வெட்டிப்பேச்சு வீராச்சாமி

                     வெட்டிப்பேச்சு வீராச்சாமி


       வெட்டிப் பேச்சு வீராச்சாமியை தெரியாதவர்கள் யாரும்
        மலைக்கரையில் இருக்க முடியாது.அந்த அளவுக்கு அந்த ஊரில் பிரபலமானவன்.
        எங்கே நாலுபேர் கூடியிருந்தாலும் அதுல ஒரு ஆள் வெட்டிப்  பேச்சு வீராச்சாமியாதான் இருக்கும்.
        பட்டம் என்னவோ வெட்டிப் பேச்சு என்று வாங்கி
         வைத்திருந்தாலும் அவன் பேச்சிலும் சுவாரசியம் இல்லாமல்  இருக்காது.
        அதனால்தான் அவன் பேச்சைக் கேட்பதற்கு என்றே ரசிகர் பட்டாளம் எப்போதும் கூடவே இருக்கும்.
         விடல பசங்க மட்டும் அல்லாமல் பெரியவர்களும்
        அவன் பேச்சைக் கேட்டு ரசிப்பர்.
        வெட்டியா  டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து  இருப்பவர்களுக்கு
         எல்லாம் வார்த்தையால் விருந்து படைப்பவன் இந்த வீராச்சாமி.
         வடக்கிலிருந்து தெற்குவரை அனைத்து மாநில அரசியலும் அத்துப்படி.
        உள்ளுர் செய்தியில் இருந்து உலக செய்திகள்வரை எதைக் கேட்டாலும் டாண் டாணென்று பதில் சொல்லுவான்.
         ஜோக்காக பேசவும் தெரியும்.சோசலிசம் பேசவும் தெரியும்.
        இத்தனையும் தெரிந்து வைத்திருக்கிற ஒருவனுக்கு ஏன் இந்த
         பெயர் வந்தது என்று கேட்கிறீர்களா...
        அது பெரிய கதை. கல்லூரி படித்து முடிக்கும் வரை "தம்பி நல்லா
  படிக்கிற புள்ள "என்றுதான் ஊரில் எல்லோரும் கூறுவார்கள்.
        படிப்பு முடிந்தது. மாசத்துக்கு நாலு இன்டர்வியூ.
        இப்படியாக வருடமும் நாலு கடந்து போச்சு.
        வேலை மட்டும் கிடைத்தபாடில்லை.
        ஆரம்பத்தில் வீட்டில் உள்ளவர்கள் வீராச்சாமிமீது நல்ல 
         மரியாதை வைத்திருந்தார்கள்.
        வேலை கிடைக்கவில்லை என்றதும் நாளாக நாளாக அது
          கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இப்போது மரியாதை
          என்பது சுத்தமாக கிடையாது.
          ஏதோ வேண்டாத   ஒரு பிராணியைப் பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்தனர். 
          கிடைத்த வேலையை விட்டுவிட்டு வேண்டுமென்றே
          வெட்டியாக சுத்துவதுபோல   நினைகக        ஆரம்பித்துவிட்டனர்.

          அப்பா வீட்டுக்குள்ளே வரும்போதே "வெட்டி ஆபீசர்சாப்பிட்டுட்டு போயிட்டாரா "என்று கேட்டுக்கொண்டேதான் உள்ளே வருவார்.
           ஆரம்பத்தில் அம்மாவிடம் சொல்லி வருத்தப்படுவான்.
           இப்போது எல்லாம் பழகிப் போயிற்று.
             அவனும் வஞ்சகம் வைக்காமல்  நன்றாகத்தான் படித்தான்.
              கல்லூரியில் படித்ததுபோக இன்டர்வியூக்கு உதவுமே
              என் கண்ட கண்ட புத்தகத்தை எல்லாம் படித்துஅறிவைவ வளர்த்து வைத்திருந்தான் வீராச்சாமி.
        படித்த அறிவு வேலை விசயத்தில் கை கொடுக்கவில்லை.
        நாலுபேர் மத்தியில் பேசும்போது விவரமாக பேசுவான்.
        என்ன பேசி என்ன பயன்...
        படித்த படிப்புக்கு வேலை கிடைக்கல என்றதும்
         சமுதாயத்திலும் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போய் விட்டது.
       இந்த பாழாப்போன வேலை   ஒரு அறிவாளியை வெறும் வெத்து வேட்டு பய...என்று பேசும் நிலைக்குத்  தள்ளியது.
       இன்று வெட்டிப்பேச்சு வீராச்சாமி என்று சிறுபிள்ளைமுதல்
        பெரியவர்வரை அனைவரும் கிண்டலடிக்கும்
        நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.
      "பேச்சுதான் ஓவரா  இருக்கும். காரியத்தில் ஒண்ணும்
       கிடையாது...வெறும் வெட்டிப் பேச்சுதான் "
        இப்படி பேசிப்பேசி  இப்போது மூஞ்சுக்கு நேராகவே
        "வெட்டிப் பேச்சு வீராச்சாமி அண்ணே "என்று கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.
        வீராச்சாமிக்கு வேலை கிடைக்கும்வரை வெட்டிப் பேச்சு
         வீராச்சாமி என்ற பட்டம் தொடரத்தான் செய்யும்.
       
         

Comments

Popular Posts