காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற
கவிஞர் பாரதியார்.
பாரதியின் பாடல்களில் நாட்டுப்பற்று
நிரம்பவே இருக்கும்.
பெண் விடுதலையைப் பற்றிய பாடல்கள்
உணர்வுடன் கூடியதாக இருக்கும்.
மொழிப்பற்று விஞ்சி நிற்கும்.
பாரதியைக் கொண்டாட ஆரம்பித்தால் நாளெல்லாம்
கொண்டாடிக் கொண்டே இருக்கலாம்.
பாரதியின் பாடல் வரிகள் தமிழ்க்
கவிதையின் மந்திர சொற்கள்
மந்திரத்தை நாளெல்லாம் உச்சரித்துக் கொண்டே
இருந்தாலும் இன்பம் தருவதாகவே இருக்கும்.
" என் எழுத்தும் தெய்வம்;
என் எழுதுகோலும் தெய்வம் "
எனக் கூறியவர் பாரதி.
பாரதியைப் பற்றிப் பாடி
பரவசப்படாத புலவர்கள் இல்லை எனலாம்
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா _ அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா! _அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா "
என்றார் கவிமணி.
கிறுகிறுப்பூட்டும் அருமையான
பாடல்களைப் பாடியவர் பாரதி.
பாரதியின் பாடல்களில் துணிச்சல் ,
உறுதி ,தன்னம்பிக்கை எல்லாம் கூடி இருக்கும்.
எல்லாம் இருந்துவிட்டு பொது நலம்
இல்லாதிருக்குமா என்ன?
அதுவும் உண்டு.
நமக்காக ...நாட்டுக்காக...பெண்களுக்காக...
விடுதலைக்காக...இறைவனுக்காக....
சமுதாய முன்னேற்றத்திற்காக பாடிய
பாரதி சிறுகுழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.
ஓடி விளையாடு பாப்பா ....என்று சொன்னவர்
அதற்குள்ளும் ஒரு சமூகக் கருத்தைப் பொதிந்து
தந்து சிறுபிள்ளைகளைக் கொண்டாடியவர்.
இப்படி அனைவருக்கும் பார்த்துப் பார்த்துப்
பாடல் பாடிய பாரதி தனக்கென
ஒரு ஆசை ஒன்று உண்டு என்கிறார்.
அந்த ஆசையைப் பராசக்தியிடமே
சொல்லி நிறைவேற்றித் தருமாறு
கேட்கிறார்.
பாரதிக்கு அப்படி என்ன பெரிய ஆசை எனக்
கேட்கிறீர்களா?
மிகப் பெரிய ஆசை ஒன்றும் இல்லைங்க.
நம்மைப் போன்றுதான் சொந்தமாக ஒரு
வீடு கட்டி குடியிருக்க ஆசை.
இருக்கத்தானே செய்யும்!
தனது ஆசையைப் பராசக்தியிடம் கூறுகிறார்
பாரதி.
பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும்
என்று கேட்கிறார்.
அந்தப் பாடலைப் பாருங்கள்.
காணி நிலம் வேண்டும் _ பராசக்தி
காணி நிலம் வேண்டும் _ அங்கு
தூணில் அழகியதாய் _ நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் _ அந்தத்
காணி நிலத்திடையே _ ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் _ அங்கு
கேணியருகினிலே _ தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு _ தென்னைமரம்
பக்கத்திலே வேணும் _ நல்ல
முத்துச் சுடர்போலே _ நிலாவொளி
முன்பு வரவேணும் _ அங்கு
கத்துங் குயிலோசை _ சற்றே வந்து
காதிற் படவேணும் _ என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே _ நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே _ அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் _ எங்கள்
கூட்டுக் களியினிலே _ கவிதைகள்
கொண்டுதர வேணும் _ அந்தக்
காட்டு வெளியினிலே _ அம்மா! நின்றன்
காவலுற வேணும் _ என்றன்
பாட்டுத் திறத்தாலே _ இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்."
அருமையான பாடலில்லையா?
இரண்டு மூன்று முறை படித்துப்பாருங்கள்.
பாரதியின் உணர்வு நமக்குள்ளும்
தொற்றிக் கொள்ளும். பொருள்
எளிமையானதுதான்.
காணி நிலம் வேண்டுமாம்.
அதாவது வீடு கட்ட ஏறத்தாழ ஒரு ஏக்கர்
முப்பத்து இரண்டு சென்ட் நிலம் வேண்டுமாம்.
வெறும் நிலம் மட்டும் தந்தால் போதுமா..?
அங்கு நல்ல தூண்களெல்லாம் இட்டு
நல்ல வண்ணத்தில் ஒரு மாளிகை
கட்டித்தர வேண்டுமாம்.
வெற்று மாளிகை அழகு தருமா ?
சுற்றி மரங்கள் வேண்டாமா?
அந்த வீட்டிற்குள் ஒரு கிணறு
வேண்டுமாம்.கிணற்றங்கரையில்
தென்னங்கீற்றுகளையும் இளநீரையும்
தலையில் தாங்கியபடி
தென்னைமரங்கள் நிற்க வேண்டுமாம்.
ஒரே ஒரு மரம் மட்டும்
போதாதாம்.ஒன்று அல்ல....இரண்டு அல்ல...
பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்
நிற்க வேண்டுமாம்.
இப்படி ஒரு வீடு இருந்தால் நன்றாக
இருக்குமில்லையா?
இது மட்டும் போதும் என்று நினைத்தாரா
பாரதி?
இல்லையே!
இது போதாதாம்.
இரவு வேளையில் முற்றத்தில்
முத்துச்சுடரொளி பரப்பி நிலவு தன்
தண்மையைத் தந்து மெல்ல
எட்டிப் பார்த்து சிரிக்க வேண்டுமாம்.
அதாவது வானம் பார்த்த முற்றம் வேண்டுமாம்.
இரவு காட்சி இப்படியாக முடிந்தது.
நல்ல ஆசைதான்....இரவு காட்சியோடு
முடித்துக் கொண்டாரா பாரதி?
இல்லையே!
அதிகாலையிலேயே குயில்கள் வந்து காதில்
கேட்கும்படியாக கத்திச் செல்ல வேண்டுமாம்.
இது என்னப்பா ?
எங்காவது குயில் கத்துமா...?
வேடிக்கையாக இல்லை?
குயில் வந்து கூவ வேண்டும் என்பதைத்தான்
பாரதி கத்த வேண்டும் என்கிறார்.
குயில் கூவினால் கூடவே
இன்னொரு சுகம் வேண்டுமே!
மரங்கள் இருக்குமிடத்தில் தென்றல்
வராமல் இருந்தால் எப்படி?
மனம் இன்பம் கொள்ள தென்றல் காற்று
மெல்ல வந்து காதோடு கவி பேச
வேண்டுமாம்.
அப்பப்பா இது சின்ன சின்ன ஆசை இல்லங்க.
பேராசைதான்.
இவ்வளவு அழகான இடத்தில்
ஒரு பெண் வேண்டாமா !
ஆமாங்க...அந்த இடத்தில் அவரது
பத்தினியான செல்லம்மாள் கூடவே
இருக்க வேண்டுமாம்.
அதாவது மனைவியோடு அந்த வீட்டில்
வாழ வேண்டும் என்கிறார் பாரதி.
இப்படி அந்த வீட்டில் மகிழ்வாக
வாழ்ந்து கொண்டிருக்கும்போது
அம்மா நீ எம்மைக் காத்திடல் வேண்டும் என்று
பராசக்தியைக் காவலுக்கு அழைக்கிறார் பாரதி.
கவி படைக்க அருமையான இடம் வேண்டும்.
நான் படைக்கும் அந்தக்
கவிதையால் இந்த உலகத்தைக்
பாலித்திடவேண்டும் தாயே "
என்று முடிக்கிறார் பாரதி.
இந்தச் சின்ன சின்ன ஆசையை
எளிய வரிகளில் எப்படி தந்திருக்கிறார்
பாரதி என்பதைப் பாருங்கள்.!
காட்டு வெளியிலே தன்னந்தனியாக
ஓர் அழகு மாளிகை.
குயில் பாட,
தென்றல் தாலாட்ட,
நிலவு புன்னகை புரிய,
காதல் மனைவி அருகிலிருக்க
சூழல் கவி பாட ஏற்றதாயிருக்க
பராசக்தி நீ காவலிருக்க
எனக்கொரு காணி நிலம் வேண்டும்.
நன்றாக இருக்கிறதில்லையா?
இந்தக் காணி நிலம்
கவிதை எழுதத்தாங்க...
அந்தக் கவிதையும் உங்களுக்காகத்தாங்க
என்று முடித்துவிட்ட பாரதியின்
உயரிய நோக்கினை என்னவென்பது?
அருமையான கவிதை இல்லையா?
இத்தனை அருமையான பாடல் தந்த பாரதி
வாழும் காலத்தில் வறுமையில் வாடி
39 வயதிற்குள் மறைந்து
போய்விட்டார் என்பது வேதனைக்குரிய
செய்தி.
பாரதியாரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடலை பதிவிட்டது மிக அருமை.
ReplyDeleteThe anxious thoughts of Bharathiyar is reflected in this particular song of his. He is a very simple but a strong and courageous poet. He is patriotic poet. The explanation given by the writer is marvellous.
ReplyDelete