உடம்படுமெய்
உடம்படுமெய்
நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும்
உயிரெழுத்துகளே வருமானால்
அச்சொற்கள் புணருங்கால்
அவ்விரு உயிர் எழுத்துகளும்
உடன்படாததுபோல தனித்து
நிற்கும்.அவற்றை உடன்படச்
செய்வதற்காக அவற்றிற்கிடையே
ஒரு மெய்யெழுத்து தோன்றும்.
அவ்வாறு தோன்றும் மெய்கள்
யகரமும் வகரமுமாகும்.
அதனையே உடம்படுமெய் என்கிறோம்.
வருமொழி முதலில் ஏதேனுமொரு
உயிரெழுத்து வர
நிலைமொழியீற்றில் இ , ஈ , ஐ. நின்றால்
யகரமும் இவை அல்லாத பிற உயிரெழுத்துகள்
நின்றால் வகரமும்
ஏ நின்றால் யகரம்,வகரம் ஆகிய
இரண்டுமே சொல்லுக்கு ஏற்ப
வரும் என்று வீர சோழியம் என்ற
இலக்கணநூல் கூறுகிறது.
நன்னூலார் உயிர்முன் உயிர்
புணரும் புணர்ச்சியில் உடம்படுமெய்
வருவது பற்றி மூன்று விதிகளைக் கூறியுள்ளார்.
"இ , ஈ ஐ வழி யவ்வும்
ஏனை உயிர் வழி வவ்வும்
ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும் "
என்கிறது நன்னூல்.
1. முதலாவது நிலைமொழியின் ஈற்றில்
இ. , ஈ , ஐ. என்னும்
மூன்று உயிர் எழுத்துகளில்
ஏதேனும் ஒன்று நின்று ,
வருமொழியின் முதலில்
ஓர் உயிர் எழுத்து வந்தால்
அவ்விரண்டு எழுத்துகளுக்கு இடையே
யகர மெய்யானது
உடம்படுமெய்யாக வரும்.
மணி + அடித்தான் = மணியடித்தான்
கிளி + அழகு = கிளியழகு
தீ + எரிந்தது = தீயெரிந்தது
வாழை + இலை = வாழையிலை
துணி + எடு = துணியெடு
தீ + அணை = தீயணை
பனை + ஓலை = பனையோலை
ஆ + இடை. = ஆயிடை
வேலை + ஆள் = வேலையாள்
கலை + அழகு = கலையழகு
காட்சி + அழகு. = காட்சியழகு
இ, ஈ , ஐ முன் யகரம் உடம்படுமெய்யாக
வந்துள்ளமை காண்க.
2. நிலைமொழி ஈற்றில் இ. , ஈ , ஐ என்னும்
மூன்று உயிர் எழுத்துகளைத் தவிர
மற்ற உயிர் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று நின்று,
வருமொழியின் முதலில்ஓர் உயிர் எழுத்து வந்தால்
அவற்றிற்கு இடையே வகர மெய்யானது
உடம்படுமெய்யாக வரும்.
பல + இடங்கள் = பலவிடங்கள்
அப்பா + உடன் = அப்பாவுடன்
பூ + அழகு. = பூவழகு
நிலா + அழகு = நிலாவழகு
நிலா + ஒளி = நிலாவொளி
திரு + அருள் = திருவருள்
மா + இலை = மாவிலை
கோ + இல். = கோவில்
3 நிலைமொழியின் ஈற்றில் ஏ என்னும்
உயிர் எழுத்து நின்று, வருமொழியின் முதலில்
ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால்
அவற்றிற்கு இடையே யகரம், வகரம் ஆகிய
இரண்டும் உடம்படுமெய்களாக வரும்.
சே + அடி = சேவடி.
சே + அடி = சேயடி
அதுவே + இது = அதுவேயிது
தே + ஆரம் = தேவாரம்
அவனே + இவன் =. அவனேயிவன்
கோ + இல் = கோவில்
என்று வகர உடம்படுமெய் வரும்
என்று சொல்லப்பட்டுள்ளதே.
ஆனால் கோயில் என்றும் எழுதுகிறோமே
இதுசரியா? என்ற கேள்வி எழலாம்.
கோ + இல் = கோவில்
நிலைமொழி ஈற்றில் ஓ என்னும்
உயிர் எழுத்து இருந்து
வருமொழி முதலில் எந்த ஒரு
உயிர் எழுத்து வந்தாலும்
வகரம் உடம்படுமெய்யாக வரும்
என்பதுதான் இலக்கண விதி.
ஆதலால் கோவில் என்று எழுதுவதே
இலக்கண விதிப்படி
சரியானதாகும்.
கோ + இல். = கோயில் என்று எழுதுவது
இலக்கணவிதிப்படி சரியானது அல்ல.
ஆயினும் கோயில் என்று எழுதியும்
பேசியும் வருவது
வழக்கத்தில் இருந்து வருகிறது.
இலக்கியங்களிலும் கோயில்
என்ற சொல் பயிலப்பட்டு
வந்துள்ளதை நாம் பல பாடல்களில் காணலாம்.
கோவில் என்பதே சரி.
நினைவில் கொள்க:
நிலைமொழி ஈற்றில் இ , ஈ , ஐ
வந்து வருமொழிமுதலில் எந்த
உயிரெழுத்து வந்தாலும் யகரம்
உடம்படுமெய்யாக வரும்.
நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ ஆகிய
மூன்று உயிர் எழுத்துகளைக் தவிர
வேறு எந்த உயிரெழுத்து வந்தாலும்
வகரம் உடம்படுமெய்யாக வரும்.
நிலைமொழி ஈற்றில் ஏ என்ற
உயிரெழுத்து வந்தால் யகரம்
அல்லது வகரம்
இவற்றுள் ஏதாவது ஒன்று
உடம்படுமெய்யாக
வரலாம்.
Comments
Post a Comment