கொடியது கேட்கின்....

                            கொடியது கேட்கின்....


கொடியது எது என்று கட்டுரை எழுதுவதற்காக
பத்திரிகை நிருபர் ஒருவர் பலரையும்
நேர் காணல் செய்துவர புறப்பட்டார்.

அவர் புறப்பட்டு வெளியில் வரவும்
 தண்ணீர் குடத்தைத் தலையில் ஒன்றும் 
இடுப்பில் ஒன்றுமாக சுமந்துகொண்டு
ஒரு பெண் ஒருவர் எதிரே வருவதைப்
பார்த்தார்.

முதலாவது பெண்ணிடமிருந்தே
நேர்காணலைத் தொடங்குவோம்
என்று நினைத்தபடி,
"மேடம்....கொஞ்சம் நில்லுங்க .... 
உலகிலேயே கொடியது எது
 என்று சொல்ல முடியுமா ?" என்று கேட்டார்.

"பார்த்தால் தெரியல....தண்ணீர் இல்லாமல்
ஒரு கிலோமீட்டர் தூரம் போய் தண்ணீர் 
சுமக்கிற மாதிரி கொடியது 
வேறு எதுவும் இருக்க முடியுமா?"
திருப்பிக் கேட்டார் அந்தப்பெண்.

"உண்மை தாங்க...இது ரொம்ப கொடுமை"
ஒத்துக் கொண்டார் நிருபர்.

  இரண்டாவதாக நட்டநடு வெயிலில்  
காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 
ஒரு பெண்ணிடம் போய் ,
"கொடியது என்று நீங்க எதை
 நினைக்கிறீங்க "என்று கேட்டார்.

 " இந்த அனலில் வேலை பார்ப்பதை 
மாதிரி கொடியது 
வேறு என்ன இருக்க முடியும்?..ஒரு மணி நேரம்
வேலை பார்த்தால் நீங்களே இந்தக்
கொடுமையைப் புரிந்து கொள்வீர்கள்"
என்றார் அந்தப் பெண்.
        
பெண்கள் இருவரும் வேலை செய்வதுதான்
கொடுமை என்று சொல்லிவிட்டார்கள்.
 இனி ஊருக்குள் போய் ஆண்களிடம் கேட்போம் 
என்று நினைத்தபடி ஊருக்குள் சென்றார்
நிருபர்.
அங்கே பெட்டிக்கடையில் இருந்து
ஒரு சில ஆண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
இருப்பதிலேயே அனுபவசாலியான
ஒரு பெரியவரிடம்  போய் நின்றார்.
 "ஐயா, இந்த உலகத்திலேயே கொடியது 
என்று நீங்க எதை நினைக்கிறீர்கள் "
என்று கேட்டார்.
பெரியவர் ஏற இறங்க பார்த்துவிட்டு
" என்னையா தம்பி கேட்கிறீங்க" என்றார்.

"ஆமாய்யா....உங்களைத்தான்...
சொல்லுங்க" என்றார் நிருபர்.
           
 " என்னைக் கேட்டால்...
 இந்த வயதான காலத்தில்
 தனிமையில்  கிடப்பதுதான் 
கொடியது என்பேன்"   என்றார் பெரியவர்.
      
 " அப்படியானால் தனிமைதான் 
கொடுமை என்கிறீங்க....இல்லையா?"

 " அதிலென்ன சந்தேகம்" 
தனது கருத்தில் உறுதியாக 
இருந்தார் பெரியவர்.

அப்போது கடைக்கு ஒரு பெண் வர 
கேள்வியை  அவர் பக்கம்  திருப்பினார் 
பத்திரிகை தம்பி.

" குடிகார கணவன்மார்கூட குடித்தனம் 
நடத்துகிறதுதான் கொடியதிலும் கொடியது" 
என்று ஒரே போடாக போட்டுவிட்டுச்  
அவர்பாட்டுக்குச் சென்றார் அந்தப்பெண்.

 பெரியவர்கள் அனைவரும் தங்கள்
பிரச்சனையைத்தான் பெரிய
கொடுமை என்கிறார்கள் .
 படிக்கும் பிள்ளைகளிடம் போய் 
கேட்டுப் பார்ப்போம். அவர்கள்
கொடுமையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்
என்று அறிந்து வருவோம் என்று
பள்ளிப்பக்கம் சென்றார் நிருபர்.

