கொன்றை வேந்தன்

                   

கொன்றை வேந்தன் 

                           

ஔவையைப் படிக்காமல் அரிச்சுவடி கற்றிட முடியாது.

ஔவை  இல்லாமல் தமிழ் இல்லை . ஔவையின்
ஆத்திச்சூடி   இல்லாமல் தமிழ் எழுத்தினைப்
படித்தவரும் இல்லை.
ஔவையைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும்
பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும்
அவர் படைப்புகள் முதல்தரமானவை என்பதில் யாருக்கும்
மாற்றுக் கருத்து  இருக்க முடியாது.
ஔவையின் ஆத்திசூடி , கொன்றை வேந்தன் , நல்வழி
ஆகியவை அருமையான நீதிநூல்களாகக் கருதப்படுகின்றன.
நீதிநூல்கள் வரிசையில் ஔவையின்
  தலைசிறந்த படைப்புகளுள் ஒன்று கொன்றை வேந்தன்.
  கொன்றை வேந்தனில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.
  அத்தனையும் என்றென்றும் நம் வாழ்வில்
  கடைபிடிக்கப்பட வேண்டிய கருத்துக்களைக் கொண்டவை.

           வாழ்த்து

    " கொன்றை வேந்தன்
     செல்வன் அடிஇணை
     என்றும் ஏத்தித்
     தொழுவோம்  யாமே  "

1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்."

  தாயும் தந்தையும் எப்போதும் நம்
  கண்முன் காண்கின்ற தெய்வங்கள் ஆவர்.
 
2."ஆலயம் தொழுவது சாலவும் நன்று."

    கோவிலுக்குச் சென்று இறைவனைத்
    தொழுதல் மிகவும் நன்று.
   
3."இல்லறம் அல்லது நல்லறம் அன்று."

     இல்லற வாழ்வில் ஈடுபடாது்  நல்லறம் காணல் முடியாது.
    
4.  "ஈயார் தேட்டைத்  தீயார் கொள்வர்."

    பிறருக்கு உதவி செய்யாமல் பொருள் சேர்த்து
    வைப்போர் பொருளைத் தீயவர் அபகரித்துக் கொள்வர்.
   
  5."உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு."
 
       உணவு குறைவாக உண்ணுதல்
        பெண்களுக்கு அழகாகக் கருதப்படும்.
      
     6."ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்."
 
     ஊராரோடு பகைத்துக் கொண்டால் நம்
     பரம்பரையே அழிய நேரிடும்.
    
     
7."எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்."

    எண் கணித அறிவும் எழுத்துகளைக் கொண்ட
    மொழியறிவும் நமக்கு இருகண்கள்
     போன்றவையாகும்.

8   " ஏவா மக்கள் மூவா மருந்து."

செய் என்று ஏவாமலேயே நம் குறிப்பறிந்து
செயலாற்றும் மக்கள் அமுதம் போன்றவர்கள் ஆவர்.

  9. " ஐயம் புகினும் செய்வன செய்."

  பிறரிடம் யாசகம் பெற்றாவது செய்ய வேண்டிய
  நல்ல செயல்களைச் செய்துவிடு.
 

10.   " ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு."

    ஒருவனை மணந்த பிறகு அவனுக்கு உண்மையாய் இரு.
   

11. "ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்."

         வேத மந்திரங்கள் ஓதும் வேதியருக்கு வேதம்
         ஓதுதலைவிடச் சிறந்தது ஒழுக்கமாகும்.
        
12. "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.."

     பொறாமையாகப் பேசுதல் ஒருவருடைய
     வளர்ச்சியையே அழித்துவிடும்.

13.. "அஃகமும் காசும் சிக்கெனத் தேடு."

    சிக்கனமாக இருந்து தானியத்தையும்
    செல்வத்தையும் தேட வேண்டும்.

14 "கற்பு எனப்படுவது சொல்திறம்பாமை."

