பிசிராந்தையாரின் இளமைக்கான காரணம்

           பிசிராந்தையாரின் இளமைக்கான காரணம்


வயது ஏறிவிட்டால்போதும் காதோரம்

 நரைமுடி வந்து முதுமைக்குக் 

 கட்டியம் கூறி நிற்கும்.

கட்டியச் சத்தம் கேட்டதும் கட்டிலில் 

கிடப்பவருக்கும் கூடவே ஒரு கவலை

வந்து ஒட்டிக் கொள்ளும்.

முதுமையை மூடி மறக்க உள்ளம்

முக்காடிடத் துடிக்கும்.

நரைமுடியை மாற்ற நாட்டு வைத்தியத்தை

நோக்கி மனம் ஓடும்.

நரைமுடி யாருக்குமே விருப்பம் இல்லாத ஒன்று.

எல்லோருக்குமே என்றுமே இளமையாக

 இருக்கவே விருப்பம்.

 இயற்கையாகவே சிலருக்கு சீக்கிரத்தில்

 முடி நரைப்பதில்லை.

இதற்கு ஆள் ஆளுக்கு ஒவ்வொரு

 காரணம் கூறுவர்.

எல்லோரும் கூறும் காரணங்களுள் ஒன்று 

"எனக்கு  கவலையே கிடையாது "என்பதுதான்.

ஆம். கவலை சீக்கிரமாக முடி நரைப்பதற்கான 

முக்கிய  காரணமாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் கூறும் காரணமும் இதுதான்.

இங்கே ஒரு புலவருக்கு தலைமுடி

 நரைக்கவில்லையாம்.

 அதற்கு அவர்கூறும் காரணத்தைக் கேளுங்கள்.

அசந்து போவீர்கள்.

 சங்க காலத்தில் பிசிராந்தையார் என்று 

ஒரு புலவர்  இருந்தார்.

தன் முடி நரைக்காமல் இருப்பதற்கான 

காரணம் பற்றி அழகான ஒரு பாடல்மூலம்  

அவரே கூறியுள்ளார்.

கோப்பெருஞ்சோழன் என்ற அரசனும் 

பிசிராந்தையார் என்ற புலவரும்  ஒருவரை ஒருவர் 

பார்க்காமலேயே நட்பு கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழன் தன் பிள்ளைகளோடு 

ஏற்பட்ட பிணக்கின் காரணமாக  

வாழ்க்கையில் வெறுப்படைந்து விடுகிறார்.

 நாடும் வேண்டாம்....வீடும் வேண்டாம்.......என்று 

அரசுரிமையைத் துறந்து உயிர் துறக்க 

முடிவெடுக்கிறார்.

 தன்விருப்பப்படி வடக்கிருந்து தன் உயிரை 

மாய்த்துக் கொள்ள முற்படுகிறார்.


வடக்கிருத்தல் என்பது தன் மானத்திற்கு

 ஒரு இழுக்கு ஏற்படும் போது 

உணவு தண்ணீர் எதுவும்

 அருந்தாமல் வடக்கு திசையை நோக்கி 

அமர்ந்து உயிர் விடுவதாகும்.

அப்படி  கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்க 

ஓர் இடத்தைத் தேர்வு செய்தார்.

 அப்படி அவர் முடிவு செய்தபோது 

 தன் நண்பர் பிசிராந்தையாருக்கும் 

பக்கத்தில் ஓர்  இடம் ஒதுக்கி வைக்கும்படி

தன் காவலர்களிடம் கூறுகிறார்.

 இதுவரை ஒருமுறைகூட  இருவரும் 

நேரில் சந்தித்துக் கொண்டது இல்லை. 

 ஆனாலும்    தனக்கு துன்பம் நேர்ந்த 

இந்த நேரத்தில்  தன் நண்பர் பிசிராந்தையார் 

எப்படியாவது தன்னைப் பார்க்க

வருவார் என்று மன்னர் நம்பினார்.

மன்னர் நினைத்தபடியே பிசிசிராந்தையாருக்கும்

மன்னரின் அருகில் வடக்கிருப்பதற்காக

இடம் ஒதுக்கப்பட்டது.

 மன்னர் நம்பியபடியே பிசிராந்தையார் 

வருவாரா ?

இல்லை மன்னர்தான் ஏதோ 

தன் ஆசையில் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறாரா?

என மக்கள் குழப்பத்தோடு

 காத்திருந்தனர்.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.

ஆனால் மன்னரின் நம்பிக்கை மட்டும்

குறையவில்லை.

 மன்னர் நம்பியபடியே பிசிராந்தையாரும் வந்தார்.

பிசிராந்தையாரைப் பார்த்ததும் மக்கள்

அனைவரும் அதிர்ந்து போயினர்.

பிசிராந்தையார் என்றால் வயதானவராக

இருப்பார் என்று நினைத்திருந்த மக்கள் 

மத்தியில் நரைமுடியின்றி இளமையாக 

வந்து நின்றார் பிசிராந்தையார்.

 வியந்துபோன மக்கள் " அகவை அதிகமாகியும்

தங்கள் தலைமுடி  நரைக்காதிருக்க காரணம்

 என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?"

 என்று   கேட்டனர்.

சிரித்துக் கொண்டார் பிசிராந்தையார்.

