காக்க காக்க சினம் காக்க...
காக்க காக்க சினம் காக்க...
கரடி ஒன்று மலை அடிவாரத்தில் வசித்து வந்தது.
கரடிக்கு நாவல் பழங்கள் சாப்பிடுவது என்றால்
கொள்ளைப் பிரியம்.
மலையில் நிறைய நாவல் மரங்கள் நின்றன.
நாவல் பழங்களைப் பறித்துவயிராற
தின்பதற்காக மலையின்மேல் ஏறியது.
நாவல் மரத்தைக் கண்டதும் மரத்தில் ஏறி
நாவல் பழங்களைப் பறித்துத் தின்றது.
"எவ்வளவு சுவையாக இருக்கின்றன.
மலையில் கிடைக்கும் பழங்களுக்கே தனி சுவைதான்"
உண்ட மயக்கத்தில் நாவல் மரத்தின்கீழ் படுத்து
சற்று ஓய்வு எடுத்துக் கொண்டது கரடி.
இப்போது மறுபடியும் கரடி மனதில் ஒரு
பேராசை எழுந்தது.
"மலை உச்சிக்குப் போனால் நல்ல தேன் கிடைக்குமாம்.
இன்று எப்படியாவது தேன் குடித்துவிட்டுத்தான்
திரும்ப வேண்டும்"
தேன் என்று நினைக்கும்போதே
நாவில் எச்சில் ஊறியது.
தேன் உண்ணும் ஆசையில் மலை உச்சியை
நோக்கி நடக்க ஆரம்பித்தது கரடி.
மலைக்கு மேலே ஏற ...ஏற ...பனிப்பொழிவு
காரணமாக மரக்கிளைகள் எல்லாம் பருத்தி
மூட்டையைத் தூவிப் போட்டது போல் காட்சி அளித்தன.
தேன்கூடு மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை.
மாலைப் பொழுது ஆகியது.
எல்லா பறவைகளும் தங்கள் தங்கள்
கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.
கரடி மட்டும் தேன் குடிக்கும் ஆவலில்
அங்கேயே நின்று மலங்க மலங்க
விழித்துக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு பாறை இடுக்கில் பதுங்கி இருந்த
குயில் ஒன்று கரடியைப் பார்த்தது.
"அண்ணே....கரடி அண்ணே....பனிப்பொழிவு
அதிகமாக இருக்கு...கீழே இறங்கிடுங்க...அல்லது
இந்த பாறை பக்கத்திலாவது வந்துடுங்க"என்று
கரிகனமாக கூப்பிட்டது.
"ஏன்....உன்னைப்போல அரைசாண் உடம்புக்காரன்
என்று என்னை ...
என்னை இந்த பனி எல்லாம் ஒன்றும்
செய்யாது...உன் வேலையைப் பாத்துட்டு போ"
"பனிக்கட்டிவேறு விழுது....அண்ணே..." பத்திரம் என்றது குயில்.
" விழுந்துட்டு போகட்டுமே .....அதனால் என்ன...
எனக்கு உடம்பு முழுவதும் முடி இருக்கு...தெரியுமில்ல...
எந்த பனியும் ஒன்றும் செய்யாது "
திமிராகப் பதிலளித்தது.
"கேட்டா கேளுங்க...கேட்காவிட்டால் போங்க..எனக்கென்ன "
என்று குயில் வாயை மூடிக் கொண்டது.
கரடியின் மனதில் தேன் உண்ணும் வேட்கையைத் தவிர
வேறு எதுவும் இப்போதைக்கு இல்லை.
எப்படியோ தேன்கூட்டைக் கண்டுபிடித்து
தேனை உறிஞ்சிக் குடித்தது கரடி.
"அப்பப்பா....என்ன சுவை....என்ன சுவை..."
தேனுண்ட மயக்கத்தால்.....கரடியின் கால்கள் தள்ளாடின.
கரடியின் நிலைமையைப் புரிந்து கொண்ட
ஒரு அணில் ,"அண்ணே ! அண்ணே! மறைவான இடத்துக்கு வாங்க...ரொம்ப பனி பெய்யுது.... அப்படியே
உறைய வைத்துவிடும் " என்று கரிசனப்பட்டது.
முறைத்துப் பார்த்த கரடி ,"சுண்டைக்காய்
நீயெல்லாம் எனக்கு அறிவுரை சொல்லணும் .
அத நான் கேட்கணும்.
