பெண்ணின் ஏழு பருவப் பெயர்கள்

                              பெண்ணின் ஏழு பருவங்கள்

         

      "   இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு
           இன்பந் தருப்படி வாய்த்த நல் அமுது "

                                                    _   பாரதிதாசன்.
                                                   

         தமிழை நாளும் கற்றும் கற்பித்தும் பார்
          தமிழின் இனிமையும் வளமையும் புரியும்.
        சொல்வளம் இல்லாத மொழி நாளடைவில் அழிந்துபோகும்.
     சொல்வளமும் பொருள் வளமும் மிக்க மொழியால் மட்டுமே கால வெள்ளத்தில் எதிர்த்து நின்று பீடு நடை போட முடியும்.
           தமிழ் சொல்வளமிக்க மொழி என்பதை பருவங்களுக்கு ஏற்ப
           பெயர் கொடுத்து அழைத்தும் எழுதியும் வந்த திறத்தால்
           அறிந்து கொள்ள முடியும்.
            
        பெண்ணின்பருவத்தினை ஏழாக வகைப்படுத்தி பழந்தமிழ்  இலக்கியங்கள் கூறி வந்துள்ளன.
          உலா இலக்கியத்துக்கான இலக்கணம் கூறும்போது இலக்கண நூல்கள் ஏழு பருவப் பெண்கள் பற்றி கூறுகின்றன.

    பேதை  ,  பெதும்பை  ,  மங்கை  ,   மடந்தை  ,  அரிவை  , தெரிவை  ,
    பேரிளம் பெண்  எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலா வரும் தலைவனைக் கண்டு  அவன்மீது காதல் கொண்டு வருந்தும்
நிலையை உலா இலக்கியங்களில் காணலாம்.
     இந்த ஏழு பருவ மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.

             பன்னிரு பாட்டியல் என்ற இலக்கணநூல் ஏழு பருவ 

              பெயர்களை அவற்றிற்குரிய வயதுபடி தெளிவாக

              குறிப்பிட்டுள்ளது.
          
            

       1.       பேதை                        5    _    8

         "   பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே "
                       
        2.       பெதும்பை                 9     _  10

        "  பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும் "
          
         3.        மங்கை                       11      _14

         "   மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
            திரண்ட பதினா லளவும் சாற்றும்  "
          

         4.     மடந்தை                       15  _   18

         "   மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
            திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும் "
           
          
          5.    அரிவை                       19     _   24

       "  அரிவைக்கு யாண்டே அறு நான்கு என்ப "


            6.  தெரிவை                     25        _  29


        " தெரிவைக்கு யாண்டே இருபத்தொன்பது "

           

            7.   பேரிளம் பெண்.          30    _     36


         "   ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது

            பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப "

          
           சூடாமணி என்னும் நூல்  கீழ்க்கண்டவாறு

          பெண்களின் பருவ வயதை வகைப்படுத்தியுள்ளது.
        
        "   பேதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று 

                                                                                                மங்கை
           மாதே பதின்மூன்றா கும் மடந்தை   _ யோதுபதி


           னாறரிவை  யாமிருபத் தைந்துமுப்ப

                                                                      தொன்தெரிவை

           பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு  "
      
         என மஹாபரத  சூடாமணி என்னும் நாட்டிய நூலில் பெண்களின்
         ஏழு பருவ வயதும்  குறிப்பிடப்பட்டுள்ளது.     
                       
             பேதை  :   பிறந்து, தவழ்ந்து, எழுந்து, நடந்து , ஓடியாடி
             ஏன் ...எதற்கு... எப்படி ...என்று நம்மை ஆயிரம்
            கேள்விகள் கேட்டு நிற்கும் பருவம்
           
            பெதும்பை     _ பள்ளியிலும் வீட்டிலும் குறும்பு செய்து 

             அடி  வாங்கி ஆனந்திக்கும் பருவம்.

           
            மங்கை    :    பூப்பூப்பது போல மலர்ந்து நிற்கும் பருவம்   
           
            மடந்தை     :    தான் நினைப்பதுதான்  சரி என்று ஒரு
             மாயையான   உலகில் சஞ்சரிக்கும் பருவம் .
            
              
            அரிவை    :  வெளி உலகைப்பற்றிய அறிவு கொஞ்சம்
             கொஞ்சமாக    வளரும் பருவம் .
           
             தெரிவை         : திருமணம் முடித்து  வாழ்க்கையைத்  தெரிந்து கொள்ளும் பருவம்.   
           
            பேரிளம் பெண்.      :  ஒரு முழுமையான அறிவு பெற்று   உயர்ந்து நிற்கும் பருவம்.

          
 

                    ஆண்களின் பருவப் பெயர்கள்
    
                 ஆணின் பருவ வயதினை
                 கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளனர்.
                 இந்தக் கருத்து பெரும்பாலும் அனைவராலும்
                 ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

                 
           விடலை            12     _     24

            காளை               24     _    36

             மீளி                    36    _    48

            மறவோன்          48    _    60   

            திறவோன்           60     _    72

            முதுமகன்             72     அகவைக்கு  மேல்

         ஆண்கள் பருவப் பெயர்களின்  இன்னொரு   பட்டியலும் உண்டு

               பிள்ளை          _     குழந்தைப் பருவம்

                சிறுவன்        _       பாலப்பருவம்

                 பையன்      _      பள்ளிப்பருவம். 

                   காளை      _          காதற் பருவம்

                   தலைவன்  _         குடும்பப் பருவம்

                  முதியோன் _      தளர்ச்சிப் பருவம்

                 கிழவன்    _          மூப்புப் பருவம்

          மீளி என்பதற்கு வீரன்   மறம்  , தலைவன்   போன்ற பல 
          பொருள்கள் உண்டு என்பதை  சங்க இலக்கியங்களில்
          மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
          புறநானூற்றிலும் இதற்கான ஆதாரம்   உள்ளது.
         
          வயது பற்றிய மாறுபட்ட கருத்து இருந்தாலும்  பருவங்கள் ஏழு 
          பற்றிய மாறுபட்ட கருத்து இல்லை.

           பிறந்ததுமுதல் எட்டு வயது வரை சிறுமி.
          
           பூப்படைந்து திருமணம் ஆகும்வரை கன்னி.
          
           திருமணம் ஆகிய பின்னர்  பெண்.

          குழந்தைப் பருவத்திற்கும் வளர்ச்சி முற்றுப்பெற்ற
           பருவத்திற்கும்  இடைப்பட்ட காலத்தை வளரிளம் பருவம்   என்பர்.
           உடல் மற்றும் மனவளர்ச்சியில் முக்கிய கட்டங்களை அடையும் பருவம் இது.
           மொழி ஆளுமை பற்றிய தெளிவான புரிதல் சொற்கள்
           மிகுதியாக அறிந்து கொள்ளும்போதுதான் ஏற்படும்.

           ஒவ்வொருவரும் கூறும் வயது பற்றிய கருத்தில் மாறுபட்ட
            கருத்து இருந்தாலும் பருவங்கள் ஏழு மற்றும் அதன் பெயர்   பகுப்பு ஆகியவற்றில் ஒன்றுபட்ட கருத்து உள்ளது.
               இருபதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் ஆதாரத்தின்
               அடிப்படையில் முடிவாக ஏழு பருவப் பெயர்களில்
               யாருக்குமே மாற்றுக்கருத்து இல்லை என்பதை புரிந்து  கொள்ள முடிந்தது.

            ஆரவாரமில்லாமல் சிந்தையில் விந்தை ஏற்படுத்தும் மொழி தமிழ்மொழி.

            "தனிமைச் சுவையுடைய சொல்லை எங்கள்
            தமிழினும் வேறெங்கும் கண்டதில்லை "
        
                                                            _   பாரதிதாசன்
          

           


           

Comments

Popular Posts