ஆத்திசூடி - உயிர் வருக்கம்

                       ஔவையின் ஆத்தி சூடி

                 

ஆத்திசூடி படிக்காமல் தமிழ் 

படித்தேன் என்று சொல்வதில்

பொருளில்லை.

 ஔவையைச் சொல்லாமல் 

தமிழ்ப் புலவர் வரிசை 

சொல்லப்படுவதில் ஞாயமும் இல்லை.

  அ ன்னா,   ஆ வன்னா படிக்கத்

தொடங்கிய காலத்தில் முதன்முதலாக

நமக்கு அறிமுகமாகிய செய்யுள்

என்றால் அது ஆத்திசூடியாகத்தான்

இருக்கும்.

ஆரம்பப் பள்ளியிலிருந்தே  ஔவையின்

கரம்பிடித்துத் தமிழ்நடை பயின்றவர்கள் நாம்.

மனப்பாடமாகப் படித்த முதல் செய்யுள்

பெரும்பாலும் அறம் செய விரும்பு

என்பதுவாகத்தான் இருக்கும்.

 
 வகுப்பிற்குள் சென்றதும்

அறம் செய விரும்பு

ஆறுவது சினம்....

என்று வரிசையாகப் படிக்க

ஆரம்பித்துவிடுவோம்.

கூடவே உலக நாதரின் உலகநீதியிலிருந்து

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டும்.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

என்று தொடர் மழையாக வகுப்பினுள்

தமிழ் மழை பொழிந்திருப்போம்.      

பழைய நினைவுகள் எப்போதுமே 

மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

வாருங்கள் . இன்னும் ஒருமுறை

அந்த மகிழ்ச்சியை ஆத்திசூடி 

பாடிக் கொண்டாடுவோம்.


ஆத்திசூடி ஔவையாரால் மிக எளிய நடையில்

 ஒற்றைவரியில் பாடப்பட்ட  ஒரு பாடல் தொகுப்பு.

 இதில் மொத்தம் 109  வரிகள் உள்ளன.


உயிர் வருக்கம்

உயிர்மெய் வருக்கம்

சகர வருக்கம்

 தகர வருக்கம்

நகர வருக்கம்

பகர வருக்கம்

மகர வருக்கம்

வகர வருக்கம்

 
என  மொத்தப் பாடல்களும் 

எட்டு வருக்கங்களாக

 பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
  
முதலாவது உயிர் வரிசை பாடல் வரிகள்.

அத்தனையும் முத்து.

தமிழுக்குக் கிடைத்ததொரு 

மிகப்பெரிய சொத்து ஆத்திசூடி.

 
' அ' முதல் ' ஃ 'வரை உள்ள உயிர் வருக்க

  பதின்மூன்று  வரிகள் மற்றும்

அவற்றின்  பொருளையும்

இப்போது காண்போம்.

                 உயிர் வருக்கம்

 1.   அறம் செய்ய விரும்பு.

பொருள்.  :     அறச்செயல்கள்  செய்ய 

 ஆசைப்படு. தரும காரியங்கள் செய்.

விளக்கம்: 

ஆசையோடு தருமம் செய்ய வேண்டும்.

போனால் போகட்டும் என்று இரண்டு ரூபாய்

போடுவதல்ல தருமம்.

நம் மனதின் ஆழத்திலிருந்து பிறருக்கு

உதவ வேண்டும் என்ற ஆசை ஏற்பட

வேண்டும்.

நாலுபேர்  நம்மை மெச்ச வேண்டும் என்பதற்காக

செய்வது தர்மம் ஆகாது.

அறம் என்பது ஆறு போல உதவும்

பண்பு இருந்தால் மட்டுமே அதற்கு

அறம் என்ற பெயர் பொருந்துவதாக

இருக்கும்.  வள்ளுவர் அறத்தை

ஆறு என்று சொல்லுவார்.

ஆறு தன் போக்கில் உதவிக்கொண்டே

செல்லும். வெளியில் தெரியாது.

யார் யாருக்கு உதவ வேண்டும் என்ற

பாகுபாடும் ஆற்றுக்குக் கிடையாது.

