சோறு வேணும்

   
        சோறு வேணும்
 "பாட்டி....பாட்டி..."

"எதுக்கு கத்துறே...
மெதுவா கூப்பிட முடியாது "

"எனக்கு சோறு வேணும்..."

"கொஞ்சம் பொறு... ரேசன் கடையில
ரேசன் போடுறாவளான்னு பார்த்துட்டு
 வர்றேன்."
 
" எனக்கு இப்ப சோறு வேணும்...வேணும்..
 வேணும்."பிடிவாதம் பிடித்தான் முகிலன்.
 
" ஒரு அரைமணி நேரம் பொறு....
 கஞ்சி வச்சு தர்றேன்"

" வயிறு பசிக்குது...பசிக்குது..பசிக்குது..."

" சொன்னா கேட்க மாட்ட ....
 பானையில கொஞ்சம் பழந்தண்ணி
 கிடக்கு. ஒருவாயி குடிச்சிட்டு
 கொஞ்ச நேரம் தூங்கு..."

"எனக்கு கஞ்சி வேண்டாம் ....
சோறு வேணும் ....சோறு வேணும்...
சோறு வேணும் "

"பள்ளிக்கூடம் திறக்குறது வரை
சோத்து நினைப்பே வரக்கூடாது.
பேசாம ...கொடுக்குறத தின்னுகிட்டு
கிடக்கிறத பாரு "கோபப்பட்டார் பாட்டி.

"பள்ளிக்கூடம் எப்போ திறக்கும் "

"நான் என்னத்த கண்டேன்....அது
திறக்குற நேரம் திறக்கும் "

 அப்போது பக்கத்து வீட்டுப் பெண்
சுசிலா வந்து, 
" செல்லத்தாயி அக்கோ ....உங்கள
 கங்காணி அண்ணன் வரச்சொன்னாவ..."
 என்றாள்.

" என்னது ....கங்காணியா....
இண்ணைக்காவதுவேலை
  ஏதும் இருக்கா.."
  
 " இருக்கு..அதத்தான் சொல்லிபுட்டுபோவ
  வந்தேன்."
  
"  எந்த ஏரியாவுல வேலை..."

"  உனக்கு வேலை இல்லையாங்கோ.."

"  ஏன்...எனக்கு மட்டும் வேலை இல்லையா..'
பதறினாள்  செல்லத்தாயி.

"கங்காணி சொல்லிபுட்டு வரச் சொன்னாரு.
நான் சொல்ல வந்தேன்..மேல் கொண்டு
ஏதும் கேட்கணுமா... கங்காணி
ஊர் கிணற்றாங்கரையில் நிற்கிறாரு...
போய் கேட்டுக்க .".சொல்லிட்டு அவபாட்டுக்குப்
போனாள் சுசிலா...

சுசிலா சொன்னதுதான் தாமதம்
ரேசன் கடையை மறந்துட்டு 
ஊர்கிணற்றங்கரையை நோக்கி ஓடினாள்
செல்லத்தாயி.

அங்கே கங்காணியைச் சுற்றி
வேலைக்குப் போக தயாராக பத்துபேர்
நின்றுகொண்டிருந்தனர்.

கங்காணியைப் பார்த்ததும்,
"என்னை மட்டும் ஏன் வராண்டாம் என்று
சொல்லுறிய. "சொல்லும்போதே கண்ணீர் 
பொலபொலவென்று வடிந்தது.

"இது நல்ல வேடிக்கையால்லா இருக்கு..
நான்ஏதோ உன்னை வர வேண்டாம் என்று
சொன்ன மாதிரி என்கிட்ட வந்து 
அழுதுட்டு நிக்குற.."என்றார் கங்காணி.

"நீங்க சொன்னீக என்றுதான் சுசிலா
வந்து சொல்லிட்டு போனா..."
விசும்பி விசும்பி அழுதாள் செல்லத்தாயி.

"முதல்ல இந்த அழுகைய நிப்பாட்டிட்டு
நான் சொல்லுறத கேளு.."

"எனக்கு மட்டும் ஏன் வேலை இல்ல..."

"உனக்கு மட்டும் வேலை இல்லை  என்று 
சொல்லல தாயி ....கவர்ண்மெண்ட் ஆர்டர் 
போட்டுருக்கு..."

" இந்த செல்லத்தாயிக்கு வேலை இல்லைன்னா..."

"புரியாம பேசாத....ஐம்பது வயசுக்கு
மேலே உள்ளவங்களுக்கு நூறுநாள் 
வேலை திட்டத்துல  இனி வேலை கிடையாதாம்."

" தம்பி இது என்ன அநியாயம் தம்பி ...
இந்த நூறுநாள் வேலைய நம்பிதான்
என் பொழப்பே  ஓடுது...உங்கள கெஞ்சி
கேட்டுகிறேன் தம்பி..."

" எக்கோ...உன்னை  நினைச்சா எனக்கு
 பாவமாதான் இருக்கு...நான் என்ன 
 செய்யட்டும் .நீயே சொல்லு....அரசாங்க
 உத்தரவை எதிர்த்து நான் ஒண்ணும்
 செய்ய முடியாது "
கையை விரித்தார் கங்காணி.

அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல்,
"பாவி மவ இந்த ஒத்த பிள்ளைய 
பெத்து கையில தந்துட்டு போயிட்டா...
நான் என்ன பண்ணட்டும்..."
புலம்பியபடியே வீட்டிற்கு வந்தாள்
செல்லத்தாயி பாட்டி.

வீட்டுக்கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தார் .
 அங்கே பேரனைக் காணோம்.
 பகீரென்றது....
"கொரோனா நேரத்தில் வெளியில் எங்கும்
போகாத என்று எத்தனை தடவை
சொல்லுறது....ஒத்த சொல்லு 
கேட்கமாட்டேங்குது...".என்று 
புலம்பிக் கொண்டே...

"ஏலே....முகிலா....."
சத்தம் கொடுத்துப் பார்த்தாள் செல்லத்தாயி.

"அனக்கம் இல்லையே...எங்க போயிருப்பான்.."
வெளியில் நின்னு மறுபடியும்
மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தாள்.

"வயிறு பசிக்குன்னான்....அதுக்குள்ள 
எங்க போயிட்டான்...
ஒரு கடை கடகிட திறந்திருந்தாலும்
ஒரு வடகட வாங்கிக் கொடுக்கலாம்...
சுத்தமா  எல்லாத்தையும் மூடி வச்சுபுட்டாவ..."
ஆற்றாமையில் தனக்குத்தானே 
புலம்பியபடி தெருவில் நின்று 
அங்குமிங்கும் பார்த்தாள் 
செல்லத்தாயி பாட்டி.

முகிலனை  பக்கத்தில் எங்கும் காணோம் ...
"புள்ள வயித்து பசி தாங்க மாட்டானே...
இவ்வளவு தேரம் எங்குட்டும் நிற்கவும்
மாட்டான்..."
என்று சொல்லியபடி
ஊருக்குள்ள தேடிப் போனாள் செல்லத்தாயி.

அப்போது எதிரில் ஒரு சிறுமி வர,
"முகிலனை பார்த்தியாம்மா ..."
என்று  கேட்டார்.

"முகிலனா....பாட்டி ..அவன் பள்ளிக்கூடத்து 
வாசலுல உட்கார்ந்திருக்கான். "

"பள்ளிக்கூடத்து வாசலிலா....அவன்
அங்க எதுக்குப் போனான்."

"எனக்குத் தெரியாது........" என்பதுபோல 
உதட்டைப் பிதுக்கியபடி பதில் 
சொல்லிவிட்டுச் சென்றாள் 
அந்தச் சிறுமி.

"பள்ளிக்கூடத்துக்கு எதுக்குப்  போயிருப்பான்..."
தனக்குள்ளேயே கேள்வியைக் கேட்டபடி
பள்ளிக்கூடத்துப் பக்கம் போனாள்...பாட்டி.

அங்கே.  ....பள்ளிக்கூட வாசலில் முகிலன்
கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக
அமர்ந்திருந்தான் முகிலன்.

அதிர்ந்து போய் அருகில் சென்றார்
செல்லத்தாயி.
முகிலனோடு சேர்ந்து நாலைந்து
சிறுவர்கள் பள்ளிக்கூடத்து  வாசலில் 
உட்கார்ந்திருந்தனர்.

"முகிலா....உன்னை எங்கெல்லாம் 
தேடுறது..."அதட்டினார் செல்லத்தாயி பாட்டி.

" எனக்கு சோறு வேணும்."
ஒற்றை வரியில் பதிலளித்தான் முகிலன்.
குரலில் உறுதி இருந்தது.

" சோறு வேணும்னா வீட்டுக்குத்தான் வரணும்.
பள்ளிக்கூடத்து வாசலுல உட்கார்ந்து
 என்ன பண்ணுற"

" வீட்டுலதான் சோறு இல்லியே..."

"வா வீட்டுக்கு....கஞ்சி வச்சி தர்றேன்."

"எனக்கு சோறுதான் வேணும்."

"பள்ளிகூடம் திறந்த பின்தான்
சோறு தருவாவ...
வா...வீட்டுக்குப் போவோம்.."

"வேண்டாம் எங்களுக்கு  சோறு வேணும்...
சோறு வேணும்...சோறு வேணும்..."
மற்ற சிறுவர்களும் சேர்ந்து 
கத்த ஆரம்பித்தனர்.

"பெரிய சாருகிட்ட சொல்லி சோறு
போட சொல்லு..."என்றான் முகிலன்.

"போடுவாக.. போடுவாக....
பள்ளி திறந்த பின்னர் போடுவாக...
இப்போ வா..வீட்டுக்குப்
போவோம்..."

"ஆயா அக்கா கிட்ட சொல்லி சோறு 
பொங்க சொல்லு..."
மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டு
நின்றான் முகிலன்.

"வா...நாளைக்குப் பொங்க சொல்லுறேன்.."

" நாங்க வர மாட்டோம்...
நல்ல சோறு சாப்பிட்டு...
நான்கு மாசமாச்சு..."
சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து
கத்தினர்.

அதற்குள் மற்ற பெற்றோரும்
வந்துவிட , "இதென்ன கருமமா போச்சு
பச்ச புள்ளைக  நல்ல சோத்துக்கு
கெருமாந்துல்லா கிடக்குதுருக்கு....
பாவமால்லா
இருக்கு." அங்கலாய்த்தார் ஒரு பெரியம்மா.

அதற்குள் விசயம் பெரிய சார் வரை போக
பெரியசாரும் வந்தார் .

பெரிய சாரைக் கண்டதும் தடபுடலா
எழும்பின சிறுவர்கள் வாய் பேசாமல்
தரையைப் பார்த்தபடி நின்றனர்.

"என்னம்மா பிரச்சினை..."செல்லத்தாயியைப்
பார்த்துக் கேட்டார் தலைமையாசிரியர்.

வாய் பேசாது பிள்ளைகளைக் கைகாட்டினார்
செல்லத்தாயி.

"என்னப்பா....என்ன பிரச்சினை "
பிள்ளைகளைப்
பார்த்துக் கேட்டார்.

"சோறு வேணும் "நிமிர்ந்து பார்க்காமலேயே
 பதிலளித்தான் முகிலன்.
 
" பள்ளிக்கூடம் திறந்த பின்தான் சோறு
 கிடைக்கும் ."
 
" எப்போ பள்ளிக்கூடம் திறக்கும் ?"
இன்னொரு மாணவன் ஆவலோடு கேட்டான்.

" தெரியல....அரசாங்கம் ஆர்டர் தந்ததும்
 திறக்கும்."
 
" எங்களுக்கு சோறு வேணும்.."

" இப்போ எப்படி முடியும்.."

" ஆயா அக்காவ கூப்பிட்டு பொங்க
 சொல்லுங்க  பெரிய சார்."
கெஞ்சாத குறையாக கெஞ்சினான்
ஒரு சிறுவன்.

"அது என்னால முடியாதுப்பா...."

"எங்களுக்கு சோறு வேணும் சார்...
அக்காவ பொங்கச் சொல்லுங்க "
சொன்னதையே திருப்பித் திருப்பி 
சொல்லிக் கொண்டு நின்றனர் சிறுவர்கள்.
 
 பிள்ளைகளுக்கு என்ன பதில்
 சொல்வதென்றே தெரியாமல்
 அப்படியே  நின்றார் தலைமை ஆசிரியர்.
 
" பெரிய சார் சோறு வேணும் சார்...
 சோறு தாங்க சார்" ஓடிப்போய்
 தலைமை ஆசிரியரின் கால்களில்
 விழுந்தனர் சிறுவர்கள்.
 
 அதற்குமேலும் தலைமை ஆசிரியரால்
 சும்மா நிற்க முடியவில்லை.
 அப்படியே சிறுவர்களைக்
  கட்டித் தழுவிக் கொண்டார்.
  
 சிறுவர்கள் சோறு எப்போ
 கிடைக்கும் சார் என்பதுபோல
 பெரிய சாரின் முகத்தையே பார்த்தனர்.
 
 சிறுவர்களின் முகத்தை பார்க்க 
 முடியாமல் கண்ணீர் கண்களை மறைக்க
 தரையைப் பார்த்தபடி நின்றார்
 தலைமையாசிரியர்.
 
 
  

Comments

  1. கிராமத்து பேச்சுவழக்கு மிக அருமை.நிகழ்ச்சியாக உணர முடிந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts