போராட்டம்
போராட்டம்
காலையில் இருந்தே ஊர் களை கட்ட
ஆரம்பித்தது.
"அண்ணே நீங்க வாரீங்க இல்லையா..."
எங்கேயோ சிற்றுலா செல்ல
கேட்பதுபோல கேட்டான் முத்துசாமி.
"என்ன தம்பி அப்படி கேட்டுபுட்ட
நான் இல்லாமலா...அப்போ எத்தனை
மணிக்குப் போகணும்" என்றார்
பெரிய வீட்டுப் பிரகாசம்.
"ஒன்பது மணிக்குப் போகணுமாம்.
தலைவர் ஐயா சொல்லி இருக்காங்க..."
"நேரம் இருக்கல்ல...ஒரு எட்டுப் போயி
வயல பார்த்து வாரேன்."
சொல்லியபடி வயலை நோக்கிச்
சென்றார் பிரகாசம்.
"சுருக்கா வந்துடுங்க தாத்தா...
பிறகு எல்லாரும் உங்களை விட்டுட்டுப்
போயிடுவாங்க..." தாத்தாவை விட்டுவிட்டு
எல்லோரும் போயிடக் கூடாதே என்ற
அக்கறையில் பேசினான் பேரன் பாலன் .
பிரகாசத்தின் இளைய மகன் கந்தசாமி
கல்லூரிக்குப் போகும் வாலிபன்.
அவன் போராட்டத்தைப் பற்றிக்
கேட்டதில் இருந்து ஒரு
நேரம் வீட்டில் இல்லை.
பெரியவீட்டுத் திண்ணையில்தான்
வாலிபர்களின் மாநாடு நடந்தது.
அவனை ஒத்த வயசு பிள்ளைகள்
எல்லாம் , " இந்த தடவை இரண்டுல
ஒண்ணு பாத்துடணும்...விவசாயின்னா
இழிச்சவாயனுவ....முட்டா பசங்க என்று
நினைச்சுகிட்டு இருக்கானுக..."என்று
வீம்பாக பேசிப்பேசி ஒருத்தரை ஒருத்தர்
உசுப்பேத்திக் கொண்டிருந்தனர்.
"சாமி...சாமி......." கந்தசாமியின்
அம்மா அழைத்தார்.
கந்தசாமியை வீட்டில் செல்லமாக சாமி
என்றுதான் அம்மா அழைப்பார்.
"என்னம்மா..." வீட்டிற்குள் வந்தான் சாமி.
"நீயும் போகணுமாப்பா
படிக்கிற புள்ள...ஒண்ணகிடக்க
ஒண்ணு ஆகிபுட்டுன்னா..."
பயந்துபோய் கேட்டார் அம்மா.
"ஒண்ணும் ஆகாது பெரியம்மா
நாங்க எல்லாம் இருக்கிறோம்ல்ல..."
தைரியம் சொன்னபடியே
வீட்டிற்குள் வந்தான் சாமியின் சித்தப்பா
மகன் பால்பாண்டி.
"ஏலே அங்க இங்கன்னு
மசமசன்னு நிற்காம... சட்டுபுட்டுன்னு
புறப்படுங்க...ஒன்பது மணிக்குள்ள
விலக்குல போயி நிற்கணும் "
கையில் கம்பை ஆட்டியபடியே
தெருவுக்குத் தெரு வந்து சத்தம்
கொடுத்தபடியே சென்றான் செம்புலிங்கம்.
" இதோ வந்துட்டோம்..." என்றபடி
கையில் ஆளுக்கொரு கம்போடு புறப்பட்டனர்.
"கையில் கம்பு எதுக்கு...சீ..
கடக்க எறிங்க..."கோபப்பட்டார் சாமியின்
அம்மா.
"நானே ...நீங்க போயிட்டு வருகிறதுவரை
என்ன ஆகுமோ ....ஏது ஆகுமோ என்று
ஈரக்குலையை கையில ஏந்திக்கிட்டு
இருக்கேன் "
"ஒண்ணும் பயப்பட வேண்டாம் ...பெரியம்மோ
என்கிட்ட கேட்டா பெரியம்மா மாதிரி நாலு
பெண்களும் வரணும்...அப்போதான்
உடனே கதை நடக்கும் "
"ஏன் உன் பொண்டாட்டிய கூட்டிட்டுப்
போறது...."சட்டுன்னு மூஞ்சில் அடிக்கிற மாதிரி
பேசினார் பெரியம்மா.
"அவ கைபுள்ளகாரி ....அவளை எப்படி
கூட்டிப் போக முடியும் " எதார்த்தமாக
பேசினான் பொன்னுசாமி.