அவ்வாறு பாரபட்சமின்றி மகிழ்ச்சியோடு

பிறர் மகிழும்படிச் செய்யும் உதவிக்குப் 

பெயர்தான் அறம்.

அந்த அறத்தைச் செய்ய ஆசைப்படு

என்கிறார் ஔவை.

Translation :

 Learn to love virtue.

Transliteration :

"  Aram seiya virumbu."

     
  2    ஆறுவது சினம் .
                   
  பொருள்:      

 கோபத்தைக் குறைத்துக் கொள்.

விளக்கம்:

நமது தன்மானத்திற்கு பங்கம்

ஏற்பட்டால்...

நினைப்பது நடக்க முடியாமல்

போய்விட்டால்...

ஆசைகளுக்கு யாராவது

தடை போட்டுவிட்டால்...

சினம் வருவது இயல்பு.

நமது இயலாமையின் வெளிப்பாடு.

கோபம்.

"சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி"

என்பார் வள்ளுவர்.

சினம் தன்னை அழிப்பதோடு 

நின்றுவிடாமல் நம்மோடு சேர்ந்தவரையும்

அழித்து விடும்.

நகையும் உவகையும் கொல்லும் 

தன்மை கொண்டது சினம்.

ஆதலால் அந்தச் சினத்தைக்

கட்டுப்படுத்து.சினம் கட்டுக்கடங்காமல்

போனால் காட்டுத்தீயாகிவிடும்.

அதனால்தான் ஆறுவது சினம்

என்கிறார் ஔவை.

  Translation :

  Anger will be cooled off.

We should always control

our anger  under any circumstances.


 Transliteration :

 Aaruvathu Sinam.                     

  3.   இயல்வது கரவேல்
     

பொருள் :     

 யாசித்து வருபவர்க்கு உன்னால் 

இயன்ற உதவிகளைச் செய்.

உன்னால் கொடுக்க முடிந்த பொருளை

ஒளித்து வைக்காமல் கொடு.

விளக்கம் :

உன்னால் கொடுக்கும் திறன்

இருக்கும்போது உன் அயலானைப்

பார்த்து இன்று போய் நாளை வா

என்று சொல்லாதே.

இருப்பதை ஒளித்து வைத்துவிட்டு

என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை

என்று கூறாது உன்னால் இயன்றதை 

மறைக்காமல் கொடு.

இல்லை இல்லை என்று சொல்லி

பொருளை மறைத்து வைத்துச்

சேர்க்கும் பழக்கம் சிலரிடம் உண்டு.

அப்படிப்பட்டவர்களைப் பார்த்து

இயல்வது கரவேல் என்கிறார் ஔவை.

 Translation :

 Don't forget charity.

Help others to whatever

 extent possible.


  Transliteration:

  Iyalvadhu karavael

   4 . ஈவது விலக்கேல்

   பொருள் :  

கொடுப்பதைக் கொடுக்க வேண்டாம் என்று

ஒருபோதும் தடுக்காதே. 

விளக்கம் : 

சிலருக்கு ஒரு குணம் இருக்கும்.

தானும் கொடுக்கமாட்டான்.

பிறரையும் கொடுக்கவிட மாட்டான்.

பிறர் கொடுக்க விரும்புவதை

ஒருபோதும் தடுக்காதே.

ஈதல் என்பது ஒரு நற்பண்பு.

அதனை குறுக்கே நின்று தடுப்பது

அநீதி. அந்தச் செயலை  ஒருபோதும்

செய்தல் கூடாது.     

கொடுப்பதிலிருந்து நீயும் விலக்கு

வாங்கி விலகி விடாதே.

அடுத்தவர்கள் கொடுப்பதையும் 

தடுத்துவிடாதே என்பதற்குத்தான்

ஈவது விலக்கேல் என்கிறார் ஔவை.

Translation :.

 Never stop aiding.

  Transliteration :.

 Eevathu vilakkael

5.       "உடையது விளம்பேல்"

பொருள் :       உன்னிடம் உள்ள

செல்வத்தை அல்லது சிறப்பை பிறர்

அறியும்படி சொல்லாதே.

தற்பெருமை கொள்ளாதே.

விளக்கம் : 

தன்னிடம் இருப்பதைப் பிறர்க்குக்

காட்டிப் பெருமைப்படுவதில் ஒருசிலருக்கு

அலாதி இன்பம்.

உன்னிடம் இருப்பது உலகுக்குத்

தெரியும். நீ உன் வாயால் பெருமை

பேசுதல் கூடாது. பிறர் உன் பெருமையைப்

பேச வேண்டும். தனக்குத்தானே

விளம்பரம் வைத்துக்கொள்ளக் கூடாது.

இருப்பதை என்னிடம் இருக்கிறது...

என்னிடம் இருக்கிறது என்று சொல்லித்

திரிய வேண்டாம்.

இது பொருளுக்கு மட்டுமல்ல அறிவுக்கும்

பொருந்தும்.

சிலரின் தற்பெருமையைப் 

பார்த்த ஔவை உடையது

விளம்பேல் என்கிறார்.

 Translation :

 Do not boast about your

wealth and  other possessions.


Transliteration :

" Udayathu vilambael"

6.    ஊக்கமது கைவிடேல்

  பொருள் :   

ஒருபோதும் முயற்சி 

செய்வதைக் கைவிட்டு விடாதே.

விளக்கம் :

மனவலிமையை விட்டுவிடக் கூடாது.

வாய்ப்பு வரும்வரை கதவைத்

தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டு மூன்றுமுறை தட்டிவிட்டு

சோர்வடைந்துப் போகக்கூடாது.

எதுவரை முடியுமோ அதுவரை

ஓடு. வெற்றி கிடைக்கும்வரை ஓடு.

தன்னம்பிக்கை இழந்து திரும்பிப்

பார்க்காதே. சோர்ந்துவிடுவாய்.

ஊக்கம் இருந்தால் ஆக்கம் நிச்சயம்

உண்டு.

பெரிய உருவம்உடைய யானையே

ஊக்கமுடைய புலி தாக்க வந்தால்

அஞ்சி ஓடும்.

ஊக்கம் மட்டும் இருந்தால்

போதும். அதனை எதற்காகவும்

விட்டுவிடாதிருந்தால் ஆக்கம் 

வருவது உறுதி. இதனைத்தான்

ஔவை ஊக்கமது கைவிடேல்

என்கிறார்.

Translation :

Don't forsake motivation.

Continuous effort will always

yield success.


Transliteration:

" Ookamadhu  kaividael"

 7. எண் எழுத்து இகழேல்

பொருள் :  கணித நூல்களையும்

 இலக்கண இலக்கிய நூல்களையும் 

இகழ்வாக நினைத்து 

கற்காது விட்டுவிடாதே.

விளக்கம் :

கணிதம் என்றாலே சிலர்

காத தூரம் ஓடுவர்.

 இலக்கியமா? அதை யார்

படிப்பார்கள்?இப்படிச் சொல்லி சிலர்

இலக்கியம் படிப்பதை  வெறுத்து

ஒதுக்குவர். படித்தல் மிகவும் தேவையான

ஒன்று.கணக்கு தெரிந்திருக்க வேண்டும்.

எண்கணிதம் கற்றிடாமல் எதுவும்

செய்திட முடியாது.

இலக்கியம் அறிந்தால்தான் உலகத்தைத்

தெரிந்து கொள்ள முடியும்.

அதனால்தான் இலக்கியத்தைக் காலக்கண்ணாடி

என்பார்கள். 

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு "

என்றார் வள்ளுவர்.

எல்லாவற்றையும் அறிவதற்கு எண்ணும்

எழுத்தும் வேண்டும். அதனால்தான்

எண்ணும் எழுத்தும் கண் என்கிறார்

வள்ளுவர்.

கண்களை இகழ்தல் தகுமோ?

இல்லை அல்லவா!

ஆதனால்தான் ஔவையும்

எண் எழுத்து இகழேல் என்கிறார்.

 Translation :

 Don't despise  learning.

One should not neglect education.


 Transliteration :

 " En ezhuthu egalel"

   8.    ஏற்பது இகழ்ச்சி

  பொருள் :   பிறரிடம் பிச்சையெடுத்து 

வாழ்தல்  இகழ்ச்சி தருவது.

விளக்கம் :

 இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால்

ஒருவரிடத்தும் சென்று ஒன்றையும்

வேண்டி நிற்கக் கூடாது.

"இரந்தும் உயிர்வாழ வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் "

என்றார் வள்ளுவர்.

இரந்து வாழும் நிலையை இறைவன்

ஒருவனுக்கு அளித்தால் படைத்தவனாயினும்

அவனும் அங்கிங்கும் அலைந்து கெட்டு

ஒழிந்து போகட்டும்.எவ்வளவு கனமான வரிகள் !

ஆம்...இரந்து வாழ்கிறவன் தன்மானத்தை

இழந்து போவான்.

தலை நிமிர்ந்து நின்று எதுவும்

கேட்க முடியாது. அப்படிப்பட்ட

நிலை யாருக்கும் வரக்கூடாது.

அது இழிவான நிலை.

அதனால்தான் ஏற்பது இகழ்ச்சி என்கிறார்

ஔவை.

Translation :

 Accepting alms is ashamed.

Begging or accepting anything 

that comes  for free is disgraceful.


Transliteration

" Yerpadhu igazhchchi   "

 9.    ஐயம் இட்டு உண்.

பொருள் :    

நம்மிடம்   யாசித்து 

வருபவர்க்கு முதலாவது உணவளித்துவிட்டு

அதன் பின்னர் உண்ணும்

பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள

வேண்டும்.

விளக்கம் : 

ஏற்பது இகழ்ச்சிதான்.உண்மை

ஆனாலும் அப்படிப்பட்ட சூழலுக்கு

ஒருவர் தள்ளப்பட்டுவிட்டார்.

வேறு வழியில்லை. வாசலில்

வந்து நின்று யாசகம் கேட்கிறார்.

அவர் ஏற்கனவே கூனிக்குறுகிப் போய்தான்

வந்து நிற்பார். அவரை மேலும்

அவமானப்பட வைத்து 

காக்க வைத்தல் கூடாது.

அவருக்கு உணவளித்த பின்னர்தான்

நாம் உண்ண வேண்டும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

 பிறர்க்குக் கொடுத்து

உண்பது நன்று.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"

இதைத்தான் ஔவையும்

ஐயம் இட்டு உண் என்கிறார்.

 Translation :

 Share with the needy before you eat.


  Transliteration :

  Aiyam edtu uN

10.     "ஒப்புரவு ஒழுகு"

 பொருள் :  

உலக நடைமுறையை அறிந்து 

அத்தோடு  இயைந்து நடக்கப் பழகு.

உலகத்தோடு பொருந்த நடந்துகொள். 

விளக்கம் :

"உலகத்தோடு  ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவில்லா தார்"

என்பார் வள்ளுவர். 

எவ்வளவு படித்தவராயினும் உலக

நடைமுறையோடு ஒத்துப்போகும்

பண்பு இருக்க வேண்டும்.

ஒப்புரவு என்பது உலகத்தின் போக்கு

அதாவது சமன்பாடு .ஏற்றத்தாழ்வு

இல்லா பண்பு.

படித்தவன் என்று எண்ணி

உலகப்  போக்கிலிருந்து ஒருபோதும்

விலகி நிற்கக் கூடாது.

மனிதர்களின் மனங்களைப் படித்த

ஒருவனால் மட்டுமே உலகத்தோடு 

ஒத்து வாழ முடியும்.ஆதலால்

முதலாவது மனிதர்களின் மனங்களைப்

படியுங்கள். அவர்கள் உள்ளத்தில்

இடம்பிடியுங்கள்.அவர்களோடு

அவர்களாக இயைந்து வாழ

கற்றுக் கொள்ளுங்கள். 

இதைத்தான் ஔவை

ஒப்புரவு ஒழுகு என்கிறார்.

 Translation :

 Adapt to your changing world.

We should be united  within the

family and in the society around us.


 Transliteration :

 " Oppuravu 0zhughu"

11. "  ஓதுவது ஒழியேல்"

 பொருள் :      

நல்ல நூல்களைக்   

கற்பதை ஒருபோதும் கைவிட்டு விடாதே.

விளக்கம் :

படி...படி.படித்துக்கொண்டே இரு.

உயிர் உள்ளவரை படி.

நல்ல நூல்களைத் தேடித்தேடிப் படி.

இதுதான் பெரியவர்கள் நமக்குச்

சொல்லும் அறிவுரை.

ஓதாமல் ஒருநாளும் இருக்க

வேண்டாம்.

இதைத்தான் ஔவையும்

தொடர்ந்து படித்துக்கொண்டே இரு.

படிப்பை ஒருபோதும் நிறுத்திவிடாதே.

படிப்பில் இடை நிறுத்தம் என்ற 

பேச்சுக்கே இடமில்லை

என்று சொல்வதற்காக

ஓதுவது ஒழியேல் என்கிறார்.

 Translation :

 Never stop  learning.

Learning is a continuous process and

it goes on throughout life.


Transliteration :

 Oodhuvadhu ozhiyael.

12.. ஔவியம் பேசேல் .

பொருள் :  

 பொறாமையை மனதில் வைத்துக்

கொண்டு யாரிடமும் பேசாதே.

விளக்கம் :

ஔவியம் என்றால் பொறாமை.

பொறாமையைப் பேசக்கூடாதா?

ஆமாங்க...

பொறாமை இருக்கிறதா ? 

பேச்சை நிறுத்திக்கொள்க என்கிறார்

ஔவை.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று

பேசும் மாய்மாலமான வேடம் வேண்டாம்.

பொறாமை உள்ளவன் பேசும்

தகுதியை இழந்து விடுகிறான்.

பொறாமை உள்ளவன் அறம்

பேசவே கூடாது.

நல்லவற்றைப் பேச வேண்டுமா? 

மனதில் பொறாமை இருந்தால்

அதைத் தூக்கி வெளியேவீசிவிட்டு

அதன் பின்னர் பேசு.

பொறாமை ஒரு உணர்வு.

அந்த உணர்வு வந்துவிட்டாலே

அறக்கருத்துகளைக் கூற

லாயக்கற்றவர்களாகிவிடுவோம்.

அதனால்தான் ஔவியம் பேசேல்

என்கிறார் ஔவை.

 Translation :

 Don't speak  ill about others.


Transliteration :

 Ariviyam  beaseal

13.  அஃகம் சுருக்கேல் 

 பொருள் :  

அதிக லாபம் வேண்டி 

தானியங்களைக் குறைத்து 

அளந்து விற்காதே.

விளக்கம் : 

கள்ளத் தராசு வைத்துக் கொள்ளும்

வியாபாரிகள் உண்டு. 

தானியங்களை ஒருபோதும் குறைத்து

அளந்து கொடுக்கக் கூடாது.

நீ அளக்கிறது போலவே உனக்கும்

அளக்கப்படும்.அமுக்கிக் குலுக்கி

தாராளமாக அளந்து கொடுங்கள்.

உணவுப் பொருட்கள் கொடுக்கும்போது

அதில் ஒருபோதும் குறைவாக

நிறுத்து விற்றல் கூடாது.

 வயிற்றுப்பசி போக்கும் தானியங்கள்

அளந்து கொடுக்கும்போது 

அவர்கள் வயிற்றிலடிக்கும்

கொடுஞ்செயல் புரியாதே.

இதைத்தான் ஔவை 

அஃகம் சுருக்கேல் என்கிறார்.

 Translation :

Never cheat on weight

While selling food grains.


Transliteration :

 Akkam surukkael.

             

உயிர் வருக்கம் பதின்மூன்று

பாடல்களையும் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்

என நம்புகிறேன்.


     

       

      

           

     

                 
       

Comments

  1. உயிர் வர்க்க பாடல்களுக்கு மிகத் தெளிவான விளக்கம் தந்து பதிவிட்டது மிகச்சிறப்பு.

    ReplyDelete
  2. எளிமை, அருமை மற்ற வருக்கங்களுக்க்கும் விளக்கம் தேவை

    ReplyDelete

Post a Comment

Popular Posts