அப்படிப்பட்டவளில்லை

                          அப்படிப்பட்டவளில்லை...


மதிய இடைவேளைக்குப் பிறகு வகுப்பு 
தொடங்குவதற்கான மணி அடித்தது.

அங்கங்கே நின்ற  பிள்ளைகள் ஆளாளுக்கு 
அவரவர் வகுப்பை நோக்கி ஓடினர்.

 மூன்றாம் வகுப்பு மாணவர்களும் தங்கள் வகுப்பிற்குள்
 வந்து அமர்ந்தனர்.
 
 ராணியும் கூட சேர்ந்து வந்து தன் இடத்தில்
 உட்கார்ந்தாள்.
 
 ராணி  வகுப்பில் அமர்ந்ததுதான் தாமதம் ,
 "வந்தியா... வந்தியா....இப்போ அக்காவிய வரட்டும்.
 கெட்ட வார்த்தை போட்டாய் என்று அக்காவிய கிட்ட உன்
 பெயரைச் சொல்வேன்  " தலையைத் தலையை
  ஆட்டினாள் பொன்னு.
 
" இன்னைக்கு உனக்கு இருக்கு...உனக்கு இருக்கு
 அக்காவிய வந்ததும் நல்லா பூசை வாங்கு " கூட 
 சேர்ந்து தாளம் போட்டாள் சந்திரா.
 
கேட்டதும்  ராணிக்கு முகமெல்லாம் குப்பென்று
 வியர்த்துக் கொண்டு வந்தது.
  பைக்குள் கையைப் போட்டு பென்சிலையும் 
   பென்சில் சீவலையும் எடுத்தாள்.
   
 கையில் பென்சிலோடு எழுந்த  ராணியைப் பார்த்ததும்,
" ஏய்...குத்தப் போறியா...அக்காவிய வரட்டும்.. 
அக்காவிய  வரட்டும்... இன்றைக்கு கண்டிப்பா 
சொல்லி கொடுப்பேன்."
 ஆள் காட்டி விரலை ஆட்டி ஆட்டி 
 கண்களை உருட்டினாள் பானு.
 
 இப்போது வயிற்றுக்குள் ஏதோ கடமுடா கடமுடா என்று
 சப்தம் போடுவதுபோல் இருந்தது.
 மனசு் படபடத்தது.
 
  வேக வேகமாக ஓடிப்போய் வராண்டாவில் போய்
 நின்று ஆசிரியர் வருகிறாரா என்பதுபோல்
 அங்குமிங்கும் பார்த்தாள் ராணி.
 
 தூரத்தில் இருந்து ஆசிரியர்கள் எல்லாம் கையில்
 வருகைப் பதிவேட்டைத் தூக்கிக் கொண்டு அவரவர்
 வகுப்பை நோக்கிச் சென்றனர்.
 
 அப்படியே கீழே உட்கார்ந்து யாரையும் 
 பார்க்காததுபோல் பென்சிலைச் சீவத்  தொடங்கினாள் ராணி.
  வகுப்புக்குள் ஆசிரியை வந்ததும் பிள்ளைகளெல்லாம்
 "  அக்கா வணக்கம்   "என்றனர்.
 
 சத்தத்தைக் கேட்டதும் ராணிக்கு 
 மனசுக்குள் ஏதோ பிசைவதுபோல் இருந்தது.
 தலைக்குள் என்னன்னவோ  செய்வதுபோல்
 இருந்தது.
 
 அதற்குள் பொன்னு" அக்கா.... அக்கா" என்று 
 மேசைப் பக்கம் ஓடினாள்.
 
 பின்னாலே நாலைந்து வாலுக்களும் வால் பிடித்துக்
 கொண்டு போய் நின்றன. 
 
" அக்கா......ராணி என்னைப் பார்த்து கெட்ட வார்த்தை
 போட்டுப் பேசினாள்..."
 என்று புகார் பத்திரம் பதிவு செய்தாள் பொன்னு.
 
" யாரு நம்ம...ராணியா..."சந்தேகமாக கேட்டார் ஆசிரியர்.
 
" அக்கா நானும் கேட்டேன்...பொன்னுவைப் பார்த்து
 கெட்ட வார்த்தை சொன்னா...".சாட்சி  வாக்குமூலம் பதிவு
 செய்தாள் பொன்மணி.
 
 இரண்டாம் சாட்சியாக குமாரியும் சேர்ந்து கொண்டு "நானும்
 கேட்டேன் அக்கா....".என்றாள் .
 
 சிரித்துக் கொண்ட ஆசிரியர் ....கண்கள் ராணியைத் தேடின.
 
 " அக்கா ....அவ...பென்சில் சீவ போயிருக்கா...."
 
" சரி வரட்டும்  போய் உட்காருங்க ...."என்று ஆசிரியர் சொல்லி முடிக்கும் முன்னர்  இரண்டு பேர் வெளியில் 
ஓடிச்சென்று ராணியை கையோடு
 இழுத்து வந்தனர்.
 
 ராணிக்கு முகமெல்லாம் அவமானத்தால் 
 சிறுத்துப்போய் இருந்தது.
 
 எல்லோருடைய  கண்களும் ராணிக்குக் கிடைக்கப்போகும்
  தண்டனையை எதிர்பார்த்து காத்திருந்தன.
  
" சரி ...எல்லோரும் அவங்க அவங்க இடத்தில் போய் 
 உட்காருங்க...."
 என்ற ஆசிரியர் கரும்பலகைக்கு முன் போய் நின்று 
 கணக்குப்  பாடம் நடத்த  ஆரம்பித்தார்.
 
"  நோட்டு புத்தகத்தை எடுத்து நான் செய்து போட்டிருக்கும்
  மாதிரி கணக்கை எழுதுங்கள்.
  கீழே நான்கு கணக்குகள் எழுதி இருக்கிறேன்.
  செய்து கொண்டு வாருங்கள் "என்று மாணவர்களுக்கு பாடம் கொடுத்துவிட்டு  நாற்காலியில் போய்  அமர்ந்தார்.
  
  இப்போது ஆசிரியரின் கண்கள் ராணியைத் தேடின.
  
  ராணியும் குறுகுறுவென்று ஆசிரியரையே பார்த்துக்
  கொண்டிருந்தாள்.
  
  சிரித்தபடியே கண்களால் ராணியை அழைத்தார் ஆசிரியர்.
  
  வியர்த்து விறுவிறுத்தபடி எழும்பினாள் ராணி.
  
  கால்கள் வடக்கு தெற்காக நாட்டியம் ஆடின.
  
  எப்படியோ தட்டுத் தடுமாறி மேசை  முன்னே
 போய் நின்றாள் ராணி.
  
  மற்ற பிள்ளைகள் எல்லாம் கணக்கு செய்வதில் 
  கவனமாக இருந்தனர்.
  
  ராணியின் கையை மெதுவாகப்  பிடித்த ஆசிரியர்
" நம்ம ராணியா...
  ராணி அப்படி பட்ட புள்ள இல்லையே....
  ராணி கெட்ட வார்த்தை பேச  மாட்டாளே....என்னம்மா....."..என்றார்.
  
  அவ்வளவுதான்...
  ராணியின் கண்களில் இருந்து கண்ணீர்
  பொலபொலவென்று வடிய ஆரம்பித்தது.
  
 ஆசிரியரின்   அந்த கேள்வி, "நீயா ...."என்று
  கேட்பதுபோல் இருந்தது.
   காலுக்கு கீழ் உள்ள பூமி அப்படியே
  நழுவுவது போல் இருந்தது.
  
   அதற்கு மேலும் ராணியால் ஆசிரியர் முகத்தைப் 
  பார்க்க முடியவில்லை.
  
  தலை குனிந்து நின்றாள்.

  கண்கள் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டு 
  கெஞ்சின.
  
  சிரித்துக் கொண்ட ஆசிரியர்" பரவாயில்லை"
   என்பதுபோல முதுகில் தட்டிக்
  கொடுத்தபடி...."போய் உட்கார் "
   என்றார்.
   
 "  ராணி அப்படிப்பட்ட புள்ள இல்லை..
   ராணி அப்படிப்பட்ட புள்ள இல்லை..."
   மறுபடியும் மறுபடியும் அந்த வார்த்தை
   பளார்....பளார் என்று அடிப்பதுபோல்
   மனசுக்குள் வந்து போனது.
   
   "ஆமாம் ...ஆசிரியர் சொன்னதுபோல ராணி
   இனி ஒருபோதும் அப்படிப்பட்ட புள்ள இல்ல..."
   மனதிற்குள் ஆசிரியரைத் தொழுதபடி 
   இடத்தில் போய் அமர்ந்தாள் ராணி.
  
  

 
 
 

Comments

Popular Posts