ஒரு பள்ளி சிறுவனைக் கூப்பிட்டு
" தம்பி கொடியது எது என்று கேட்க "
" படிப்புதாங்க எல்லாவற்றிலும் கொடியது "
  என்று சொல்லி சிரித்தான்
அந்தச்  சிறுவன்.

இது என்ன புதிய கொடுமையாக
இருக்கிறது என்று நினைத்தபடி
கல்லூரி பக்கமாக நடந்தார்
நிருபர்.

கல்லூரி அருகே நின்று அரட்டை
அடித்துக் கொண்டு நின்ற
மாணவர்களில் ஒருவனிடம்
தனது கேள்வியைக் கேட்டு
வைத்தார்.

"கொடியதா....? கொடுமை....கொடுமை...
கொடுமை...
ஒரு நூறு ரூபாய் தருவதற்குமுன்
ஏன்...எங்கே...எதற்கு...எப்படி...
என்று ஆயிரம் கேள்விகள் கேட்கும்
அப்பா கேட்கும்
கேள்விதாங்க பெருங் கொடுமை
தாங்க முடியல.... "என்றான்
அந்த மாணவன்.

அதையே ஆமோதிப்பதுபோல அனைத்து
மாணவர்களும் ஆ....வோ....
என்று குரல் எழுப்பி வழிமொழிந்து
நின்றனர்.

இப்போது நிருபருக்குத் தலை சுற்றுவதுபோல்
இருந்தது.
அப்படியே கடற்கரையை நோக்கி
 நடக்க ஆரம்பித்தார்.
சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள
கடல் மணலில் அமர்ந்தார்.

அங்கே காதலன் ஒருவன் காதலியை
எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

கடைசியாக இவனிடம் அந்தக் கேள்வியைக்
 கேட்டு வைப்போம்  என்று அருகில் 
சென்று கேள்வியைக் கேட்டு வைத்தார்.
"ஐயோ ,... கொடிதிலும் கொடிது 
காதலிக்காக காத்திருக்கும் இந்த   
 நிமிடங்கள்தாங்க...."என்றான் 
அந்த வாலிபன்.
அப்போது  பின்பக்கமிருந்து  
சிரிப்பு சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தார். அங்கே
ஒரு வயதான பாட்டி கையில் 
கம்பு ஊன்றியபடி நின்றிருந்தார்.

 " தம்பி ... உன் கேள்விக்கு விடை
கிடைத்ததா? 
இன்னும்  கேட்க வேண்டியிருக்கிறதா?"
என்றார் பாட்டி.

"என்னைக் கேட்டா என்ன சொல்வேன்.?
ஒரே குழப்பத்தில் இருக்கிறேன்."
என்றார் நிருபர்.

 " கொடியது பற்றி தெரியணுமா..."
.என்று கூறி சிரித்தார்.

 "இவரிடம் கேட்டால் என்ன  சொல்லிவிடப்
   போகிறார். முதுமைதான் கொடியது
 என்பார் "என்ற
  நினைப்போடு 'ஆம் 'என்றார் அந்தத்  தம்பி.
         
  "சொல்கிறேன் .....கேள் "என்று ஒரு பாடலையே
    பாட ஆரம்பித்தார் பாட்டி.

  கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்
  கொடிது கொடிது வறுமை கொடிது
   அதனினும் கொடிது இளமையில் வறுமை
  அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
   அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
    அதனினும் கொடிது
   இன்புற அவர் கையில் உண்பதுதானே ! 
        

 பாடலைக்கேட்ட  நிருபர்
 அசந்து போய் நின்றார்.
  கொடியது என்று ஆளாளாளுக்கு  
அவரவருக்கு நடப்பதுதான்
 கொடியது என்று  சொல்லிக் கொண்டிருக்க 
  இது என்ன புதுக்கொடுமையாக இருக்கிறது..?

"என்ன புரியலியா?"

