்டதாகக் கருத முடியும் என்பார்.
பயணத்தில் நாட்டம்:
"வாழ்க்கை ஒரு பயணம். அதில் பயணம்
செய்யாதவர்கள் வாழ்வின் முதற்படியிலேயே
நிற்பவர்களாவர்"
நாளும் பயணம் மேற்கொள்ளும் ஒருவரால்
மட்டுமே உலக நடப்பை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
பயணம் மேற்கொள்ளுவது மனதிற்குப்
புத்துணர்ச்சி அளிக்கும். புதிது புதிதாக
சிந்திக்கத் தூண்டும்.முன்னேற்றத்தை நோக்கிய
நகர்ச்சியை ஏற்படுத்தும். ஸ்டீபன் ஆசிரியர்
அவர்கள் பயணம் மேற்கொள்வதில்
மிகுந்த ஆர்வம் கொண்டவர்.இவரின்
இந்த ஆர்வம்தான் அவரைப் பன்னிரண்டுக்கும்
மேற்பட்ட உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுவர
வைத்தது. அதன்மூலம் உலக நாடுகளின்
கலாச்சாரம் ,பண்பாடு ஆகியவற்றைக்
கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் பன்னாட்டுப் பயணங்கள்மூலம்
உலக நாடுகளின் கல்விக் கொள்கைகள்
பற்றியும் அறிந்து கொண்டார்.பயணங்கள்
மனிதனை புதிய சிந்தனைக் களத்திற்கு
இட்டுச் செல்லும் .சிந்தனையாளனாக மாற்றும்.
முற்போக்குச் சிந்தனைக்கு ஊற்றாக இருந்து
உதவும் என்பதால் யான்பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த நோக்கோடு
சுற்றுலா அழைத்துச் செல்லும் சேவையையும்
செய்து வருவது பாராட்டுதலுக்கு உரியது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் :
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன்
பூங்குன்றனாரின் கருத்தில் அசையா நம்பிக்கை
கொண்டவர் எடிசன் அவர்கள்.
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்"என்ற
சமய பாகுபாடற்ற கருத்தில் உறுதியாக
இருப்பவர்.சாதி, சமயம்,இனம் என்ற குறுகிய
வட்டத்துக்குள் தன்னை அடக்கி கொள்வதில்
விருப்பம் இல்லாதவர்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ..." என்ற
வள்ளுவர் வாக்கிற்கு இணங்க
சாதி சமய பாகுபாடற்ற சமதர்ம சமுதாயம்
காண வேண்டும் என்பதே எனது லட்சியம்
என்பார். தன்னலம் கருதா உதவி மட்டுமே
உதவியாகக் கருதப்படும் என்பதில் உறுதியாக
இருப்பவர்.வரதட்சணை,கையூட்டு,சாதி பாகுபாடு
உயர்வு தாழ்வு பாராட்டும் இழிகுணம் போன்ற
புரையோடிப்போன சமூகச் சீர்கேடுகளுக்கு
எதிராக குரல் கொடுக்கும் சமூக
சிந்தனையாளர் இவர். இத்தகைய
முற்போக்குச் சிந்தனைகள்தான்
அவரைப் பொதுப்பணிக்குக் கொண்டு
வந்து நிறுத்தியது.
ஓய்விலும் ஓயாத சேவை :
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக
ஆசிரியர்பணி. கூடவே சமூகப்பணி என்று
தொய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஆசிரியர்
ஓய்விற்குப் பின்னரும் ஓய்ந்திருக்கவில்லை.
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒருங்கிணைத்து
அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.
இவை யாவும் எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாமல் இன்றுவரை நடைபெற்றுக்
கொண்டிருப்பது அவரது பணிக்கு
மகுடம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
பள்ளிக்கும் தனக்குமான தொடர்பினைத்
துண்டித்துவிடாமல் தொடர்ந்து மாணவர்
நலன் கருதி அவர்களுக்குத் தேவையான
பொருளாதார உதவிகளை தன்னார்வ
அமைப்புகளோடு இணைந்து செய்து
வருவது அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும்
நல்ல பாராட்டுதலைப் பெற்றுத் தந்துள்ளது.
