கற்றது கைம்மண்ணளவு

   

                        கற்றது கைம்மண்ணளவு


எல்லோருக்கும் நன்றாக படித்துப் பட்டம் 

வாங்க வேண்டும் என்று ஆசை.

 அதற்காகத்தான் ஓடி ஓடி படிக்கிறோம்.

ஒரு எப்படியாவது ஒரு பட்டப்படிப்பை படித்து முடிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவே இருக்கும்.

 ஆறேழு பட்டங்களை 

வாங்கி வைத்து அழகு பார்க்க நினைப்பவர்களும் உண்டு.

 இப்படி எத்தனைப் பட்டங்களை வாங்கியவர்களாக 

இருந்தாலும் அப்பாடா....நான் எல்லாம் படித்து 

முடித்துவிட்டேன். இனி படிப்பதற்கு  எதுவும் இல்லை என்று  எவராலும் கூற முடியுமா?

ஒருவராலும்  அப்படி கூற முடியாது

இல்லையா?

 ஒரு துறையில் புலமை வாய்ந்தவருக்கு 

இன்னொரு துறையில் புலமை இருக்க வாய்ப்பு குறைவு. 


பெற்றோருக்கு தம் பிள்ளைகளை நன்றாக

 படிக்க வைக்க வைண்டும் என்று ஆசை.

 அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை 

என்னைப்போல் நீயும் படிக்காமல் 

கஷ்டப்படக்கூடாது என்பதுதான்.

நீ படித்தால்தான் நாளொரு சேலை கட்டலாம்

இது என் அம்மாவின் ஆசை.

இப்படி எப்படி  எல்லாமோ  ஆசை இருக்கும்.

 எது எப்படியோ அனைவருக்குமே படித்தால் வசதி 

வாய்ப்போடு வாழலாம் ....வாழ வேண்டும். அதனால் படிக்க வேண்டும் என்ற

ஆசை இருப்பது புரிகிறது.


கற்க வேண்டும்... கற்க வேண்டும் .

 கற்றல் என்றாலே அது  புத்தகப் 

படிப்பாகதான்  இருக்க வேண்டும். 

இதுதான் அனைவரின் நினைப்பு.

பள்ளிப் படிப்பு இல்லையா...

அவனுக்கு என்ன தெரியும்.

அவன் ஒரு முட்டாள் இப்படி முத்திரை குத்தி விடுவோம்.

அப்படியானால் நம் பெற்றோர் ஒன்றுமே 

தெரியாதவர்களா?

அவர்களுக்கு இருக்கும் விவேகம் பல நேரங்களில் நம்மிடம் இருப்பதில்லை.

அவர்களுக்கு பட்டறிவு இருக்கிறது.

அனுபவம் தரும் கல்வி புத்தகப் படிப்பை விட மேலானதாக இருப்பதுண்டு.

அது படிப்பு இல்லையா?

அதுதான் அவர்களுக்கான படிப்பு.


புத்தகம் படிப்பதுதான் படிப்பு

என்றால்......

காலம் முழுவதும் 

எவ்வளவு புத்தகங்களைப் படிப்பது.?

எந்தத் துறை சார்ந்த புத்தகங்களைப் படிப்பது?

படிப்பு என்பது ஒரு துறை சார்ந்தது

மட்டுமா?

எத்தனை துறைகள் உள்ளன.

அத்தனை துறைகளையும்  படிப்பது

 முடிகிற காரியமா ?

அதற்கு நம் வாழ்நாள் போதுமா?

 ஒரு விவசாய படிப்பு படித்த பட்டாதாரி 

தோட்டத்திற்குச் சென்று மண்ணை ஆய்வு செய்து 

இந்த மண் என்ன பயிருக்கு உகந்தது என்று

 சொல்வதைவிட ஒரு விவசாயிக்கு மண்ணைப் 

பற்றிய அறிவு கூடுதலாக இருக்கும்.

 பட்டறிவு சில நேரங்களில் கல்வியால் பெற்ற 

அறிவைவிட அதிகமாகக் கை கொடுத்து உதவுவதாக இருக்கும்.

 எல்லாத் துறைகளிலும் ஒருவர் கைதேர்ந்தவராக 

இருக்க முடியாது.

  ஒன்றில் இருக்கும் புலமையும் அறிவும் 

இன்னொன்றில் இல்லாமல் இருக்கலாம்.

 அதனால் எனக்கு எல்லாம் தெரியும் என்று 

ஒருவராலும் கூறிவிட முடியாது.


 இப்படித்தான் தான் எல்லாம் தெரிந்துகொண்டதாக 

நினைத்துக் கொண்டிருந்த  ஒரு அதிபுத்திசாலி 

மனிதர் ஒருமுறை படகு சவாரி செய்தாராம்.

 படகில் போகும்போது அவரால் சும்மா 

இருக்க முடியவில்லை. தன் அறிவை 

எல்லாம் இந்தப் படகோட்டியிடம் காட்டிவிட 

வேண்டும் என்று ஓர் அற்ப ஆசை .

  இது தெரியுமா?...அது தெரியுமா..?. என்று 

கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே 

வந்தார்.

வந்தவர் அறிவியல் படிப்பு படித்தவர்.

அவருடைய கேள்வி எல்லாம் அறிவியல் 

சார்ந்ததாகவே இருந்தது.

 படகோட்டியோ மழைக்குக்கூட பள்ளிக்கூடம் 

பக்கம் ஒதுங்காதவன்.

 ஒரு கேள்விக்கும் படகோட்டியால் சரியாகப்

பதில் சொல்ல முடியவில்லை.

 "தெரியாது சாமி...தெரியாது சாமி "என்றே 

சொல்லிக்கொண்டே வந்தான்.

 "இப்படி ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்திருக்கிறாயே

உன் வாழ்நாளில் பாதி நாளை நீ இழந்து விட்டாய்.. 

உனக்காக நான் மிகவும் பரிதாபப்படுகிறேன் "

என்றாராம் அந்த அறிவாளி.

 அவருடைய பேச்சில் தனக்கு எல்லாம் 

தெரியும் என்ற மமதை இருந்தது.

 அப்போது நதியில் வெள்ளம் அதிகமாக வர

 படகு தண்ணீரில் தத்தினத்தோம் போட ஆரம்பித்தது. 

  "சாமி பாத்து பத்திரமா பிடிச்சுக்கோங்க...."

என்றான் படகோட்டி.

இப்போது வெள்ளம் மேலும் அதிகரித்து

படகு கிட்டதட்ட மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டது.

பதறிப்போனார் அறிவாளி.

"என்னப்பா என்னாயிற்று....."

பதற்றத்தோடு கேட்டார்.

  படகோட்டி "சாமி தங்களுக்கு நீந்தத் தெரியுமா.?... "

முதல் கேள்வியைச் சாதாரணமாகக் கேட்டான்.


  "நீச்சலா....எனக்கா?   

எனக்கு நீச்சல்  தெரியவே  தெரியாதே" 

பயத்தில் அறிவாளியின் குரல் நடுங்க

ஆரம்பித்தது.


"ஐயோ... சாமி...  உங்களுக்கு நீச்சல் தெரியாதா?

இப்போது படகு கவிழ்ந்துவிடும் போலிருக்கிறதே..

நான் என்ன செய்வேன்?

உங்களுக்கும் நீந்தத் தெரியாது என்கிறீர்களே ....

உங்களை என்னால் காப்பாற்ற முடியாதே.

இப்போது உங்க வாழ்நாள் முழுவதையுமே 

நீங்கள் இழக்கப் போகிறீர்களே" 

என்று அறிவாளிகாகப்  பரிதாபப்பட்டான் படகோட்டி.


சற்று நேரத்தில்    படகு கவிழ ....

படகோட்டி நீச்சல் தெரிந்ததால்

 நீந்தி தப்பித்துக் கொண்டான்.

 அறிவாளிக்கு நீச்சல் தெரியாததால் 

ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்.


 ஆமாம்...படித்ததினால் எல்லாம்

 தெரிந்திரிக்கிறோம் என்று நினைத்திருந்த 

அறிவாளிக்கு ஒரு சாதாரண நீச்சல் தெரியவில்லை.

 ஒற்றை வார்த்தையில் ஒன்றும் தெரியாதவராகிப்

போனார்.

 படகோட்டிக்குத் தெரிந்திருந்தது 

அறிவாளிக்குத் தெரியவில்லை.

 அறிவாளிக்குத் தெரிந்திருந்தது 

படகோட்டிக்குத் தெரியவில்லை.

 ஒவ்வொருவரும் அவரவர் துறையில்

 புலமை பெற்றவர்கள்தான். 

எல்லாம் தெரிந்தவர்கள் என்று எவரும் இல்லை. 


இதைத்தான் ஔவையும் "கற்றது கைம்மண்ணளவு. 

கல்லாதது உலகளவு "என்கிறார்.

 அதனால் யாரும் எனக்கு எல்லாம் தெரியும் 

என்று பெருமை பாராட்டுதல் வேண்டாம்.

 யாரையும் இவருக்கு ஒன்றுமே தெரியாது

என்று   நினைத்தல் கூடாது.

 நமக்கு எப்படி எண்சாண் உடம்போ அது போன்றுதான் 

நாம் அற்பமாக நினைக்கும் எறும்பும் 

அதன் கையளவில் எண்சாண் என்பதை 

மறந்துவிடக்கூடாது.அவரவருக்குத் தகுந்த 

அறிவு அவரவரிடம் இருக்கும்.

  சிற்றெறும்புதானே என்று அற்பமாக 

எண்ணிவிட வேண்டாம்.

 சிற்றெறும்புக்கும் அது வாழ்வதற்கு ஏற்ற 

வழிவகைகளைச் செய்வதற்கான அறிவு உண்டு.

   வீணாக எவரையும் இழிவாக நினைத்தல் கூடாது் 

என்கிறார் ஔவை.

இதோ ஔவையின் பாடல் உங்களுக்காக..

  கற்றதுகைம்  மண்ணளவு    கல்லாதுலகளவென்று

   உற்றகலை மடந்தை ஓதுகிறாள்  _ மெத்த

   வெறும் பந்தயங்கூற வேண்டாம்  _ புலவீர்

   எறும்புந்தன் கையாலெண்  சாண் "
                   
  

எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும்

படித்தப் படிப்பு கைம்மண்ணளவுதான்.

 நாம் வாழும் பூமி மண்ணால் ஆனது.

பரந்துபட்ட இப்பூமியில் மண்ணின் அளவு 

எவ்வளவு இருக்கும் என்று நம் அனைவருக்கும் 

தெரியும்.
 அதில் ஒரு கைப்பிடி அளவு மண் 

எவ்வளவு இருக்கும். நினைத்துப் பாருங்கள். 

 அதுதான் நாம் படித்த கல்வியின் அளவு.

  மீதம் படிக்க வேண்டியவை ஏராளம்....ஏராளம். 

இந்தக் கைப்பிடி அளவு கல்வியை வைத்துக் கொண்டு 

எல்லாம் படித்தாயிற்று.. .எல்லாம் படித்தாயிற்று

 என்று எத்தனை முறை சொல்லியிருப்போம்.

  நான் எத்தனை பட்டங்கள் பெற்றிருக்கிறேன் 

தெரியுமா ?என்று பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டு

 எப்படியெல்லாம் கெத்து காட்டியிருப்போம்.

 புத்தகப் படிப்பு மட்டும் கல்வி இல்லை...

ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு ஓர் ஒரு 

புதிய படிப்பினையைக் கற்றுத்  தந்துவிட்டுதான் செல்கிறது.

 நாளும் ஏதோ ஒன்று கற்றுக்கொண்டே 

இருக்க வேண்டும்.

 கல்விக் கடவுள் சரஸ்வதிகூட இன்னும் 

படித்துக் கொண்டே இருக்கிறாளாம். 

அவளுக்குக்கூட கல்வி முற்று பெறவில்லையாம்.


 கல்விக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.

காற்புள்ளி போட்டுக்கொண்டு தொடர்ந்து படித்துக் கொண்டே

 இருக்க வேண்டியதுதான்.


 இதைத் தெரிந்து நடந்து கொண்டாலே போதும் .

மெத்தப் படித்துவிட்டோம் என்ற நினைப்பு

ஒரு போதும் வராது.

 அகந்தை எட்டிப் பார்க்காது.


 கல்விச் செருக்குற்ற சிலரை அவருக்குள் 

இருக்கும் செருக்கை அடக்குவதற்காக சொல்லப்பட்டதுதான்

" கற்றது கைம்மண்ணளவு. கல்லாதது உலகளவு "

என்ற இந்தப் பாடல்.

 புத்தகப்படிப்பு மட்டும் படிப்பு இல்லங்க...

 நாளும் பார்க்கிற .....கேட்கிற ....

செய்யப்படுகின்ற  ஒவ்வொரு செயலிலும் ஏதோ 

ஒரு புதியசெய்தி நாம் அறியாதது இருக்கும்.

அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் 

என்று நினைப்பது புத்திசாலித்தனம்.


"கல்வி கரையில  

கற்பவர் நாள்சில "என்கிறார்  நாலடியார் 

ஆமாங்க...கல்வி கரை கண்டவர்

எவருமிலர்.

 "கற்றது கைம்மண்ணளவு 

கல்லாதது உலகளவு "என்பதை மனதில் 

வைத்துக்கொண்டு நாளும் புதியவற்றைக்

கற்போம். 

கல்லாதவர் என்று எவருமிலர்

என்று நினைத்திருப்போம்.

எறும்பும் தன் கையால் எண்சாண் என்பதை

மறவாதிருப்போம்!


    
    

Comments

Popular Posts