   கற்பு எனப்படுவது யாதெனில் முன்பின்
   முரண்படாது வாக்குமாறாது நடந்து கொள்ளுதலாகும்.
  
15.  " காவல் தானே பாவையர்க்கு அழகு."

   தன்னை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்
   காத்துக் கொள்ளுதல் பெண்களுக்கு
    அழகாகக் கருதப்படும்.
  
16. "கிட்டா தாயின் வெட்டென மற."

       நமது கிடைக்காது எனத் தெரிந்துவிடட்டால்
       உடனடியாக அந்த நினைப்பை  முற்றிலும்
       விட்டுவிட வேண்டும்.

17. "கீழோர் ஆயினும் தாழ உரை."

  நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக இருந்தாலும்
  அவர்களிடமும் நயமாகப் பேச வேண்டும்.
 
18.. "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை".

     ஒருவர் செய்த குற்றத்தையே ஆராய்ந்து
     கொண்டிருந்தால்  சுற்றத்தார் என்று எவருமே
     இருக்கமாட்டார்கள்.
    
    
19.. "கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்."

       நீ பெரிய பலசாலியாக இருந்தாலும் பெருமைபடப்
       பேசித் திரியாதே.
      
20 ."கெடுவது செய்யின் விடுவது கருமம்."

      ஒருவர் நமக்கு கேடு செய்தாலும் அதனை
     போகட்டும் என்றுஅப்படியே விட்டுவிடுதல்
     உயர்ந்த செயலாகக்  கருதப்படும்.

21. . "கேட்டில் உறுதி கூட்டும் உடைமை."

     நமக்கு ஒரு தாழ்வு வந்த போதும்  மனம் தளறாது
  இருப்பதே செல்வம் பெருகுவதற்கான
   ஒரே வழியாக அமையும்.
 
 
22 "கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி."

     நம் கையில் இருக்கும் எல்லா செல்வத்தையும்விட
      உயர்வான உண்மையான செல்வம் ஒன்று
      உண்டென்றால்  அது கல்வியே ஆகும்.
    
23. "கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி."

  குடிமக்களின் தேவை அறிந்து அவர்களைத்
  தேடிச் சென்று  அவர்களுக்கு உதவி செய்தல்
  மன்னனின் கடமையாகும்.
 
24.." கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. "

        கோள்மூட்டி கலகம் விளைவிப்போர் காதில்
        மறைபொருளைச் சொல்லி மறைக்க நிற்பது
        காற்றுடன் கூடி எரியும் நெருப்பு போன்றது.
     
25. "கௌவை சொல்லின் எவ்வெவர்க்கும் பகை."

       எவரையும் பழித்துப் பேசிக் கொண்டே இருப்பவன்
       அனைவருக்கும் பகையாளி  ஆவான்.
      
26. "சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை."

       குழந்தைகள்  பெற்று வாழ்தலே குடும்பத்திற்கு
       அழகு.
      
27. "சான்றோர் என்கை ஈன்றோர்க்கு  அழகு."

     பிள்ளைகள் சான்றோர்  எனப் பாராட்டப்படுதலைக்
     கேட்பதே பெற்றோர்க்கு இன்பம் தருவதாகும்.
    
          
28.  "சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு."

       தவத்திற்கு அழகு எனப்படுவது எந்த
       நேரமும் இறைவன் நினைவோடு இருத்தலாகும்.
      
       

  29. "சீரைத் தேடின் ஏரைத் தேடு."
 
         புகழ்பட வாழ வேண்டும் என்று விரும்பினால்
         பயிர் தொழிலை விரும்பி செய்.
      
30. "சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்."

    குடும்பத்தினர்அனைவரும் கூடி வாழ்தலே
    சுற்றத்திற்கு அழகு சேர்க்கும்.
  
31. "சூதும் வாதும் வேதனை செய்யும்."

     வஞ்சனையும் தேவையில்லா விவாதமும்
     துன்பத்தை மட்டுமே கொண்டு சேர்க்கும்.
    
32. "செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்."

      நாம் செய்கின்ற தவங்களை விட்டுவிட்டால்
      அறியாமை வந்து நம்மை ஆண்டுவிடும்.

33. "சேமம் புகினும் யாமத்து உறங்கு."

    இரவு   காவலாளியாக இருந்தாலும் நள்ளிரவில்
       தூங்க வேண்டும்.
      
34. "சைஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்."

      பிறருக்கு  கொடுக்குப்படியாக உணவு
      இருக்குமானால் இரந்து வருவோருக்கு
       உணவிட்ட பின்னரே உண்ணல் வேண்டும்.
     
35.. "சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்."

      பொருளுள்ளவர்  என்று கூறப்படுபவர்
      அதனால் வரும் அறம், இன்பம் ,
      வீடுபேறு ஆகியவற்றையும் அடைவர்.
     
36.      "சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்."

           சோம்பேறியாய் இருப்பவர் வறுமையில்
           வாடி அலைவர்.
          
37.  "  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."

        தந்தை சொல்லைவிட உயர்வானதொரு
         மந்திரம் இல்லை.
         
  38. "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை."
 
         தாயைவிட சிறந்த தெய்வம் வேறு இல்லை.
        
    39.  "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு."
   
         கடல் கடந்து அந்நிய நாடு சென்றாவது பொருளைத்
         தேட வேண்டும்.
        
   40." தீராக் கோபம் போராய் முடியும்."
  
        கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
        இல்லையேல் அது பெரும்சண்டையில்
        முடியும்.
       
      
  41. "துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு."

      கணவனுக்கு ஒரு துன்பம் வந்தபோது
      துடித்துப் போகாமல் பார்த்துக் கொண்டிருக்கும்
      மனைவி மடியில் நெருப்பை வைத்துக்
      கொண்டு வாழ்தலுக்கு ஒப்பாவாள்.
     
42. "தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்."

    எப்போதும் அவதூறு பேசும் பெண்கள்
    குடும்பத்திற்கு எமன் போன்றவர்கள் ஆவர்.
   
43. "தெய்வம் சீறின் கைதவம் மாளும்."

     தெய்வம் கோபம் கொண்டால் தவத்தோரும்
     தப்ப இயலாது.
    
44. "தேடாது அழிக்கின் பாடாய் முடியும்."

     பொருளைத்தேடாது சேர்த்து வைத்திருந்த
     பொருளைச் செலவிட்டுக் கொண்டே இருந்தால்
      இறுதியில் அது வறுமையில் கொண்டு போய்ச்
      சேர்த்துவிடும்.
     
45.." தையும் மாசியும் வையகத்து உறங்கு."

      தை மாதமும் மாசி மாதமும் வெயில்
      அதிகம் இருப்பதால் வைக்கோல் வேய்ந்த
      வீட்டில் உறங்குதல் நன்று.
     
46. "தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது."

      பிறரிடம்  வணங்கி பெறும் பொருளில்
      வாழ்வதைவிட பயிர் செய்து  கிடைக்கும்
      தானியத்தில் உண்டு வாழ்தல் இனிது.
     
47. ". தோழனோடும் ஏழமை பேசேல்."

      நெருங்கிய நண்பனிடம்கூட
      ஒருபோதும் தன் வறுமையைப் பற்றிப்
      பேசக் கூடாது.
        
48. " நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்."

    தீயவரோடு கொள்ளும் நட்பு
    துன்பத்தில் கொண்டுபோய்  விட்டுவிடும்.
  
49.." நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை."

      நாடு செழித்திருக்குமானால்  நாட்டில்
       தீமையான செயல்கள் எதுவும்
       நடைபெறாது.
     
  50." நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை."

       கல்விக்கு அழகாகக் கருதப்படுவது
       சொன்னசொல் பிறழாதிருத்தல் ஆகும்.
    
