ரௌத்திரம் பழகு

                      ரௌத்திரம் பழகு

பாரதி தனது புதிய ஆத்திச்சூடியில் "ரௌத்திரம் பழகு "
  என்று சொல்லி இருக்கிறார்.
  அதாவது கோபப்பட பழகு என்பதுதான்
  அதன் பொருள் என்பதை
 பள்ளியில் சொல்லித் தந்திருப்பார்கள்.

  "சினம் தவிர்  "என்று சொல்வார்கள். அதென்ன
   ரௌத்திரம் பழகு...எப்போதாவது சிந்தித்தோமா....
  சொல்லித் தந்ததை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்வதுதான் நமது பழக்கம்.
  மற்றபடி சின்ன வயதில் அதைப்பற்றி
    பெரிதாக சிந்திப்பதில்லை.

      நானும் உங்கள் வகைதான். சமீபத்தில் ரௌத்திரம்
  என்ற படம் வந்தபோது  அதென்ன ரௌத்திரம் 
  என்ற சிந்தனை எழுந்தது.

  கோபம் எல்லா ஹீரோக்களுக்கும் இருப்பதுதான்.

  அதை ரௌத்திரம் என்றுசொல்லி நம்மை 
   மறுபடியும் பாரதியைத் திரும்பிப் பார்க்க
   வைத்த பெருமை ரௌத்திரம் படத்திற்கு உண்டு.

   கோபத்திற்கு ஆளாளாளுக்கு ஒவ்வொரு 
   பொருளை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

   கோபத்தை  சினம்   என்றும் சொல்கிறோம்.
  அதென்ன ரௌத்திரம் ?

  ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் கோபமாக  மாறும். 

  "  ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு "என்று படித்திருக்கிறோம்.

  "  கோபம் பாவம்.   "    சொல்லிச்சொல்லி
   வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

 "சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி ..."என்று 
    கற்றிருக்கிறோம்.

  இப்படி அனைவரும் அறிந்த வார்த்தைகளை
 விட்டுவிட்டு அறியாத   புதியதோர் வார்த்தையைப் 
 பாரதி பயன்படுத்தியதின் காரணம்
 என்னவாக இருக்கும் ?   

தமிழில் ரகரம் மொழி முதல் வராத ஒரு எழுத்து.
அதை மொழிமுதல் எழுத்தாக வைத்து எழுதிய 
நோக்கம் என்ன? 

பாரதி வடமொழி சொற்களை  தன் 
படைப்புகளில் நிறைய கையாண்டிருப்பார்.
எனினும் இந்த ரௌத்திரம் மட்டும் என்னை 
அதைவிட்டு அகல விடாமல் செய்தது.

  இப்படி பலவாறு சிந்தித்து .. சிந்தித்து...
  பல சிந்தனையாளர்களின் மனதில்
  ரௌத்திரம் எப்படி பதிந்திருக்கிறது
  என்பதை அறிய முற்பட்டேன்.
   
 அதன் விளைவாக எனக்கு
 சில உண்மைகள் தெரிய வந்தது.
 சாதாரணமாக நமக்கு
 சொல்லித் தந்த பொருளை விட சற்று
 மாறுபட்ட பொருள் கொண்டது ரௌத்திரம்
 என்பதைப் புரிந்து கொண்டேன்.
   

  யாராவது திட்டினால்....அல்லது  அடித்தால் 
 உடனடியாக நமக்கு வருவது கோபம்.

 பதிலுக்கு நாமும் ஏதாவது செய்ய
 வேண்டும் என்று ஆத்திரம்  ...ஆத்திரமாக வரும்.  

நம்மிடம் கேட்காமலேயே நமது பொருளை
யாராவது எடுத்துவிட்டால்... 
ஏன் என்னிடம் கேட்காமல் எடுத்தாய்?
காட்டுக்கத்தல் கத்துவோம்.

நாம் அவமானப் படும்படியாக யாராவது
 ஏதாவது சொல்லிவிட்டால்...
 அநியாயத்துக்குக் கோபம் வரும்.
 தூக்கம் வராமல் படுக்கையில் கிடந்து
  பல்லைக் கடித்துக் கொண்டிருப்போம்.
 

வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கும்போது
யாராவது முண்டியடித்து முன்னால் சென்று விட்டால்...
ஓ...ஓவென்று கோபத்தில் கத்தி நமது 
எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.


வெளியில் போயிட்டு வீட்டிற்கு வந்ததும்
இருக்கிற கோபத்தை எல்லாம் சாப்பாட்டில்
காட்டுவோம்.
சாப்பாட்டுத் தட்டைத் தூக்கி வீசுவோம்.
அல்லது அம்மாமீது பாய்வோம்.

 இப்படி நமது கோபம் யாவும் சுயநலம் 
 சார்ந்ததாகவே இருக்கும்.

பாரதி சொல்ல வந்த ரௌத்திரம் 
சுயநலம் சார்ந்ததல்ல.

சமூக அக்கறையோடு கூடிய
கோபம் வேண்டும் என்கிறார் பாரதி.

  சமூக சிந்தனையும் பொதுநலமும்  
  சமூக அக்கறையும் கொண்டு 
   நியாயமான காரணத்திற்காக  
   சரியான வேளையில் வெளிப்படுத்தப்பட
    வேண்டிய கோபம் ஒன்று உண்டு.
       
    அந்த கோபம் நமக்கு வரவேண்டும்.
     என்பதற்காகத்தான்   ரௌத்திரம்  பழகு
   என்று கூறுகிறார் பாரதி.
   
  கோபம் வர வேண்டும். 
  அந்தக் கோபத்தில் ஒரு 
  ஞாயம் இருக்க வேண்டும்.
  அதுவும் பொதுநலம் சார்ந்ததாக
  இருக்க வேண்டும்.
 
  கோபப்பட வேண்டிய இடத்தில் 
  கண்டிப்பாக கோபப்பட வேண்டும்.
      
   அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டும். 
   யாருக்கோ வந்தது நமக்கு  எதற்கு  வம்பு
   என்று கை கட்டி சும்மா இருத்தல் கூடாது.

   ரௌத்திரம் ஒருவகையில் நல்ல கோபமாம்.
   அதனால்தான்  அதைப் பழகிக் கொள்ள 
   வேண்டும் என்கிறார்  பாரதி.

    சிந்தையில் சமூக அக்கறை 
    இளைஞர்களுக்கு  இருக்க வேண்டும்
    என்பது பாரதியின் விருப்பம்.

    பேருந்தில் பயணம் செய்யும் பெரியவருக்கு
     சில்லரைக்காசு   கொடுக்க மறுக்கும்
      நடத்துநரைத் தட்டிக் கேட்க வேண்டும்.

      பெண்களுக்கு எதிராக நடைபெறும் 
      வன்முறைகளைத் தட்டிக் கேட்கும் 
      துணிவு  ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

      வரிசையில் நிற்க வேண்டிய இடங்களில் 
      முண்டியடிக்கும் ஆசாமிகளிடம் நமது 
      எதிர்ப்பை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். 

     அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும்
      மருந்தை எப்படி சாப்பிட
     வேண்டும் என்று கேட்கும் பாமரர்களுக்கு
     முறையாக பதில்சொல்லாமல் 
     துரத்தியடிக்கும் மருந்தாளுநர்களை
     எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் வேண்டும்.

     சாலைவிதிகளைக் கடைபிடிக்காமல் 
     தாறுமாறாக வண்டி ஓட்டி
     விபத்தை உண்டாக்கும் நபரைத்
     தட்டிக் கேட்கும் தைரியம் வர வேண்டும்.

      இவை எல்லாம்  அன்றாடம் நம் 
      கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கும்
       அநீதிகள்.
       இன்னும் எத்தனை எத்தனையோ...
       நாளும் நடந்து கொண்டுதான்
       இருக்கின்றன.

      இவற்றை எல்லாம் தட்டிக் கேட்க 
      பழகுங்கள் என்பதற்காகத்தான் பாரதி 
      "ரௌத்திரம் பழகு" என்கிறார்.
      

       ரௌத்திரம் பழகாமல் இவ்வளவு நாளும்
       கோழைகளாக இருந்துவிட்டோமே
        என்று வருந்துகிறீர்களா.?
        
       தப்பே இல்லை....
       காலம் என்ன ஓடியா போயிற்று?
       நம்பிக்கையை வளர்ப்போம்.
       நாளைய தலைமுறையினருக்கு
       ரௌத்திரம் பழக பயிற்றுவிப்போம்.
       தவறு நடப்பதைக் கண்டால் 
       தட்டிக் கேட்க வேண்டும் என்பதை
       ஒரு விழுமியமாகவே கற்றுத் தருவோம்.
       மரத்தமிழர் அல்லர்;
       மறத்தமிழர் என்பதை மெய்ப்பிப்போம்.
       
 

     

    
    
      
   

Comments

Post a Comment

Popular Posts