அதியமான் ஔவை நட்பு



  அதியமான் ஔவை நட்பு



ஔவையைப்  பற்றி எழுதும் எவரும்
அதியமானை விட்டுவிட்டு வெறுமனே

ஔவையை மட்டும் எழுதிவிட்டு சென்றுவிட

முடியாது.

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்

கொண்ட நட்பு எவ்வாறு தமிழ் இருக்கும்வரை

எல்லோராலும் பேசப்படுமோ அது போன்றுதான்

ஔவை அதியமான் நட்பும் 

தமிழும் தமிழரும் இருக்கும் வரை பேசப்படும்.

 அந்த அளவு உயர்வான நட்பு 

அதியமான் ஔவை நட்பு.

அதியமான் என்றதும் ,
"நெல்லி அமிழ்து விளை தீங்கனி
ஔவைக்கு ஈந்த அதியன் "
என்று சிறுபாணாற்றுப்படையில் நல்லூர்
நத்தத்தனார் கூறுவது  நினைவுக்கு வரும்.

ஒருநாள் தனது அமைச்சர் மற்றும்

படைகளோடு காட்டிற்குச் செல்கிறான்

அதியமான் நெடுமான் அஞ்சி. 

முட்செடிகளுக்கிடையே ஒரு நெல்லி மரம்.

அதில் அரிதாக ஒரே ஒரு 

நெல்லிக்கனி கிடக்கிறது.

மன்னனின் கண் எதேச்சையாக நெல்லிக்கனி

மீது விழுகிறது. 

மனதிற்குள் ஏதோ ஒரு கணக்குப் போட்டுப்

பார்க்கிறான் மன்னன்.

மன்னனின் உள்ளக் கிடக்கையைப்

புரிந்து கொண்ட வீரன் ஒருவன் 

முட்செடிகளுக்கு இடையே

நுழைந்து சென்று ,அதைப் பறித்து வந்து

மன்னனிடம் தருகிறான் .

" மன்னா! இந்த நெல்லிக்கனி மிகவும் 

சிறப்பு வாய்ந்தது.  அரிதாக எப்போதாவது

கிடைப்பதுண்டு.இதை உண்டால் நெடுநாள் உயிர் 

வாழலாம் . இதைத் தாங்கள் உண்ணுங்கள்"

என்று கூறி மன்னன் கையில் கொடுக்கிறான். 

   "ஆ... கருநெல்லி..."கையில் வாங்கிப் பார்த்த 

மன்னனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

" நெடுநாள் வாழலாமா..."திருப்பிக் கேட்கிறான் மன்னன்.

"  அப்படியானால் ...அப்படியானால் இதை 

அவர் உண்ணுதல்தான் நன்று."
 
"  மன்னா! அவரா...என்ன சொல்லுகிறீர்கள்..."

கேட்கிறார் அமைச்சர்.

"ஒன்றுமில்லை..  ..நேரம் ஆகிறது.வாருங்கள்

அரண்மனைக்குத் திரும்புவோம்" என்று

அரண்மனைக்குத் திரும்புகிறான் மன்னன்.

 மறுநாள் அரண்மனைக்கு வருகிறார் ஔவை.

  ஔவையைப் பார்த்ததுமே அதியமானுக்கு
   மிக்க மகிழ்ச்சி.

"எதிர்பார்த்தேன் வந்துவிட்டீர்கள்" என்று

கூறி வரவேற்றார்.

"என்னை எதிர்பார்த்தீர்களா...ஏன்...

எதற்கு என்று தெரிந்து கொள்ளலாமா?"

என்று ஆர்வம் மேலிட கேட்கிறார் ஔவை.

காட்டிலிருந்து கொண்டு வந்த நெல்லிக்கனியைக்

 ஔவையிடம் கொடுத்து "அம்மையே...

இப்போது உங்கள் களைப்பு தீர இந்த

 நெல்லிக்கனியை உண்ணுங்கள்"

 என்கிறான் அதியமான்.

நடந்து வந்த களைப்பு.

என்ன ....யாது.... என்று அதற்குமேல் எதுவும்

கேட்காமலேயே தின்று  விடுகிறார் ஔவை.