51  "நீரகம் பொருந்திய ஊரகத்திரு."

    நல்ல நீர்நிலைகள் உள்ள இடத்தில்
    குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு
    வாழ்தல் வேண்டும்.
   
52.. "நுண்ணிய கருமமும் எண்ணித்துணி."

        சிறிய செயலாகவே இருந்தாலும் நன்கு
        ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
       
53.. "நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு."

       நல்ல ஒழுக்க நூல்களைப்  பயின்று
       அதன்படி நடக்க வேண்டும்.

54.. "நெஞ்சை ஒழித்தொரு வஞ்சகம் இல்லை."

       நமக்குத் தெரியாமல் ஒருபோதும் வஞ்சகமான
       காரியங்களில் ஈடுபட முடியாது.
      
55. "நேரா நோன்பு சீராகாது."

      மனம் விரும்பி செய்யாத எந்த விரதமும்
      நன்மை பயக்காது.
     
56. "நைபவர் எனினும் நொய்ய உரையேல்."

       எளியார் ஆயினும் அவர் மனம் வருந்தும்படி
       பேசாதே.
      
57. "நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவார்."

         ஏழைகளுக்கு இரக்கம் செய்தால் அவர்
         உயர்ந்தவராகக் கொண்டாடப்படுவார்.
        
58. "நோன்பென் பதுவே கொன்று தின்னாமை."

       விரதம் இருத்தல் என்பது பிற உயிர்களைக்
       கொன்று உண்ணாதிருத்தல் ஆகும்.
      

  59."பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்."
 

        ஒருவர் செய்த பாவ புண்ணியம் அவர்
        பயிரிட்டு அறுவடை செய்யும் விளைச்சலில்
        தெரியும்.
        
60. "பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்."

      அறுசுவை உணவே ஆயினும் உண்ணும்
      காலம் அறிந்து உண்ண வேண்டும்.
     

61."பிறன்மனை புகாமை அறன் எனத் தகும்."

    அடுத்தவன் மனைவிமீது ஆசை கொள்ளாதிருத்தலே
    சிறந்த அறமாகக் கருதப்படும்.
   
62. "பீரம் பேணில் பாரம் தாங்கும்."

      தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தை
      நல்ல பலசாலியாக திகழும்.

63."புலையும் கொலையும் களவும் தவிர்."

          புலால் உண்ணுதல்,கொலை செய்தல்,
          திருடுதல் போன்ற தீய செயல்களில் ஒருபோதும்
          ஈடுபடாதே.
         
64. "பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்."

        கொடியவர்களிடம் நல்லொழுக்கத்தை
        எதிர்பார்க்க முடியாது.
       
   65." பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்."
  
       ஞானம் பெற்றவரிடம் சுற்றத்தார் என்ற பந்தமும்
   இல்லை.  சினம் என்ற தீய குணமும் இருப்பதில்லை.
  
66. . "பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்"

       அறியாதவர் போல் இருந்து கொள்வது பெண்களுக்கு
       அணிகலனாகக் கருதப்படும்.
      

67. " பையச் சென்றால் வையம் தாங்கும்."

      நிதானமாக செய்யும் வேலையில் வெற்றி
      கிடைக்கும்.
     
68.. "பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்."

       தீமை என்று சொல்லப்படும் அனைத்துச்
       செயல்களையும் அண்ட விடாதே.
      
69. "போனகம் என்பது தான்உழந்து உண்டல்."

       தனது உழைப்பில் உண்ணும் உணவே
       உணவு எனப்படும்.

70.." மருந்தே ஆயினும் விருந்தோடு உண்."

       அமிர்தமே ஆயினும் விருந்தினருக்கு அளித்து உண்.
      

71.." மாரி அல்லது காரியம் இல்லை."

    மழை பெய்யவில்லை என்றால் எந்தவொரு நல்ல
    செயலும் நடைபெறாது.
   
72.." மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை."

        மழை வருவதற்கு முன்னர் மின்னல் வரும்.
       
7 3. "மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது."

     மாலுமி  இல்லா கப்பல் ஓட முடியாது.
   
74. " முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."

        முன்னர் நாம் செய்த நன்மை தீமைகள்
          பின்னர் நம்மிடமே திரும்பி வந்து சேரும்.   

75 "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்."

    பெரியோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் போன்றது.

76 "மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு."

        மெத்தையில் படுத்தல் சுகமான நித்திரையைத் தரும்.

77. "மேழிச் செல்வம் கோழை படாது"

       கலப்பையால் உழுது வியர்வை சிந்தி உழைத்த
        செல்வம் ஒருபோதும் வீணாய்ப் போகாது.
      
78. "மை விழியார் தம்மனை அகன்று ஒழுகு."

          விலை மகளிர் இல்லங்களில் இருந்து
          ஒதுங்கி வாழ்தல் நன்று.
         
79.. "மொழிவது மறுக்கின் அழிவது கருமம்."

       பெரியோர் சொல்லும் அறிவுரையைக் கேட்க
       மறுத்து தன்னிச்சையாக செய்யும்
       காரியங்கள் கேடாய் முடியும்.

8 0  " மோனம் என்பது ஞான வரம்பு."

   மௌனமே மெஞ்ஞானத்தின் எல்லையாகும்.
  
81.. "வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்."

    நல்ல செல்வமுடையவன் ஆயினும் வரவு
    அறிந்து செலவு செய்து உண்ணுதல் வேண்டும்.
  
82. "வானம் சுருங்கின் தானம் சுருங்கும்."

        மழை குறைந்துவிட்டால் உலகில் நடைபெறும்
        தான தர்மங்கள் எல்லாம் நடைபெறாமல்
        குறைந்துவிடும்.

83.. "விருந்து இலோர்க் கில்லை பொருந்திய ஒழுக்கம்."

           விருந்தினரை வரவேற்று உபசரியாத வீட்டில்
           நல்லொழுக்கம் இருக்காது.

84 "வீரன் கேண்மை கூர் அம்பாகும்."

       வீரனோடு கொண்டிருக்கும் நட்பானது கையில்
        கூர்மையான அம்பு வைத்திருத்தலுக்கு ஒப்பானது.
   

85 "உரவோர் என்கை இரவாது இருத்தல்."

வலிமை உடையவர் என்போர் ஒருபோதும் பிறரிடம்
யாசித்தல் கூடாது.
  
86  "ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு."

   உள்ளத்தில் ஊக்கம் இருந்தால் செல்வத்தை
    ஆக்குவதற்கான வழி கிடைக்கும்.
   
87 "வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை."

  தூய சிந்தை உள்ளவர் மனதில் ஒருபோதும்
  கள்ளம் கபடம் இராது.
 
88. "வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை."

    மன்னன் கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தால்
    துணையாக நின்று காப்பாற்ற எவராலும் கூடாது.
   
89." வைகல்தோறும் தெய்வம் தொழு."

          அதிகாலை எழுந்ததும் தெய்வம் தொழுதல்
         நன்று.
        
90. "ஒத்த இடத்து நித்திரை கொள்."

   சீரான இடத்தில் நித்திரை கொள்ளுதல் வேண்டும்.
  
91. . "ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்."

     கல்லாதவரிடம் ஒழுக்க உணர்வு இருக்கும்
     என்று எதிர்பார்க்க முடியாது.
    




Comments

  1. ஔவையின் பாக்களை பதிவிட்டு வாழ்க்கை நெறிகளை நினைவூட்டியது மிகச்சிறப்பு.மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஔவையின் இத்தனை பாடல்களைத் தொகுத்து விளக்கிய செயல் தமிழன்னைக்குப் பொன்னாடை போர்த்தியது போல் அமைந்துள்ளது. வளர்க நும் பணி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts