இளையதாக முள்மரம் கொல்க....

             இளையதாக முள்மரம் கொல்க....
"   இளையதாக முள்மரம் கொல்க களையுநர்
   கைகொல்லும் காழ்த்த விடத்து  "
                                           குறள்  : 879

இளையதாக _ இளமையானதாக
முள்மரம் _ முட்களைக் கொண்ட மரம்
கொல்க _ பிடுங்கி ஏறிக
களையுநர்  _ வெட்டுபவர்,அப்புறப்படுத்துபவர்
கை _ கைகளை 
கொல்லும் _ வருத்தும், காயப்படுத்தும்
காழ்த்தவிடத்து _ முதிர்ச்சி அடைந்த நிலையில்

முள் மரத்தை அது இளையதாக இருக்கும்போதே 
வெட்டிவிட  வேண்டும். அப்படியே வளர விட்டுவிட்டால்
அது நன்கு முற்றி தன்னை வெட்டுபவருடைய  
கைகளைக் கிழித்து காயப்படுத்திவிடும்.

அதுபோல பகைமையை ஆரம்பத்திலேயே கிள்ளி
எறிந்துவிட வேண்டும்.அப்படி செய்யாது
வளர விட்டுவிடுவோமானால்
அது வளர்ந்து நமக்கு என்றும் 
தீராத துன்பத்தைத்
தந்து நிற்கும்.

 பகைமை மட்டுமல்ல நோய் வந்தாலும்
ஆரம்பத்திலேயே  மருந்து எடுத்துக்
கொண்டால் எளிதாக குணமாக்கிவிடலாம்.
முற்றவிட்ட பின்னர் அவ்வளவு எளிதாக
குணமடைய இயலாது.
இப்படி எந்த ஒரு பிரச்சினையையும்
வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுதல்
நன்று.

காழ்ப்பு ஏறி முதிர்ந்துவிட்ட பின்னர் 
முட்செடியை வெட்டுதல்
நமக்கு வலியை கொடுத்தல்போல
 நெடுநாள் வளர்ந்து நிற்கும் பகைமையும்
 ஒருநாள் நமக்கு பெருந்துன்பத்தை
 கொண்டு வந்து  சேர்ப்பது உறுதி.
 
இந்தக் குறள் பிறிது மொழிதல் அணிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

 ஒரு  பொருளை விளங்கச் செய்வதற்கு அப்பொருளோடு ஒத்த வேறு ஒரு 
பொருளைக் கூறி விளங்க வைப்பது
பிறிது மொழிதல் அணி எனப்படும்.

இங்கே முள்செடியின் தன்மைக்கு
 ஒப்பானது பகைமை என எடுத்துக்கூறி
விளங்க வைத்துள்ளமையால் இது
பிறிது மொழிதல் அணி எனப்படுகிறது.


 English couplet

   "Destroy the thorn while the tender can work thee no offence;
   Matured by time,  'twill pierce the hand that plucks it thence"


Explanation : 

   A thorny tree should be felled while young,when it grown
   it will destroy the hand of the feller.

Transliteration: 

" Iiaidhaaka Mulmaram kolka kalaignar
 Kaikollum kaazhththa vitaththu"

  
 


                           

Comments

  1. பகைமை மற்றும் நோயை முட்செடி போன்று வெட்டுதல் அவசியம். மிக அருமையான விளக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts