கரிக்காய் பொரித்தாள்....

     கரிக்காய் பொரித்தாள்....


ஆசுகவி காளமேகம் புலவர் எந்தப் பொருளில்
பாடல் பாடச் சொன்னாலும் பாடுவார்.
எந்தச் சொல் கொடுத்து அந்தச் சொல்லில்
மட்டுமே பாட வேண்டும் என்று
கேட்டுக் கொண்டாலும் உடனடியாகப் 
பாடி முடிப்பார்.
அதனால் அவரைச் சீண்டிப்பார்க்க
வேண்டும் என்றே ஒரு கும்பல் சுற்றிக்
கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு சொல்லையோ எழுத்தையோ
கொடுத்துப் பாடும்படி கேட்டுக் கொண்டே
இருக்கும்.
காளமேகமும் கேலியும் கிண்டலும்
நையாண்டியுமென பாடி முடித்துவிடுவார்.

இப்படித்தான்  ஒருமுறை பெண் ஒருவர் கரி என்று
தொடங்கி உமி என முடியும் படியாகப்
பாடல் பாடும்படியாகக் கேட்டுக்கொண்டார்.

உமி கரியாகும். கரி எங்காவது 
உமியாகுமா?
கரியில் தொடங்கிப் பாடச் சொன்னால்
புலவர் திகைத்துப் போய்விடுவார்
என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு.
தன்னை வம்புக்கு இழுக்கவே இந்தப் பெண்
 கரி என்று தொடங்கி உமி என்று
முடிக்கும்படி பாடக் கூறுகிறார்.
போகட்டும்....அவள் மூஞ்சில் கரியைப்
பூசுகிறேன் என்று நினைத்துக் கொண்டு
காளமேகம் பாடிய பாடல் இதோ: 

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் _உருக்கமுள்ள
அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீச்சீ யுமி "

கரியில் தொடங்கி உமியில் முடித்துவிட்டார்.
சும்மா எழுதினால் போதுமா? 
சொல்லில் பொருள் வேண்டாமா...
என்கிறீர்களா...
காளமேகத்தின் பாடலில்  பொருள்
இல்லாமலா!

என் அத்தை மகள் கரிக்காய் எனப்படும்
அத்திக்காயில் பொரியல் செய்தாள்.
கன்னிக்காய் எனப்படும் வாழைக்காய்
வதக்கி வைத்தாள்.

பரிக்காய் எனப்படும் மாங்காயில்
பச்சடி செய்தாள்.
என் விருப்பத்துக்குரிய அப்பைக்காய் எனப்படும்
கத்தரிகாயில் அதிக நெய் விட்டு்  
நெய் துவட்டல்  செய்தாள்.
இத்தனை காய்களையும்  அவள் என்மீது கொண்ட
அன்பு மிகுதியால் செய்து வைத்துவிட்டு
உப்பை மிகுதியாகப் போட்டுவிட்டாள்.
 உப்பு மிகுதியானால் என்ன செய்வது?
சீச்சீ என உமிழ வேண்டியதைத் தவிர
வேறு வழியில்லை 
என்று பாடி முடித்துவிட்டு அந்தப்
பெண்ணின் முகத்தைப் பார்த்தார் காளமேகம்.
கரியை உமியாக்கி சீச்சீ என்று
உமிழாத குறையாக இப்படி பாடி 
விட்டாரே என்று அந்தப் பெண் 
அவமானத்தால் நாணித்
தலை குனிந்து நின்றாளாம்.

காளமேகம் நினைத்தால் உமிதான்
கரியாக  வேண்டும் என்ற நியதி 
மாறிப் போகும்.
எனக்கு கரியையும்  உமியாக்கத் தெரியும்
என்ற பெருமையில் பாடப்பட்ட
பாடல் இது.

நாலு காய் எடுத்து சமைத்த காளமேகத்திற்குச்
சவால் விடுவதுபோல கண்ணதாசன்
காய் என்ற சொல்லை  இருபத்து ஐந்துமுறை
பயன்படுத்தி ஒரு பாடல் பாடினார்.
அந்தப்பாடல் எது என்று நான் சொல்ல
 வேண்டுமா என்ன?

அத்திக்காய் காய் காய் காய்..
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ நீ
என்னைப்போல் பெண்ணல்லவோ!

கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட
பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ!
...........   .......
தொடர்ந்து பாட வேண்டும் போல்
தோன்றுகிறதல்லவா ! 
பாடுங்கள். ஆனால் இந்த அத்திக்காய்
கன்னிக்காய் எல்லாம் எங்கிருந்து
வந்தது என்று பாருங்கள்.

அட..நம்ம காளமேகம் பாடியதுல்ல...
எல்லா கவிஞர்கள் பாடலிலும்
காளமேகத்தின் கவி வரிகள்
எங்காவது ஒரு இடத்தில் புகுத்தப்பட்டிருக்கும்.
காளமேகத்தின் கவி மழையில்
நனைந்ததால் பிறந்ததுதான் கண்ணதாசனின்
இந்தப் பாடல் என்றும் கூறுவர்.
காளமேகத்தின் தாக்கம் இல்லாமல்
எந்தக் கவிஞரும் இருக்க முடியாது !

 நமக்கும் கரிக்காய் பொரியலும் 
கன்னிக்காய் வறுவலும்  பரிக்காய் பச்சடியும்
அப்பைக்காய் நெய் துவட்டலும் செய்யும்போது
காளமேகப் புலவரின் பாடல்
நினைவுக்கு வராமலா போய்விடும் !


Comments

  1. இலக்கியங்க ளை எளிமைப்படுத்தி விளக்கம் t
    தந்து உள்ளீர்.அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts