பாவமன்னிப்பு

      


                                  பாவமன்னிப்பு


 ஞாயிறு என்றாலே போதும். 

செல்வ ரத்தினம் வீடு

 காலையிலிருந்தே ஒரு பரபரப்பிலேயே இருக்கும்.    

ஆளாளுக்கு குளித்துவிட்டு 

கோவிலுக்குப் புறப்படும் முன்னே

 ஒரு களபரமே நடந்து முடிந்துவிடும்.


 "அம்மா இன்னைக்கு என்ன டிரஸ் போடணும்...."

"அம்மா என் கம்மலைப் பார்த்தியளா...."

 "அம்மா என் ஷூ எல்லாம் துடைச்சு வச்சாச்சா..."

ஆளுக்கொரு மூலையிலிருந்து 

கத்தி தொலைத்து விடுவார்கள்.

 
இது இந்த வாரம் மட்டுமல்ல...

 வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால் 

இதே கத்தலும் களேபரமும்தான்.

செல்வரத்தினம் மட்டும் அமைதியாக 

ஒரு நாற்காலியில் அமர்ந்து

இன்று என்ன பாவஅறிக்கை

 செய்ய வேண்டும் என்று மனதிற்குள் 

சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 கண்கள் மூடிய நிலையில் மறுபடியும் மறுபடியும்

 அந்தக் காட்சி மனக்கண் முன் வந்து நின்று

 மன்னித்துவிடுங்கள் சாமி...

மன்னித்து விடுங்கள் சாமி....

என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தது.

அந்தக் குரல் ஏதோ ஒரு விதத்தில்

செல்வரத்தினத்தைத் தொந்தரவு செய்து

கொண்டே இருந்தது என்றுதான் 

சொல்ல வேண்டும்.

 "மன்னித்திருக்கலாமோ....நேற்று கொஞ்சம்

 அதிகப்படியாகத்தான் நடந்துவிட்டேனோ..."

மனம் அந்தப் பெண்ணுக்காக பரிந்துரை

வழங்கிக் கொண்டே இருந்தது.


ஒருமுறை மன்னிச்சிட்டோம்ன்னா போதும்.

இவங்களுக்கெல்லாம் மறுபடியும் மறுபடியும்

அதே தப்பை செய்துவிட்டால் என்ன? 

நம்ம முதலாளிதான் மன்னித்துவிடுவாரே

என்று ஒரு மெதப்பு வந்துவிடும்.

இதே வழக்கமாக வைத்துக்கொண்டு

முன்னால் வந்து நிற்பார்கள்.

ஒரு முதலாளியாய் எப்போதும் 

தொளிலாளியிடம்

கண்டிப்புடன்தான் நடந்து கொள்ள வேண்டும்.

மன்னிச்சிட்டோம் என்றால்....இன்றைக்கு

 ஒருத்தன் நாளைக்கு ஒருத்தன் என்று 

வரிசை கட்டி கைகட்டி வந்து நிற்பார்கள்.

ஐயா எப்படியும் மன்னிச்சிடுவாங்க 

என்று ஒரு அலட்சியம் வந்துடும். 

முதலாளி என்பதைவிட்டு கீழே இறங்கி வரக்

கூடாது.."மனம் தான் செய்தது சரிதான்

என்று வக்கலாத்து வாங்கி நின்றது.


நடந்தது ஒன்றும் பெரிய குற்றமல்ல.

கடையில் வேலை பார்க்கும் பார்வதி ஒரு

பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து மகனுக்குக்

 கொடுத்துவிட்டாள்.


என்றுமில்லாதபடி மகன் பள்ளி 

முடிந்து கடை வாசலில் வந்து நின்றிருக்கிறான்.

பச்சப்புள்ள கடைக்கு வந்து நிற்க ..பட்டென்று

ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்துக் 

கையில் கொடுத்துவிட்டாள்.
      

மானேஜரிடம் சொல்லிவிடலாம்

என்றுதான் நினைத்தாள்.

வேலை அவசரத்தில் அப்படியே மறந்து

போனாள்.

அதற்குள் எவனோ மானேஜர் 

காதில் போட்டுவிட....விசயம்

விவகாரமாய் போயிற்று.


"இந்த திருட்டு வேலை எத்தனை 

நாள் நடக்குது..".முறைத்தார் மானேஜர்.

அந்த நேரம் பார்த்து கடை முதலாளி செல்வரத்தினம்

கடைக்குள் வந்துவிட்டார்.

மானேஜர் ஒன்றுக்கு இரண்டாக போட்டுக்

கொடுத்துவிட்டார்.

 "ஐயோ....சாமி திருட்டு பழக்கம் 

எல்லாம் எனக்கு இல்ல சாமி.

காசு இல்லை என்றால் கஞ்சு குடிக்காமல்

வேண்டுமென்றால் இருப்பேன்.

களவு எல்லாம் செய்ய மாட்டேன்"

என்று சொல்லி கண்ணீர் வடித்தாள்.


