வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
வல்லினம் மிகும் இடங்கள்
க, ச ட. , த. ப. ற. வல்லின எழுத்துகள்
என்பது நாம் அறிந்த ஒன்று.
இரண்டு சொற்கள் சேரும்போது
வருமொழி முதலில் வல்லின எழுத்து
வந்தால் எந்தெந்த இடங்களில் மிகும்
எந்தெந்த இடங்களில் மிகாது
என்பதைப்பற்றி பல்வேறு ஐயங்கள் உண்டு.
இந்த வல்லின எழுத்துகளில் ட , ற ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிமுதல் வராது.
மீதமுள்ள க் ,ச் ,த் , ப் ஆகிய நான்கு
வல்லின எழுத்துகளும் வருமொழி
முதல் எழுத்தாக அமையும்போது
எந்தெந்த இடங்களில் எல்லாம்
ஒற்று மிகுந்து வரும் என்பதைக் காண்போம்.
க. , ச , த ,ப என்ற எழுத்துகள்
அப்படியேவும் வரலாம். தமது
வருக்க எழுத்தாகவும் வருமொழி
முதல் எழுத்தாக வரலாம்.
உதாரணமாக ,
அந்த + பள்ளி = அந்தப் பள்ளி
என எழுதுகிறோம்.
இதில் பள்ளி என்பது வருமொழி.
இதிலுள்ள முதல் எழுத்து' ப. '
இந்த 'ப' என்பது ப் + அ = ப
என உயிர்மெய் ஆகிறது.
இப்போது 'ப் 'என்ற வல்லினம்
கருத்தில் கொள்ளப்படும்.
வருமொழி முதல் எழுத்து 'ப் 'என்ற
வல்லின மெய் எழுத்தாக கொள்ளப்பட்டு
வல்லினம் மிகுதலுக்கும் மிகாததற்குமான
இலக்கணம் கூறப்படுகிறது.
மெத்தப் படித்தவர்களுக்குக்கூட
இந்த வல்லினம் மிகும் இடங்களைப்பற்றி
அறிதலில் தடுமாற்றம் உண்டு.
அந்தத் தடுமாற்றத்தைப் போக்க உதவுவதாக
இந்தக் கட்டுரை இருக்கும் என்று நம்புகிறேன்.
1 . அந்த , இந்த , முதலான சுட்டுத் திரிபு எழுத்துகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
அந்த + பையன் = அந்தப் பையன்
அந்த + சட்டி = அந்தச் சட்டி
இந்த + புத்தகம். = இந்தப் புத்தகம்
இந்த + தகடு. = இந்தத் தகடு
2. அத்துணை. , இத்துணை , எத்துணை என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
எத்துணை + கொடுமை = எத்துணைக் கொடுமை
3. அவ்வகை , இவ்வகை , எவ்வகை என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
அவ்வகை + காடு = அவ்வகைக் காடு
இவ்வகை + பந்தல் = இவ்வகைப் பந்தல்
எவ்வகை + பெயர் = எவ்வகைப் பெயர்
4. மற்ற , மற்று , மற்றை என்னும்
சொற்களுக்கு பின் வரும் வல்லினம் மிகும்.
மற்ற + கலை. = மற்றக் கலை
மற்று + சிலை = மற்றுச் சிலை
மற்றை + பயன் = மற்றைப் பயன்
5. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்..
இப்போது உருபும் பயனும் உடன்
தொக்கத் தொகை என்றால்
என்ன என்பதை நாம் தெரிந்தாக வேண்டும்.
வேற்றுமை உருபு மட்டுமன்றி
அதன் பொருளும் மறைந்து
வரும் சொற்களை உருபும் பயனும்
உடன் தொக்கத் தொகை என்று கூறுவோம்.
நீர்க்குடம் _ ( நீரையுடைய குடம் ) என்பது பொருள்.
இதில் இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ '
மறைந்திருக்கிறது.
மோர் + குடம். = மோர்க்குடம்
மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல்
தயிர் + பானை = தயிர்ப்பானை
தண்ணீர் + தொட்டி. = தண்ணீர்த்தொட்டி
6. மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்கத் தொகையில்
வல்லினம் மிகும்.
இதிலும் மூன்றாம் வேற்றுமை
உருபு 'ஆல் மறைந்து நிற்கிறது.
இரும்பு. + தூண் = இரும்புத்தூண்
(இரும்பால் ஆகிய தூண்)
தங்கம் + தாலி = தங்கத்தாலி
( தங்கத்தால் ஆகிய தாலி )
7. நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கத் தொகையில்
வல்லினம் மிகும்.
நான்காம் வேற்றுமை உருபு 'கு' மறைந்து நிற்கிறது.
குடை + கம்பி = குடைக்கம்பி
( குடைக்கான கம்பி )
சட்டை + துணி = சட்டைத்துணி
( சட்டைக்கான துணி )
8. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில்
வல்லினம் மிகும்.
ஐந்தாம் வேற்றுமை உருபு 'இன் ' மறைந்து நிற்கிறது.
அடுப்பு + புகை = அடுப்புப்புகை
(அடுப்பின் புகை)
விழி + புனல் = விழிப்புனல்
9. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
வண்ணம் , வடிவம் ,அளவு , சுவை
முதலிய பண்பை விளக்குவதற்கான
'ஆகிய' என்னும் இடைச்சொல்
மறைந்து நிற்பது பண்புத்தொகை
எனப்படும்.
(எல்லா பண்புத் தொகைகளிலும் வல்லினம் மிகாது.சில விதிவிலக்குகளும் உண்டு)
பண்புத்தொகை கட்டுரையைப் படிக்கவும்.
பச்சை + கிளி = பச்சைக்கிளி
வெள்ளை + குதிரை = வெள்ளைக்குதிரை
பொய் + செய்தி = பொய்ச் செய்தி
புது + குடம் = புதுக்குடம்
10. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்
வல்லினம் மிகும்.
பொதுப்பெயரோடு சிறப்புப்பெயரோ சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ சேர்ந்து
ஒரு பொருளை உணர்த்துவது
இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
தாமரை. + பூ. = தாமரைப்பூ.
( தாமரை என்பது சிறப்புப்பெயர்.
பூ என்பது பொதுப்பெயர்.)
சாரை. + பாம்பு = சாரைப்பாம்பு.
மார்கழி + திங்கள் = ,மார்கழித்திங்கள்
11. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
உவமைக்கும் சொல்லுக்கும் இடையில் வரும்
'போன்ற' என்ற உவமை உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
மலர் + கண் = மலர்க்கண்
( மலர் போன்ற கண் )
தாமரை + கை = தாமரைக்கை
( தாமரை போன்ற கை
மலை + தோள் = மலைத்தோள்
மலை போன்ற தோள்
13. அரை, பாதி என்னும்
எண்ணுப் பெயர்களின் பின்வரும்
வல்லினம் மிகும்.
அரை + காணி = அரைக்காணி
அரை + படி = அரைப்படி
பாதி + பங்கு = பாதிப்பங்கு
பாதி + செலவு = பாதிச்செலவு
12. ஓர் எழுத்து சொற்கள் சிலவற்றில்
வல்லினம் மிகும்.
(எல்லா எழுத்திலும் வல்லினம் மிகாது.)
தை + பாவை = தைப்பாவை
தீ + சுடர் = தீச்சுடர்
13. ஈறுகெட்ட எதிர்மறை
பெயரெச்சத்தின் பின் வரும்
வல்லினம் மிகும்.
ஒரு வினைச்சொல் அதன் கடைசி
எழுத்து இல்லாமல் வந்து
அதனை அடுத்துவரும் பெயர்ச்சொல்லுக்கு
விளக்கம் தருவதாக இருந்தால் அது ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் எனப்படும்.
செல்லாக்காசு ( செல்லாத காசு)
வளையாச் செங்கோல். (வளையாத செங்கோல் )
அழியாப்புகழ். (அழியாத புகழ் )
ஓயாத் தொல்லை ( ஓயாத தொல்லை )
வணங்காத் தலை (வணங்காத தலை )
கேளாச்செவி ( கேளாத செவி)
14. வன்றொடர் குற்றியலுகரத்தின்
பின் வரும் வல்லினம் மிகும்.
வல்லினமெய் எழுத்துகளை
அடுத்துவரும் கு, ,சு ,டு. , து, பு. , று
வன்றொடர் குற்றியலுகரமாகும்.
நாக்கு
கச்சு
பாட்டு
பத்து
உப்பு
பற்று
இந்த வன்றொடர் குற்றியலுகரத்தை
அடுத்து வரும் க ,ச ,த ,ப மிகும்.
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை
பட்டு + சேலை = பட்டுச்சேலை
15. முற்றியலுகரத்தின் பின் வரும்
வல்லினம் மிகும்.
திரு+ கோவில் = திருக்கோவில்
பொது + சொத்து = பொதுச்சொத்து
புது + பை = புதுப்பை
16. உயிரீற்றுச் சொற்களின்
பின் வரும் வல்லினம் மிகும்.
மழை + காலம் = மழைக்காலம்
பனி + துளி = பனித்துளி
17. சால , தவ முதலான
உரிச்சொற்களின் பின் வரும்
வல்லினம் மிகும்.
சால + பேசினான் = சாலப் பேசினான்
தவ + பெரிது = தவப் பெரிது
18 ட. ,ற ஒற்று இரட்டிக்கும்
உயிர்த்தோடர் மற்றும் நெடில் தொடர் குற்றியலுகரங்களின்
பின் வரும் வல்லினம் மிகும்.
ஆட்டு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாட்டு + பற்று = நாட்டுப்பற்று
19. தனிக்குறிலை அடுத்து வரும்
'ஆ 'காரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.
வினா + குறி = வினாக்குறி
பலா + பழம் = பலாப்பழம்
20. ஆய் , போய் என்னும்
வினை எச்சங்களுக்குப் பின் வரும்
வல்லினம் மிகும்.
கருத்தாய் + கேட்டான் = கருத்தாய்க் கேட்டான்
அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச் சொன்னார்
போய் + பார் = போய்ப் பார்
21. முன்னர் , பின்னர் என்னும்
இடைச்சொற்களுக்குப் பின் வரும்
வல்லினம் மிகும்.
முன்னர் + கண்டோம் = முன்னர்க் கண்டோம்
பின்னர் பேசுவோம் = பின்னர்ப் பேசுவோம்
வல்லினம் ... என்று கூறும்போது க் , ச் , த் , ப் என்ற நான்கை மட்டும் நினைவில் வைத்தால் போதுமானது.
வேற்றுமை உருபுகள் யாவை?
வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கத் தொகை என்றால் என்ன ?
பண்புத்தொகை என்பது யாது?
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன ?
உவமைத்தொகை என்பது யாது?
வன்றொடர் குற்றியலுகரம்
என்பதை எவ்வாறு அறிந்து
கொள்வது ?
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
என்றால் என்ன ?
போன்ற இலக்கணங்களில் ஓரளவு
தெளிவு இருந்தால்
எளிதாக வல்லினம் மிகும்
இடங்களைக் கண்டு
பிழையில்லாமல் எழுத முடியும்.
வாசிப்புப் பயிற்சி செய்யும்போது
உற்று நோக்கிக் கொண்டே வருவோமானால்
நல்ல தெளிவு ஏற்படும்.
எடுத்துக் காட்டுகளாக கொடுத்த
சொற்களோடு தொடர்புடைய
பிற சொற்களையும் எழுதிப் பார்த்து
பயிற்சி எடுத்துக் கொள்வோம்.
பிழையில்லாமல் தமிழ் எழுதுவோம்.
Comments
Post a Comment