உண்டி கொடுத்தோர்...

          உண்டி கொடுத்தோர்....

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மை 
   வரிசையில் நிற்கும் பெருமை கொண்டது புறநானூறு.
   புறநானூற்றில் இரண்டு பாடல்கள் 
   குடப்புலவியார் என்ற புலவர் பாடியுள்ளது.
  இவர் பாடிய  இரண்டு பாடல்களுமே 
பாண்டியன் நெடுஞ்செழியனைப்
பாடியதாக அமைந்துள்ளது.
 பழங்காலத்தில் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி
 பரிசில் பெற்றுச் செல்வர்.
 சில புலவர்கள் மன்னன் தவறு செய்யும் போது 
 இடித்துரைத்து நல்வழிப் படுத்துவதற்காகவும்
 பாடியுள்ளனர்.
 புலவர்கள் நல்ல அமைச்சராக இருந்து அரசியல்
 நுணுக்கங்களைச் சொல்லித் தருவதற்காகவும்
 பாடல்களைப் பயன்படுத்தியள்ளனர்.
  
இந்த உலகத்தில் நாம் துய்ப்பதற்கு  
அவசியம் செல்வம் வேண்டும்.
வாழும் காலத்தில் புகழ் 
 வேண்டுமானால் செல்வத்தின்
 மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
 இரண்டு உலகங்களின் புகழையும் பெற 
 வேண்டுமானால் மண்ணுலகில்
 நீர்நிலைகளை ஏற்படுத்தி வளங்களைப் 
 பெருக்குக என்று  நெடுஞ்செழியனுக்கு 
 அறிவுரை கூறுவதாக  இந்தப் பாடல் 
 அமைந்துள்ளது.
 
பாடல் இதோ :

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து , தம் புகழ் நிறீஇ
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூம் இன வாளை,
நுண் இரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற , குண்டு அகழி;
வான் உட்கும் வடி நீள் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே ! 
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த 
நல் இசை நிறுத்தல் வேண்டினும் , மற்று அதன்
தகுதி கேள் , இனி , மிகுதியாள ! 
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; 
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு  நீரே; 
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உயிரும் உடம்பும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
வைப்பிற்று ஆயினும் , நண்ணி ஆளும் 
இறைவன் தாட்கு உதவாதே ; அதனால்
அடு போர்ச் செழிய ! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம , இவன் தட்டோரே ;
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே
                               _   குடபுலவியார்
          

   வெற்றி வேந்தே ! நீர்நிலை அருகில்  தாழ்ந்திருக்கும்
காஞ்சிப்பூவை வாளைமீன் கவ்வுகிறது   .
இரால், வரால் மீன்கள் வளரும் அகழியும்
உயர்ந்த மதிலும் கொண்ட வளமை 
நிறைந்தது உன் நாடு.
மறுப்பதற்கில்லை.


மன்னா !இவ்வுலக செல்வமும்  மறுமைக்கான
சிறப்பும் ஒருங்கே கிடைக்க வேண்டுமா?
அப்படியானால் நீ அதற்கான தகுதியைப் 
பெற வேண்டும்....
என்ன வென்று கேட்கிறாயா?
சொல்கிறேன் கேள்.

நீர் இல்லாமல் உயிர்வாழ முடியாது.
இது உலகறிந்த உண்மை.
உடம்பில் உயிர் நிலைபெற்றிருக்க வேண்டும்
என்றால் உணவு வேண்டும்.

 ஆகையினால் உணவு கொடுத்தவர்
உயிர் கொடுத்தவராகக் கருதப்படுவார்.
உடம்பு என்பதே உணவால் ஆகிய பிண்டம்
என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

அந்த உணவுவைக் கொடுப்பது
  நீயோ நானோ அல்ல.
 நிலம், நீர் ஆகியவற்றின் கொடைதான் உணவு
 என்பதை மறவாதே.
 நீரையும் நிலத்தையும் பாதுகாத்து சேமித்து 
 வைப்பவர் உடம்பையும் உயிரையும்
 கொடுத்தவர் ஆவார்.
 
 விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்து
 வானம் பார்த்துக் காத்திருக்கும் புன்செய்
 நிலத்தில் விளைச்சலை எதிர்பார்த்து
 காத்திருப்பவன் மன்னனே  ஆனாலும் நிலம்
 எந்த பலனையும் தராது.
  

  ஆதலால் போர்க்களத்தில் வீரத்தோடு
  போரிடும்  மன்னா! 
  நான் சொல்வதை ஏதோ புலவன்
  சொல்வதுதானே என்று இகழ்ந்து
  கேட்காது விட்டுவிடாதே.

   எவனொருவன் தாழ்வான இடங்களில்
   எல்லாம் அணைகளைக் கட்டி 
   நீராதாரங்களைப் பெருக்குகிறானோ அவனே 
   இந்த உலகில் தன் புகழை நிலைநிறுத்திக்
   கொண்டவன் ஆவான்.
   
   அவ்வாறு செய்யாத எந்த மன்னனும்
    மக்கள் மனதில் நிலையான இடத்தைப் 
   பெற்றுவிட முடியாது.

 மன்னா ! உன்புகழை நிலைநிறுத்திக்
 கொள்ள வேண்டுமானால் நீர்நிலைகளைப்
 பெருகச் செய்க என்கிறார் குடபலவியார்.
 
  மொத்தத்தில்  மக்கள் மகிழ்ச்சியாக வாழ 
  வேண்டுமா?
 அணைகட்டுங்க ஐயா. 
 நீர்பாசன வசதி செய்து கொடுத்தாலே போதும்.
 உழவன் அவன் வாழ்க்கையை பார்த்துக் 
 கொள்வான்.
 
 அக்கால புலவர்களுக்கு எவ்வளவு 
 தொலைநோக்கு சிந்தனை பாருங்கள்.
 நீர்தாங்க எல்லாவற்றிற்கும் ஆதாரம். 
 நீராதாரத்தைப் பெருக்கிவிட்டால் 
 அதைச் சார்ந்து நடைபெறும்
 உழவுத்தொழில் சிறப்பாக நடைபெறும்.
 
 உழவுத்தொழில் நன்கு நடை பெற்றுவிட்டால் 
 விளைச்சல் பெருகும்.
 விளைச்சல் பெருகினால் வறுமை இருக்காது.
 எல்லோருக்கும் உணவு கிடைத்துவிடும்.
 
 உணவு கிடைத்தால் உயிர்கள்
 மகிழ்ச்சியாக உயிர்வாழ முடியும்.
  மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்
 மன்னனை வாயார வாழ்த்துவர்.
 மன்னனுக்குப்  புகழும் புண்ணியமும் வந்து
 சேரும்.
 அப்படி  புகழ் வந்து சேர வேண்டுமென்றால்
 மன்னா! நீர்நிலைகளைப் பெருகச் செய்க.
 
 இதுதான் பாடல் மூலமாக புலவர் மன்னனுக்கு
 சொல்ல வந்த செய்தி.
 
 நல்ல செய்தியாக இருக்கு இல்ல...
 அக்கால மன்னன் மட்டுமல்ல..
 எக்காலத்திலுமே  ஆட்சியாளர்கள் கவனத்தில்
 எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி.

நேற்றும் இன்றும் என்றும்
 நிலைத்திருக்கும் காலத்தை வென்ற அறிவுரை.

Comments

  1. Without water no life will survive in earth.It's the reality.Good advise for everyone.

    ReplyDelete

Post a Comment