ஓடிவிளையாடுப் பாப்பா

              ஓடி விளையாடு பாப்பா

நமக்குத் தொழில் கவிதை
 நாட்டிற்கு உழைத்தல்
 இமைப்பொழுதும் சோராதிருத்தல்"
 என கவிதையையே தொழிலாகக் கொண்டவன் பாரதி.

பாரதி என்றதுமே கூடவே ஓடிவந்து அடையாளம் 
காட்டி நிற்கும்  பாடல்களுள் ஒன்று ஓடி விளையாடு
பாப்பா.
 
 பாரதி வெறும் கவிஞன் மட்டுமல்ல.
அவனுடையப் பாடல்களில் நம்மைத் 
தட்டி எழுப்பும் ஒரு மந்திர சக்தி இருக்கும்.
இயற்கைமீது கொண்ட காதல் இருக்கும்.
பெண்ணியச் சிந்தனை இல்லாமல் இருக்காது.
சாதி எதிர்ப்பு கருத்துகள் இருக்கும்.
மனிதநேயப் பண்பு கொட்டிக் கிடக்கும்.
சமுதாயம் முன்னேற்றம் காண வேண்டும்
என்ற வேட்கை  இருக்கும்.
பண்பாட்டைப் பேண வேண்டும் என்ற தாகம் இருக்கும்.

"தேடிச்சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ "

என மார்தட்டியவர் பாரதி.

இலக்கண வரம்பை தகர்த்தெறிந்து பாட்டுக்கொரு
புலவன் என வலம் வந்த பெருமைக்கு உரியவர்.
பாமரரும் உணரும் வசனக் கவிதை எழுதி
 புதுக்கவிதைக்கான பாதை அமைத்துத் தந்தவர்.
 
பாரதி என்றாலே பாப்பாப் பாட்டும்
ஓடிவந்து கண்முன் நிற்கும்.
ஓடிவிளையாடு பாப்பா என்று பாடாமல்
யாரும் பள்ளிப் பருவத்தைக் கடந்திருக்க முடியாது.
எளிதில் பொருள் அறிய வைக்கும் 
சீரான நடை.
பாப்பாவை முன்னிருத்திப் பாடுவதால்
எனக்கு எழுதப்பட்டதோ என்ற உணர்வைத் 
தூண்டும் பாடல்.
பாரதி தன் மகளுக்காகப் பாடிய பாடல் இதோ
உங்களுக்காக:


ஓடி விளையாடு பாப்பா  _ நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா 
கூடி விளையாடு பாப்பா _ ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா.

  
  சின்னஞ்சிறு குருவி போலே _ நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு _ நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா .


கொத்தித் திரியுமந்தக் கோழி _ அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் _ அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா _ அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் _ அது
மனிதருக்குத் தோழனடிப் பாப்பா 

வண்டி இழுக்கும் நல்லகுதிரை _ நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு _ இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா .

காலை எழுந்தவுடன் படிப்பு _ பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு _ என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா .

பொய்சொல்ல கூடாது பாப்பா _ என்றும்
புறஞ்சொல்ல கூடாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா _ ஒரு 
தீங்கு வர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் _ நாம் 
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா _  அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா .

துன்பம் நெருங்கிவந்த போதும் _ நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு _ துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா _ தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி _நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற _எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா _நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே _ அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம்  _அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா _ தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா 
கிடக்கும் பெரியகடல் கண்டாய் _ இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு _ நல்ல 
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் _ இதைத் 
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா _ குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி _ அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்களிடத்தில் அன்பு வேணும் _ தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும்  _ இது
வாழும் முறைமையடி பாப்பா.


Comments

  1. மிகவும் பிடித்த பாரதியார் பாடல்களில் ஒன்று ஓடிவிளையாடு பாப்பா.அதை நினைவுபடுத்தியதற்காக மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts