இரவல் சேலை


                            இரவல் சேலை



போஸ்ட்மேன் வந்துவிட்டுப் போனதிலிருந்து அப்படியே உட்காந்திருந்தாள் பாலாமணி.
    என்றுமில்லாதபடி ஏதேதோ வந்து மனதைக் குமைய வைத்தது.
      இப்படிச் செய்தால் என்ன ....அப்படிச் செய்தால் என்ன....
      இன்டர்வியூக்கு உடைஉடுத்திப் போவதிலும் கவனம் வேண்டும் என்று எங்கோ படித்த ஞாபகம்.
      ஆனால் உடுத்திப் போகும்படி ஒரு சேலைகூட நல்லதா இல்லை.
      என்ன செய்வது....
     நாலு பொட்ட பிள்ளைகளோடு பிறந்துவிட்டாலே இப்படித்தான்.
    ஒருநாள் ஒருத்தி கட்டின சேலையை மறுநாள் மற்ற தங்கச்சி கட்டிக்கொள்வாள். ஆத்திர அவசரத்திற்கு உடுத்திட்டுப் போகும்படி ஒரு நல்ல சேலை மிச்சம் வைக்க மாட்டாளுக..
   இப்படி திடுதிப்பென்று இன்டர்வியூ வந்து நிற்கும் என்று யாரு
   நினைச்சா.....
      நாளையே போகணுமாம்...
      "அம்மா உடுத்துட்டுப் போக நல்லசேலை இல்லம்மா..."
      அம்மாவிடம் சொல்லிப்பார்த்தாள்...
      ".இதெல்லாம் ஒரு பெரிய காரியமில்ல ....முதலாவது வேலை கிடைக்குதான்னு பாரு...அப்புறம் நல்ல சேலைப் பற்றி யோசிக்கலாம்.." ஒத்தவரியில சொல்லிட்டு போயிட்டாக...
      இன்டர்வியூக்கு ஒரு நல்ல சேலை உடுத்து போகணும் என்ற சின்ன அறிவுகூட இல்லாத குடும்பத்துல பிறந்துகிட்டு.....
      என்ன செய்வதென்றே தெரியல..
      இப்படி செய்தா என்ன  ....
      பேசாம மூத்த மாமன் மகளிடம் போய் ஒருநாளைக்குக் கட்டிட்டு தரேன் என்று இரவல் கேட்கலாமா....தருவாளா....
      எப்படிக் கேட்பது.... மாமன் மகள் தந்தாலும் அவள் அம்மா தர விடணுமே.....
      வேறு என்ன பண்ணலாம் ...இப்போதைக்கு வேறு வழியே தெரியல...
      சரி எப்படியோ போகட்டும்  மாமன் வீட்டுல போய் கேட்டுப் பார்ப்போம் .
      தந்தா நல்லது... தராவிட்டால் .....அவமானமாக இருக்குமே...
      
     போகணுமா... கால்கள் தடுத்தன.
     "இருக்கிற சேலைய உடுத்துட்டுப் போ. கண்ட கண்ட வீட்டுல எல்லாம் போய் இரவல் சேலை கேட்காத... சொல்லிபுட்டேன்....
     பிறகு அவ அப்படி சொல்லிபுட்டா....இப்படி சொல்லிபுட்டா என்று கண்ணை கசக்கிட்டு வந்து நிற்காத ...".என்று முதலாவதே அர்ச்சனையைத் தூவிவிட்டுச் சென்றார் அம்மா.
      அம்மா எப்பவுமே இப்படித்தான் கொஞ்சம் தன்மானம் அதிகம்.
     நம்ம புள்ளைகள ஒருத்தர் சுடு சொல் சொல்லிவிடக்கூடாது
     என்று பொத்தி பொத்தி வைத்து வளர்ப்பார்.
     இப்போ ஒரு சேலைக்குப் போய் அடுத்த வீட்டு வாசலில் போய் நிற்கணுமா  என்று நினைக்கிறார்கள்.
     அம்மா சொல்லுவதும் சரிதான்.
     ஒண்ண கடக்க ஒண்ண அத்தை பேசிப்புடுவாவ....
     அப்புறம் அம்மா கிட்டதான்வந்து கண்ணைக் கசக்கணும்...
     ஒருநாள் கூத்து...வேலை கிடைக்குமா...கிடைக்காதா....அப்புறம் பார்க்கலாம். 
     இப்போ நாளைக்கு உடுத்துப்போக நல்ல சேலை வேண்டுமே....வேறு வழியில்ல..
     ஆபத்துக்குப் பாவமில்ல...கேட்டுதான் ஆவணும். 
     மெதுவாக வெளியில் வந்தாள்.
    " நான் சொல்லுறத நீ கேட்க மாட்ட  .... போ   ...போ...     வாங்கி கட்டிகிட்டு வரப்போற ... "அம்மா ஆசிர்வாதம் தந்து அனுப்பி
     வைத்தார்.
      தயங்கி தயங்கி மாமா வீட்டு வரை வந்தாயிற்று. 
        உள்ளே நுழைய ஒரு தயக்கம்.
        அதற்குள் மாமா மகள் இளையவள் பார்த்துவிட "அக்கா உன்னை பார்க்க மூத்த அத்தை மகள் வந்துருக்காவ... "என்று குரல் கொடுத்தபடியே வீட்டுக்குள் ஓடினாள்.
        இனியும் தயங்கி நிற்பதில் பயனில்லை என்பது போல மெதுவாக எட்டிப் பார்த்தாள் பாலாமணி.
        "வா....ஏன்வெளியில் நிற்கிற."...கையைப்பிடித்து இழுத்தாள் மாமா மகள்.
     தயங்கியபடியே   உள்ளே சென்று கட்டிலில் உட்கார்ந்தாள்.
     "என்ன வேணும். ஏதாவது காரியம் இல்லாம வரமாட்டிய...."அத்தை முதல் விசாரிப்பை இப்படித்தான்  விசாரித்து வைத்தார். 
        சொல்ல முடியாமல் மௌனமாய் நின்ற பாலாமணியை
      "  என்ன.... எதுவும் இல்லாம எங்க வீட்டுக்கு வர மாட்டிய...
        சொல்லு ....ஏன் தயங்குற...என்ன வேணும் "மாமா மகள்     மறுபடியும் கேட்டு உலுக்கினாள்.... 
       " நாளை இன்டர்வியூக்குப் போகணும்..."
       " இன்டர்வியூ வந்துருக்கா....இந்த வேலையாவது கிடைக்கணும்...
        எத்தனைமுறை இன்டர்வியூ போயாயிற்று" 
        பாலாமணிக்காக  பரிதாபப்பட்டாள் மாமன் மகள்.
       " உடுத்துட்டுப்போக நல்ல சேலை இல்ல..."வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியபடி திக்குமுக்காடின.
        ..    
     "இன்டர்வியூ   போகணுமா.... இவளுகளும் இருக்காளுகள....
     ஒரு படிப்பு முழுசா படிக்காம..."வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்அத்தை.
        "பேசாம இரும்மா...சேலை வேணுமா....என்ன கலர் வேணும்...சொல்லு..."அத்தை மகள் பேச்சில் ஒரு கரிசனம் தெரிந்தது.
       " நாளைக்கு உடுத்துட்டுப் போக ஒரு சேலை வேணும்.. 
        என்ன கலரா இருந்தாலும் பரவாயில்லை..."
         "சிகப்பு கலர் சேலை தரட்டுமா....
        உன்னிடம் சிகப்பு கலர் சட்டை இருக்கிறதா.... "கேட்டாள் மாமன் மகள்.
       " இருக்கிறது.... எந்த கலர் என்றாலும் பரவாயில்லை.'
      "சரி இரு...    சிகப்பு சேலை எடுத்து வாரேன"் வேகமாக உள்ளே சென்றாள்.
       உள்ளே சென்றவள்   சற்று நேரம் வரை வெளியில் வரவே
       இல்லை.
        அத்தை மட்டும் வெளியில் வந்தார்.
       " சேலை கேட்டியா....சேலை ஒன்றும் நல்லதா இல்ல.... எல்லாம் துவைக்காமதான் கிடக்கு.."
        "உங்க  சித்தி மவ கிட்ட கேட்கப்பிடாது... அவ நல்ல நல்ல சேலை வச்சிருப்பாள...
       உங்க மாமா  என்றைக்கு நல்ல துணி எடுத்துதந்தாரு...."
     மறுபடியும் மாமாவைக் குத்திக் கிழித்தார் அத்தை.  
          சேலை கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று.  வர்றேன்
          அத்தை என்று எழுந்தாள் பாலாமணி.
       வாசலில் வந்தவள் மாமா மகளிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாமே என்று திரும்பி நிற்க....
       வீட்டுக்குள்ளிருந்து வந்த அத்தையின் வார்த்தைகள் அப்படியே தடுத்து நிறுத்தின.
       "சேலை கேட்க முன்னே தூக்கி குடுக்க நிற்கிறியே உனக்கு அறிவு இருக்கா....
       அவ படிச்சி முடிச்சிட்டு பவுசு காட்ட வந்துருக்கா....
       நீ படிச்சிருக்கியா.....துப்பு கெட்டவள...துப்பு கெட்டவள....
       ஒவ்வொருத்தி எப்படி ஆம்பிள மாதிரி நாலு ஊருக்கு 
       அலைகிறாளுக....நீங்களும் இருக்கிகள...வீட்டுக்குள்ளே முடங்கி
       கிட்டு...."
       அதற்கு மேலும் அங்கு நிற்க மனமில்லை.
      அப்படியே ஓடி வந்தவள் கட்டிலில் தொப்பென்று விழுந்த
      பாலாமணியை யாரோ உச்சந்தலையில் ஓங்கி அடித்ததுபோல் 
      இருந்தது.
          அடிச்சது யாருமில்லை... இரவல் என்ற ஒற்றைச் சொல்தான்.
       சேலைக்கா வேலை...என் படிப்புக்கு வேலை தந்தா தரட்டும்.
         ..என் திறமைக்கு வேலை கிடைத்தால் போதும்.
         நம்பிக்கையோடு இன்டர்வியூக்குத் தயாரானாள்.
    
     
      
       
       

Comments

Popular Posts