பீலிபெய் சாகாடும் அச்சிறும்....

         பீலிபெய் சாகாடும் அச்சிறும்....

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் "

                                 குறள்  :  475

பீலி _  மயிற்தோகை 
பெய் _ ஏற்றிய
சாகாடும் _ வண்டி,
அச்சு _ வண்டியின் அச்சு
இறும் _ முறிந்துவிடும்
அப்பண்டம் _ அந்தப் பொருள்
சால _மிகுதியாக
மிகுத்து _ பெருக்கி, அதிகமாக
பெயின் _ இட்டால்

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் 
அளவுகடந்து ஏற்றும்போது அதன் அச்சு
முறிந்துவிடும்

விளக்கம் :

மிக மெல்லிய மயிலிறகாக இருந்தாலும்
அளவு அதிகமாக ஆக அச்சுமையைத் தாங்க
இயலாது . அளவு அதிகமாகிப் போனால்
வண்டியின் சக்கரத்தில்
உள்ள அச்சு முறிந்துபோக நேரிடும்.
தாங்கு சக்தி இருக்கும்வரை மட்டுமே
அதனால் பொருட்களை இழுத்துச்
செல்ல முடியும்.
தாங்கு சக்தி மீறி போய்விட்டால்
வண்டியின் அச்சு நொடிந்து போகுமே தவிர
அதற்கு மேலும் ஒரு அடிகூட முன்னே 
செல்ல முடியாது . 

அதுபோல எவ்வளவு
வலிமை குறைந்தவராக இருந்தாலும்
பலர் சேர்ந்து விட்டால் அவர்களது
வலிமையைக் குறைவாக மதிப்பிடலாகாது.
ஓர் அரசு தனது பகைநாடுகள் தன்னைவிட
வலிமை குறைந்தவர்கள் என்று 
மதிப்பிட்டு ஆராயாமல் போரிடுதல் கூடாது.
வலிமை குறைந்தவர்கள் அனைவரும்
ஒன்று திரண்டுவிட்டால் வலிமையுள்ள
மன்னனும் தோற்றுப்போக நேரிடும்.

அதுமட்டுமல்லாது  சிறிது சிறிதாகச் சேரும்
கவலைகள் நம் மனதை உடைந்து போகச்
செய்யலாம். 
எதுவும் அளவோடு இருத்தல் வேண்டும்.
அளவு மீறினால் ஆபத்தாக முடியும்.

கொஞ்சம் கொஞ்சமாக வாங்கும் கடன்
ஒருநாள் கூரையைத் தொட்டுக் கொண்டு
நிற்கும்.
இப்படி எதிலும் அளவில்லாமல்
செயல்படுதல் கூடாது.
அளவறிந்து ,நம் திறன் அறிந்து
செயல்படுதல் நன்று  என்பது இந்தக் 
குறள் மூலமாக நாம் பெறும் கருத்தாகும்.

தான் சொல்ல வந்த கருத்தை மறைத்து
அதை வேறொரு முறையில் வெளிப்படுத்தி
நம்மை உய்த்துணர வைத்துள்ளதால்
 இக்குறள் பிறிதுமொழிதல் அணிக்கு
எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.

இதில் உவமானம் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
உவமேயத்தை நாம் உய்த்துணர வேண்டும்.
இதனால் இப்பாடலில் கவிச்சுவை மிகுந்து 
காணப்படுகிறது.
இந்த உவமையை எல்லா துறைகளிலும்
பொருந்துமாறு பயன்படுத்தி பொருள்
கொள்ளுதல் பாடலின்  சிறப்பாக
அமைந்துள்ளது.


English couplet :

"With peacock feathers light, you load the wain;yet heaped
too high, the axle snaps in twain"

Explanation: 

The axle tree of a bandy , loaded only with peacocks' feathers
Will break, if it be greatly overloaded.

Transliteration : 

"Peelipey saakaatum achchirum appantanjch
Saala mikuththup peyin "









Comments

Popular Posts