தேசியகவி பாரதி


                           தேசியகவி பாரதி


பாரதியாரின் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளல் இருக்கும். துணிச்சலான கருத்துகள் இருக்கும்.
           " நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
            இமைப் பொழுதும் சோராதிருத்தல்"

            என கவிதையையே தொழிலாகக் கொண்டவர் பாரதி.
            தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பாரதியை உலகுக்குத் தந்த பெருமைக்கு உரிய ஊர். தந்தை சின்னச்சாமி ஐயர்.  தாயார்  இலக்குமி அம்மாள் இணையர் மடி அழகூட்ட வந்த தெய்வக்குழந்தை பாரதியார்.பிறந்தது டிசம்பர் பதினோராம் நாள். பிறந்த ஆண்டு 1882. பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன்.ஆனால் சுப்பையா என்று கூப்பிட்டு அழகு பார்த்தனர்.
            தனது பதினோராம் வயதிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றவர் பாரதி. அவரது கவியாற்றலைக்கண்ட எட்டையபுரம் மன்னர் பாரதி என்ற பட்டம் தந்து சிறப்பித்தார். அன்றிலிருந்து பாரதி சுப்பிரமணிய பாரதி என அனைவராலும் அறியப்பட்டார்.1897 ஆம்          ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
           
      ஆரம்பத்தில் எட்டையபுரம் சமஸ்தானத்தில் பணிபுரிந்தார்.பின்னர் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.  சமஸ்கிருதம், வங்காளம் , இந்தி , பிரஞ்சு , ஆங்கிலம், ஆறுமொழிகளில்  நல்ல புலமை பாரதிக்கு உண்டு.
     
       எனினும் " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் " என்று பாடியவர்.  பிறமொழி படைப்புகளைத் தமிழாக்கம் செய்த பெருமை பாரதிக்கு உண்டு.
       உலகு தழுவிய சிந்தனைகள் இவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கும்.   அழகியல் நயம் மிக்கதாய் இருக்கும்.உலகின் தலைசிறந்த கவிஞர்களோடு ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் பாரதி.அழியா காவியமாம் பாஞ்சாலி சபதம் படைத்து தமிழ்
இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
 
            விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல பாடல்களைப் பாடி தேசியக் கவி என பலராலும் போற்றப்படுகிறவர்.
            "மன்னும் இமயமலை எங்கள் மலையே
            மாநில மீதிதுபோல் பிறிதில்லையே
            இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே
            இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே"

            என்று தேசிய ஒருமைப்பாட்டைப் பாடி கொண்டாடியவர்.
            வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்ய கனவு கண்டவர்.
            பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்த பெருமைக்கு உரியவர்.
            "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில்
            மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே "

                எனத் துணிச்சலாக  சமுதாயத்தைச் சாடினார்.
                பாலிய விவாகத்தை எதிர்த்தார்.
         தன்னம்பிக்கை மிக்க பாரதியின் பாடல்களைப் பாடும்போதே உள்ளத்தில் ஓர் உற்சாகம் பொங்கும்.தன்னம்பிக்கையோடு இலக்கை
         நோக்கிப் பயணித்தால் வானமும் வசப்படும் என்பது பாரதியின்    நம்பிக்கை.
        
                தேடிச் சோறு நிதந் தின்று
                பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
                மனம் வாடித் துன்பமிக உழன்று
                பிறர் வாடப் பல செயல்கள் செய்து
                நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
                கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
                பல வேடிக்கை மனிதரைப் போலே
                நான் வீழ்வே னென்று நினைத்தாயோ ?
          என மார் தட்டியவர் பாரதி.

             இலக்கண கட்டுகளைத் தகர்த்தெறிந்து பாட்டுக்கொரு புலவன் பாரதி என வலம் வந்த பெருமைக்கு உரியவர் பாரதி. பாமரரும் உணரும் வசனக்கவிதை தந்து புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத் தந்தவர்.  பாப்பா பாட்டு பாடி குழந்தை கவியாகவும் வீறு  நடை போட்டவர். பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற பாடல் தமிழர் நெஞ்சங்களில் என்றும் கோலோச்சி நிற்கும் .
        பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் , புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் , சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாக தமிழக அரசு போற்றி பராமரித்து வருகிறது.
        எட்டையபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில் நுட்ப கல்லூரியும் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன.
        கவிதை எழுதுபவன் எல்லாம் கவிஞன் அல்லன் என்பது
        பாரதியின் கருத்து.
      "  கவிதையே வாழ்க்கையாக உடையோன்
        வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்
        அவனே கவி " என்பார்
பாரதி.
        1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவெல்லிக்கேணி கோவில் யானை தாக்கியதில் நோய்வாய்ப்பட்டார்.அதன் பின்னர் 1921 இல் செப்டம்பர் 12 அன்று,    பாரதி நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி
விட்டு  மறைந்தார். மறைந்தாலும் காலத்தால் அழியா கவி தந்து தமிழிருக்கும்வரை தமிழர் உள்ளங்களில் நிலையாக குடியிருப்பவர் பாரதி.









Comments

Popular Posts