அட ...சும்மா போவியா... இல்ல வருகிற
கோபத்திற்கு ஏதாவது தூக்கி வீசிடுவேன்."
பனிக்கட்டிகளை அள்ளி வீசி துரத்தியது கரடி.
"கேட்டா கேளுங்க. கேட்காட்டு போங்க ..."என்றபடி அணிலும்
மறைவிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.
எப்போதுமே கரடிக்கு ஒரு குணம் உண்டு. எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும் தன் கால்
தடத்தைப் பார்த்தே திரும்பி வந்துவிடும்.
இப்போது கரடிக்கு வந்த பாதை தெரியவில்லை.
கால் தடத்தையும் காணவில்லை.
எல்லா திசையும் வெள்ளைக் கம்பளம்
போர்த்தி வைக்கப்பட்டதுபோல் காட்சியளித்தது.
கரடியின் முகத்தில் கொஞ்சம் கலக்கம் வந்து
அப்பிக் கொண்ட சாயல் தெரிய ஆரம்பித்தது.
மலை கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டிப்
பாறையாக மாறிக் கொண்டிருந்தது.
கரடியின் கோபம் இப்போது
பனிக்கட்டிமேல் திரும்பியது.
ஏன் ஆத்திரம் ஆத்திரமாகவே வந்தது.
ஆத்திரத்தில் அறிவு மழுங்கி போயிற்று.
" இந்த பனிக்கட்டியால் தானே என்னால்
வீடு திரும்ப முடியவில்லை.
உன்னை என்ன செய்கிறேன் பார் " என்றபடி
பனிக்கட்டியை அள்ளி அள்ளி தாறுமாறாக வீசியது.
அள்ளி வீசிய பனிக்கட்டிகள் மறுபடியும் மறுபடியும்
கரடிமேலேயே வந்து விழுந்தன.
கோபம் தலைக்கு ஏற... ஏற...தான்
என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல்
பனிக்கட்டியை அள்ளி தன் மீதே போட்டுக்
கொண்டிருந்தது கரடி.
"அண்ணே... அண்ணே ...நிறுத்துங்க...நிறுத்துங்க..
.என்ன காரியம் பண்ணிட்டு இருக்கிறீங்க? "
குயில் மறுபடியும் எச்சரித்தது.
"ஏய்...என்ன ... சும்மா இருக்க முடியல .
இப்போ வெளியில் வந்தேன் அப்படியே
காலில் போட்டு மிதிச்சுடுவேன்." கர்ஜித்தது கரடி.
பனிக்கட்டியை அதிகமாக அள்ளி அள்ளி வீசியதில்
கரடியின் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டிக்குள்
மூழ்கிக் கொண்டிருந்தது.
இப்போது கரடியால் கால்களை நகர்த்தவே முடியவில்லை.
" ஆ..ஊ ....அம்மா. "என்று கத்திப் பார்த்தது.
காலை வேக வேகமாக உதறிப் பார்த்தது .
கால்கள் எல்லாம் மரத்துப் போனது போல்
அசைய மறுத்தன.
கோபத்தால் கரடி உறுமியது.
தலையால் பனிக்கட்டியை முட்டி...முட்டித் தள்ளியது.
ஒன்றும் செய்ய முடியவில்லை.
" காப்பாற்றுங்கள்....காப்பாற்றுங்கள் " கத்திப் பார்த்தது.
உதவிக்கு யாரும் வரவில்லை.
உறைபனி கொஞ்சம் கொஞ்சமாக கரடியையும்
உறைய வைத்துக் கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் பனியோடு பனியாக
புதையுண்டு மாண்டு போயிற்று கரடி.
இவற்றை எல்லாம் ஒரு பாறை இடுக்கில்
இருந்து பார்த்துக் கொண்டிருந்த அணில்,
" ஐயோ...பாவம்...கோபம் படுத்தும்பாடு...
இப்படியா போய் முடியணும்..." என்று
கரடிக்காக பரிதாபப்பட்டது.
" இதைத்தான் வள்ளுவர் அப்பவே சொன்னார்.
எதைக் காத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை....
கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்....
அப்படி கட்டுப்படுத்த தவறினால்...
கரடிக்கு நேர்ந்த கதிதான் வந்து சேரும் ...."
" கேட்டா கேளுங்க...கேட்காட்டி போங்க....
சொல்லுறத சொல்லிபுட்டேன் "என்றபடி,
" தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் "
குயில் பாடிக் கொண்டே பறந்து சென்றது.
Comments
Post a Comment