 தின்ற பின்னர்தான் புரிகிறது.இந்த 

நெல்லிக்கனியில் தேவாமிர்தம் போன்ற 

ஒரு சுவை இருப்பதை உணர்கிறார்.

மன்னனிடம் நெல்லிக்கனியைப் பற்றி

விசாரிக்கிறார்.


 மன்னனும் "அரிதாக கிடைத்த நெல்லிக்கனி.

இந்த நெல்லிக்கனியை உண்டவர்கள் 

நெடுநாள் உயிர் வாழலாம் "என்ற உண்மையைக்

 ஔவையிடம் கூறுகிறான்.

"  தாங்கள் உண்ணாமல் நெல்லிக்கனியை

எனக்குக் கொடுத்த காரணம் யாதோ "

என்று ஆச்சரியம் மேலிட கேட்கிறார் ஔவை.

  "   இந்தச் சாவா அமிர்தமான நெல்லிக்கனியை

நான்  உண்பதைவிட தாங்கள்   உண்பதுதான் சாலச் 

சிறந்தது. நீங்கள் நெடுநாள் வாழ்ந்து

எம்  போன்றோருக்கு அறவுரை வழங்கி நல்வழி 

படுத்திடல் வேண்டும் "என்கிறான் மன்னன்.

அதியமானின் அன்பான மொழி கேட்டு 

அப்படியே நெகிழ்ந்து போகிறார் ஔவை.

வார்த்தைகள் கவியாக வெளி வருகின்றன.

"  இவ்வளவு கடினப்பட்டு 
  பறித்து வந்த நெல்லிக்கனியை எனக்கு
  கொடுத்தாயே...

நெல்லிக்கனியை பற்றிய உண்மைகள்

தெரிந்திருந்துமா அதை நீ உண்ணாது எனக்கு 

அளித்தாய்?

எம்மைப் போன்ற புலவர்

பெருமக்கள்மீது உனக்கு இவ்வளவு பெரிய

மதிப்பா !

கேட்கவே நெஞ்சம் நெகிழ்கிறது.

நான் நெடுநாள் வாழ விழைந்து 

நெல்லிக்கனி தந்தாய்.

உன் அன்பை என்னவென்பது ?

நீயும் நீலமணி மிடற்று ஒருவன் போல

என்றும் இறவாமல்

 நெடுநாள் வாழ்ந்து நீடித்தப் புகழ்

பெற்றிட வேண்டும்" என்று  வாழ்த்துகிறார்.
  
"வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்தகழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின்  பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க நமக்கு ஈத்தனையே !"
                                      _   புறநானூறு

அன்பு தன்னலம் பாராது என்பதற்கு

இதைத் தவிர வேறென்ன சான்று வேண்டும்?


ஒருநாள் அல்ல...
இருநாள் அல்ல...
பலநாள்...
பலரோடு சென்றாலும் முதல்நாள்
வரவேற்ற அதே புன்சிரிப்போடு வரவேற்கும்
மாண்பு கொண்டவன் அதியமான்
நெடுமான் அஞ்சி.

பரிசில் பெற வருவோர்க்கு அவனது அரண்மனை

வாயில் எப்போதும் திறந்திருக்கும்.

அதனால்தான் " பரிசிலருக்கு அடையா வாயில்"

என்று ஒரு புலவர் அதியமானைப் புகழ்ந்து பாடியிருப்பார்.

அதியமான் நல்லதொரு வீரன். பல போர்களில் வெற்றி

கண்டவன்.ஆனால் தகடூரில் நடந்த போரில்

சேரமான் பெருஞ் சேரல் என்ற மன்னனிடம் 

தோற்றுப் போகிறான்.

போரின் முடிவில் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு
போய்க் கிடக்கிறான்.

இந்தச் செய்தி ஔவையின் காதுகளுக்கு

வருகிறது.அதிர்ந்து போகிறார் ஔவை.

போர்க்களம் நோக்கி ஓடுகிறார்...

அங்கே அவர் கண்ட காட்சி

அவரை அதிர வைக்கிறது.

 தன் அருமை நண்பன்.... மார்பில்

எதிரியின் வேலைத் தாங்கி சாய்ந்து கிடக்கிறான்.

ஐயோ....என்ன கொடுமை இது...

புலம்புகிறார் ....போர்க்களத்தில் புரண்டு

அழுகிறார் ஔவை....அந்தப் பாடல்

கேட்போரின் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

இதோ அந்தப் பாடல்:

"......இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புண்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
ஐஅருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாங்குலன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லை
பாடுநர்க்கு ஒன்றீகுநருமில்லை "

என்று சொல்லிச் சொல்லி 

கண்ணீர் வடிக்கிறார்.
   

ஔவையின் புலம்பல் படிப்போரையும்

சேர்ந்து கண்ணீர் வடிக்க வைக்கிறது.  

போர்க்களத்தில் மார்பில் வேலைத்
தாங்கியவனாக மாண்டு கிடக்கிறான்
அதியமான் நெடுமான் அஞ்சி.

இதுவரை இரவலர்க்கு இல்லை என்னாது
வழங்கிய கை அசைவற்று ,செயலிழந்து
கிடக்கிறது.

பாடுநரைப் புகழும் வாய் நாவாடாது
கிடக்கிறது.

கருணை நிறை கண்கள் ஒளியிழந்து
போயிற்று.

புன்னகை சிந்தும் முகம் பொடியாடிக்
கிடக்கிறது.

பார்த்த ஔவையின் நெஞ்சு பதைபதைக்கிறது.

ஐயோ...இது என்ன கோலம் புலம்புகிறார்.

"மாற்றானின் வேல் உன் வீர மார்பை
துளைத்துச் சென்றதுவோ...

இல்லை...இல்லை..

உன்னிடம் வந்து கைநீட்டி இரப்போர்
கைகளையும் அல்லவா
துளைத்துச் சென்றுவிட்டது...

நேற்றுவரை இல்லை என்னாது 

வாரி வழங்கிய வள்ளல் நீ ...

இரப்போருக்கு ஈந்திட 

இதுவரை நீ இருந்தாய்.

இனி இரவலர்க்கு ஈந்திடுவார் எவர்

உளர்?

ஐயகோ! இனி  நான் என் செய்வேன்..

யாரிடம் போய் நிற்பேன்.. ..

இதுவரை கண்ணீர் அறியா

உன் குடிமக்கள் கண்கள் எல்லாம் கண்ணீர்

சொரிந்து நிற்கின்றனவே...

அவர்களைத் தேற்றுவார் எவருளர்?

புலவர்கள் நாளும் நின்னை 

நாடி வந்து பாடி ,பொருள் பெற்றுச் செல்வரே...

இனி யாம் யாரைப் பாடுதல் கூடும்?

பகைவன் எய்த வேல் 

உன் உயிரை மட்டுமா கவர்ந்து சென்றது?

பாடும் புலவர் பெருமக்களின்

நாவையுமல்லவா அந்த வேல் துளைத்துச் 

சென்றுவிட்டது....

பாட நா இழந்து தவிக்கின்றோமே...
ஐயகோ....என்ன கொடுமை இது...

இனி பாடுநர் யார்  உளர்....?

பாடுநர்க்கு ஈந்திடும் வள்ளல்  எவர் உளர்.?

உன்னை இழந்ததால்
எம்மை இழந்தோம்...

உன்னை இழந்ததால்
கவியை மறந்தோம்....

உன்னை இழந்ததால்
கவினைத் தொலைத்தோம்....

உன்னை இழந்ததால்

எல்லாவற்றையும் தொலைத்து 

நிராதரவாய் நிற்கின்றோமே..."

என அழுது புலம்புகிறார்.

கண்கள் கலங்குகிறதல்லவா!

இதுவல்லவோ உண்மையான  நட்பு !



  









Comments

  1. நட்புக்கு எடுத்துக்காட்டாக ஔவையின் கதையை மிக அருமையாக கூறியுள்ளீர்கள்.🌹

    ReplyDelete
  2. மிகவும் அருமையாக இருந்தது.

    ReplyDelete
  3. very pleased read the புறநானூறு பாடல்
    அந்த the related story

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா.
      கருத்து எதுவாக
      இருந்தாலும்
      எழுதுங்கள்.
      வரவேற்கிறேன்.

      Delete

Post a Comment