அதற்குள்,
"தலைவர் ஐயா வரச்
சொன்னாங்க" என்று மறுபடியும் வாசலில்
வந்து நின்றான் செம்புலிங்கம்.
"இதோ வந்துட்டோம்....போய் சொல்லு"
சொல்லிவிட்டு செம்புலிங்கம் பின்னாலேயே
அனைவரும் சென்றனர்.
"ஏலே...பத்திரம் .சொல்லிபுட்டேன்."
என்றார் ஒரு பாட்டியம்மா.
"தம்பி சாமி....கூட்டத்தில ஒதுங்கியே நில்லு..."
என்றார் சாமியின் பாட்டி.
"தூரமா நின்னு உத்துப்பாத்துட்டு வாரேன்....
போதுமா....சும்மா போவியா கிழவி....
காலையிலே இருந்து உன் ராமாயணத்தைத்தான்
கேட்டுகிட்டே இருக்கேன் .பேசாம போய்
படுத்துக்கிட" பாட்டியைப் பேச
விடாமல் வாயடைக்க வைத்துவிட்டு
கிளம்பினான் சாமி.
இவர்கள் போவதற்கு முன்பாக
பத்து இருநூறுபேர் பெரியவீட்டுத்
திண்ணை முன்னால் கூடி நின்றனர்.
எல்லோரும் வந்து கூடியதும்
ஊர்த்தலைவர் பேச ஆரம்பித்தார்.
" தம்பிகளா...நான் சொல்லுவதை
கவனமாக கேட்டுகோங்க...
எந்தவிதத்திலும் அசம்பாவிதம் ஏதும்
நடந்துடக் கூடாது... அப்புறம்
நாங்கதான் அரசாங்கத்துக்குப்
பதில் சொல்லியாவணும்"
ஊர்த்தலைவர் என்ற பொறுப்பு
இருப்பதால் கவனமாகப்
பேசினார் தலைவர்.
"இப்போ அரசாங்கத்தை நமக்கு பதில்
சொல்ல சொல்லுங்க...
நாலுமணி நேரம் தொடர்ந்தாப்புல
கரண்ட் விட வழியில்ல.."
கோபத்தில் பொங்கி எழுந்தார்
ஒரு நடுத்தர வயதுக்காரர்.
பயிரெல்லாம் கருகிப் போகிறதே....
இப்படியே போனால் எப்படி
பொழப்பு நடத்தமுடியும்
என்ற ஆதங்கத்தை வார்த்தையாகக்
கொட்டினார்.
" சும்மா கையை கட்டிகிட்டு நிற்கிறதுக்கு
அங்க எதுக்கு... .இங்கேயே
கையை கட்டிகிட்டு இருந்துட
வேண்டியதுதானே...".கூட்டத்தில் இருந்த
சாமி உரத்து குரல் கொடுத்தான்.
" நமக்கு காரியம் ஆவணும் அதுதான்
முக்கியம்."
" காரியம் ஆவணும் என்றால்
நாலு பஸ்ஸை உடைக்கணும்."
" அது யாரு....உடையார் மவன்
பாலனா...நீங்க எல்லாம் அப்படித்தான்
பேசுவியப்போ... மாட்டுனீங்க என்றால்
நோகாம நொங்கெடுத்துருவானுவ
போலீஸ்காரனுவ..."போலீஸ்காரன் கையில்
அடி வாங்கிய அனுபவத்தில் குரல்
கொடுத்தார் ஒரு பெரியவர்.
" நம்மளும் யாருன்னு காட்டணுமில்ல..
விவசாயிக்கும் போராட்டம் பண்ணத்
தெரியும் என்று அரசாங்கத்துக்குத்
தெரியணும் "
" சரி...சரி...நேரம் ஆவுது புறப்படுங்க..."
என்றார் தலைவர்.
கூடி நின்ற பெண்களெல்லாம்
ஏதோ போர்க்களத்துக்கு வழியனுப்புவதுபோல
வழிஅனுப்பி வைத்தனர்.
" பையனுவ...காட்டமா போறானுவ..
ஒண்ணுகிடக்க ஒண்ண பண்ணிடப் போறானுவ...
பிறகு போலீஸ்காரங்க...ஊரு உள்ள
இறங்கி தூக்கிட்டுப் போயிருவாங்க..."
விவரம் தெரிந்த ஒரு பெரியவர்
பேசினார்.
" அதுவும் சரிதாங்க...போறவனுக எல்லாம்
விடலப் பயலுவளா போறானுவ...
கையில கிடைச்சதை தூக்கி வீசிபுட்டானுவன்னா
ஊருக்குள்ள ஒரு ஆம்புள இருக்க முடியாது."
அனுபவப்பட்ட பிரகாசம் ஐயா பேசினார்.
" நம்ம இங்கு நின்னுகிட்டு வழவழன்னு
பேசிகிட்டு நிற்காம..நாமளும் போவோம்.
என்னதான் ஆகுதுன்னு பார்க்கணுமில்ல...
நம்ம போனாதான் நம்ம பயக்க கொஞ்சம்
அடங்கி நிப்பானுவ..."
" சரி...சரி...பெரியவுங்க நாலஞ்சுபேர்
போங்க..".அந்த இடத்திலிருந்து மெதுவாக
நழுவினார் தலைவர்.
உங்களுக்கு ஒன்னுண்ணா நான் நிற்பேன்
என்று சொல்லி ,வாக்கு வாங்கி ஜெயிச்சவரு
இல்லியா...
அதுதான் ஊரே போயிட்டாலும்
நம்ம மட்டுமாவது நிற்கணும் என்று
ஒதுங்கி நின்று கொண்டார்.
வயதான பெரியவர்கள் ஐந்து ஆறுபேர்
விலக்கை நோக்கி சென்றனர்.
ரோட்டில் ஒரு பஸ்ஸையும் காணோம்.
"நம்ம பயக்க நல்லாதான் போராடுறானுவ...
எல்லா பஸ்ஸையும் நிறுத்திட்டானுவ என்று
நினைக்கிறேன் "
"இளவட்டம்மில்ல....ஒரு பஸ்ஸை
விட்டுருவானுவளா...
குறுக்கே படுத்துருப்பானுவ...
சாயங்காலத்துக்குள்ள அரசாங்கம்
அலறிகிட்டு வந்து நம்ம கோரிக்கைக்குப்
பதிலளிக்கும்... பார்த்துகிட்டே இருங்க"
"ஏதோ நல்லபடியா கரண்ட் கட் இல்லாம
ஆக்குனா சரிதான்..."
ஆளாளுக்கு பேசியபடி நடந்து சென்றனர்.
அப்போது எதிரே ஒரு போலீஸ் வேன் வந்தது.
அதிலிருந்து இறங்கிய ஒரு அதிகாரி
"நில்லுங்க...எங்க போறீங்க..."
என்றார் மிரட்டலாக.
"போராட்டத்துக்குப் போறோம்."
பெருமையாகச் சொன்னார் பிரகாசம்.
"எந்தப் போராட்டத்துக்கு..."
"விவசாயப் போராட்டத்துக்குத்தான்."
"அடேங்கப்பா.....போராட்டத்துக்கு கிளம்பிட்ட
ஆளுங்களைப் பாருங்க...
வந்து வண்டில ஏறுங்க ..."
அதிகாரத் தோரணையில் பேசி
அனைவரையும் ஜீப்பில்
ஏற்றினார் காவல்துறை அதிகாரி.
ஜீப்...ஒரு கல்லூரி வளாகத்தின் முன் போய்
நின்றது.
அங்கே மைதானத்தில் போராட்டக்காரர்கள்
அனைவரும் கைது செய்யப்பட்டு
வைக்கப்பட்டிருந்தனர்.
மொத்தமா ஊர்க்காரங்க எல்லாம்
அங்குதான் தரையில் உட்கார்ந்திருந்தனர்..
காவல்துறை அதிகாரி முன்னால் வந்து நின்று,
"என்ன எல்லோருக்கும் பெரிய
கொம்பன் என்ற நினைப்போ...
என்று பேச்சைத் தோரணையாகத் தொடங்கினார்.
" பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு
பண்ணி இருக்கிறீங்க...
கல்லை தூக்கி வீசி பொதுச் சொத்துக்கு
சேதம் விளைவித்திருக்கீங்க...
இதுக்கெல்லாம் உங்களுக்கு என்ன
தண்டனை கிடைக்கும் தெரியுமா?"
என்றார் கோபமாக...
அனைவரும் தலையைக் கீழே போட்டபடி
உட்கார்ந்திருந்தனர்.
"ஐயா...பெரியவரே....நீர்தான்
போராட்டக்குழு தலைவரோ..."
என்று சாமியின் அப்பாவைப்
பார்த்துக் கேட்டார் அதிகாரி.
"கரண்ட் வரலன்னா அதிகாரியைப்
பார்த்து மனு கொடுக்க வேண்டியதுதானே...
அதை விட்டுவிட்டு ரோட்டுல இறங்கி
போராட வந்துட்டாகளாம் போராட...."
வார்த்தையில் நீங்களெல்லாம்
போராட வந்துட்டீங்களாக்கும் என்ற
ஒரு நக்கல் இருந்தது.
சாமிக்கு ஆக்ரோசமாக வந்தது.
பக்கத்தில் இருப்பவனிடம் மெதுவாகப்
"என்னாப் பேச்சு பேசுறான் பாரு "என்று
முணுமுணுத்தான்.
"அங்க என்ன பேச்சு. துணிச்சல்
இருக்கிறவன் முன்னால வந்து பேசு..."
என்றார் போலீஸ் அதிகாரி.
"எல்லாத்தைப் போல தான் நாங்களும்
போராட வந்தோம். எங்களுக்கு சரியா
கரண்ட் விட்டா நாங்க ஏன் போராடப்
போறோம்"கொஞ்சம் துணிச்சலை
வரவழைத்துக் கொண்டு பேசினான் சாமி.
"ஐயா பெரியவரே !நியாயமாத்தான்
பேசுறீங்க...ஆனா நீங்க போராட வந்தா
உங்களுக்கு ஆதரவு தர ஒருத்தன்
முன் வருவானா....கொஞ்சம் கேட்டுச்
சொல்லுங்க...."நமட்டுச் சிரிப்பு
சிரித்தபடி கேட்டார் அதிகாரி.
"எங்க கதையை நாங்கதான் பார்க்கணும்..
நாங்க நியாயத்தைத்தான் கேட்கிறோம்.
அதுக்கு எதுக்கு அடுத்தவுங்க ஆதரவு"
ஏதோ நியாயம் பேசிவிட்டதுபோல
பக்கத்தில் இருப்பவர்களைத் திரும்பித்
திரும்பிப் பார்த்தான் செம்புலிங்கம்.
"தனியா நின்னு போராடுனா .
லத்தியால முட்டிக்கு முட்டி தட்டி
உள்ளே தூக்கி வச்சுடுவாங்க..
நானும் விவசாயி மகன்தான்.
உங்க மேல உள்ள அக்கறையில்தான்
இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கிறேன்.
நாலு சங்கங்களின் ஆதரவு
இல்லை என்றால் யாரும்
உங்க போராட்டத்தைத் திரும்பிப்
பார்க்க மாட்டார்கள் "
ஒரு விவசாயியாக கீழே இறங்கி வந்து
பேசினார் அதிகாரி.
" அப்போ இதுக்குஎன்னதான் வழி."
அப்பாவியாகக் கேட்டார் ஒரு பெரியவர்.
"பேசாம போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டோம்
என்று எழுதி கொடுத்துட்டுப் போறதுதான் வழி"
என்றார் அதிகாரி.
"அப்போ எங்களுக்கு கரண்டே வராதா...."
" மின்சார வாரியத்துல மனு எழுதி கொடுங்க.
முடிஞ்சா செய்வாங்க... "
" மனு கொடுத்தால் கரண்ட்
வந்துரும்மாய்யா...."
" வந்துரும் ....வந்துரும்...நம்பிக்கையோடு
போகிற வழியைப் பாருங்க...
போராட்டம் வாபஸ் என்று இந்த பேப்பரில்
கையெழுத்துப் போட்டுட்டு போங்க ... "
"ஐயா சொன்னா சரியாத்தான் இருக்கும்...
....ஏலே எல்லாரும் வாங்க..
கையெழுத்துப் போடுங்க...ஐயா விட்டுடுவாங்க..."
" இதுக்கு இங்க எதுக்கு வரணும்....
பேசாம வீட்டுலேயே இருந்துருக்கலாம்..."
முணு முணுத்தபடி கையெழுத்துப்
போட்டுவிட்டுக் கிளம்பினான் சாமி.
"விவசாயி போராட்டம் எல்லாம்
இப்படிதான் இருக்கும்.
நாலு மிரட்டு மிரட்டுனா போதும் ....
வாபஸ் வாங்கிட்டு போயிட்டே இருப்பானுவ...
என்பது சரியா போச்சா..".புலம்பிக்கண்டே
வந்தான் செம்புலிங்கம்.
விவசாயி போராட்டத்தையும் கண்டுகிட
மாட்டாங்க..விவசாயி படும் கஷ்டத்தையும்
கண்டுகிட மாட்டாங்க....நாம
காலங்காலமா உழைச்சி சாவுகிற
வர்க்கம் என்று நம் தலையில எழுதி
வச்சதை யார் மாற்ற முடியும்...என்று
ஆளாளுக்கு தலையெழுத்துமேல்
பாரத்தைப் போட்டுவிட்டு
ஊரை நோக்கி நடந்தனர்.
Comments
Post a Comment