ஆற்றுதல் என்பது....
ஆற்றுதல் என்பது.......
நல்லந்துவனார் என்னும் சங்ககாலப் புலவர்
சேரர் வழி வந்தவர்.
இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் 39 பாடல்கள்
கிடைக்கப் பெற்றுள்ளன.
இவர் கலித்தொகையில் பாடிய பாடல் வரிகள்
அரிய பொக்கிஷமாக கருதப்பட்டு பலராலும் எடுத்தாளப்
பட்டு பெருமை படுத்தப்படுகிறது.
இவரது பாடல்கள் தமிழரின் பண்பாட்டை
எடுத்துக்கூறும் மெய்யுரைகளாக இருக்கும்.
நம்மை நெறிப்படுத்துவனவாக இருக்கும்.
கீழ்க்கண்ட கலித்தொகைப் பாடல் அதற்குச்
சான்றாக அமையும்.
ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்படுவது தன் கிளை செறா மை
அறிவனெப்படுவது பேதையார் சொல் நோற்றல் செறிவெனப்படுவது கூறியது மறாமை
நிறைவெனப்படுவது மறை பிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோகாது உயிர் வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
கலித்தொகை பாடல் 133
விளக்கம் :
ஆற்றுதல் என்று சொல்லப்படுவது யாதெனில்
வறுமையில் வாடுபவருக்குப் பொருள்கொடுத்து உதவுதலாகும்.
போற்றுதல் என்பது உறவு வைத்துக் கொண்டவரைப்
பிரியாது இருத்தலாகும்.
பண்பு என்று சொல்லப்படுவது யாதெனில் பெருமை
தரும் வழிகள் யாதென அறிந்து
அதன்வழி நடந்து கொள்ளுதலாகும்.
அன்பு எனப்படுவது நம்மீது அன்பு செலுத்தும் நம் உறவுகளை
விட்டு விலகாது இருத்தலாகும்.
அறிவு என்று சொல்லப்படுவது யாதெனில் அறிவில்லாதவர்
சொல்லும் பொருளற்ற சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதலாகும்.
செறிவு எனப்படுவது யாதெனில் முன்னும் பின்னும்
புரட்டி,மாறுபடக் கூறாது இருத்தலாகும்.
நிறை எனப்படுவது யாதெனில் மறைக்க வேண்டிய
செயல்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்து
வாழ்வதாகும்.
முறை எனப்படுவது யாதெனில் குற்றம் செய்தவனுக்கு
இரக்கம் காட்டாது நடுநிலை நின்று தண்டனை வழங்குவதாகும்.
பொறை எனப்படுவது யாதெனில் தன்னைப் போற்றாதவர்
செய்யும் பிழைகளையும் பொறுத்துக் கொள்ளுவதாகும்.
Comments
Post a Comment