கலங்கரை விளக்கு :
மும்பை வரும் ஆசிரிய பெருமக்களுக்கு
இவர் ஒரு கலங்கரை விளக்கு என்றால்
மிகையாகாது. மொழி தெரியாது
வேலைக்காக மும்பை வந்து
யாரை அணுக வேண்டும் ?
எங்கே செல்ல வேண்டும்? என்ற
எந்த அடிப்படை அறிவும் இல்லாது நிற்கும்
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான
வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தந்து
உதவும் பணி பாராட்டுக்குரியது.
கற்றது கைமண்ணளவு என்ற கருத்தில்
அசையா நம்பிக்கை உண்டு. நாளும் புதிது புதிதாக
ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்
என்ற ஆர்வமும் வேட்கையும் கொண்ட
ஒரு தேடல் கொண்டவர்.
நாளும் புதுப்புனல் பாய்ச்சி உள்ளத்தை
புத்துணர்வோடு வைத்துக் கொள்ளும்
பக்குவம் வேண்டும் என்பார்.
மகிழ்ச்சிலும் மகிழ்ச்சி:
மகிழ்ச்சியிலும் பெரும் மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சிப்
படுத்திப் பார்ப்பதுதான் என்பார்கள்.
அதன்மீது அசையா நம்பிக்கை கொண்டவர்.
தான் மட்டுமல்லாமல்
தன்னைச் சுற்றி உள்ளவர்களும்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்பதே அவரின் கொள்கை.
"பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்"
என்ற கலித்தொகை பாடல் வரிகளுக்கு
ஏற்ப சிறந்த வாழ்வியல் பண்புகளைக் கொண்டு
மனிதநேயத்தின் கொள்கலனாக விளங்கும்
எடிசன் பணி மும்பை மக்களுக்கு என்றென்றும்
தேவை என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
சிறந்த கல்வியாளர்,முற்போக்குச் சிந்தனையாளர்,
ஆளுமைத் திறன் மிக்கவர், சீர்திருத்தவாதி,
மனிதநேயம் மிக்கவர் போன்ற பன்முகம் கொண்ட ஸ்டீபன் எடிசன்ஆசிரியர் மும்பை
வரலாற்றின் தவிர்க்க
முடியாத சக்தி என்பதை நாளைய வரலாறு பேசும்.
Miga Arumai.
ReplyDeleteஸ்டீபன் ஆசிரியர் அவர்கள் பதிவீட்டில் கூறப்பட்ட அனைத்து நற்பண்புகளுக்கும் பாத்திரமானவர்.மிக அருமையான பதிவு.
ReplyDeleteCongratulations.God bless his Activities and Abilities for ever.
ReplyDeleteஸ்டீபன் ஆசிரியர் அவர்களின் ஆளுமைத்திறன் ஆச்சரியப்படும் விதத்தில் உள்ளது. அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள் மாமா 🙏🙏
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஸ்டீபன் ஆசிரியர் அவர்கள், ஆசிரியர் அல்லாது பிற பணிகளிலிருக்கும் பலரிடமும் நல்ல நட்பும் தொடர்பும் வைத்திருப்பவர் என்பதற்கு அவர் என்போன்றோரோடு கொண்டிருக்கும் நட்பு எடுத்துக்காட்டாகும். என்னுடைய பார்வையிலும், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து குணாதிசயங்களுக்கும் பாத்திரமான நல்ல மனிதர் ஸ்டீபன் ஆசிரியர் என்பது உறுதி. ஒரு ஆசிரியை தனது சக ஆசிரியர் பற்றி இந்த அளவுக்கு உயர்வாக பதிவு செய்துள்ளதே அவர் பெற்ற பேறு.
ReplyDelete