ஙப்போல் வளை

                ஙப்போல் வளை

ஆத்திசூடி யில் ஔவையார் "ஙப்போல் வளை." என்ற பாடல் வரியை வைத்துள்ளார்.
    பள்ளியில் படிக்கும் போது' ங 'போல வளைந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று சொல்லித் தந்த ஞாபகம்.
     கல்லூரியில் இதற்கான இரண்டு மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டு அவை  பேராசிரியரால் தெளிவாக விளக்கப்பட்டன.
     அதில் ஒரு கருத்தை என் பேராசிரியர் தான் ஏற்பதாகவும் மற்றொரு கருத்தில் தனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்று கூறினார்.ஆசிரியர் கூறிய கருத்து அனைவரும் ஏற்கும்
விதத்தில் இருந்தது
     இந்த "ஙப்போல் வளை"க்குள் இத்தனை அருமையான கருத்தும் உள்ளதா வியந்து போனேன்.
     ஆசிரியரானதும் ஒருநாள் உரையாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் இதனைப் பற்றி பேசினேன்.
     ஒரு சில ஆசிரியர்கள்  என் கருத்துக்கு உடன்படவில்லை.
     காரணம் பள்ளியில் படித்ததை அவர்கள் இன்றுவரை மறக்கவில்லை.
     சரியான புரிதல் இல்லாதபோது மாறுபாடுகள் எழுதல் உண்டு.
    விவாதம் செய்யும் அளவு துணிவு எப்பவுமே கிடையாது.
     ஆனால் எப்போதுமே உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவல் உண்டு.
        பல உரையாசிரியர்கள் தந்த கருத்து எனது ஆசிரியரின் கருத்தாகவே இருந்தது.
        சிலர் மாறுபட்ட கருத்துகளைக் கூறலாம்.
        எது எப்படியோ அவர்கள் கூறும் அத்தனை பொருள்களும் அப்படியும் இருக்கலாமோ.... இப்படியும் இருக்கலாமோ ....என்று நம்மை ஏற்க வைக்கும் விதமாகவே உள்ளன.
      ' ங' என்ற எழுத்தும் 'ங்' என்ற எழுத்துமே சொற்களில் சொற்றொடர்களில் பயிலப்பட்டு வருவதைக் காணலாம்.
      ஆனால் பெரும்பாலும் அதன் வருக்க எழுத்துகள் எதுவும் வருவதில்லை.
      இருப்பினும்' ங 'என்று ஒற்றையாக சொல்லிவிட்டு அதன் வருக்க எழுத்துகளைக் கூறாமல் கடந்து போக முடியாது.
      'ங 'என்ற எழுத்து தான் பயன்படுவதாக இருந்து தன் வருக்க எழுத்துகளையும் தன்னோடு தழுவி கூடவே அழைத்துச் செல்லும்.
    'ங' வருக்கத்தைக் கூறும்போது   மொட்டையாக 'ங' என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட முடியாது
    கூடவே...
    ங.  ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே  ஙை  ஙொ ஙோ ஙௌ என்று அத்தனை
    எழுத்துகளையும் கூற வேண்டும்.
    அதுபோல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று எண்ணி விட்டுவிடாமல் அவர்களைக் பாதுகாத்து கூடவே வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
    இது சில உரையாசிரியர்களின் கருத்து. எனது ஆசிரியர் சொன்ன கருத்தும் இதுதான்.
   ( பாரதிதாசன் பன்னிரண்டு ங கர வருக்க எழுத்துகளையும் வைத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.
    இது விதிவிலக்கு.)
    இன்னும் சிலரோ' ங 'என்னும் எழுத்தை உற்று நோக்குங்கால்
    வளைந்து பணிந்து நின்று வணங்குவது போல் இருப்பதாகவும்
    அப்படிப்பட்ட பணிவுடன் பெரியவர்களை வணங்குதல் வேண்டும்
    என்றும் கூறுவர்.
    பணிந்து வணங்குதலுக்குக்கூட எவ்வளவு அருமையான எடுத்துக்காட்டு பாருங்கள்.
    எது எப்படியோ சுற்றம் தழுவுதல் சிறந்த நற்பண்புகளுள் ஒன்று.
    அதேபோல் பெரியோர்முன் பணிதல் நன்றினும் நன்று.
    வேறென்ன....இரண்டு பொருளையும் ஏற்றுக் கொள்ளலாம். தப்பில்லை.
    எனினும் சுற்றம் தழுவுதல் என்னும் கருத்துதான் எனக்கு ஏற்புடையது.
     வளைந்து நிமிர்ந்து இருக்கும் எழுத்துகள் பல உள்ளன.
     அதனால் தன் இனத்தைப் பாதுகாக்கும் பண்பு வேண்டும் என்பதற்காகத்தான்" ஔவை ஙப்போல் வளை "என்று கூறியிருப்பார்
     என்பது எனது கருத்து. உங்கள் கருத்து என்னவோ . தெரியப்படுத்துங்கள். அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
  
       

Comments

Popular Posts