ஔவியம் பேசேல்

                     ஔவியம் பேசேல் 
ஆத்திசூடி எளிமையான சொற்றொடரால் 
எழுதப்பட்ட  நீதி கருத்துகள் கொண்ட நூல்.
ஔவையின் ஆத்திசூடி படிக்காமல் 
தமிழ் எழுத்துகளைப் படித்தவர்கள் 
எவரும் இருக்க முடியாது.

ஆத்திசூடியைப் படித்ததும் பொருள் விளங்கும் .
அதனால் அதன் பொருளை அறிவதற்கு
 யாரும்     மெனக்கெடுவதில்லை.
ஆனால் பத்து ஆத்திசூடி படித்தால்
ஏதாவது ஒரு ஆத்திசூடி வரி பொருள்
தெரியாதபடி இருக்கும்.
பள்ளியில் தெரிந்த பொருளை 
சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள். 
நாமும் பள்ளிப் பருவத்தில் அவ்வளவு
கவனம் எடுத்துக் கொள்வதில்லை.
          
சில ஆசிரியர்கள் மனப்பாடம் செய்ய 
வைப்பார்களே தவிர பொருளுக்கு 
முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அறியாத பருவத்தில் தெரியாத 
பொருளோடு கடந்து வந்து விட்டோம்.
மறுபடியும் அதைப் பற்றிய சிந்தனையே 
இல்லாது இருந்திருப்போம்.

யாராவது படித்தவர்கள்தானே
என்று ஔவியம் பேசேல் என்பதற்கு 
பொருள் கேட்டால் தெரியாமல்
மலங்க மலங்க விழித்திருப்போம்.
இது பலருக்கு நிகழ்ந்திருக்க 
வாய்ப்பு உண்டு.

ஔவியம் பேசேல் என்றால் 
ஔவியம் பேசேல்தான் என்று மட்டுமே
இதுவரை சொல்லத் தெரியும்.

 சரி போகட்டும்....இனியாவது
தெரிந்து கொள்வோம்.

 ஔவியம் என்றால் என்ன?
ஔவியம் என்றால் அழுக்காறு  , பொறாமை
என்பது பொருள்.
ஔவியம் பேசேல் என்றால் பொறாமை பேசக்கூடாது.
அவ்வளவுதானே என்று கேட்கத் தோன்றும்.
 அப்படியானால் பொறாமை பேசக்கூடாதா...
சொல்லும்போதே எங்கோ....
எதிலோ தவறு இருப்பதுபோல்
தோன்றுகிறதல்லவா!

பொறாமை ஓர் உணர்வாயிற்றே...
அதனைப் பேசுவது எப்படி?

இப்படிப்பட்ட கேள்வி மனதில் எழுகிறதல்லவா!

 ஆமாம்...பொறாமை ஓர் உணர்வுதான்.
அந்தப் பொறாமை உணர்வு கொண்டவன் அறக்கருத்துகளைக் கூறுவதற்கு
லாயக்கற்றவன் என்பது இதன் பொருள். 

பொறாமையை மனதில் வைத்துக்கொண்டு 
நல்லவன் போல் பேசாதே.
அடுத்தவன் தன்னைவிட அதிக மதிப்பெண்
 பெற்றவிட்டானா ...
 உடனே  மனதிற்குள் பொறாமை வந்துவிடும்.

  நம்மைவிட நண்பன் குடும்பம் 
வசதியாகிவிட்டால் ....
மனம் ஏற்றுக்கொள்ளாது. 
ஏதோ கள்ளப்பணம் வருகிறது. 
அதனால்தான் பணக்காரன் ஆகிவிட்டான். 
இல்லை என்றால் புதையல் கிடைத்திருக்க்கும்
என்று மனம் தப்புத் தப்பாக கணக்குப் போடும்.
ஆனால் நேரில் பார்த்தால் இனிமையாகப்
பேசி சமாளிப்பர்.

நண்பனுக்குப் பரிசு கிடைத்தால்...
மனம் ஏற்றுக் கொள்ளாது.
விருது கிடைத்துவிட்டால்...
பணம் கொடுத்து வாங்கி இருப்பான்
என்று ஏடாகூடாவாகப் பேச வைக்கும்.

எதிர்த்த வீட்டுப் பெண் ஒரு 
ஆபரணம் வாங்கிவிட்டால்...
பக்கத்து வீட்டில் இரவில் 
தூக்கமே வராது.
தனக்கும் வேண்டும் என்று கணவனிடம்
அடம்பிடிக்கும் பெண்களும் உண்டு.
இதெல்லாம் பொறாமையின் வெளிப்பாடு.
 
பொறாமையை மனதில் வைத்துக்
கொண்டிருப்பவன் நல்ல கருத்துக்களையோ அறிவுரைகளையோ அறவுரைகளையோ
வழங்குதல் கூடாது.
முதலாவது நமது மனம் பொறாமையற்று
நிர்மலமாக இருக்கும்போதுதான் நம்
வார்த்தையிலும் உண்மை இருக்கும்.
நாம் சொல்ல வரும் கருத்து 
அடுத்தவர்களுக்குப்
பயன்படவேண்டும் என்ற 
கரிசனமும் இருக்கும்.

மனதில் பொறாமையை மூடி 
மறைத்து வைத்துவிட்டு 
நல்லவனாகப் பேசாதே.
பொறாமை உள்ள பேச்சு
உண்மையற்றதாக இருக்கும்.
பிறர்மீது அக்கறை இருக்காது.
அதனால்தான் ஔவியம் பேசேல் 
என்கிறார் ஔவை.

 இந்த ஔவியம் அதாவது அவ்வியம்
 பற்றி நாலடியாரில் ஒருபாடல் வருகிறது.
           
"  அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
 செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்
  கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
 செவ்வி கொளல்தேற்றாது ஆங்கு. "
                    
"தோலை வாயினால் கவ்வித் தின்னும் 
இயல்பு கொண்ட  நாயால் ...
பால் சோற்றின் நல்ல சுவையை அறியும் 
தன்மை இருக்குமா?...இருக்காதல்லவா!

அதுபோல நற்குணம் சிறிதும் இல்லாத
புல்லறிவாளர்கள்
பொறாமையற்ற நல்லுள்ளம் கொண்ட
 சான்றோர் உரைத்திடும் அறநெறியை 
ஒரு போதும் செவிமடுத்துக் கேட்க மாட்டார்கள்" 
என்கிறது நாலடியார்.

 இங்கே ஔவை கூறிய ஔவியமும் 
நாலடியார் கூறும் அவ்வியமும்  
சொல்ல வந்த   பொருள் ஒன்றுதான்.
அதுதான் பொறாமை.

அறத்தைப் பேசுவதற்குக்கூட
 ஒரு தகுதி வேண்டும்.
 அழுக்காறு இல்லாதவர்களுக்குத்தான் 
அறம் பேசவும் தகுதி உண்டு.

மனதில் பொறாமை இருக்கிறதா?
நீ அறம் பேசாதே என்று ஆணித்தரமாக 
தன் கருத்தை முன் வைத்துள்ளார் ஔவை.

ஔவை சொன்னால் உண்மை 
இல்லாமலா இருக்கும்...
 "ஔவியம் பேசேல் " என்று ஔவை 
கூறிய  பொருள் இப்போது புரிகிறதல்லவா ! 
      .
        
       

Comments