சின்னச்சிட்டு

               சின்னச்சிட்டு


கோடைகாலம்.பல நாட்களாக மழை காணா பூமி.
    வறட்சியின் பிடியில்  மாட்டிக்கொண்டு
    விலங்குகள் எல்லாம் பரிதவித்தன.
    நீருக்காக விலங்குகள் அங்குமிங்கும் ஓடின.
     தாகம் யாரைத்தான் வ
    
    நீர் நிலையைத் தேடி மான் ஒன்று
   காட்டுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது.
  
   காடு முழுவதும் தேடியது...தேடியது.
   தேடிக்கொண்டே இருந்தது.
 
கடுகளவு தண்ணீர் கூட கிடைக்கவில்லை.

களைப்பில் அப்படியே கீழே விழுந்தது மான்.
  நாக்கு வறண்டு போயிற்று.
  எழும்பி நடக்கவும் உடலில் தெம்பில்லை.


  நிலம்  அனலாக கனன்று கொண்டிருந்தது.
  வெப்பம் தாங்க முடியாத மான்
  மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பரிதாபமாக கிடந்தது.
 
  அப்போது அந்த வழியாக பறந்து வந்த
  சிட்டுக்குருவி ஒன்று மானைக் கண்டது.
 
     "ஆ...இது என்ன?
     மான் இப்படி கிடக்குது?    ...ஐயோ..பாவம்."
    
   அருகில் சென்று பார்த்ததுமானுக்கு உயிர் இருந்தது.

   வாய் பிளந்த நிலையில் மான் கிடக்க
  பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
  
    " கொஞ்சம் நீர் இருந்தால் போதும் மான் பிழைத்துக்
   கொள்ளும் "   என்று நினைத்தது குருவி.
     கீச்சு கீச்சென்று குரல் கொடுத்து தன்
  குஞ்சுகளை எல்லாம் வரவழைத்தது.
   குஞ்சுகள் எல்லாம்  பறந்து  வந்தன.
  


"  மானுக்கு என்னாச்சும்மா..." என்றபடி அக்கறையாக கேட்டன.

" மான் தாகத்தால் மயங்கி கிடக்கிறது....என்ன செய்வதென தெரியவில்லை "என்றது  குருவி.

  "   அம்மா மலை இடுக்கில் சிறிது தண்ணீர் கிடக்கிறது.
   இந்த மானை அங்கே கூட்டிட்டுப்
   போனால் என்ன" என்றது ஒரு குஞ்சு.
    
" மான்தான் மயக்கமாக கிடக்கிறதே .
அது எப்படி  நடக்கும்  "

"இப்போது மானை எழுப்ப வைக்கணும் .
கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும் "
ஐடியா கொடுத்தது இன்னொரு குஞ்சு.

   " சரியான ஐடியா.....புறப்படுங்க  புறப்படுங்க..." 

   என்றது குருவி.
  
"  எங்க போகணும்..."

   "மலைக்குத்தான்....அங்கு சுனையில் கொஞ்சம் தண்ணீர்
   கிடக்குல்ல..."
  
   " கிடக்கிறது....அதை எப்படி கொண்டு வருவது.?.
  
    "உங்க அலகால் எவ்வளவு முடியுமோ 
    அவ்வளவு தண்ணீர் மொண்டு கொண்டு வாங்க  ..". 
    என்றது குருவி.

      "சரியான ஐடியா....அம்மா வாங்க..."

சிட்டுக்குருவிகள் மலையை நோக்கி பறந்தன.

எல்லோருமாக சேர்ந்து தண்ணீரை அலகில்
மொண்டு வந்து சொட்டு சொட்டாக 
மானின் வாயில் ஊற்றின.

"ஓடுங்க ...ஓடுங்க மறுபடியும் கொண்டு வாங்க"
  
மறுபடியும் மறுபடியும் பறந்து சென்றுமொண்டு
வந்த நீரை மானின் வாயில் சொட்டு சொட்டாக நீரை
ஊற்றியன .

" அம்மா   உயிர் வந்துட்டா பாருங்க..." சோர்ந்து
போன ஒரு குஞ்சு கேட்டது.

" கொஞ்ச நேரத்தில்  எழும்பிடும் ....போங்க போங்க   "
விரைவு படுத்தியது குருவி.

குஞ்சுகள் மறுபடியும் பறந்து சென்று நீர் கொண்டு
வந்து ஊற்றின.

சொட்டுசொட்டாக நீர் வாயில் விழுந்ததும்
மான் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது.
 
இப்போது  மானுக்கு உயிர் வந்தது போல் இருந்தது.

  மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தது மான்.
   
மானால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.
   
  சிட்டுக்குருவிகள் தம் சிற்றலகால் மொண்டு
  வந்த நீரை மானின் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தன.
    
இதுவரை மருட்சியோடு பார்க்கும் மான்
முதன் முறையாக பரிதாபமாக பார்த்தது.
    
அந்த பார்வையில் ஒரு கெஞ்சல் தெரிந்தது.
கண்களில் நீர் வடிந்தது.

நன்றி சொல்ல வார்த்தை இல்லாமல்
கண்களால் பேசியது மான்.

"உங்கள் உதவியை உயிருள்ள வரை மறக்க மாட்டேன்"
  என்று சொல்லாமல் சொல்லின கண்கள்.
 
"  பரவாயில்லை.. பரவாயில்லை...ஆர் யு ஓகே ..."என்றது
  குருவி.
"  என் உயிரைக் காப்பாற்றிட்டீங்க...மிக்க நன்றி"

"  இதுக்குப் போய் நன்றி எல்லாம் சொல்லிகிட்டு..."

"  நீங்க நல்லா இருக்கீங்க இல்ல அது போதும்..."

  "இந்த நன்றியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன்"
   என்றபடி எழுந்து நின்றது மான்.
   
   சிட்டுக்குருவிகள் மானிடம் விடை பெற்றுக் கொண்டு
   மலையை நோக்கிப் பறந்து சென்றன.
   
   இந்த நெகிழ்ச்சியான காட்சியை மரத்தில்
   இருந்து பார்த்துக் கொண்டிருந்த குயில்,
   
   " சின்ன உதவியாக இருந்தாலும்  சரியான நேரத்தில்
    சிட்டுக்குருவிகள்  உதவி் செய்திருக்கின்றன."
   
    "அப்பப்பா....உயிர் போனால் திரும்ப கிடைக்குமா...
    இது சின்ன உதவி  அல்ல...
    மிகப் பெரிய உதவி."வியந்து போனது குயில்.
   
   இதைத்தான் வள்ளுவர்,
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

  என்று  கூறியிருப்பாரோ? இருக்கலாம்... இருக்கலாம்.
 
   நாமும் இன்றிலிருந்து யாருக்காவது
   உதவி செய்யணும் "என்று
   பாடலைப் பாடிக் கொண்டே குயில் பறந்து சென்றது.
          
   
   


        

Comments

Popular Posts