உண்டாலம்ம இவ்வுலகம்....
உண்டாலம்ம இவ்வுலகம்....
உலகம் ரொம்ப கெட்டுப் போய்
விட்டது. எங்கு பார்த்தாலும்
கொலை ,கொள்ளை
பாலியல் வன்கொடுமை, சண்டைச் சச்சரவு,
நாட்டுக்கு நாடு போர்,
வீட்டுக்கு வீடு போட்டி- பொறாமை,
எங்கெங்கு நோக்கினும்
அமைதி இல்லாச் சூழல் என்று
சொல்லிச்சொல்லிப் புலம்பாத
ஆளில்லை.
ஒரு நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
நாளைய விடியல் நல்லதாக
இருக்குமா? இருக்காதா ?என்ற கலக்கம்
ஏற்படும் அளவுக்கு புறச்சூழல்
காணப்படுகிறது.
உலகமே அவ்வளவு தானா.?
இனி உருப்படவே உருப்படாதா.?
புலம்பல்கள் ஒரு பக்கம்.
பட்டப்பகலில் கொலை நடப்பதைத்
தொலைக்காட்சியில் பார்த்த
அச்சம் மற்றொரு பக்கம்.
இவற்றை எல்லாம் பார்த்து
யாருமே நல்லவர்கள் இல்லையோ
என்ற ஐயம் அனைவர் மனதிலும்
எழுவது இயல்புதான்.
அனைவர் மீதும் ஒரு சந்தேகப்
பார்வை.
நம்பிக்கை ஏற்படுத்தும் படியான
மனிதர்கள் இல்லையா?
ஏன் இல்லை. ...?
அப்படி இல்லாதிருந்தால்
உலகம் என்றோ அழிந்து போயிருக்குமே!
இன்று வரை உலகம் நில்லாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறதே!
எல்லா நல்ல காரியங்களும் இன்றும்
நடந்து கொண்டிருக்கின்றனவே!
மழை பொழிகிறது.
பூமி விளைகிறது.
வயிற்றுப்பசி இல்லாது வாழ்க்கை
ஓடிக்கொண்டிருக்கிறது.
அப்படியானால்.....அப்படியானால்....
இதற்கெல்லாம் யார் காரணம்?
நீங்களும் நானும் காரணமாக இருக்க
முடியுமா?
ஒரு வேளை அப்படியும் இருக்கலாம்.
ஆனால் பல நேரங்களில் நம்மைப் பற்றியே
நமக்கு அதிருப்தி உண்டல்லவா!
நமக்கு நாமே நல்லவர் என்று
தீர்ப்பு எழுதிக் கொள்வது சரியாகவும்
இருக்காது.
நல்லவர்கள் உலகில் இருந்து
கொண்டிருக்கிறார்கள்.
அந்த நல்லவர்களில் நாமும்
ஒருவராக இருக்கலாம்.
மறுப்பதற்கில்லை.
"நல்லார் ஒருவர் உளரேல்அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை "
என்று ஔவை தனது மூதுரையில் கூறியிருக்கிறார்.
நல்லவரால்தான் மழை பெய்கிறது
என்பது அனைவராலும்
ஒப்புக்கொண்ட ஒன்று.
அதுவும் ஒரே ஒரு நல்லவர் இருந்தாலே
போதும்.
எல்லார்க்கும் பொதுவான மழை
பொழிந்து விடும் என்று முதல் ஒப்புதல் வாக்குமூலம் ஔவையாராலேயே அளித்தாயிற்று.
உலகில் நடைபெற
வேண்டிய அனைத்து செயல்களும்
நன்றாக நடந்து வருவதற்கு
காரணம்
நல்லவர்கள்தான்.
வேறு யாரும் இதற்குக் காரணமாக
இருந்துவிட முடியாது.
இதை நான் சொல்லவில்லை.
பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பேரறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சங்ககால அரசர்கள்கூட இதைத்தான்
சொல்லி இருக்கிறார்கள்.
சொல்லி இருக்கிறார்கள்....
சொல்லியிருக்கிறார்கள்
என்று சொன்னால் போதுமா ?
ஆதாரம் வேண்டும்....ஆதாரம்
கொடுங்கள் என்று கேட்பது என்
காதுகளில் கேட்கிறது.
இதோ புறநானூற்றுப்
பாடல் ஒன்று இதற்கு ஆதாரமாக
உள்ளது.
படியுங்கள்.
"உண்டால் அம்ம இவ்வுலகம்
இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவதுஅஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும்கொள்ளலர்; அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!"
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
என்ற மன்னன் பாடியப் பாடல் இது.
அது என்ன கடலுள் மாய்ந்த இளம் வழுதி.
பெயர் வேடிக்கையாக இருக்கிறதல்லவா!
வேடிக்கைக்குப் பின்னால் ஒரு சோகமான
கதை ஒன்று உண்டு.
இளம் வழுதி பாண்டிய குலத்தைச் சேர்ந்த
மன்னர் . நல்ல தமிழ்ப் புலமை மிக்கவர்.
பக்கத்து நாடுகளுக்குப் படையெடுத்துச்
சென்று எல்லாப் போர்களிலும்
வெற்றி கண்டவர்.
ஒருமுறை கடற்படையோடு போருக்குச்
செல்லும்படியான சூழல் ஏற்பட்டது.
மன்னர் இளம்வழுதி தலைமையில் படை
வீரர்கள் கப்பலில் சென்று
கொண்டிருந்தனர். திடீரென்று
கடலில் பெரும்
கொந்தழிப்பு ஏற்பட்டது.
மன்னர் செய்வதறியாது திகைத்தார்.
புயல் காற்று சற்று நேரத்தில்
நின்றுவிடும் என்று எதிர்பார்த்தார்.
நிலைமை இன்னும் பயங்கரமாகியதே தவிர
காற்று நின்றபாடில்லை.
நடுகடலில் மன்னரால் என்ன செய்துவிட
முடியும்?
அதட்டி நிறுத்த மன்னர் என்ன
கடவுளா ?
சாதாரண மானிடப் பிறவியால்
இயற்கைக்கு எதிராக என்ன
செய்துவிட முடியும் ?
கடலில் குதித்து நீந்திக் கரையேறலாம்
என்றால் அதற்கும் சூழல் சாதகமாக
இல்லை.
எத்தனையோ போர்களில் வெற்றி கண்ட
மன்னருக்கு இயற்கையோடு போரிட்டு
வெற்றிபெற முடியவில்லை.
இளம்வழுதி சென்ற கப்பல்
முழுவதுமாக கடலில் மூழ்கி
காணாமல் போனது.
மன்னரும் மன்னருடன் போருக்குச்
சென்ற வீரர்களும் வருவார்கள்...வருவார்கள்
என்று நாட்டு மக்கள் மாதக் கணக்காகக்
காத்திருந்தனர்.
ஏமாற்றம்தான் மிஞ்சியது.
மன்னர் மாண்டு போனார்
என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த நிகழ்விற்குப் பிறகு
அவரை அடையாளப்படுத்திச்
சொல்ல வேறு எந்த நிகழ்வும்
யாருக்கும் நினைவுக்கு வரவில்லை.
அதிர்ச்சி அளிக்கும்படியாக நிகழ்ந்த
மரணம் மட்டும் நீங்கா வடுவாக
நெஞ்சுக்குள் இருந்துகொண்டிருந்தது.
அதையே அடைமொழியாக கொடுத்து
அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதன் பின்னர் கடலுள் மாய்ந்த
என்ற அடைமொழி
அவர் பெயரோடு சேர்க்கப்பட்டு
அதுவே இளம் வழுதியின்
அடையாளமாகிப் போனது.
இப்போது பாடலுக்கு வருவோம்.
பாடலின் விளக்கம் இதோ :
இவர்கள் இன்றும் உலகில் உண்டு.
அதனால்தான் உலகம் இயங்கிக்
கொண்டிருக்கிறது.
இவர்கள் என்றால்...
யார் இந்த இவர்கள் ?
இந்திரனுக்கு உரிய அமிழ்தம்
ஒரு மனிதனுக்குக் கிடைக்கிறது.
இனிதினும் இனிதான இந்த அமிழ்தம்
கிடைப்பது அரிதினும் அரிது.
அதை உண்டால் நெடுநாள்
வாழலாம்.
இதனை தான் மட்டும் உண்டால் என்ன?
சாதாரணமான மனிதனின் எண்ணம்
இப்படித்தான் இருக்கும்.
ஆனால் அதன் இன்பம் தனக்கு மட்டும்
கிடைக்க வேண்டும்
என்று எண்ணாமல் பிறருக்கும் அளித்து
பிறர் உண்ட பின்னர் தான் உண்ணும் சிறந்த
பண்பு ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும்.
பகிர்ந்து உண்ணும்
பெருந்தகையாளராகிய இவர்கள்
இன்றும் உலகில் உண்டு.
கோபம் பாவம்.
கோபம் தன்னை மட்டுமல்ல தன்னைச்
சார்ந்தவர்களையும் அழித்துவிடும்.
கோபத்தை அடக்கியாளத் தெரிந்த
மனிதர்கள் மகான்கள் ஆக கொண்டாடப் படுகிறார்கள்.
கோபம் என்பதே தங்கள் அகராதியில்
இல்லாத இவர்கள்
இன்றும் உலகில் உண்டு.
இவர் எனக்கு வேண்டயவர்
இவர் எனக்கு வேண்டாதவர் என்று
வேறுபாடு பாராட்டாத
பண்புடைய இவர்கள்
இன்றும் உலகில் உண்டு.
ஒரு இக்கட்டான சூழலில்
உதவி வேண்டுமா?
ஓடி வந்து முதல் ஆளாய்
உதவிக்கரம் நீட்டி நிற்கும்
நல்லுள்ளம் கொண்ட இவர்கள் இன்றும் உலகில் உண்டு.
கைகளை முடக்கி சோம்பிக்
கிடக்காது எந்நேரமும்
எறும்பைப்போல
சுறுசுறுப்பாக உழைக்கும்
உழைப்பாளிகளாகிய இவர்கள்
இன்றும் உலகில் உண்டு.
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்"
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப
உலகம் அஞ்சும் செயலுக்கு
தாமும் அஞ்சி ஒதுங்கி இருக்கும்
அறிவாளிகளாகிய இவர்கள் இன்றும்
உலகில் உண்டு.
புகழ் தரும் நற்செயல்கள் செய்வதற்காக
தன் உயிரைக் கொடுக்கவும்
தயங்காத துணிச்சல் மிக்க
இவர்கள் இன்றும்
உலகில் உண்டு.
நாம் இந்தச் செயலைச் செய்வதால்
பழிதான் வரும் என்பது தெரிந்தால்
உலகம் முழுவதும் உனக்குத் தருகிறேன்
என்றாலும் செய்வதற்கு ஒத்துக் கொள்ளாத
நல்லுள்ளம் கொண்ட இவர்கள் இன்றும்
உலகில் உண்டு.
தான் ,தன் பிள்ளை, தன் குடும்பம்
என்று சுயநலமாக இருக்காது
நம்மால் பிறருக்கு
நன்மை கிடைக்க வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கோடு உழைக்கும்
பண்பாளர்களாகிய இவர்கள் இன்றும்
உலகில் உண்டு.
ஒட்டு மொத்தமாக
இந்த இவர்களால்தான் இவ்வுலகம்
இன்றுவரை நில்லாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது.
உலக இயக்கம் நல்லமுறையில்
நில்லாமல் நடைபெற்று வருவதற்கு இப்படி
ஒரு காரணம் இருக்கிறதா...?
இந்த நல்லவர்களால்தான் நாமும்
வாழ்த்து கொண்டிருக்கிறோமா?
நினைத்துப் பார்க்கும்போதே மெய்
சிலிர்க்கிறதல்லவா!
இதையேதான் வள்ளுவரும்,
"பண்புடையார் பட்டுண்டு உலகம் ; அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன் "
என்று சொல்லி இருந்தாரோ?
நல்லவர்கள் இருப்பதால்தான் உலகம்
சீராக இயங்குகிறது .
அவர்கள் இல்லை என்றால் நாம் என்றோ இல்லாமல் போயிருப்போம்.
வள்ளுவர் சொன்ன கருத்தைத்தான்
கடலுள் மாய்ந்த இளம் வழுதியும்
சொல்லியிருக்கிறார்.
ஆனால் யார் நல்லவர்கள்? நல்லவர்களுக்கான குணநலன்கள் என்னென்ன என்று
விளக்கமாகச் சொல்லி
புரிய வைத்திருக்கிறார் இளம் வழுதி.
"உண்டாலம்ம இவ்வுலகம்"
என்ற ஒற்றை வரியில்
ஒட்டு மொத்த பாடலையும் தூக்கி
சுமக்க வைத்து,
அந்த ஒற்றை வரியை நம்
உள்ளத்தோடு ஒன்ற
வைத்து
மறையா வழுதியாகி
என்றென்றும் நம் நினைவோடு
நிலைத்துவிட்டார்
இளம் வழுதி.
உண்டாலம்ம இவ்வுலகம்
இவர்களால் தான் நாம்
வாழ்த்து கொண்டிருக்கிறோம்
என்பதில் இனி நமக்கு
மாற்றுக் கருத்து
இருக்கவா போகிறது!
"உண்டாலம்ம இவ்வுலகம் "
பாடலும் அருமை விளக்கமும் அருமை.
ReplyDeleteVery very good message. Nice 👍👌👌👌
ReplyDelete