மகராசி
மகராசி
மகராசி பெயருக்கு ஏற்றபடி முகராசியானப் பொண்ணு.
பார்க்கிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிற அழகு.
படிப்பிலும் கெட்டிக்காரி என்று பெயர் எடுத்திருந்தாள்.
எட்டாம் வகுப்பு படித்த மகராசி ஒருநாள்
பள்ளியைவிட்டு நின்றுவிட்டாள்.
ஒருவாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வராததால் ஒரு
பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி விசாரித்து வரச் சொன்னார் தலைமை ஆசிரியர்.
மகராசி வீட்டுக்குச் சென்று வந்த அந்த மாணவி் வெட்கத்தோடு தலைமையாசிரியர் முன்னால் வந்து நின்றாள்.
"மகராசி இனி பள்ளிக்கு வர மாட்டாளாம்...."
" என்ன ..."என்பது போல அந்த மாணவி முகத்தைப் பார்த்தார் தலைமை ஆசிரியர்.
"சார் .... மகராசி பள்ளிகூடத்தை விட்டுட்டாளாம்..."
" பள்ளியை விட்டுட்டாளா........யாரு சொன்னா..."
"அது... வந்து ....அவுங்க பாட்டிதான் சொன்னாங்க..."
" ஏனாம்...."
"அவ...அவ...பெரிய மனுசி ஆகிட்டாளாம்... "சொல்லிவிட்டு வெட்கப்பட்டாள் அந்த சிறுமி.
"சரி..நீ போ. நான் அவள் அப்பாவிடம் பேசிக் கொள்கிறேன்."
அந்தப் பிள்ளையை வகுப்பிற்கு அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்.
மறுநாள் மகராசியின் அப்பாவைப்பார்த்து பேசிப்பார்த்தார்.
மகராசியின் அப்பா அவளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
பெண்பிள்ளைகளை படிக்க வைத்து என்ன ஆகப்போகிறது என்று திருப்பிக் கேட்டார்.
" இந்த காலத்தில் போய் ஆண் பிள்ளை...பெண் பிள்ளை
என்று பிரித்துப் பார்க்கக்கூடாது. எல்லோருக்கும்
படிப்பு அவசியம் வேண்டும் "என்று தலைமை ஆசிரியர் கூறிய
எந்த விளக்கத்தையும் கேட்கும் மனநிலையில் மகராசியின் அப்பா இல்லை.
ஆசிரியருக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்பது தெரியவில்லை.
பார்த்து பள்ளிக்கு அனுப்பி விடுகிற வழியைப் பாருங்க...
முடிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் தலைமை ஆசிரியர்.
மகராசியும் அப்பா...அப்பா...நான் படிக்கப் போறேன்ப்பா...
எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்.
ஆனால் அப்பா இறங்கி வருவதாக இல்லை.
இப்படியே...ஒரு ஆறுமாதம் ஆகிவிட்டது.
மகராசிக்கு மாப்பிள்ளைப் பார்ப்பதாக பேச்சு அடிபட்டது.
அப்போதுதான் அத்தை மகன் நவநீதன் வீட்டிற்கு வந்து போய் இருக்க ஆரம்பித்தான்.
நவநீதனுக்கு மகராசிமேல ஒரு கண்.
மாமா மகள்தான் ...மாமா பிடிவாதக்காரர்.
அதுவும் நவநீதன் வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்துகிற பய என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று களத்தில்
இறங்கினான்.
எதுவும் சரிப்பட்டு வருவதாக தெரியவில்லை.
மெதுவாக மகராசியிடம் நெருங்க ஆரம்பித்தான்.
மகராசியின் தங்கைகள் இருவரையும் கூட்டி வைத்துக் கொண்டு சிரிக்க சிரிக்க பேசுவான்.
மகராசியும் மறைந்து நின்று இதை ரசிக்க ஆரம்பித்தாள்.
மெதுவாக வீட்டிற்குள் இருந்து எட்டி எட்டிப் பார்ப்பதை வைத்து மகராசியை நம்ம பக்கம் எளிதாக திருப்பி விடலாம் என்பது புரிந்து போயிற்று.
அவன் நினைத்தது நடந்தது.
மெல்ல மெல்ல மகராசியும் தங்கைகள் மூலமாக பேச
ஆரம்பித்தாள்.
நாளடைவில் தங்கைகள் பள்ளிக்குப் போன பின்னர்
வீட்டிற்கு வந்து பேச ஆரம்பித்தான்.
மகராசியின் மீது கொண்ட காதலால்
அம்மாவிடம் சொல்லி மகராசியை பெண்
கேட்டுப் பார்க்கச் சொன்னான்.
நவநீதனுடைய அம்மாவுக்கும் நம்ம பிறந்த வீட்டுத் தொடர்பு
அத்துப் போகாமல் இருக்குமே என்று ஒரு ஆசை இருந்தது.
அண்ணணிடம் போய் பெண் கேட்டுப் பார்த்தார்.
" இதுக்குத்தான் மவனை அத்தம் பார்க்க அனுப்பினியோ...
வேலை சோலியத்த பையனுக்கு பெண் கொடுக்க மாட்டேன்"
என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார் மாமா.
ஆனால் பய மகாராசியிடம் மெதுவாக பேசி வைத்திருந்திருக்கிறான் என்பது இருவரும் வீட்டைவிட்டு ஓடிப் போன பின்னர்தான் அவருக்குத் தெரிய வந்தது.
தையாத்தக்கா...என்று குதிக்க ஆரம்பித்தார்.
" தலையை சீவிபுடுவேன் " கையில் வீச்சருவாளைத்
தூக்கிட்டுப் புறப்பட்டார் மகராசியின் அப்பா.
" போனதுதான் போயிட்டா வேறு யாரு...உங்க தங்கை
மவன்தானே..."மகராசியின் அம்மா எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவர் கேட்கிறதாக இல்லை.
தங்கச்சி வீட்டுக்குப் போய் " இப்போ என் மகளை
வெளியில் விடுறியா இல்லையா..." என்று காட்டுக் கத்தல் போட்டுக்கொண்டு நின்றார்.
ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது.
கூனிக்குறுகிப் போனாள் மகராசி.
மகராசி வராமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றார்.
எப்படியோ போராடி வீட்டிற்குள் போய்
தலைமுடியைப் பிடித்து வெளியில் இழுத்து வந்தார்.
கடைசியில் கையோடு மகராசியைத்
தனியாக இழுத்து வந்து வீட்டில் சேர்த்துவிட்டார்.
வீடே சாவு வீடு மாதிரி சோகத்தில் மூழ்கிக் கிடந்தது.
ஊர் பெரியவர்கள் எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
" ஓடி போனவளை இனி யார் கட்டுவார்கள். பேசாம தங்கச்சி
பையனுக்கே கட்டி வச்சிரும் ஒய்...."என்று உறவினர்கள்
எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
" என் மூஞ்சில கரியை பூசிட்டு ஓடிட்டா...அந்த ஓடுகாலியை
இனி வீட்டை விட்டு வெளியில் விடக்கூடாது ...அப்படியே
கிடந்து சாகட்டும் "என்றுஒரு அறையில் வைத்து பூட்டி
வைத்துவிட்டார்.
சாப்பாடு தண்ணீர் எல்லாம் ஒரு நாளைக்கு
இரண்டுமுறை கதவு
இடுக்கு வழியாக வைத்து விடும்படி உத்தரவு.
" யாரும் பேச்சு வார்த்தை கொடுக்கக் கூடாது. மீறி
பேசினால் உங்களுக்கும் இதே கதிதான் "என்று
அனைவருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் "என்னை திறந்து விடுங்கள் "என்று அழுது பார்த்தாள் மகராசி.
" அம்மா ....அப்பாவிடம் சொல்லும்மா.....இனி நான்
எங்கும் போகமாட்டேன் "என்று கதறினாள்.
கதறி கதறி தொண்டைத்தண்ணி எல்லாம் வற்றி
ஒரு விசும்பலில் வந்து நின்றது.
அப்பாவுக்கு தன் கௌரவம்தான் பெரிதாக தெரிந்தது.
கொஞ்ச நாளில் எல்லாம் அடங்கிப் போயிற்று.
ஒரு புலம்பலும் விசும்பலும் மட்டும் எப்போவாவது
கேட்கும்.
கிறுக்கி புலம்புகிறாள் என்று அப்படியே விட்டுவிட்டார்கள்.
நாளடைவில் கிறுக்கி இந்த அறையில் கிடக்கிறாள்
என்று சொல்லும்படி கிறுக்கியாகவே மாறிப்போனாள்.
கிறுக்கி..மகராசி..கிறுக்கி மகராசி என
கிறுக்கியாக்கப்பட்டாள்.
பதிமூன்று வயசு பொண்ணுக்கு என்ன தெரியும்...
பாடித்திரியும் பருவத்தில் சிறகுகள் ஒடிக்கப்பட்டு
கூண்டுக்குள் அடைக்கப்பட்டு கிறுக்கியாகிப் போனாள் மகராசி.
அன்று ஆணவத்தோடு வீட்டுக்குள்
அடைக்கப்பட்டவள்தான்.
வெளி உலக காற்று தொட்டுப் பார்க்ககூட அனுமதி கிடைக்கவில்லை.
ஐந்து வருடங்களுக்குப்
பிறகு......
இன்றுதான் கதவு திறக்கப்பட்டது.
சவமாக வீட்டைவிட்டு மறுபடியும் ஒருமுறை
வெளியேறினாள் மகராசி.
அப்பாவின் ஆணவம் மட்டும் இன்னும் வெளியேற
மறுத்து அவருக்குள்ளே இருந்தது.
Heart warming story.I liked the most.
ReplyDelete