பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை
செல்லடுவு அந்த வட்டாரத்தில் பிரபலமான பெண்.
எந்த ஊரில் திருவிழா என்றாலும் டாண் என்று
முதல் ஆளாக வந்து நிற்பாள்.
திருவிழா என்றாலே வீட்டுக்கு வீடு
செல்லடுவு வந்தாளா? செல்லடுவு வந்தாளா?
என்ற கேள்விதான் அடிக்கடி கேட்கும்.
" செல்லடுவுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா?...
செல்லடுவுக்கு காப்பி கொடுத்தீர்களா? "
கேட்ட பின்னர்தான் எல்லா வீட்டிலும் உள்ள
ஆண்களும் சாப்பிடவே உட்காருவர்.
அந்த அளவுக்கு அனைவர் மனதிலும்
இடம் பிடித்திருந்தார் செல்லடுவு.
வீட்டுக்கு வீடு ஓடி ஓடி வேலை செய்வாள்.
ஒரு வீட்டுல வேலை செய்தாயிற்றே
சற்று ஓய்வெடுப்போம் என்று ஒருபோதும் நினைப்பதில்லை.
"கீழத்தெரு அண்ணன் வீட்டில் கூப்பிட்டாகள....
வடக்குத் தெரு சித்தி வந்து ஒரு எட்டு
பார்த்துட்டுப் போ என்று சொன்னாகள.."
இப்படி ஒரு வீட்டுக்கு இல்லை என்றால்
இன்னொரு வீட்டிற்கு என்று கால்களில்
சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பாள்.
யார் இந்த செல்லடுவு?
வீடு வாசல் இல்லாதவளா?
இல்ல...தனக்கென்று குடும்பம் கோத்திரம்
இல்லாதவளா? இப்படி வீடுவீடா நாயா
வேலை பார்த்துவிட்டு அலையுறா...
என்றுதான் கேட்கத் தோன்றும்.
ஆமாம்...இன்று செல்லடுவுக்கு என்று நாதி இல்லதான்.
ஒற்றைகட்டை. கொடுக்கிற வேலையைச்
செய்துவிட்டு கிடைக்கிற திண்ணையில்
படுத்து தூங்கி விடுவாள்.
ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்
அவள் இருந்த இருப்பு என்ன? பவுசு என்ன?
சட்டாம்பியார் வீட்டுப் பிள்ளை என்பதால் அப்படி
ஒரு மரியாதை.
தெருவில் நடந்து பார்க்க முடியாது.
சற்று வசதியான குடும்பம்.
பெயருக்கு ஏற்றாற்போல் சற்று சட்டாம்பித்தனம்
உள்ள குடும்பம்.
வீட்டிற்கு ஒரே பெண் இந்த செல்லடுவு.
ஒத்த பொண்ணு என்றதும் பொத்திப்பொத்தி
வைத்து வளர்த்தார் சட்டாம்பியார்.
ஒருவகையில் சொல்ல வேண்டுமென்றால்
வீட்டில் இருக்கும் வரைக்கும் துப்புன
இடத்துக்கு மண் அள்ளிப் போட்டதில்லை இந்தச்
செல்லடுவு.
சாப்பிட்ட தட்டு கூட கழுவியது இல்லை.
பார்த்துப்பார்த்து வளர்த்த பொண்ணு.
கறிவேப்பிலை கண்ணுபோல வளர்ந்தார்.
இப்படி கரிசனமாக வளர்த்த பொண்ணுக்கு
உரிய காலத்துல மாப்பிள்ளை தேடினார் சட்டாம்பியார்.
ஊருல கேட்காத மாப்பிள்ளை இல்லை.
"உள்ளூர் வரனும் உள்ளங்கை சிரங்கும் ஒண்ணு"
வக்கணையாகப் பேசி
உள்ளூரில் மகளை
மணமுடித்துக் கொடுக்க மறுத்துவிடுவார்
சட்டாம்பியார்.
" உள்ளூரில் எவனும் தனக்கு தோதுவா இல்லை"
என்பது சட்டாம்பியாரின் கணிப்பு.
அப்போதுதான் ஓடக்கரையில் இருந்து
ஒரு மாப்பிள்ளை வீட்டு துப்பு வந்தது.
பையன் மும்பையில் சொந்த தொழில்
செய்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான்.
மும்பையில் சொந்த வீடு வாங்கி வைத்திருக்கிறான்
என்று தரகர் வண்டி வண்டியாக அளந்துவிட்டார்.
மும்பை என்றதுமே சட்டாம்பியாருக்கு பார்க்கலாமே
என்றுஒரு சின்ன நப்பாசை.
வேறு எதைப்பற்றியும் நினைப்பு வரவேயில்லை.
"வாரும் ...முதலாவது ஓடக்கரையில் போயி
பையனை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துருவோம்"
என்று தரகரையும் கூட்டிட்டு ஓடக்கரைக்குப் போனார்.
ஓடக்கரைக்குள்ள நுழையவும் எதிரே வாட்ட சாட்டமான
ஒரு இளைஞன் வந்தான்.
"அட....தம்பியே எதுத்தாப்புல வந்துட்டாவ...
நல்ல சகுனம் தான்" என்றார் தரகர்.
என்ன சொல்லுறீரு "என்று தரகர்
முகத்தைப் பார்த்தார் சட்டாம்பியார்.
"நாம் பார்க்க வந்த தம்பி இவுங்கத்தான் என்று
மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தினார்."தரகர்.
பாத்த மாத்திரத்திலேயே பையனை
சட்டாம்பியாருக்குபிடித்து போயிற்று
பையனும் பார்ப்பதற்கு வாட்டசாட்டமா
இருக்கிறான்.ஊரிலும் சொத்துபத்து
உள்ள குடும்பம்.
பார்க்க போன அன்றைய தினமே மாப்பிள்ளை வீட்டில்
கை நனைத்து விட்டு வந்து விட்டார் சட்டாம்பியார்.
வீட்டிற்கு வந்து விசயத்தைச் சொன்னதுமே
மனைவி கனகவல்லி காச்..பூச் என்று கத்தினார்.
" ஒத்த பிள்ளைய பெத்து வைச்சுருக்கோம்.
இவ்வளவு தொலைவுல கட்டி கொடுக்கணுமா?
எதற்கு இவ்வளவு அவசரப்பட்டு
கையை நனைத்துவிட்டு வந்தீங்க?
நாலு ஆளுங்க கிட்ட விசாரித்து முடிவு எடுத்திருக்கலாமே "
என்று அம்பிராதிப்பட்டார் .
"எல்லாம் விசாரிச்சாச்சி.சும்மா கிடப்பியா "
என்று வாயை அடைத்து விட்டார் சட்டாம்பியார்.
அதற்கு மேலும் அந்த பிள்ளைப்பூச்சியால்
என்ன பேச முடியும்?
ஆனாலும் மனசுக்குள்ள
"இது சரிப்பட்டு வருமா?" என்ற ஒற்றை கேள்வி இருந்து
கொண்டே இருந்தது.
"வடக்குத் தெரு மாசானம் மவன்
மும்பையில் இருக்கானாங்க....
அவனிடம் மாப்பிள்ளை அட்ரசைக் கொடுத்து
விசாரிக்க சொல்வோங்க."மனசு கேட்காமல்
திரும்ப திரும்ப விசாரிக்க
சொல்லிக் கொண்டே இருந்தார் கனகவல்லி.
."பையன் எல்லாம் தங்கமான பையன் தானாம்.
நானும் ஓடக்கரையில நாலு பேரு கிட்ட
விசாரித்துதான் முடிவு எடுத்தேன்."
"இல்லங்க... நான் என்ன சொல்ல வராறேன்னா...."
என்று கனகவல்லி பேசி முடிப்பதற்குள்
"என்ன இல்லங்க ...நொள்ளங்க என்கிறா...
இப்போ பொண்ணுக்கு கலியாணம்
முடிக்கணுமா வேண்டாமா? "
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல
வள்ளென்று விழுந்தார் சட்டாம்பியார்.
இந்த மனுசன் எப்பவுமே இப்படித்தான்.
தான் ஒரு முடிவு எடுத்துட்டா அதுலேதான் நிற்பார்.
கனகவல்லி சொன்னது எதையுமே காதில்
போட்டுக்கொள்ளவில்லை.
பையன் தொழில் செய்வதினால் உடனடியாக
போக வேண்டியிருக்கும் என்று மாப்பிள்ளை வீட்டில்
கொஞ்சம் அவசரப்படுத்தினர்.
உடனடியாக திருமணத்திற்கு நாளும்
குறிக்கப்பட்டது.
திருமணம் தடபுடலாக நடைபெற்றது.
இருபத்தொரு கிடா வெட்டி ஊரே வியக்கும்
வண்ணம் மகளின் திருமணத்தை முடித்து
வைத்தார் சட்டாம்பியார்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் வரை செல்லடுவு
வாழ்க்கை இனிமையாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது.
மாதம் ஒன்று ஆகியும் மும்பை போக வேண்டும்
என்ற எந்த ஒரு நினைப்பும் மாப்பிள்ளையிடம்
இருப்பதாக தெரியவில்லை.
அப்போதுதான் செல்லடுவு "மும்பைக்கு
எப்போங்க போகணும்?" என்று மெதுவாக கேட்டாள்.
" போகலாம். ..போகலாம் "
சாதாரணமாக கூறிவிட்டு விருட்டென்று
எழும்பி வெளியில் சென்று விட்டான் குமரேசன்.
மும்பைக்கு போகப்போகிறோம் என்று
ஆயிரம் கனவுகளை வளர்த்து வைத்திருந்தாள்.
எல்லாம் பொசுக்கென்று முடிந்து போனது
போல் இருந்தது.
இப்படியே மூன்று மாதங்களுக்கு
மேல் ஆகிவிட்டது.
ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒன்றைச் சொல்லி
நாளைக்கடத்திக் கொண்டே இருந்தான் குமரேசன்.
சட்டாம்பியாருக்கும் மனசுக்குள்ள ஏதோ
ஒரு நெருடலாக இருந்தது.
யாதுக்கும் செல்லடுவைப் போய் பார்த்துவிட்டு
விசாரித்துவிட்டு வருவோம் என்று மாப்பிள்ளை
வீட்டுக்கு வந்தார்.
மாப்பிள்ளை எப்போ மும்பை போகணும்
என்று சொல்லுகிறார்? "
மகளிடம் கேட்டார் சட்டாம்பியார்.
"இப்போ இல்லையாம்பா."
"மூன்று மாதத்திற்கு மேல் மும்பையில்
மழை பெய்யுமாம். அப்போ தொழில்
சரியாக இருக்காதாம்.அதுதான்
மழை முடிந்ததும் போகலாம்
என்று சொல்றாங்க அப்பா. "
அப்பாவியாக சொன்னாள் செல்லடுவு.
சரி போகும்போது போகட்டும் என்று
அப்படியேவிட்டுவிட்டார்.
ஆனால் செல்லமுத்து மட்டும்விட்டுவிடுவதாக
இல்லை.
இரண்டு மூன்று நாளுக்கு
ஒருமுறை" எப்ப போணுங்க?"
என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
குமரேசனும் கலர்கலராக பொய்யைச்
சொல்லி அந்த அப்பாவியை நம்ப வைத்துக்
கொண்டே இருந்தான்.
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்
எத்தனை நாளைக்குத்தான் செல்லும்?
இன்னும் மறைக்க முடியாது என்ற சூழ்நிலை.
ஒருநாள் தான் மட்டுமே மும்பை போகப்போகிறேன்
என்று திடுதிடுப்பென்று வந்து சொன்னான்.
அப்படியே அதிர்ந்து போனாள் செல்லடுவு.
"நானும் வருகிறேனே" தயக்கத்தோடு தன்
ஆசையைச் சொன்னாள்.
" வீடு பார்த்துவிட்டு வந்து கூட்டிப் போறேன் "
என்று அதற்கு ஒரு சாக்குபோக்கு
சொன்னான் குமரேசன்.
"சொந்தமாக வீடு இருக்கு என்று
அப்பா சொன்னாகளே "அப்பாவியாக கேட்டாள்.
அப்படியே ஒரு முறைமுறைத்தான்.
அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.
பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனாள்.
கணவனுக்கு மும்பைக்குக் கொண்டு
போகவேண்டிய பொருட்களை எல்லாம்
பார்த்துப்பார்த்து எடுத்து வைத்தாள்.
றநாளே மும்பை புறப்பட்டுச் சென்றவன் தான்.
போகும்போது சந்தோசமாக போயிட்டு வாறேன்
என்று சொல்லிவிட்டுப் போனவன் தான்.
எத்தனையோ பேரிடம் விசாரித்துப் பார்த்தார்
சட்டாம்பிள்ளையார்.
ஆனால் குமரேசனைப் பற்றிய எந்த
தகவலும் இல்லை. ஆண்டுகள் பல ஆயின.
ஆனால் மாப்பிள்ளை வந்தபாடில்லை.
மகள் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டு
வருத்தப்பட்டு சட்டாம்பியார் சட்டுபுட்டென்று
ஏட்டைக்கட்டிவிட்டுப் போய்விட்டார்.
போன நாலே மாதத்தில் அந்த அப்பாவி
மனைவியையும் அழைத்துக் கொண்டார்.
உலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட பெண்.
சொத்து சுகம் எங்க கிடக்கிறது என்ற
விவரம் கூடத் தெரியவில்லை.
இருக்கிறவரைதான் உறவு.
அதன் பின்னர் உறவுகளும் ஏட்டும்
தொலைவிலிருந்து ஏட்டிப் பார்த்தனர்.
ஒத்தப் பிள்ளையா நின்னு பொட்டப் பிள்ளையால
என்ன செய்ய முடியும்.?
மழை தண்ணி இல்லாம வெள்ளாமை
சரியா விளையல. விவசாயத்திற்கும் ஆள் கிடைக்கல.
காடெங்கும் கருவேலம் மரம் வளர்ந்து நின்றது.
சாப்பாடுக்கே வழியில்லை .
எத்தனை நாளுக்குத்தான் பட்டினி கிடப்பது?
மெதுவாக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
"வீட்டுக்குள்ளே இருந்தால் யார் சோறு கொடுப்பாக? "
நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் கழுவி
வயிற்றைக் கழுவலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
வீடுவீடாக வேலைக் கேட்டுப் பார்த்தாள்.
கிராமத்தில் வீட்டு வேலைக்கு ஆள்
வைப்பதில்லை என்று யாரும் வேலை
கொடுக்க முன் வரவில்லை.
அப்போதுதான் பக்கத்து ஊரில்
திருவிழா என்று கேள்விப்பட்டாள்.
திருவிழாவுக்கு அசலூரில் இருந்தெல்லாம்
சொந்த பந்தங்கள் வருவாக.
அப்போது வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படும்.
இப்படி ஒரு நம்பிக்கையோடு வெளியூருக்குப் புறப்பட்டாள்.
அவள் நம்பிக்கை வீண் போகவில்லை.
திருவிழா முடியும் வரை நல்ல வேலை கிடைத்தது.
வயிறு முட்ட சுவையான சாப்பாடும் கிடைத்தது.
நல்ல துணிமணியும் கிடைத்தது.
நாலு சனங்கள் அன்பும் கிடைத்தது.
இந்த வேலையும் உபசரிப்பும் செல்லடுவுக்கு
பிடித்துப் போயிற்று.
ஒத்த கட்டைக்கு வேறு என்ன வேணும்?
அப்படியே தொடங்கியதுதாங்க இந்த பயணம்.
சுற்று வட்டாரத்தில் எங்கு திருவிழா
என்றாலும் முதல் நாளே ஆஜர் ஆகிவிடுவாள்
செல்லடுவு.
இன்றுவரை அந்த பயணம் தொடர்கிறது.
இன்று செல்லடுவு இல்லாவிட்டால் எந்த வீட்டிலும் திருவிழா திருவிழாவாக இருக்காது.
திருவிழா நடைபெறும்வரை செல்லடுவின் பயணமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
Comments
Post a Comment