"இப்போதுதான் குழப்பம் உச்சந்தலையில்
ஏறி நின்று வேடிக்கை காட்டுது"

"சொல்கிறேன்...கேள்.
 வாழ்க்கையில் கொடியது எது
 என்று கேட்டால் முதலாவது வறுமை மிகக் 
கொடியது என்றுதான் சொல்லுவேன்"

 "வறுமை அவ்வளவு கொடியதா ? "
      
"அதைவிடக் கொடியது 
இன்னொன்று உண்டு கேள்.
 அதுதான் இளமையில் வறுமை.
இளமையில் வறுமை 
கொடிதினும் கொடிது."

"வறுமையும்  கொடுமையும்
வயதுக்கு ஏற்ப
மாறுபடுமா?" 

"பெரியவர்கள் எதையும் தாங்கிக்
கொள்வார்கள். சிறியவர்களால்
வயிற்றுப்பசியைக்கூட தாங்க
முடியாது. இல்லையா?

"இளமையில் பசிதான் கொடுமை .
ஒப்புக் கொள்கிறேன் "

"ஏன் முந்தி வந்து முடிவுரை
எழுதுகிறாய்?
 இன்னும் கேள்.......வறுமையாவது
 பரவாயில்லை. அதைவிடவும் கொடிது       
 இன்னொன்று  இருக்கிறது .
 அதுதான் தீராத் தொழுநோய்.
 இவை இரண்டையும்விடக் கொடியது 
தொழுநோய்தான் "
என்றார் பாட்டி.

"தொழுநோய் வறுமையிலும்
 கொடியதா ?

"நோய் வருவது கொடுமை இல்லையா?
அதுவும் தீராத நோய் வருவது
கொடுமையிலும் பெருங்கொடுமை
இல்லையா?"

"கொடுமைதான்...கொடுமைதான்
ஒப்புக் கொள்கிறேன்."
         
"இவை மூன்றைவிடவும் கொடியதும் 
இருக்கிறது தம்பி ."

"அது என்ன நான்காவது கொடுமை.
அதையும் சொல்லுங்கள்"

"நான்காவது கொடுமை அன்பில்லா 
 மனைவியோடு குடும்பம் நடத்துவது.
அன்பில்லாதவளோடு வாழ்தல்  
 நான் இதுவரை 
கூறியவை எல்லாவற்றை விடவும் 
கொடுமையானது"

" அன்பில் லாக் ராட்சசியோடு
வாழ்வது கொடுமை என்கிறீர்கள்.
கொடுமையும் வகைவகையாக
இருக்கிறதே!
பாட்டி... இவ்வளவுதானா... ?
இன்னும்  நீளப்பட்டியல் ஏதேனும்
வைத்துள்ளீரா? "
   
 " இப்படி சலிப்படைந்தால்  எப்படி.....?
   கொடுமைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பான
 கொடுமை ஒன்று உண்டு தம்பி....
அதுதான் அன்பில்லா மனைவி  
கையால் பரிமாறும் உணவை உண்பது ."

"  அதாவது மொத்தத்தில் அன்பில்லாதவளோடு
 குடித்தனம் நடத்துவது போல  
கொடியது உலகில் வேறு எதுவுமே கிடையாது
என்று சொல்றீங்க. சரிதானுங்க"

"சட்டென்று புரிந்து கொண்டாயே!"
          
நீங்கள் கொடியது என்று சொல்வதற்கும்
 இதுவரை மக்கள் கொடியது் 
என்று கூறியதற்கும்.
நிறைய வேறுபாடு இருக்கிறதே"
          
"அது எல்லாம் அவரவர் தன்
மனம்போல் சொல்லப்பட்ட கருத்து. 
தமக்குத்தாமே எழுதிய   தீர்ப்பு.
 இதுதான் உண்மையான கொடியது
 என்பது எனது கணிப்பு .."
என்று கூறியபடி    விடுவிடுவென்று 
நடந்து மறைந்தார் பாட்டி.
         
"ஔவை கருத்துக்கு மாற்றுக்
கருத்து இருக்கவா போகிறது?"
என்றபடி நேர்காணலை 
முடித்துக் கொண்டு 
புறப்பட்டார்  நிருபர்.

நமக்கு மட்டும் மாற்றுக்கருத்து
இருக்கவா போகிறது?
 

      
                           
         
      

Comments

Popular Posts