வெள்ளத்தால் போகாது ....கல்வி

ஒருவன் தன் வாழ்வில் கிடைத்த மிகப்
பெரிய செல்வமாகக் கருதுவது கல்விச்
செல்வமாகும்.
கல்வியை ஒருமுறை பெற்றுவிட்டால்
வாழ்நாள் முழுவதும் கூடவே வரும்.
என்னிடம் நிறைய கல்வி இருக்கு யாராவது 
களவாடி சென்று விடுவார்களோ ..என்ற .
கவலை இல்லை. ஐயோ பெருமழை வந்துவிட்டதே...
வெள்ளம் வந்து அடித்துச் சென்றுவிடுமோ என்று
அச்சப்படத் தேவையில்லை.
தீயில் எரிந்து சாம்பலாகிவிடுமோ என்று
நினைத்து வெதும்பிக் கிடக்க வேண்டாம்.
எப்போது நான் உங்களுடையவள் ஆகிவிட்டேனோ...
இனி எப்போதும் உங்களுடையவள்தான்.
எந்த ஒரு சக்தியாலும் உங்களிடமிருந்து
என்னைப் பிரிக்க முடியாது பிரிக்க முடியாத
பந்தம் கல்விக்கும் கல்வியைப் 
பெற்றவருக்குமிடையே ஏற்பட்டுவிடும்.

இதையேத்தான் விவேக சிந்தாமணி ஆசிரியர்

வெள்ளத்தால் போகாது
வெந்தணலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்ளர்க்கோ மிக அரிது
காவலோ மிக எளிது
கல்வி என்னும் உள்ளத்தே
பொருளிருக்க உலகெலாம்
பொருள்தேடி உமல்வதேனோ !"

என்று கூறுகிறார்.


கல்விதாங்க செல்வம் என்று விவேக சிந்தாமணி 
சொல்ல....இல்லை...இல்லை...இல்லை...
செல்வம்மட்டுமல்ல...ஒருவனுக்கு அழகே
கல்வி மட்டும்தான் என்கிறது நாலடியார்.


குஞ்சியகுங் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல _ நெஞ்சத்து
நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்
கல்வியழகே அழகு 
                         
கூந்தல் அழகும் ஆடை அலங்கார அழகும்
மட்டுமல்லாமல் மஞ்சள் பூசிய முக அழகும்
அழகு என்று நினைத்துவிடாதீர்கள்.
பல நூல்களை கற்றுப் பெற்ற 
கல்விதாங்க இவை எல்லாவற்றைவிடவும்
அழகு.


இந்த அழகுக்கு அழகையே நானும
வழிமொழிகிறேன் என்பது போல
சிறுபஞ்சமூலம் ஆசிரியர் 


"மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்_செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு "
                                       _  சிறுபஞ்சமூலம்
                                       

நீங்கள் மட்டும் வழிமொழிந்தால் போதுமா..
நானும் வழிமொழிகிறேன் என்கிறார்
ஏலாதி ஆசிரியர் காரியாசானும்.
கல்வியைப் பாடுவதில் எவ்வளவு போட்டா
போட்டி பாருங்கள்.

அழகைச் சுற்றிதான் உலகமே இயங்கிக் 
கொண்டிருக்கிறது.
இன்றைய தொழில்நுட்பத்தின் பிரமிப்பூட்டும்
வளர்ச்சி... கல்வியால் மட்டுமே சாத்தியமாகியது.
இடைவனப்பும் தோள் வனப்பும்
நடைவனப்பும்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல...
எண்ணோடு எழுத்தின் வனப்பே 
வனப்பு என்கிறது ஏலாதி.

"இடை வனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின்வனப்பும் _ படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு "

நீங்க என்னதான் சொன்னாலும் கல்வி
மட்டுமே எல்லாச் செல்வங்களிலும்
உயர்ந்தது என்று தனது ஆணித்தரமான
கருத்தைச் சொல்லிவிட்டு கடந்து
சென்றுவிட்டார்.
                              
"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்ற பிற "

கல்வியின் சிறப்பு இவ்வளவுதானா....
என்று நினைத்துவிடாதீர்கள்.
நாங்களும் இருக்கிறோம்...என்று பாடிய
புலவர்கள் ஏராளம்.... ஏராளம்!
படிப்பதற்கு நேரத்தைச் செலவிடுங்கள் தாராளம்!

Comments

Popular Posts