படைப்பு பல படைத்து ...
படைப்பு பல படைத்து....
சங்கப் பாடல்களில் காதலும் வீரமும்
நிரம்ப இருக்கும்.காதல் மட்டுமல்ல
நல்ல கருத்துள்ள பாடல்கள் ஏராளம் உண்டு.
படித்து படித்த இன்பறுத்தக்க கருத்தாழமிக்கப்
பாடல்கள் உண்டு. உவமை நயங்கள் ஓவிங்களாக
காட்சிகளை நம் கண்முன் கொண்டு நிறுத்தும்.
புலவர்களால் மட்டும்தான் பாட்டெழுதி
பரிசில் வாங்கிச் செல்ல முடியுமா?
நாங்களும் புலவர்களுக்கு இணையாக பாடல்
எழுதும் புலமை பெற்றவர்கள்தாம் என்று நிரூபித்த
பல மன்னர்கள் உண்டு.
வாழ்க்கையை அனுபவித்து மன்னர்கள் பாடிய பல
பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணமுடியும்.
அறத்தோடு வாழ வேண்டும் என்று
அறவுரைகளைத் தம் கவிதையில் தந்தனர்.
வீரத்தைப் புகழ்ந்து பாடி நம்மைப் பிரமிக்க
வைத்துள்ளனர். இல்லறத்தைப் பாடி
இனிமை தந்துள்ளனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக
சிறுபிள்ளையின் குறும்பை அப்படியே நம்
கண்முன் படைக்கிறார் ஒரு புலவர்.
இல்லை...இல்லை. புலமை மிக்க ஒரு மன்னன்.
பாண்டியன் அறிவுடை நம்பி என்ற
ஒரு மன்னன் உண்டு.
அவர் பெயருக்கு ஏற்றபடியே நல்ல அறிவுடையவர்.
அவருக்கு நெடுநாளாக மக்கட்செல்வம்
இல்லாதிருந்தது.
அதனால் அவர் மிகவும் மனம் வருந்தினார்.
அதன்பிறகு ஒரு பிள்ளையைப் பெறும் பாக்கியம்
வாய்த்தது. அவரால் அந்த மகிழ்ச்சியைக்
கொண்டாடாமல் இருக்க முடியவில்லை.
தான் பெற்ற பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும்
மகிழ்ச்சியோடு பாார்த்தார்.
அந்தப் பிள்ளை செய்யும் சிறுசிறு குறும்புகளில் தன்
உள்ளத்தைப் பறி கொடுத்தார்.
இதுவல்லவோ உண்மையான இன்பம்
என்று உள்ளி உள்ளி உவகையுற்றார்.
எவ்வளவு செல்வம் இருந்தாலும் இந்த
செல்வத்திற்கு ஈடாகா என எண்ணி எண்ணி
பேரானந்தம் அடைந்தார்.
பிள்ளையின் பேச்சும் செயலும் கண்ணுக்கும்
செவிக்கும் இன்பம் பயப்பவை என்பதைக்
கண்டு அனுதினமும் ஆனந்தக் கடலில்
மூழ்கிக் கிடந்தார்.
தான் பெற்ற இன்பத்தை அப்படியே
வார்த்தையாக வடிவம் கொடுத்து நம்
நம் கண்முன் உலவ விட்டார்.
சின்னக்குழந்தை உணவு உண்ணும்போது
செய்கின்ற குறும்புகளை அப்படியே
நம் கண்முன் காட்சியாக்கித் தந்த பாடல் இதோ:
படைப்புப்பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குற இல்லைத் தாம் வாழும் நாளே!
புறநானூறு _ 188
பாடியவர். : பாண்டியன் அறிவுடை நம்பி
திணை : பொதுவியல்
துறை : பொருண்மொழிக் காஞ்சி
மக்களின் வாழ்விற்கு இன்றியமையாதனவும்
இம்மை மறுமைகளில் மக்களின் உயிருக்கு
உறுதி பயக்கக் கூடியனவுமாகிய உயர்ந்த
படிப்பினைகளை உயர்ந்தோர் கூறுவதாக
அமைவது பொருண்மொழிக் காஞ்சித் துறை
எனப்படும்.அந்த துறையின் கீழ்ப்
பாடப்பட்ட பாடல் இது.
ஏராளமான செல்வம் இருக்கிறது.
பலரோடு சேர்ந்து உண்ணுகின்ற
வசதி வாய்ப்பு உள்ளது.
அப்படி நாம் பலரோடு சேர்ந்து மகிழ்ச்சியாக
உணவருந்திக் கொண்டிருக்கும் வேளை.
இடையினில் குழந்தை குறுகுறுவென நடந்து
வந்து தன் சிறு கையை நீட்டுகிறது .
நீட்டிய கையில் கொடுக்கப்பட்ட
நெய்யுடை சோற்றை வாங்கி அப்படியே
வாயில் வைத்துவிடுமா?
தரையிலும் உடம்பிலும் சிந்தி சிதற விடுகிறது
குழந்தை. அத்தோடு விட்டுவிட்டதா?
தரையில் விழுந்த சோற்றை மறுபடியும் தொட்டு,
வாயால் கவ்வி எடுக்கிறது.
கையால் சோற்றை அளைந்து விளையாடுகிறது.
அந்தக் காட்சியைப் பார்த்த பெற்றோர்
அப்படியே மகிழ்ச்சியில் வாயடைத்து நிற்கின்றனர்.
உள்ளுக்குள் உவகை பொங்குகிறது.
பாரு என் பிள்ளையை என்பது போல்
ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்
கொள்கின்றனர்.
இதுதான் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி.
இப்படி நம்மை தம் செயலால் கட்டிப்போடும்
குழந்தை பாக்கியம் வாய்க்கப்
பெறாதவர்கள் வாழ்தலுக்கான
எந்த பயனும் இல்லாதவர்களாக கருதப்படுவர்.
அவர்கள் வாழும் நாட்கள் பயனற்றதாகவே இருக்கும் .
என்கிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.
குழந்தை உணவு உண்ணும் காட்சியை
நம் கண்முன் படைத்து அந்த அழகில்
தான் மெய் மறந்த... தன்னைத் தொலைத்த
அனுபவத்தை நம்மையும் நுகர வைத்து
ஒரு அருமையான காட்சியை நம்முன் படைத்த
மன்னனின் புலமைக்கு முன்னால் எதுவும் ஈடாகுமா...
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர் "
என்று குழந்தையின் மழலைமொழியில்
தன்னை இழந்த வள்ளுவர்,
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் "
என்று சிறுகுழந்தைகள் கை அளாவிய
கூழும் அமிழ்தமாகும் என்று குழந்தைகளோடு
தாம் கொண்டாடி உண்டு மகிழ்ந்ததுபோல
நம்மையும் கொண்டாட வைக்கிறார்.
வள்ளுவரும் நம்மைப் போல பாண்டியன்
அறிவுடை நம்பியைப்போல
குழந்தைகளிடம் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்
என்பதற்கு இதற்குமேலும் சான்றுகள்
வேண்டுமா என்ன....
மழலை இன்பம் மாறா இன்பம்...காலம் மாறலாம்.
காட்சிகள் மாறலாம்... கோலம் மாறலாம்....
கொள்கை மாறலாம்.... மழலைமீது கொள்ளும்
அன்பு மாறவே மாறாதது.
எவ்வளவு கவலை இருந்தாலும் மழலையின்
புன்சிரிப்பில் நாம் தொலைந்து போவோம்.
இதற்கு அரசன் மட்டும் விதிவிலக்கா என்ன...
This is Amazing 🙏
ReplyDeleteகுழந்தைகளிடம் மனதை பறிகொடுப்பதை மிக அருமையாக விளக்கியுள்ளீர்.அற்புதம்.
ReplyDeleteபடம் பார்த்துக் கதை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய் அற்புதப் படைப்பு. 👏👏👏👏
ReplyDeleteஅருமை அருமை
ReplyDelete