முதல் வகுப்பில் நான்...

               பதவி உயர்வு

மூன்று வயதினில் கையில் 
டம்ளரோடு பள்ளி வாசலில்
நின்றிருந்தேன்.
பள்ளியில் சேர்த்துவிட்டால்
தன் கடமை முடிந்தது என்று
கையைப் பிடித்து தரதரவென்று
பள்ளிக்குள் இழுத்துச் சென்றார் அம்மா.
 
பள்ளிக்குள் நுழைந்ததும்
"பள்ளிக்கூடத்தில் சேர்க்கணுமா
அதோ அந்த அறையில் ஒன்றாம்
வகுப்பு ஆசிரியை இருப்பார்.
போய் சேருங்கள் " கை காட்டிவிட்டார்
பள்ளி ஊழியர் கமலம்.

கமலம் கை காட்டிய அறையை நோக்கி
சென்று, நானும் அம்மாவும் சேர்ந்து
எட்டிப் பார்த்தோம்.
"பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க
வந்தீங்களா...வாங்க...வாங்க "வரவேற்றார்
ஒன்றாம் வகுப்பு ஆசிரியை விமலா.

"ரொம்ப சின்ன பொண்ணாக 
தெரிகிறாளே...வயசு ஐந்து 
ஆயிட்டுதா..." கேட்டார் ஆசிரியை.

தலைக்குமேல் கையைக்
இழுத்து காதைத் தொட்டுவிடச்
சொன்னார் ஆசிரியை.

சட்டென்று கையை வைத்து 
தொட்டு விட்டேன்.
"நல்ல சாமர்த்தியம்..."சிரித்துக்கொண்டே
கையை இழுத்து காதைத் தொட உதவி
செய்தார் ஆசிரியை.

 என்னால் தொட முடியவில்லை.

"வயசு இன்னும் ஆகலியே...
அடுத்த வருடம் வாங்க..."
என்று சொல்லி அம்மாவின் கோரிக்கையை
நிராகரித்துவிட்டார் ஆசிரியை.

"வயசு ஆயிற்றோ ஆகலியோ...
பள்ளிக்கூடத்தில் சேர்த்துடுங்க."
அம்மா ஏதோ வெற்றிலை பாக்கு
கடைக்காரனிடம் பேசுவதுபோல பேசினார்.

"அது எப்படி  அம்மா சேர்க்க முடியும்.?
என்றார் ஆசிரியை.

"எப்படியாவது இவளைப்  பள்ளியில்
சேர்த்துப் போடுங்க..".ஏதோ 
ஆடு மாட்டை தொழுவத்தில் 
அடைத்துப் போடுவதுபோல என்னையும்
பள்ளிக்குள் அடைத்துப் போடுங்கள்
என்று அடம்பிடித்தார் அம்மா.

"இதென்ன வேடிக்கையா இருக்கு?
பள்ளியில் சேர்க்கிறதுக்கு ஒரு 
வயசு வராண்டாமா? "என்றார் ஆசிரியை.

"ஊரில் உள்ள அம்புட்டு  பேச்செல்லாம்
பேசுகிறா....நல்லா படிப்பா
எப்படியாவது உன் பக்கத்துல வச்சுக்க"
அம்மா ஆசிரியையை விடுவதாக இல்லை.

"தலைமை ஆசிரியரிடம் கேட்கணும்...
நானாக வகுப்பில் வைக்க முடியாது "
பள்ளி நடைமுறையைத் தெரிவித்தார்
ஆசிரியை.

"எட்டாம் வகுப்பு சார்வாளா....அவரிடம்
நான் சொல்லிடுவேன். நீதானே ஒண்ணாம்
வகுப்பு சொல்லி கொடுக்குறா...உன் 
வகுப்பில் வைத்துக் கொள் "
முரண்டு பிடித்தார்அம்மா.

"அப்படி எல்லாம் வைக்க முடியாதுங்க...
யாராவது அதிகாரி வந்தால் பதில்
சொல்ல முடியாது...."தனது தரப்பு 
ஞாயத்தை எடுத்து வைத்தார் ஆசிரியை.

"பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டால்...
பால் கிடைக்கும்..சோறு கிடைக்கும்.
இல்லை என்றால் ஒருநாள்
பாவம் பார்த்து கொடுக்கிறார்கள்...ஒருநாள்
துரத்தி விட்டுவிடுகிறார்கள்.
அழுதுகிட்டே  வீடு வருகிறாள்..."
எதற்காக பள்ளியில் சேர்க்க வேண்டும்
என்பதற்கான விளக்கத்தைத் 
தந்து ஆசிரியையின் பரிதாபத்தைச்
சம்பாதிக்க நினைத்தார் அம்மா.

அடுத்த வருடம் வாருங்கள்
என்று சொல்லி திருப்பி அனுப்பி
காத்திருப்புப் பட்டியலில் வைக்க
முடிவு செய்துவிட்டார் ஆசிரியர்.

அம்மாவோ இரண்டில் ஒன்று பார்த்துவிட
வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தார்.

அம்மாவின் பிடிவாதம் தாங்க முடியாமல்
"இங்க வாம்மா...பக்கத்தில் "அழைத்தார்
ஆசிரியை.

தயங்கி தயங்கி அம்மா முகத்தைப்
பார்த்தேன்.

"போ...பள்ளிக்கூடத்துக்குப் போகணும்..
பள்ளிக்கூடத்துக்குப் போகணும் என்று
அழுதா...போ..."முதுகைப் பிடித்து
ஆசிரியை முன் தள்ளிவிட்டார் அம்மா.

அம்மாவின் கையை விடாமல் இழுத்துக்
கொண்டே ஆசிரியர் அருகில் போய்
நின்றேன்.

"பள்ளியில் சேர்க்காவிட்டாலும்
பரவாயில்லை.வகுப்பில் ஓர்
ஓரமாய் இருக்க வையுங்கள்"
என்று என்னைஆசிரியர் கையில்
பிடித்துக் கொடுத்துவிட்டு
விடுவிடுவென்று வெளியேறிவிட்டார்
அம்மா.

"அம்மா...அம்மா "என்று கத்தினேன்.
அம்மா திரும்பிப் பார்க்கவில்லை.

 திருதிருவென்று முழித்துக்கொண்டு
 ஆசிரியை பக்கத்தில் நின்றேன்.

ஆசிரியருக்கு இப்போது வேறு வழி 
தெரியவில்லை.
"அந்த சுவர் ஓரமாக போய் உட்கார்"
தரையில் ஓர் ஓரமாக இடம் பிடித்துத்
தந்தார் ஆசிரியை.

 என்னையும் பள்ளியில் சேர்ந்தாயிற்று. 
 பெருமையாக இருந்தது.

 படக்கென்று உட்கார்ந்து கையோடு 
 கொண்டு வந்த பையை மார்போடு
அணைத்துக் கெட்டியாகப்
 பிடித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தேன்.
 
வகுப்பில் இருக்கும் அனைவர் கண்களும்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.
 
பலகையில் இருக்கும் பிள்ளைகளைப் 
பார்க்க...பார்க்க எனக்கும் பலகையில்
இருக்க இடம் கிடைக்காதா என ஏக்கமாக
இருந்தது.

ஒரு மாதமாக தரையில் அமர்ந்திருந்தேன்.

என்னை யாராவது பலகையில் இருக்கக்
கூப்பிடமாட்டார்களா என ஏக்கத்தோடு
ஒவ்வொருவரையும் பார்ப்பேன்.

இடம் இருந்தாலும் எனக்கு மட்டும்
பலகையில் அமர தடை.

எல்லோரும் என்னைப்  பார்த்து
சிரிப்பார்கள்.
ஆனால் யாரும் என்னோடு 
பேசுவதில்லை.

பள்ளியில் உட்கார இடம் கிடைத்த
மகிழ்ச்சியை என்னால் முழுவதுமாக
அனுபவிக்க முடியவில்லை.

ஒதுக்கப்பட்ட மனநிலையிலேயே
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.

ஒருநாள் .....பள்ளி ஆய்வாளர்
வருவதாக தகவல் வந்தது.
பள்ளி முழுவதும் பரபரப்பாக இருந்தது.
ஆசிரியைகள் அங்குமிங்கும் ஓடினர்.

சற்று நேரத்தில் வகுப்பிற்குள் நுழைந்த 
ஆசிரியை ஓரமாய் அமர்ந்திருந்த என்னை
பலகையில் போய் அமரச் சொன்னார்.

முதல்வகுப்பில் என்னை சேர்த்தாயிற்றாம்.
வருகைப் பதிவேட்டில்
பெயர் எழுதி மேசை மேல்
வைத்தார் ஆசிரியர்.

அதுவரை பலகையில் அமர அனுமதி
மறுக்கப்பட்ட எனக்கு  பதவி உயர்வு
கிடைத்தது.
நானும் இனி பலகையில் உட்காரலாம்.

பதவி உயர்வு பெற்று பலகைக்கு
 மாறிய நாள் நினைக்க நினைக்க 
மனசு முழுவதும்
பட்டாம்பூச்சி பறப்பதுபோல்
இருந்தது.

பலகையில் மற்ற மாணவிகளோடு
முதல்நாள் அமர்ந்த அந்த நிமிடம்....
மனம் இறக்கை கட்டிப் பறந்தது.

அம்மாவிடம் போய்ச் சொல்லணும்...
ஆவல் மேலிட பள்ளி முடியும்வரை
காத்திருந்தேன்.
 
பள்ளியில் மணியடித்தது்தான் தாமதம்.
பையைக் கைகளில் தூக்கிவிட்டு
ஓடி வந்தேன். எதிரில் அக்கா.
"எக்கோ என்னைப் பள்ளியில் சேர்த்தாயிற்று."
சந்தோச மிகுதியில் அக்காவிடம்
முதல் தகவல் சொல்லி வைத்தேன்.

"வயசு ஆயிட்டா "அக்கா 
என்னிடமே திருப்பிக்
கேட்டாள்.

"தெரியாது....எனக்குத் தெரியாது"
என்று உதட்டைப்  பிதுக்கிவிட்டு
அம்மாவைத் தேடி ஓடினேன்.

"எனக்குப் பலகையில் இடம்
கிடைச்சாச்சு....எனக்குப் பலகையில்
இடம் கிடைச்சாச்சு..."
அடுத்த தகவல் அம்மாவுக்கு.

"என்னை கட்டிப்பிடித்த அம்மா
நல்லா படிக்கணும் என்ன...."
என்றபடி தலையைத் தடவிக்
கொடுத்தார்.

எனக்குப் பதவி உயர்வு கிடைச்சாச்சு...
எனக்குப் பதவி உயர்வு கிடைச்சாச்சு...
வெட்டாந்தரையில் நின்று 
வானத்தைப் பார்த்தபடி 
ஓவென்று கத்த வேண்டும்போல் இருந்தது.

முதல் வகுப்பில் நான்....அதுவும்
பலகை இருக்கையில்....





Comments

  1. அனைவரும் அனுபவித்த மறக்கமுடியாத நிகழ்வை பதிவிட்டது சூப்பர்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts