பூமணி பாட்டி

   

                     பூமணி பாட்டி


 பாட்டி...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன்.

  "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல்
   கொடுத்தபடியே   தட்டுத்தடுமாறி வந்து
    கதவைத் திறந்தார் பாட்டி.
   
   கதவைத் திறந்ததும் "யாரும்மா..
   மூத்தவன் பிள்ளையா?"
    கையைப் பிடித்த பாட்டி "செல்வனா..
   பள்ளிக்கூடத்துக்குப் போகல"
    கரிசனமாக கேட்டார்.
   
   "போகல..."ஒற்றை வார்த்தையோடு
   பேச்சை முடித்துக் கொண்டான் செல்வன்.

  
   " ஏன் போகல...அம்மா வீட்டுல இல்லையா?"
  
  "இருக்காங்க..இருக்காங்க."சலிப்பாக பதிலளித்தான்

செல்வன்.
  

    "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?"
   
   "ஒருத்தரும் அடிக்கல...போகல்ல
    என்றால் போகல்ல
    .விடுங்களாம் பாட்டி." கோபமாகப் பேசினான்.

   " பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா..."
     என்ற  பாட்டி.,
   "உங்க அப்பாவும் இப்படித்தான்.
   பள்ளிக்கூடம் போன்னா எங்கேயாவது
   போய் ஒளிந்து கொள்வான்.
   சாயங்காலம் பள்ளி விடும் நேரத்தில்
   டாண் என்று வீட்டில் வந்து நிற்பான்.
   அதனால்தான் படிக்காமல் போய்விட்டான்."
   மகனுக்காக  இப்போது வருத்தப்பட்டார் பாட்டி.
  
"    போதும்...போதும்...புறப்படுங்க...புறப்படுங்க.."
.கையைப்பிடித்து இழுத்தான் பேரன்.

" எங்க போகணும் ... "

" இன்றைக்கு என்ன நாளு....சொல்லுங்க பார்ப்போம் "

" எனக்கு என்ன தெரியும். கண்ணா தெரியுது.."

" வாங்க...எங்க வீட்டுக்கு போக வேண்டிய நாள் ...
வாங்கன்னா...வாங்க..."கையைப்பிடித்து இழுத்தான்

செல்வன்.

பாட்டிக்கு  இதற்குமேல் ஒன்றும் கேட்க
தெரியவில்லை.  புரிந்து போயிற்று.

அந்த நினைப்பு வந்ததும் மனசுக்குள் ஒரு வலி வந்து சுருக்கென்று குத்தியது.

நாலு பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு பூமணி
பாட்டி பட்டபாடு கடவுளுக்கு ஏற்காது.

சூரியன் உதிக்கும் முன்னே காட்டில் போய்
நிற்பாள்.
கீரை பறித்து வந்து நாலுபணம் கொண்டு வந்தாதான்
நாலு புள்ளைகளுக்கும் வயிறுநிறைய சோறு போட
  முடியும்.
  தாத்தா கடலைக்காட்டு காவல்காரர்.
  நல்லா காடு விளைஞ்சாதான் நாலு சாக்கு கடலை
  கிடைக்கும்.
   மழை பொய்த்துவிட்டால் ..வயிற்றுப்பாட்டுக்கே
  தகினத்தோம் போட வேண்டியதுதான்.
  பூமணி பாட்டியும்  ஓடி ஓடி உழைச்சதால
  கால்காசு சேர்க்க முடிந்தது.
 
  ஊரு மெப்புக்கு இல்லைை என்று சொல்லாமல்
  ஆளுக்கொரு வீடும் நாலு ஏக்கர் நிலமும் வாங்கி வைச்சிருந்தார் பாட்டி.

  எப்படியோ பிள்ளைகளைக்  காப்பாற்றி

நாலு சனங்களப்போல 

ஆளாக்கி கலியாணத்தையும் பண்ணி வைத்தார்

பாட்டி.
ஒரு உருண்டை சோறானாலும் 

நாலு பேருக்கும் சமமாக உருட்டி
கொடுத்துட்டு  வளர்த்தார் பூமணி பாட்டி.

எத்தனையோ நாள் புள்ளைகளுக்காக
பட்டினியா கிடந்துருக்கார்...
  
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைகள்
திருமணம் ஆகியதும் ஆளுக்கு ஆளா
தனிக்குடித்தனம் போய்விட்டனர்.

தாத்தா இருப்பது வரை பிள்ளைகள்
தனியாகப் போனது பெருசா தெரியல...

இருவரும் பொங்கி ஆக்கி தின்னுகிட்டு
நல்லாதான் இருந்தார்கள்.

பாட்டிக்கும் முன்ன மாதிரி காட்டுக்குப் போக முடியல..
தாத்தாவும் தளர்ந்து போய் வீட்டிலேயே
முடங்கிப் போனார்.

இருக்கிறதை வைத்து ஏதோ காலத்தை 

ஓட்டினார்கள் பாட்டியும் தாத்தாவும்.

போனமாசம் மனுசன் திடீரென இறந்துபோக

 விசயம் விவகாரமாகியது.

அம்மாவுக்கு யார் சோறு கொடுப்பது என்ற
பேச்சு வார்த்தை வந்தது.

யாருக்கும் தாயை கூட வைத்துப்
பார்க்க விருப்பம் இல்லை.
ஆளாளுக்கு ஏதேதோ சாக்குபோக்கு

சொல்லி அம்மாவை ஏற்க மறுத்தனர்.

மூத்தவன் அப்பாவி....
அம்மாவை வைத்துப் பார்த்துக் கொள்ள ஆசைதான்.
ஆனால்...மனைவி ஒத்துக்க மறுத்துவிட்டாள்.

யாரும் முழுசா  ஒத்துப்போகவில்லை...
விசயம் ஊர்ப்பெரியவர் வரைப் போனது.
 
" யாராவது ஒருத்தர் வீட்டுல வச்சி பாருங்கப்பா..."
பெரியவர் பேசிப் பார்த்தார்

"அது எப்படி ஏத்துக்க முடியும்..."
முந்திக் கொண்டான் இளையவன்.

"ஆமா...பார்க்கிறது பார்த்துடலாம்.
கிடையில விழுந்துட்டா என்றால்
யாரு பார்க்கிறது..."  படுக்கையில்

விழுந்தால் என்னால் பாடு பார்க்க முடியாது

என்பதை சொல்லி ஒதுங்கி நிற்க பார்த்தான்.

"பெத்த தாயை ஆளாளுக்கு இப்படி ஏலம் போடுறீகள...
இது நல்லாவா இருக்கு..."

தன் அக்காளுக்கு இப்படி ஒரு நிலைமையா

என்ற வருத்தத்தில் பேசினார் பூமணி பாட்டியின் தம்பி.

" ஏன் அவ்வளவு பாசம் பொங்கிட்டு வருதுன்னா
நீங்க கொண்டு வைத்து பார்க்கிறது."
சீறினான் இளையவன்.

" அட...சும்மா இருங்கப்பா...
ஆளுக்கு ஒண்ண பேசிகிட்டு...
தாயை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பயக்க..." 

கோபப்பட்ட பெரியவர்,.

" பெரியவரே...நீங்க   உங்க தீர்ப்பை
சொல்லுங்க  ....கட்டுப்படுவானுவ..."

என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

"அப்போ...ஆளுக்கு ஒருமாசம் அவரவர் வீீட்டில் 

கூட்டிக்கொண்டு வைத்து
பெரியம்மாவுக்கு சோறு கொடுக்கணும் "என்று
பேசி முடிவு பண்ணி விவகாரத்தை முடித்து
வைத்தார் பெரியவர்.

மாசம் பொறக்க இரண்டுநாள்
இருந்ததால் யாரும்  வந்து கூட்டிட்டுப் போகல...
  இன்று ஒன்றாம் தேதி.
அதுதான் மூத்த மவன் பிள்ளை பாட்டியை
கூட்டிட்டுப் போக வந்திருக்கிறான்.

  பேரன் கையைப் பிடித்தபடி  தெருவில்
  நடந்தார் பாட்டி.
 
வழியில் வந்த பெரியவர் ஒருவர்
  "என்ன பெரியம்மா சௌக்கியமா" என்று விசாரித்தார்.
 
"ஆமாங்க...ஆளு தெரியல...யாருங்க"

" நான் தெற்குதெரு பலவேசம் மகன் மூத்தவன் மாடசாமி"

" ஐயா...நல்லா இருக்கியளா...
  கண்  கொஞ்சம் மங்கலா இருக்கு..
  ஒரு ஆளு இனம் தெரிய மாட்டேங்குது"
 
" ஆமா  ....பெரியம்மா  இப்போ எங்க
புறப்பட்டாப்புல  இருக்கு"

" மூத்தவன் மவன் வந்து கூப்பிட்டான்.
அதுதான் மூத்தவன் வீட்டுக்குப் போறேன்ய்யா..."

" அட...இன்று ஒண்ணாம் தேதி இல்ல..
இந்த மாசம் மூத்தவர் முறையா ? "

 பாட்டிக்குப் பதில் சொல்ல வாய் வரல.

" இன்றிலிருந்து  இன்னும் ஒரு மாசம்
எங்க வீட்டில்தான் பாட்டிக்கு  சாப்பாடு.  "
பையன் பெருமையாக கூறினான்.

" ஆமா....நாலு புள்ளைகளும்
ஆளுக்கொரு மாசமா பெரியம்மாவ
பங்கு போட்டுகிட்டாவ....அதுதான்
பாவம் பெரியம்மா மூத்தவ மவன் 

வீட்டுக்குப் போகுது...

விறகு அடிச்ச கம்பு மேலும் கீழும்தான்"

என்று போகிற போக்கில் சொல்லிட்டுப்

போனார் பெரியவர்.

அவளுக்கென்ன நாலும் ஆம்புள புள்ள...
என்று சொன்னவர்களே  ..".நாலு புள்ளையை
பெத்து எதுக்கு "என்று பேச   ஆரம்பிச்சுட்டாங்க..

ஆமாங்க..ஊரு மெப்புக்குத்தான்
பூமணி   பாட்டிக்கு நாலு பிள்ளைகள்.

ஆனால் ஒருத்தனுக்கும் தாய்க்கு

சோறு கொடுக்க மனம் வரவில்லை.

அதனால்தான்....ஆளுக்கு ஒரு மாசம் 
அம்மாவுக்கு சாப்பாடு கொடுக்கணும்
என்று ஊர் பஞ்சாயத்தில்  அட்டவணை போட்டு

 கையில் கொடுத்துவிட்டார்கள்.

அட்டவணைப்படி  இந்த மாதம் மூத்தவன் மாதம்.
அதுதான் மூத்தவன் வீட்டுக்கு
புறப்பட்டுவிட்டார்  பூமணி  பாட்டி.   
    
       
                 

Comments

  1. சிலர் தங்கள் கடமையை மறந்து முதியோர்களை தவிக்க விட்டுவிடுகிறார்கள்.பரிதாபம்!

    ReplyDelete

Post a Comment

Popular Posts