ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

       ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பற்றி 
படிப்பதற்கு முன்பாக பெயரெச்சம் என்றால் 
என்ன என்பதைப்பற்றி நாம் தெரிந்து 
கொள்ள வேண்டும்.
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் 
ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் 
அது பெயரெச்சம் எனப்படும்.

படித்த பையன் என்ற சொல்லில் 
படித்த என்பது ஒரு முற்று பெறாத வினைச்சொல்.
பையன் என்பது ஒரு பெயர்ச்சொல்.

 எனவே படித்த பையன் என்பது ஒரு பெயரெச்சமாகும்.

 எடுத்துக்காட்டாக

   ஒடிய + குதிரை  =     ஓடிய குதிரை
   நடித்த +  கலைஞர் =    நடித்த கலைஞர்
    படித்த  +  பெண்  =      படித்த பெண்

இவை யாவும் பெயரெச்சம் ஆகும்.

பெயரெச்ச சொற்களில் எச்ச வினைகளுக்கு 
பின் வரும் க  ,  ச. ,  த  ,  ப என்னும் 
வல்லின எழுத்துகள் மிகாது என்பதை 
நினைவில் வைத்துக் கொள்க.

 இப்போது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 பற்றி தெரிந்து கொள்வோம்.
 ஒரு வினைச்சொல் அதன் கடைசி எழுத்து 
இல்லாமல் வந்து அதனை அடுத்து 
வரும் பெயர்ச் சொல்லுக்கு விளக்கம் தருவதாக  இருந்தால்    
அது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.

  செல்லாக்காசு  
இதில் செல்லாத என்ற வினைச்சொல் 
கடைசி எழுத்து இல்லாமல் 
அதாவது ஈற்றெழுத்து கெட்டு 
செல்லா என வந்துள்ளது. 
காசு என்பது பெயர்ச்சொல்.
 இப்போது செல்லாக் காசு என்பது
 ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும்.

 எடுத்துக்காட்டு  : 

  வளையா  +  செங்கோல்.  =    வளையாச் செங்கோல்
   அழியா +  புகழ்  =        அழியாப் புகழ் 
   ஓயா  +   தொல்லை  =    ஓயாத் தொல்லை 
   வணங்கா  +  தலை =         வணங்காத் தலை
 கேளா  +  செவி  =      கேளாச் செவி

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்
 பின் வரும் க , ச , த , ப  மிகும் என்பதைக் 
கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து 
கண்டறிக.

நினைவில் கொள்க:

ஓடி வந்தான் என்றால் வினையெச்சம்.
ஓடாத வண்டி என்றால்
பெயரெச்சம்.
ஓடா வண்டி என்றால்
ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்.

மூன்று சொற்றொடர்களுக்கும்
ஒரு சிறிய வேறுபாடு தான்
உள்ளது. 

முதலாவது ஓடி என்பது
முடிவு பெறாத ஒரு சொல்.
அதனால் எச்சம் என்கிறோம்.
அந்த எச்சச்சொல் வந்தான்
என்ற வினைச்சொல்லைக்
கொண்டு முடிக்கப்பட்டுள்ளது.

எனவே ஓடி வந்தான் 
என்பது வினையெச்சம்.

இரண்டாவது சொற்றொடரில்
ஓடிய என்பது ஒரு முடிவு
பெறாத எச்சச்சொல்.
இந்த ஓடிய என்ற சொல்லோடு
வந்தான் என்று எழுத முடியுமா?
ஓடிய வந்தான் என்றால்
சரியான சொற்றொடராக இருக்குமா?

எங்கேயோ தவறு இருப்பது
போல் தெரிகிறதல்லவா?

இப்போது 
ஓடிய சிறுவன்
ஓடிய வண்டி
ஓடிய குதிரை 
ஓடிய பேருந்து

இப்படி எழுதிப் பாருங்கள்.
சரியாக இருக்கிறதல்லவா?

சிறுவன், வண்டி,குதிரை,பேருந்து
ஆகிய சொற்கள் அனைத்தும்
பெயர்ச்சொற்கள் என்பது
புரிந்திருக்கும்.

இப்போது ஓடிய என்ற எச்சச்
சொல்லோடு பெயர்ச்சொல்
சேர்ந்ததால்
ஓடிய குதிரை 
ஓடிய வண்டி 
ஓடிய சிறுவன்
ஓடிய பேருந்து

இவை பெயரெச்சம் 
எனப்படும்.

ஒருஎச்சச்சொல் பெயரைக் கொண்டு
முடிந்தால் பெயரெச்சம்.

அப்படியே மனதில் பதிய 
வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மறுபடியும் முதலில்
படித்த ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சத்திற்கு வாருங்கள்.
பெயரெச்சத்திற்கும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்கும்
என்ன வேறுபாடு?

பெரிய வேறுபாடு ஒன்றும்
இல்லை. 
ஓடிய குதிரை-பெயரெச்சம்.
ஓடாக் குதிரை-ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்.

எச்சச் சொல்லான ஓடிய என்ற
சொல்லிலுள்ள இறுதி
எழுத்து இல்லை என்றால் 
ஓடி என்று ஆகி விடும்.

ஓடி குதிரை 
என்று எழுத முடியுமா?
தவறல்லவா?அதனால்
ஓடாக் குதிரை
பாடாக் குயில்
கேளாச் செவி
தேடாச் செல்வம்
எழுதாப் பேனா

என்று எச்சச்சொல்லோடு
ஆ...என்ற ஒலி வரும்படி
எழுதப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.
அப்போதுதான் அந்தச்
சொற்கள் எதிர்மறைப்
பொருள்தரும்.

எச்சச்சொல் எதிர்மறைப் பொருளைத் தந்து,
பெயரைக் கொண்டு முடிவதால்
இது ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்.

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


உறங்கி எழுந்தான் -வினையெச்சம்
உறங்கிய சிறுவன்-பெயரெச்சம்
உறங்கா ஆந்தை-ஈறுகெட்ட
எதிர்மறை பெயரெச்சம்

இவற்றைப் போன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள 
சொற்றொடர்களுக்கு
இலக்கணக் குறிப்பு எழுதி,
பயிற்சி செய்யுங்கள்.

பேச வைத்தான்.
பேசிய கிளி.
பேசா மடந்தை

ஆடி வீழ்ந்தான்.
ஆடிய மயில்.
ஆடாக் கால்கள்


தேடி எடுத்தான்.
தேடிய செல்வம்.
தேடாக் கல்விஎன்ன
   
         இவை போன்ற சொற்களை அறிந்து பயிற்சி செய்க.
       

Comments

Popular Posts