ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்"
என்ற சொற்றொடர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் தூது இலக்கியம் பற்றியும்
சற்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாரைவிடு தூது படிக்காமல் பள்ளிப்
பருவத்தை யாரும் கடந்து வந்திருக்க
முடியாது.

ஆரம்பகாலத்தில்  காதலுக்காகவும்
அரசர்கள் பிற நாட்டு மன்னர்களோடு
தொடர்பில் இருப்பதற்காகவும் தூது
அனுப்பப்பட்டு வந்ததாக அறிகிறோம்.

 காதலுக்குத் தூது செல்வதற்கு என்றே 
தலைவனும் தலைவியும் பாங்கனையும் 
பாங்கியரையும் தங்கள் கூடவே வைத்திருப்பராம்.
 சங்க இலக்கிய அகப்பாடல்களின் மூலம்
காதல் தூதுவர்கள் பற்றி நாம் நிறைய 
அறிந்து கொள்ளலாம்.

இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குத்
துணையாக இருப்பவரைத் தூதுவர் 
என்கிறோம். எல்லா நாட்டிற்கும் தூதரகங்கள்
இருப்பதும் அங்கு அந்தந்த நாட்டு தூதர்கள் 
அமர்ந்து மற்ற நாடுகளோடு பேச்சு வார்த்தையில்
ஈடுபடுவதும் அரசியல் நிகழ்வாக
நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு
செயல் என்பதைப் பற்றி அனைவருக்குமே
தெரிந்திருக்கும்.

தூது இலக்கியம் தமிழ் இலக்கிய
வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது.

முதன் முதலாக தமிழர் நெஞ்சைத்தான்
தூதுதாக அனுப்பி வந்திருக்கின்றனர்.
முதல் தூது இலக்கியமே நெஞ்சுவிடு தூது
என்பதாக கூறப்படுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ் விடு தூது, அன்னம் விடு
தூது, மேகம் விடு தூது, காக்கை விடு தூது,
மான்  விடு தூது, கிள்ளை விடு தூது என்று
தூது போகும் தூதுவர்கள்
அதிகமாகிக் கொண்டே வந்தனர்.
 உயிர் உள்ளவற்றைத் தூதாக அனுப்பியதுபோக 
 உயிரில்லா காற்றையும் மேகத்தையும் தூது
அனுப்பிய பெருமை உடைத்து தமிழ் இலக்கியம்.

 அதியமானுக்காக தொண்டைமானிடம்
போர் சமரசம் செய்ய ஔவையார்
தூது போனதாக பாடல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தூது  காதல் தூதைவிட 
ஒருபடி உயர்ந்தநிலை.

இதற்கு அடுத்த நிலையாக
மன்னனுக்குப் பெண் கேட்பதற்காக
வேற்று நாட்டிற்கு  தூது சென்ற
புலவர்களும் உண்டு.
 ஒட்டக்கூத்தர் என்ற புலவர் குலோத்துங்க
சோழனுக்காக பாண்டிய மன்னனிடம் 
பெண் கேட்டுச் சென்றாராம்.

இந்தத் தூது நிகழ்வை சமூகப் பணியாக
நினைத்து பாராட்டி விட்டு கடந்து செல்லலாம்.

அடுத்த தூதுதான் நம்மை அசர வைக்கிறது.

குலோத்துங்க மன்னனோடு ஊடல் கொண்ட 
அரசி கோபத்தோடு போய் கதவை 
மூடிக்கொண்டு தன் அறையில் அமர்ந்து கொண்டாள்.

மன்னனுக்காக கதவைத் திறந்துவிடு என்று 
சொல்ல தூது போனாராம் ஒட்டக்கூத்தர்
என்ற புலவர்.

 வேடிக்கையாக  இருக்கிறதல்லவா!
 அதுதாங்க உண்மை. கதவைத்
திறக்க வைத்தாரா இந்த ஒட்டக்கூத்தர்?
அதுதாங்க இல்லை. ஒட்டக்கூத்தன்
பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற
பட்டத்தை வாங்கி வந்ததுதான் மிச்சம்.
அப்படி என்னதான் பாடினார்
ஒட்டக்கூத்தர்?

  பாடல் இதோ:

நானே இனியுன்னை வேண்டுவதில்லை

நளினமலர்த் தேனே கபாடந் திறந்திடு

திறவா விடிலோ

வானேறனைய வாள் வீரவிகுலாதிபன்

வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய

தாமரையே !

அழகான  மலரில் இருக்கும் தேன்
போன்ற இனிமையான பெண்ணே!
மன்னனுக்காகக் கதவைத் திறந்துவிடு என்று
உன்னை வேண்டிக் கொள்ள வேண்டும்
என்ற அவசியம்  எனக்கில்லை.
வானளாவிய புகழ் கொண்ட
ஆண் சிங்கத்துக்கு நிகரானவன்
என் மன்னன் குலோத்துங்கன். 
வாள் வீரனாகிய குலோத்துங்கன் 
உன் அறையின் பக்கம் வந்தாலே போதும்.
தாமரை போன்ற உன் கைகள்
தானாக வந்து கதவைத் திறந்து
வைத்துவிடும் .

என்று மமதையாக ஒரு பாடலைப் பாடி
முடித்தார்.
அவ்வளவுதான். அரசிக்கு முன்பைவிட
கோபம் அதிகமாகிப் போனது.

அதுவரை ஒற்றைத் தாழ்ப்பாளை மட்டுமே
போட்டு வைத்திருந்த அரசி இன்னொரு 
தாழ்ப்பாளையும் சேர்த்துப் போட்டு கதவைச் 
சிக்கென்று மூடிக் கொண்டாள்.

ஒட்டக்கூத்தர் அவமானப்பட வேண்டியதாயிற்று.

இதனால்தான் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்
தாழ்ப்பாள் "என்ற சொற்றொடர் உருவானதாம்.

அரசியின் கோபம் அதிகமாகிப் போனதை 
அறிந்த  மன்னனுக்கு என்ன செய்வதென்றே
புரியவில்லை. 
கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.
அரசிக்கு ஏனிந்த கோபம்?
ஒட்டக்கூத்தர் பாடலைக் கேட்டதும் இரட்டைத்
தாழ்ப்பாள்  போடும் அளவுக்கு அவர்மேல்
என்ன வெறுப்பு?
சற்று யோசித்துப் பார்த்தான் மன்னன்.
அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது.

பாண்டிய நாட்டு இளவரசியை தான் திருமணம்
செய்து அழைத்து வந்த போது கூடவே
பாண்டிய மன்னன் தன் மகளுக்குத் துணையாக
புகழேந்தி என்ற புலவரையும் அனுப்பி வைத்திருந்தார்.

புகழேந்தி மீது அரசியும் அதிக மரியாதை 
வைத்திருந்தாள். அந்தப் புகழேந்தி
வந்தால் தான் இனி நிலைமை சரியாகும்
என்று நினைத்த மன்னன் புகழேந்தியை
அழைத்து வந்தார்.
இந்தச் சிக்கலை நீங்கள்தான் பக்குவமாக
பேசி தீர்த்து வைக்கவேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.

இப்போது புகழேந்தி அந்தப்புரத்துக்குத்
தூது போகிறார்.
அரசியின் அறையின் முன் நின்று பாடுகிறார்.
புகழேந்தியின் குரலைக் கேட்டதும்
 அரசி ஓடி வந்து கதவைத் திறந்துவிட்டார்.

அட... ஒட்டக்கூத்தருக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
 போட்ட அரசியா இவர்?
இவ்வளவு சீக்கிரமாக கோபம் தணிந்து இறங்கி
 வந்ததற்கான காரணம்தான் என்ன ?
 
 அப்படி என்னதான் வசியம் பண்ணிப்
 பாடிவிட்டார் இந்தப் புகழேந்தி?
 
 பாடல் இதோ:

இழையொன்றிரண்டு வகிர் செய்த
நுண்ணிடை யேந்தியபொற்

குழையொன்றிரண்டு விழியணங்கே!
கொண்ட கோபந் தணி

மழையொன்றிரண்டு கைப் பாணபரண
நின்வாசல் வந்தால்

பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற்
பிறந்தவரே !

இப்படி மிகவும் பண்பாகப் பாடி முடித்தார்
புகழேந்தி.

அதாவது

"நூலிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தது
போன்ற மெல்லிய இடையுடை பாண்டியன் மகளே!
பொற்குழை மலர் போன்ற
பேரழகான விழியுடை பெண்ணே!
உன் கோபத்தை நீ தணித்துக்கொள்ள
மாட்டாயோ!
தன் இரு கைகளாலும் எதிரிகள் மேல் 
மழைபோல பாணங்களைப் பொழியும்  
ஆற்றல் மிக்க உன்  குலோத்துங்க சோழன்
செய்த பிழை ஒன்றிரண்டு இருக்கலாம்.
அதற்காக கோபம் கொள்ளலாமா?

உன்னைப் போன்ற நற்குடி பிறந்த 
பெண் இச்சிறு பிழையைப் பொறுத்துக் 
கொள்ள மாட்டாரோ!

என்பது பாடலின் பொருள்.
புகழேந்தியின் இந்தப் பாடலைக் கேட்டதும்
அரசி ஓடி வந்து தாழ்ப்பாளைத் திறந்தாராம்.
ஒட்டக்கூத்தருக்குப் போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாள்
புகழேந்தி பாடலுக்காகத் திறக்கப்பட்டது.

தூது போவது பெரிதில்லைங்க...
இடம் பொருள்  ஏவல் அறிந்து
பேசத் தெரிந்திருக்க வேண்டும். 
அப்படிப் பேசத் தெரியாதவர்களைத் தூது
அனுப்பி வைத்தால்  இப்படித்தான்  
ஏறுக்குமாறாக ஏதாவது நடைபெற்றுவிடும்.
அதன் பின்னர் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு
இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பட்டத்தைக்
காலமெல்லாம் சுமக்க வேண்டியதாகிவிடும்.

வேடிக்கையான தூது இல்ல...
சுவையான  தமிழ் விருந்து!
  


 !

Comments

  1. Really suvaiyana Tamil virundu. Superb.

    ReplyDelete
  2. இரட்டை தாழ்ப்பாள் பெயர் காரணத்தை மிக தெள்ளத்தெளிவாக பிதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete
  3. Ottakoothan pattukku rettai thazhpazh is dramatically explained by the writer in this article.
    SUPERB!!

    ReplyDelete
  4. தமிழ் இலக்கிய த்தில் நகைச்சுவை க்கும் குறை இல்லை.

    ReplyDelete

Post a Comment