பாரதிதாசனின் இளையார் ஆத்திசூடி

பாரதிதாசன் 88  அடிகள் கொண்ட ஆத்திசூடி என்னும் நூல் அனைவருக்கும் பொதுவாக எழுதியிருந்தார். அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில் மாணவர்கள் பயிலும் வகையில்  இளையார் ஆத்திசூடி என்ற நூலை எழுதினார்.
  இது எளிதில் பொருள் விளங்குமாறு எழுதப்பட்ட நூலாகும்.
 
       இதில் மொத்தம் 88 வரிகள் உள்ளன.

        1.        "அழுபவன் கோழை."
      
              எதற்காகவும் அழுது நீ பலவீனமாவன் என்பதை
                 வெளிப்படுத்தாதே.
                
        2.         "ஆவின்பா லினிது."
      
             பசுவின் பால் இனிமை தருவது.
            
        3.            "இரவினில் தூங்கு."
       
             இரவு நேரத்தில்  நெடுநேரம் கண்விழித்திராதே.
            
        4.              " ஈவது மகிழ்ச்சி."
     
            பிறருக்குக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது.
           
        5.            "உள்ளதைப் பேசு."
     
                  உள்ளது எதுவோ உண்மை எதுவோ அதை மட்டும் பேசு.
                 
        6.              "ஊமையைப்போ லிராதே."
     
            பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருக்கக் கூடாது.
           
        7.          "எதையும்மூன்றிப் பார்."
     
             எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
            
        8.          "ஏசே லெவரையும்."
      
             எவரையும் அவதூறாகப் பேசாதே.
            
        9.              "ஐந்திற் கலை பயில் "
      
               ஐந்து வயதிலிருந்தே கற்க வேண்டிய கலைகளை எல்லாம்   கற்றுப் பழகு.
              
        10.             "ஒற்றுமை வெல்லும்."
     
                 ஒற்றுமையாக இருந்தால் யாவரையும் வெற்றி
                  கொள்ளலாம்.
                
        11.            "ஓரம்போ தெருவில்"
     
                 தெருவில் செல்லும்போது ஓரமாகச் செல்ல பழகிக் கொள்.
       
        12.          "ஔவை தமிழ்த்தாய்"
       
              ஔவையைத் தமிழ்த்தாயாக நினைத்து ஒழுகு.

        13.             " கணக்கிற் றேர்ச்சிகொள்."
      
                      எண்ணியலில் நல்ல பயிற்சி கொள்.
                     
        14.           " சரியா யெழுது."
      
                     அழகுபட தவறில்லாமல் எழுதிப் பழகு.
      
        15.       " தமிழுன் தாய்மொழி."
       
                     தமிழ் நமது தாய்மொழி.
             
        16.         " நல்லவனா யிரு."
      
               நற்பண்புகள் கொண்டவனாய் இரு.
              
        17.       "பல்லினைத் தூய்மை செய்."
      
                   பல்லினைத் தூய்மையாக வைக்கப் பழகிக்கொள்.
                  
        18.       "மற்றவர்க்குதவி செய்."
      
             எப்போதும் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்.
            
        19.            "வண்டிபார்த்து நட "
     
                சாலையில் செல்லும்போது பார்த்து கவனமாக செல்ல  வேண்டும்.

       20 .         "கல்வி கற்கண்டு."
      
              கல்வி இனிமையானது.
             
       21.         "கால்விலங்கு கல்லாமை "
     
               கல்லாமல் இருத்தல் காலிற்கு விலங்கிட்டுக் கொள்வது போன்றதாகும்.
              
       22.         "கிழிந்தாடை தீது ."
     

                கிழிந்த ஆடை அணிவது நன்றன்று.
               
       23.       " கீரை உடற்கினிது."
    
               கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் உடலுக்கு நன்மை   தரும்.
              
     
       24.          "குப்பை ஆக்காதே."
     

             இருக்கும் இடத்தில் குப்பைகளைப் போடாமல் தூய்மையாக வைத்துக் கொள்.
            
       25.         "கூனி நடவேல்."
     
                 கூன் போடாது நிமிர்ந்து நடக்கும் பழக்கம் வேண்டும்.
                
       26.      " கெட்டசொல் நீக்கு."
     
                     பிறருக்குத் தீமை தரும் கெட்ட சொற்களைப்
                      பயன்படுத்தாதே.
                    
       27.            "கேலி பண்ணாதே."

         யாரையும்  இழிவாக எண்ணி கிண்டலோ கேலியோ செய்யாதே.
       
       28.          "கைத்தொழில் பழகு."
      
                  கைத்தொழில் செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்.
                 
       29.          "கொடியரைச் சேரேல்."
     
            கொடுந்தொழில் செய்வோரோடு கூட்டு வைத்துக்
             கொள்ளாதே.
           
       30.           "கௌவி உமிழேல்."
      
                          இகழ்ந்து உமிழுதல் தீது.

       31.      "சமமே அனைவரும். "
      
             உயர்வு தாழ்வு இன்றி அனைவரும் சமம்.
            
       32.          "சாப்பிடு வேளையோடு. "
     
            உரிய நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்.
           
        33.       "சிரித்துப் பேசு. "
      
            அனைவரோடும் புன்முறுவலோடு பேச வேண்டும்.
           
        34.         "சீறினாற் சீறு."
       

                  எதிர்த்து வருபவனிடம் எதிர்த்து நில்.
                 
        35.        " செக்கெண்ணெய் முழகு."
      

                 நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் வேண்டும்.
                
        36.      " சேவல்போல் நிமிர்ந்து நில்."
     
                 சேவல் போன்று எப்போதும் தலை நிமிர்ந்து நில்.
                
        37.       "சையென இகழேல்."
      

              எவரையும் இழிவாக நினைக்கக் கூடாது.
             
        38.     " சொல்லை விழுங்கேல்."
       
                     சொல்ல வந்ததைத் தெளிவாக திருத்தமுற பேசு.
                    
        39.     "சோம்ப லொருநோய்."
       
                  சோம்பேறித்தனம் நோய் என்பதை மறவாதே.
                 
        40     ". தந்தை சொற்படி நட."
       
                   தந்தை சொற்படி நடக்க கற்றுக்கொள்.   
                  
        41.     " தாயைக் கும்பிடு. "
      
            அம்மாவை தெய்வமாய் தொழுதிடு.
           
       42.      "தின்பாரை நோக்கேல்."
      
          பெருந்தீனி தின்போர் பக்கம் திரும்பாதே.
         
       43.      "தீக்கண்டு விலகி நில் "
     
               தீமையைக் கண்டால் விலகி இரு.
              
       44.        " துவைத்ததை  உடுத்து. "
      
                   தூய ஆடையை உடுத்தும் பழக்கம் வேண்டும்.
                  
       45.      " தூசியா யிராதே."
      
                     மிகவும் தாழ்ந்து இரராதே.
                    
       46.         "தென்னையின் பயன்கொள்."
      

               தென்னையின் பயன் அறிந்து பயன்படுத்திக்கொள்.
              
        47.         " தேனீ வளர்த்திடு."
      
               தேனீ வளர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்.
      
       48.        "  தைப்பொங்க லினிது."
      
                       தைமாதம் பொங்கலிடுவது இனிமை தருவதாகும்.
                      
       49.      " தொலைத்தும் தொலைத்திடேல். "
     
                       நமக்கு அருமையான எதையும் தொலைத்திடக்கூடாது.
     
       50.      " தோற்பினும் முயற்சி செய்."
     
               தோல்வி அடைந்தாலும் முயற்சி செய்வதைக் கைவிடாதே.
              
         51.      " நரிச்செயல் கான்றுமிழ்."
       
                உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கபடதாரிகள விட்டு விலகு.
               
             52.    "நாட்டின் பகைதொலை."
           
                    நாட்டு மக்களோடு ஒருபோதும் பகைமை வைத்துக்
                     கொள்ளக் கூடாது.
             53.     "நினைத்ததை உடன்முடி."
           
                      நினைத்த செயலை செய்து முடிப்பதில் உறுதியாக இரு.
          
             54.      "  நீந்தப் பழகு."
           
                 நீச்சல் கற்றுக் கொள்.

                55.   ".நுணல் வாயாற் கெடும்."
               
                          தவளை தன் வாயால் கெடும்.

                 56.    "நூல்பயில் நாடோறும்."
               
                       புத்தகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
                      
                  57  ". நெல் விளைத்துக் குவி."
                 

                
                       உழவுத்தொழில் செய்து நெற்பயிர்
                        விளைவிக்க முனைந்து ஈடுபடு.
                      
               
           58.     "நேரம் வீணாக்கேல்."
          
                   காலத்தை வீணடிக்காதே.
                  
          59.       "நைந்த தறுந்திடும்."
        
                     அதிகமாக நைந்து போன எதுவும் அறுந்து போகும்.
                    
             60.     "நொய்யும் பயன்படும்."
           
                      சிறிய நொய்யரிசி கஞ்சி வைத்துக் குடிப்பதற்குப்
                       பயன்படும். அதுபோல எந்த சிறிய பொருளும்

                        ஒருவிதத்தில் நமக்குப் பயன்படும் என்பதை
                         மறவாதே.சிறுபொருள்தானே என்று எதையும்
                       அலட்சியம் செய்யாதே.
                      
                   
                      
            61. .    " நோய் தீயொழுக்கம்."
           

                        தீயொழுக்கம் நோய்க்கு இடமளிக்கும்.
      
           62.    " பனைப்பயன் பெரிது."
          
                   பனையிலிருந்து கிடைக்கும்  பொருள்களின் பயன்கள்  ஏராளம்.
                  
        63.      "பாட்டிக்குத் தொண்டுசெய் "
     
              வயது முதிர்ந்த காலத்தில் இருக்கும் பாட்டி போன்ற
               வயதானவர்களுக்கு உதவி செய்.
             
        64.       "பிறர்நலம் நாடு."
       
                     எல்லோரும்  நலமாக இருக்க வேண்டும் என விரும்பு.
                    
        65.    "பீளைகண்ணிற் கொளேல்."
       

             கண்களைத் தூய்மையாக வைத்துக்கொள்.
            
        66.  "புற்றிற் கைவிடேல்."
      
             பாம்புப் புற்றில்  கைவிட்டு விளையாடாதே.
             
        67.     "பூச்செடி வளர்த்திடு."
      
                      மலர் தோட்டம் உருவாக்கும்  ஆர்வத்தை வளர்த்திடு.
                     
        68.   " பெற்றதைக் காத்தல்செய்."
      
             நம்மிடம் இருப்பதைக் பாதுகாத்துக் கொள்ளும் பண்பை வளர்த்துக்கொள்.
            
        69.   " பேராசை தவிர்."
       
               பேராசை ஒருபோதும் கூடாது.
              
        70.     "பையும் பறிபோம். "
      
                       கவனமின்றி இருந்தால் உள்ளதும் கவர்ந்து
                        செல்லப்படும்
       
          71..  "பொய் பேசாதே ."
         
                  ஒருபோதும் பொய்பேசும் பழக்கம் கூடாது.
                 
             72..   "போர்த்தொழில் பழகு."
            
                        வில்வித்தை போன்ற போர்த்தொழில் கற்றுப் பழகு.
     
                   
              73.     "மாடாடு செல்வம்."
            
                     மாடு, ஆடு ஆகியவை செல்வமாக கருதப்படும்.
           
             74.    "மிதியொடு நட. "
           
                          பாதணி அணிந்து நட.
                
           75..     "மீனுணல் நன்றே."
          
                உடலுக்கு நலம் தரும்   மீன் உணவு எடுத்துக் கொள்.
         
          76.  " முத்தமிழ் முக்கனி."
        
                  இயல், இசை ,நாடகம்  ஆகிய முத்தமிழ் முக்கனி தரு இன்பம் தருவதாகும்.
                 
      77.    "மூத்தவர் சொற்கேள்."
     
          பெரியோர் சொல் கேட்டு நடக்க வேண்டும்.
         
      78.." மெத்தெனப் பேசு. "
     
                 இனிமையாகப் பேசு.
                
      79.  " மேலவர் கற்றவர்."
   
              கல்வி கற்றவரே உயர்ந்தவர் எனப்படுவார்.
        
         80.    " மையினம் காத்தல் செய்"
        
           பெண்களைப் பாதுகாக்கும் பண்பு வேண்டும்.
          
         81.      "மொழிகளில் தமிழ்முதல்."
        
           எல்லா மொழிகளிலும் முதன்மையான மொழி
            தமிழ்மொழியாகும்.
          
         82. "வள்ளுவர்நூல் பயில். "
        
                    திருக்குறள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்.
      
       83  "வாழ்ந்தவர் உழைத்தவர்."
      
            உழைக்கும் பழக்கம் உடையவரே  வாழ்க்கையில் வெற்றி  பெற்றவர் ஆவார்.
           
  
       84     "விடியலிற் கண்விழி."
      
                   விடியற்காலை எழும்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் 

                   கொள்.
                  
       85.  " வீரரைப் போற்று. "
     
                 வலிமை உடையவரைப் போற்று.
                
       86..   "வெல்லத்தமிழ்  பயில்"
      
                  இனிமையான தமிழ்மொழியைக் கற்று 

                   அறிந்துகொள்.
                 
       87   "வேர்க்க விளையாடு."
      
                   வியர்வை வரும்வரை நன்றாக விளையாடு.
                  
       88.." வையநூ லாய்வு செய்."
      
              உலகிலுள்ள நூல்களை எல்லாம் ஓர்ந்து அறியும் 

             ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்.
             
      
        

Comments