யாயும் ஞாயும்....
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
"யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ?"
இந்தப் பாடல் நம்மில் பலருக்குத்
தெரிந்திருக்கலாம்.
ஆனால் இப்படி ஒரு வரி
எங்கிருந்து வந்தது?
யார் இதற்கு சொல் எடுத்துக்
கொடுத்தது?
ஒரு சங்க இலக்கிய பாடலிலும்
இப்படி ஒரு கருத்து வந்திருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. அங்கிருந்து வந்ததுதான்
இந்தப் பாடல் வரிகள்.
சங்க இலக்கிய நூல்கள் வரிசையில் எட்டுத்தொகை
நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
குறுந்தொகையைத்
தொகுத்தவர் பூரிக்கோ என்பவர் என்கின்றனர்.
அந்தக் குறுந்தொகையில் வரும்
யாயும் ஞாயும் யாராகியரோ
என்ற பாடல் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ காதலர்களுகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
காதல் பற்றிப் பேசப்படும் இடங்களில்
எல்லாம் கொண்டாடப்படும் ஒரு பாடல் இது.
அதனால் தான் காதலைப் பாடும்போது திரைப்பட கவிஞர்கள் இந்த பாடலின்
கருத்தை தங்கள் பாடல்களில்
கையாண்டுள்ளனர்.
இந்தப் பாடலை எழுதியவர்
யார் என்பது தெரியவில்லை என்றாலும்
செம்புலப் பெயல் நீர் போல என்ற அருமையான
உவமையைக் கையாண்டதின்மூலம்
செம்புலப் பெயனீரார் என்பது இப்பாடலை எழுதிய புலவரின் பெயராயிற்று.
தலைவன் ஒருவன் தலைவியைச் சந்திக்கிறான்.
இருவரும் ஒருவர்மீது ஒருவர்
காதல் வயப்படுகின்றனர்.
முன்பின் பார்த்திராத இருவர்.
காதல் மயக்கத்தில் நெருங்கிப் பழகிவிடுகின்றனர்.
பழகிய பின்னர் ஏதோ ஒரு அச்சம்
தலைதூக்குகிறது.
பெண்ணுக்கே எழும் இயல்பான நாணமும் அச்சமும்
தலைவியின் மனதில் ஏற்படுகிறது.
யாரோ முன்பின் தெரியாத
ஒருவனை காதலித்து விட்டோமே...
ஒருவேளை இவன் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டால்?
என் நிலைமை என்னாவது ?என்று
கலங்கி நிற்கிறாள்.
அந்தக் கலக்கம் முகத்தில் அப்பிக் கிடப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
இதனைப் புரிந்து கொண்ட தலைவன்
ஏம்மா நீ கவலைப்படுகிறாய்?
என்று அவளைத் தேற்றுவதுபோல்
அமைந்துள்ளதுதான்
இந்தப் பாடல்.
காலங்காலமாக காதலர் கொண்டாடி
மகிழும் பாடலாக
அமைந்துள்ள பாடல் உங்களுக்காக.
" யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எம்முறை அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ."
குறுந்தொகை. : 40
திணை. : குறிஞ்சி
யாயும் ஞாயும் அதாவது
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும்
யார் யாரோ எனக்குத் தெரியாது.
எந்தையும் நுந்தையும் அதாவது
என்னுடைய அப்பாவும் உன்னுடைய அப்பாவும்
எந்தவிதத்தில் உறவினர் என்பதும்
எனக்குத் தெரியாது.
எந்த உறவுமுறையை வைத்து நாம் இருவரும்
அறிந்து கொண்டோம் என்பதும் தெரியாது.
ஆனால் எந்த விதத்திலும் சம்பந்தமே
இல்லாமல் இருந்தாலும்
செம்மண் நிலத்தில் பெய்த
மழை நீரானது தன் தன்மையை இழந்து
செம்மண்ணோடு செம்மண்ணாக இரண்டற கலந்து
பிரிக்க முடியாத தன்மையைப்
பெற்றுவிடுவது போல
ஒருத்தர்மீது ஒருத்தர் அன்புகொண்ட நம்
இரு நெஞ்சங்களும் பிரிக்கமுடியாதபடி
ஒன்று கலந்துவிட்டன.
இனி நம்மை ஒருவராலும்
பிரித்தல் இயலாது "என
உண்மை நிலையை எடுத்துக் கூறி
நான் உன்னைப் பிரியேன் என்று
தலைவிக்கு உறுதியளிக்கிறான் தலைவன்.
நம் பெற்றோர் வேண்டுமானால்
ஒருவருக்கு ஒருவர்
உறவு இல்லாதவர்களாக இருக்கலாம்.
நாமும் யார்யாராகவோதாம் இருந்தோம்.
ஆனால் அன்பால் இணைக்கப்பட்டுவிட்டோம்.
நாம் மழைநீர் மண்ணோடு கலப்பது போல
ஒருவரோடு ஒருவர் கலந்துவிட்டோம்.
இணைந்துவிட்டோம்.
இனி பிரிவு என்பது நமக்கு இல்லை.
நீர் நிலத்தோடு கலந்துவிட்டால்
நிலத்தின் தன்மையைப்
பெற்றுவிடும்.
அதுபோல இனி நீ வேறு
நான் வேறு அல்ல...
இருவரும் ஒருவரானோம்.
இனி நம்மைப் பிரித்தல் யாராலும் கூடாது
என்கிறான்.
அதற்காக அவன் சொன்ன உவமைதான்
இந்தப் பாடலை இவ்வளவு உயரத்தில்
கொண்டு நிறுத்தியிருக்கிறது.
"செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
வரிகளை அப்படியே அள்ளி
இதயத்துக்குள் பொதிந்து வைத்து
பூரித்துப் போகிறாள்.
காதலர்கள் என்றென்றும் கொண்டாடி மகிழும்
அருமையான வரி இல்லையா?
பிரிக்க முடியாத ஒரு பொருளை உவமையாகக்
கூறி தானும் செம்புலப் பெயனீராராகி
நம் உள்ளங்களில் உலா வந்து
கொண்டிருக்கும் செம்புலப் பெய நீராரும்
அவரின் பாடலும்
காதல் இருக்கும் வரை
காலமெல்லாம் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
காதலர்களால்
கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும்
"செம்புலப் பெய நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
Comments
Post a Comment