பாவேந்தர் பாரதிதாசன்

                   பாவேந்தர் பாரதிதாசன்


      தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் வரிசையில் முதல் வரிசையில் முத்தாய்ப்பாய் அமர வைத்து அழகு பார்க்கப்படுபவர் பாரதிதாசன்.
    "தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்
    தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்"
    என்ற தேன் சொட்டும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர்.
              கனகசபை ,இலக்குமி அம்மாள் இணையர் பெற்ற கவின் பிள்ளை கவிதைப்பிள்ளையாக மாறிய வரலாறு சுவாரசியமானது.
பத்து வயதிலேயே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர்.பாரதியார் பாடல்களை நண்பர்களிடம் பாடிக் காட்டி மகிழ்ந்து வருவது வழக்கம்.
ஒருநாள் ஒரு திருமண வீட்டில் மேடையில் பாடல் பாடும் வாய்ப்பு
கிடைத்தது. அந்தத் திருமண வீட்டிற்கு பாரதியும் வந்திருந்தார்.
மேடையில் பாரதியார் பாடலைப் பாடினார் கனக சுப்புரத்தினம்.

          பாடலைக் கேட்ட பாரதியார் தன் நண்பர்கள் மத்தியில் மறுபடியும் பாடும்படி கேட்டுக்கொண்டார். பாரதிதாசனும் எங்கெங்குக் காணினும் சக்தியடா என்ற பாடலைப் பாட மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார் பாரதியார்.பக்கத்தில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். இப்படியாக பாரதியாருடனான முதல் அனுபவமே கனக சுப்புரத்தினத்திற்கு நெகிழ்ச்சி தருவதாக இருந்தது.  பாரதியார்மீது கொண்ட ஈர்ப்பு அதிகமானது. அவர் மீது கொண்ட தீராக் காதலால் கனகசுப்புரத்தினம் என்ற தன் இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பக்தியாக மாறியது.
                
     பாரதியார்  பாரதிதாசன் பாடல்கள் சுதேசமித்திரன் பத்திரிகையில்  பிரசுரமாக உதவி செய்தார்.இப்படியாக பத்திரிகைத்துறைக்குள் நுழையும் வாய்ப்பு பாரதிதாசனுக்குக் கிடைத்தது.எண்ணற்ற படைப்புகளை பாரதிதாசன் தமிழ்மொழிக்கு வழங்கினாலும் சாதிமறுப்பு, கடவுள் எதிர்ப்பு கருத்துகளை தன் பாடல்களில் அழுத்தமாக பதிவிட்டு வந்தார்.புதுவையிலிருந்து வெளியான ஏடுகளில் கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல்வேறு புனைப்பெயர்களில் தன் படைப்புகளை வெளியிட்டு வந்தார்.

     பாரதியாரின்,
    
     "புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
     போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்."

"     எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
     மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
    

                போன்ற பாடல் வரிகள் காலத்தால் அழிக்க முடியாதவை.
       பாரதிதாசன் எண்பதுக்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார்.
       பாண்டியன் பரிசு, குயில் பாடல்கள்,குடும்ப விளக்கு,கடற்மேற் குமிழிகள், இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, அகத்தியன் விட்ட புதுக்கரடி,பெண்கள் விடுதலை,தமிழ் அமுது போன்றவை முக்கியமான படைப்புகளாகும்.
        மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் அவருடைய பாடல்களில் விஞ்சி இருக்கும். புதுமை கருத்துகள் பொங்கி நிற்கும்.
இவர் குயில் என்னும் திங்கள் இதழை கவிதை வடிவில் வெளியிட்டு வந்தார்.       
       பாரதிதாசனுக்கு பெரியார் புரட்சி கவிஞர் என்ற பட்டம் அளித்து கௌரவித்தார். அறிஞர் அண்ணா புரட்சி கவி என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார். அவரது அமைதி ஊமை என்ற நாடகத்திற்கு தங்கக் கிளி பரிசு  அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
      அவருடைய மரணத்திற்குப் பின்னர் அவர் எழுதிய பிசிராந்தையார் என்னும்  நாடகத்திற்கு  சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.தமிழக அரசு பாவேந்தர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி  பாவேந்தர் பாடல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது.ஆண்டுதோறும் பாவேந்தர் பிறந்தநாளான ஏப்ரல் 29 ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
       தமிழக அரசு ஆண்டுதோறும் தமிழ் கவிஞர்களுக்கு பாரதி தாசன் விருது வழங்கி வருகிறது.
       பாரதியாருக்கு பழநி என்ற மனைவியும் இரண்டு பெண்பிள்ளைகளும் மன்னர் மன்னன் என்ற ஒரு மகனும் உண்டு.
       பாரதிதாசன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார்.பாரதிதாசன் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்று நம்மிடையே உலவி வருகின்றன. இன்றும் என்றும் நமக்கு தமிழின்பம் தந்து கொண்டிருப்பன.
        

Comments

Popular Posts