எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்...

 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்....

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு "
                                                         குறள் : 423

                                  
எப்பொருள்  _    எந்தப் பொருள் பற்றியதாயினும்
யார் யார்       _      எவர் எவர்
வாய்               _     வாய்மொழி
கேட்பினும்     _    கேட்க நேர்ந்தாலும்
அப்பொருள்   _     அந்தச் செய்தி
மெய்ப்பொருள் _    உண்மைத் தன்மை
காண்பது         _       கண்டறிவது
அறிவு                _         தெளிந்த புத்தி


  எந்த ஒரு பொருளைப் பற்றியும் எவர்எவர்  
  யாது கூறினும் அதை  அப்படியே 
  நம்பி விடாமல் அந்த பொருளின்
  உண்மை தன்மை எது என்பதை 
  ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

விளக்கம்  :
 எந்த ஒரு செய்தியைப் பற்றியும்  
 ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு 
 கருத்து இருக்கலாம்.
அந்தந்த கருத்திற்கு ஏற்பவே 
அவர்களிடமிருந்து
சொற்கள் வெளிப்படும்.

நண்பனிடமிருந்து வெளிவரும் கருத்தும் 
எதிரியிடமிருந்து  வரும் கருத்தும்
ஒன்றுபோல் இருக்கும் என்று 
எதிர்பார்க்க முடியாது.
நண்பன் கூறிவிட்டதினால் அது 
முழுவதும் உண்மையாக
இருக்கும் என்று எண்ணுதல் கூடாது.
எதிரி கூறிவிட்டான் என்பதால் 
அதனை முழுவதும் தவறு என்று
நிராகரித்து விடவும் கூடாது.
நண்பன் சொல்லிலும் உண்மை
 இல்லாமல் இருக்கலாம்.
பகைவன் வார்த்தையிலும் உண்மை 
இருக்க வாய்ப்பு உண்டு.

அதனால்தான் வள்ளுவர் யார் யார் வாய்க் கேட்பினும்
என்று இரண்டுமுறை  யார் யார்
என்று கூறியிருக்கிறார்.
அந்த யார் எங்கோ இருப்பவராகவும் இருக்கலாம் .
இல்லை அருகில் இருப்பவராகவும்
இருக்கலாம்.

நம் முகத்திற்கு முன்னால் நின்று 
பேசுபவராக இருக்கலாம்.
முதுகுக்குப் பின்னால் நின்று
பேசுபவராகவும் இருக்கலாம்.
யார்  யாரோ சொல்வதைக்கேட்டு
அவற்றை எல்லாம்  அப்படியே 
ஏற்றுக் கொள்வதல்ல அறிவு.

நியூட்டன் புவிக்கு புவியீர்ப்பு விசை  உள்ளது 
என்று கூறிவிட்டார் என்பதற்காக உலகம்
அதனை உடனே அப்படியே நம்பிவிடவில்லை.
ஆயிரம் ஆய்வுகள் அறுபதாயிரம்
விமர்சனங்கள்.
அவற்றை எல்லாம் தாண்டிதான்
 அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாமும்கூட புவிக்கு ஈர்ப்பு விசை
உண்டு என்று ஆசிரியர் பாடம் 
கற்பித்தபோது ஒன்றுக்கு நான்குமுறை 
பென்சிலை மேல்நோக்கி வீசி ,
அது மறுபடியும் கீழே வந்து
விழுந்த பின்னர் ஆ...உண்மையிலேயே 
புவிக்கு ஈர்ப்பு சக்தி இருக்கிறது... .
அதனால்தான் மேலே வீசிய பென்சில்
 மேல் நோக்கிச் செல்லாமல் 
கீழே விழுகிறது என்று ஒத்துக் 
கொண்டோமல்லவா! 
அதுதாங்க அறிவு.

"யார் யார் என்ன சொன்னாலும்
பரவாயில்லை . கேட்டுக்கொள்.
ஆனால் அவற்றை எல்லாம்  கண்மூடித்தனமாக
 அப்படியே நம்பிவிடாதே.


யோசி...யோசி...நன்றாக யோசி.
உண்மை நிலை அறிந்து முடிவெடுக்க
 வேண்டிய இடத்தில் இருப்பவன் நீதான் ...
 நீ மட்டுமேதான் "என்று நச்சென்று 
  கூறியிருக்கிறார்  வள்ளுவர்.


English couplet :423

"Though things diverse from divers sages' lips we learn
'Tis wisdom's part in each the true thing to discern."

Explanation : 

  To discern the truth in every thing ,by whomsoever
  Spoken, is wisdom.

Transliteration :

     "EpporuL yaaryaarvaaik kaetkum  apporuL
     MeypporuL kaaNpa thaRivu"
 

Comments

  1. பாமர மக்கள் கூட்டம் எக்காலத்திலும் உண்டு என்பதை வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார்.அதனால் தான் இப்படியான குறளை எழுதியிருப்பாரோ?

    ReplyDelete

Post a Comment

Popular Posts