 "பிறகு கடையில் இருந்து கேட்காமல்

 எடுத்ததைத் திருட்டு என்று

 சொல்லாமல் வேறு எப்படி எடுத்துக்

கொள்வது?"

 "   ஐயா புள்ள பசின்னு கேட்டதால்

எடுத்து கொடுத்துப்புட்டேன்"

இன்னைக்கு பிஸ்கெட் எடுத்து

கொடுப்பாய்.....நாளைக்கு வேறு

எதுவும் விலை உயர்ந்த பொருளைக்

தூக்கிக் கொடுக்க மாட்டா என்று

எப்படி நம்புறது?"


"அதுக்குதான் ஐயா சம்பளம் தாறாங்க  இல்ல..."


 "சம்பளத்துல பிடிச்சுகிடுங்க ஐயா.....

தெரியாம செய்துட்டேன்."
           

 "பார்த்துவிட்டால்...    தெரியாமல் செய்துவிட்டேன் 

என்று இப்படி ஒரு பசப்பு.  இந்தச் 

செல்வரத்தினத்திற்கு திருட்டு என்றாலே

பிடிக்காது தெரியுமில்ல.

களவு செய்த கை நிற்காது.

நாளையும் பரிமாறத்தான் செய்யும்.

நாளையில இருந்து வேலையை விட்டு

 நின்னுக்க...".கோபமாக பேசினார் செல்வரத்தினம்.

 "ஐயா....மன்னிச்சுடுங்க....வேலைய விட்டு 

மட்டும் எடுத்திறாதீங்க...நானும் என் பிள்ளைகளும்

இந்த வேலையை நம்பிதான் இருக்கோம்.

நீங்க வீட்டுக்கு போகச் சொன்னா

நாங்க பட்டினிதான் கிடக்கணும்" 

காலைப் பிடித்துக் கெஞ்சினாள் பார்வதி

  "   அட..   சீ போ.. ...போ...போ..

என் கண் முன் நிற்காத.

எப்போ திருடினியோ

அப்பவே உன் கணக்கு தீர்ந்து போச்சு.

இனி    உனக்கு இங்க வேலை இல்ல..."

மன்னிப்பை ஏற்க மறுத்தார் செல்வரத்தினம்.

 " ஐயா...இந்த சம்பளத்தை நம்பிதாங்க 

எங்க குடும்பம்  இருக்கு.

இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க ஐயா...."

மறுபடியும் கதறிப் பார்த்தாள்.

 "இந்த கழுதையை இழுத்து  வெளியே 

கொண்டு தள்ளு. கடை வாசலுல நின்னு

கண்ணீர் விட்டுகிட்டு...."

பேசிவிட்டு வெளியே சென்றார்.


 கடை பையன் வந்து கையைப் 

பிடித்து இழுத்து வெளியே கொண்டு விட்டான்

 ஐயா.....இந்த ஒரு தடவை

  மன்னிச்சுடுங்க....".செல்வரத்தினம்

தலை மறையும்வரை  அழுதுப் பார்த்தாள்.

கேட்காததுபோல  சென்றுவிட்டார் 

செல்வரத்தினம்.

 கடைசிவரை மன்னிக்க மனம்

இல்லாதவராக இருந்தார்.

 "தப்பு செய்தவர்களை மன்னிக்கக் கூடாது 

என்பது செல்வரத்தினம் அகராதியில்

 எழுதி வைக்கப்படாத தீர்ப்பு."

 தான் பாவமன்னிப்பு கேட்கப் போகும்போதுதான்

நேற்று நடந்தது மனதிற்குள் வந்து 

ஏதேதோ பேசிப் போனது.

நீங்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்பு

கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே

மன்னிப்பு கேட்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கும்போது

 அவள் செய்த பாவத்திற்கும் மன்னிப்பு

வழங்கப்பட வேண்டுமல்லவா!"

 மனதிற்குள் இப்போது எது மன்னிப்பு

என்று ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது.

"இதுவும் ஒரு பாவமில்லையா?

 பாவ அறிக்கை செய்யும் போது இந்த

பாவத்தையும் பாதிரியாரிடம் சொல்லி

 மன்னிப்பு வாங்கிவிடு" மனசாட்சி

பேசியது.

 சீ....என்ன இது கோவிலுக்குப் போகும் 

நேரத்தில் கண்ட கண்ட நினைப்பெல்லாம் வந்து....

ஒருமுறை மறுபடியும் பாவ  சங்கீர்தனம் செய்ய

 பாதிரியாரிடம் சொல்லப் போகும்

 பாவங்களை மனதில் சொல்லிப் 

பார்த்துக் கொண்டார் செல்வரத்தினம்.


 அந்த ஏழையை மன்னிக்காதது 

செல்வரத்தினத்திற்குப் பாவமாக

தெரியவில்லை.

அதனால் செல்வரத்தினம்   சொல்லப் போகும்

பாவ மன்னிப்பு பட்டியலில் 

அது இடம்பெறவில்லை.

      
           
           
          
          
     

Comments

Popular Posts