ஓடிக் கொண்டே இரு

                            ஓடிக்கொண்டே இரு


வாழ்க்கை  என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தான்.
      இங்கு ஜெயிக்கிறவன்தான் கொண்டாடப்படுகிறான்.
      தோற்றவர்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை.
      ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகளாக தான் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
      கொஞ்சம் பின் தங்கி விட்டால் கூட தூக்கி வீசப்பட்டு விடுவோம். ஆனால் எல்லா நேரங்களிலும் ஒரு குதிரை ஜெயிக்கலாம். ஒரு. குதிரை தோற்கலாம்.
       எல்லாம் கடந்து போகும்.
    இரவு என்றால் பகலும் உண்டு.
    எப்போதும் பகலாய் இருந்தால் சுவாரசியங்கள் இருக்காது.
    இரவாகவே இருந்து விட்டால் உலகம் தாங்காது.
    மாறி மாறி வரும்போதுதான் அடுத்தது என்ன என்று அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
    மாற்றம் என்ற சொல்லைத் தவிர மாறாதது எதுவும் இல்லை.
    நேற்று பார்த்த செடி இன்று அப்படியே இருப்பதில்லை.
    நேற்று நன்றாக பேசிய மாமா இன்று திண்டுக்கு முண்டுக்கு பேசுகிறார்.
    நேற்றுவரை நன்றாக படிக்காத மாணவன் இன்று ஓடி ஓடி படிக்கிறான்.
    நேற்றுவரை அம்மா அம்மா என்று அம்மா காலையே சுற்றிச் சுற்றி வந்த அண்ணன் இன்று அம்மாவைத் திரும்பியே பார்ப்பதில்லை.
    இப்படி எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நாளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
    நேற்று என் பெற்றோர் இப்படித்தான் இருந்தனர்.அதனால் நானும் அப்படித்தான் இருப்பேன் என்றால் நாமும் தாத்தா பாட்டி போல கொண்டையும் கடுக்கானும் போட்டுக்கொண்டு அலைய வேண்டியதுதான்.
    காலச் சூழல் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சி இன்மை ஆகியவை அவர்களை அப்படி இருக்க வைத்தது.
    ஆனால் இன்று எல்லாவிதமான வசதி வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
    இந்தச் சூழலில் நாம் நம்மை மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
    கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் ஓட கற்றுக்கொள்ள வேண்டும்.
    ஓட பழக்கிக் கொள்ளவில்லை என்றால் எல்லோரும் முந்தி சென்றுவிடுவர்.
    நாம் தோற்றவர்களாக பின்தங்கி போய்விடுவோம்.
    வேட்டி அணிந்து ஓட்டப் பந்தயத்தில் ஓடமுடியாது.
    ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் வேட்டியைக் கழட்டி வைத்துவிட்டு அரைக்கால் சட்டையோடு ஓடுவதில் எந்த தவறும் இல்லை.
    நான் அரைக்கால் சட்டை அணிய மாட்டேன் .முட்டு தெரியும் முழங்கால் தெரியும் என்று முனங்கிக்கொண்டிருந்தால் வேட்டியைக் கட்டிப் பிடித்துவிட்டு ஓரமாய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான்.
    இவர் என்ன சொல்லி விடுவாரோ அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று அங்குமிங்கும் பார்த்தால் எதுவுமே செய்ய  முடியாது.
    அடுத்தது என்ன ....அடுத்தது என்ன ....கேள்வி நம்மை ஓயவிடாது துரத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
    தேடலை நிறுத்திவிட்டால் நாம் தேங்கிய நீர் ஆகிவிடுவோம்.
    நமது பயணம் நாளும் புது வெள்ளத்தைச் சுமந்து செல்லும் நதிபோல இருக்க வேண்டும்.
    நாம் குளமாக இருக்க வேண்டுமா... நதியாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமா.....
    நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
    ஓடும் பயணத்தில் ஓராயிரம் பாடங்கள் கிடைக்கும். கிடப்பவற்றை அள்ளிக் கொண்டு ஓடும் புது வெள்ளம் போல ஓடு.
    ஓய வேண்டும் என்ற நினைப்பு ஓரமாய்கூட வந்துவிடக்கூடாது.
  கண்டவற்றை படிக்கவேண்டும் என்ற தாகம் ஏற்பட வேண்டும்.
    அறிவுப்பசி ஏற்பட்டுவிட்டால் கண்கள் புத்தகங்களைத் தேடும்.
    கால்கள் தானாக நூலகங்களை நோக்கி ஓடும்.
    பலரின் வாழ்க்கைப் பாடங்களைக் கற்கும் பண்பு வளரும்.
    அனுபவங்கள் ஆயிரம் கதைகளைச் சொல்லித் தரும்.
    வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் எப்படி நீந்திக் கரையேறுவது என்ற பாடத்தைச்சொல்லித் தரும்.
    ஒருசெடி எப்போது பூரணத்துவம் பெறுகிறது என்றால் இலை, பூ, காய் ,கனி என்று அடுத்த கட்டத்தை நோக்கி தன்னை நகர்த்தும் போதுதான்.
    அந்த முழுமை நம்முள் ஏற்பட வேண்டும் என்றால் நகர்ச்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
    குட்டையாக தேங்கி கிடப்பதும் நீரோடையாக ஓட்டம் எடுப்பதும் நமது கையில்தான் உள்ளது.
    தேடுவது குற்றமல்ல....தேடாமல் முடங்கிக் கிடப்பதுதான் குற்றம்.
    வருவதைக் கண்டு மயங்காதே. போவதைக் கண்டு கலங்காதே.
    நீ தேர்ந்தெடுத்தப் பாதையில் ஓடிக் கோண்டே இரு.
     வெற்றி நிச்சயம்.

Comments

Popular Posts