 "தலைமுடி நரைக்காதிருப்பதற்குக் காரணம் 

வேண்டுமா....இதோ சொல்கிறேன் கேளுங்கள்."

 " யாண்டுபல வாக நரையில ஆகுதல்

  யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்

 மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்

 யான்கண்  டனையர்என இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான், காக்க அதன்தலை

 ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

 சான்றோர் பலர் யான் வாழும் ஊரே "


 என்று அழகான கவிதையைப் பதிலாகத்

 தந்தார் பிசிராந்தையார்.

 வயது ஆகிவிட்டதே...நரைமுடி ஒன்றும் 

காணவில்லையே...இது எப்படி? 

என்பதுதானே உங்கள் கேள்வி.

அது ஒன்றும் பெரிய மந்திரமோ 

தந்திரமோ அல்ல..

என் மனைவியும் மக்களும் நற்பண்பு

மிக்கவர்கள்

மனைவி  மக்களால்தானே வீட்டில்

கவலையே வருகிறது.

 அந்தக் கவலை  எனக்கு

ஒருபோதும் வந்ததில்லை.

இரண்டாவதாக என் வீட்டு ஏவலர்கள்

 என் குறிப்பினை அறிந்து

பணிபுரியும் திறன் மிக்கவர்கள்.

அதனால் வேலையாட்களால் 

ஏற்படும் பிரச்சினையும் எனக்கு 

ஏற்பட்டதே   இல்லை.

மூன்றாவதாக நான் வாழும் நாட்டை 

ஆளும் மன்னன் குடிமக்கள் நலன் காத்து

 நல்லாட்சி செய்து வருகிறான்.

குடிகாக்கும் நல்ல மன்னன் வாய்த்துவிட்டால்.... 

வேறென்னங்க வேண்டும்? 

குடிமக்கள் மனதில் மகிழ்ச்சியும்

பாதுகாப்பு உணர்வும் இருக்கும்போது

வேறென்ன கவலை வந்து எட்டிப்

பார்த்துவிடப் போகிறது?

இது எல்லாம்தான் என்

தலைமுடி நரைக்காதிருப்பதற்குக்

காரணமாக இருக்குமோ என்றுதானே

 நினைக்கிறீர்கள்?

அதுதான் இல்லை...

நாடும் வீடும் நன்றாக இருந்தால் மட்டும்

போதுமா? 

அண்டை அயலார்  நல்லவர்களாாக

இருக்க வேண்டாமா? 

 என்னைச் சுற்றி இருப்பவர் 

அனைவரும் நற்பண்புடைய சான்றோர்

பெருமக்கள்.

ஆதலால் அக்கம்பக்கத்திலிருந்து எந்தவித

 இடையூறும் எப்போதும் எனக்கு வந்ததே இல்லை. அதனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் கவலை ஏற்பட வாய்ப்பே இல்லை.


இறுதியாக  நான் வாழும் ஊர் மக்கள்

 எப்படிப்பட்டவர்கள் தெரியுமா ?

 கல்விலும் அறிவிலும் சிறந்த நன்மக்கள்

 வாழும் ஊரில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அதனால் எனது தொடர்பு எல்லாம்

 நல்ல சிந்தனையாளர்களோடு 

மட்டுமே இருந்து வந்தது.

 இப்படி என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் 

நல்லவர்களாக இருக்கும்போது 

எனக்கு கவலை ஏற்படுமா?

 இல்லையல்லவா?

கவலை இல்லாத வாழ்வு வாழ்ந்து

கொண்டிருப்பவனுக்கு தலைமுடி  

எப்படி நரைக்கும்?

இதுதான் நான் நரைமுடி இல்லாமல்

இளமையாக  இருப்பதற்குக் காரணம் "

என்றார் பிசிராந்தையார்.


 மொத்தத்தில் நாடும் ஊரும் 

அண்டை அயலாரும் வீட்டினரும் 

நல்லவர்களாக அமைந்துவிட்டால்....

கவலை இல்லாத வாழ்க்கை 

வாழும் வாய்ப்பு வாய்த்துவிட்டால்.....

 தலைமுடி நரைக்காமல் இளமையாக

இருக்கலாம்.

அந்த வாய்ப்பு நமக்கு இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!

 

தலைமுடியைத் தொட்டுப் பார்க்கத்

தோன்றுகிறதா?


நமக்கும்  பிசிராந்தையாருக்குக் கிடைத்த

நல்லவாய்ப்பு  வாய்த்திருந்தால்

தலைமுடி நரைக்காமல் இளமையாக

இருந்திருப்போமோ!


அமைதியான இல்லற வாழ்வு.

நம் இயல்புக்கு உகந்த சுற்றுச்சூழல்.

நல்ல நட்பு வட்டம்.

மக்கள் நலன் காக்கும் நல்ல அரசு

என்று கவலையற்ற வாழ்வு

 வாய்க்கப் பெற்றால் போதும். 

இளமையாக வாழலாம்.

 

Comments

  1. இந்த காலத்தில் இளமையை பேணிப் பராமரிக்க எத்தனையோ வகை வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் இந்தப் பதிவு அவற்றை எல்லாம் பொருளற்றதாக்கி விட்டது.அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts